தலித் பெண் சமைத்த மதிய உணவை சாப்பிட மாணவர்களுக்கு தடை: பிகாரில் தொடரும் ஜாதிக் கொடுமை
சசாராம் (பிகார்), ஆக. 13: பிகாரில் அரசு நடத்தி வரும் தொடக்கப்பள்ளியில் தலித் பெண் சமைத்த மதிய உணவை மாணவர்கள் சாப்பிட பள்ளிக்குழு செயலர் கடந்த ஒரு மாதமாக தடை விதித்துள்ளார்.
21-ம் நூற்றாண்டிலும் இத்தகைய ஜாதிக் கொடுமைகள் நடப்பது சமூக நீதி ஆர்வலர்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரோடாஸ் மாவட்டத்தில் உள்ளது பிப்ரி கிராமம். உயர்ஜாதி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது.
இப்பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பணியை தலித் பெண் செய்து வருகிறார். இவர் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிடக் கூடாது என பள்ளிக் குழு செயலர் உமா சங்கர் திவாரி என்பவர் தடை விதித்துள்ளார்.
மகிளா சமாக்ய சங்கம் என்ற அரசு சாரா அமைப்பு பள்ளியில் மதிய உணவு தயாரிக்க தலித் பெண் நியமித்துள்ளது. அவர் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிட நான் அனுமதிக்க மாட்டேன் என உமா சங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மகிளா சமாக்ய சங்க ஒருங்கிணைப்பாளர் சிகா குமாரி கூறியது:
பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிப்பதற்காக 3 தலித் பெண்களும் 2 மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்த பெண்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி செயலரிடம், மாணவர்களை மதிய உணவை சாப்பிட விடுங்கள் என பல முறை வற்புறுத்தியும் பலன் இல்லை. மாணவர்கள் தொடர்ந்து மதிய உணவு சாப்பிடாமல் செல்கின்றனர்.
திவாரியும் அவரது ஆட்களும் சமையல் கூடத்தை சேதப்படுத்தி சமையல் பாத்திரங்களையும் எடுத்து சென்று விட்டனர் என்றார்.
மனித வள துணை செயலர் ராஜேந்திர பிரசாத்துடன் பிப்ரி கிராமத்திற்கு திங்கள்கிழமை சென்று இது விசாரணை நடத்த உள்ளதாக மனித வள செயலர் எம்.எம். ஜா பாட்னாவில் கூறினார்.
இது குறித்து சதார் காவல் நிலையத்தில் திவாரிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகி விட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.
பிரச்னைக்குரிய பள்ளியில் 39 தலித் மாணவர்கள் உட்பட 87 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்காக நீண்ட விடுப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர் மீதும் பள்ளிக் குழு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.