ஏரிகள் காப்போம்
திண்டிவனம் பஸ் நிலையத்தை ஏரியில் அமைப்பது தொடர்பாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் காரசாரமான அறிக்கைப் போர் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த விஷயத்தில் அரசியலை ஒதுக்கிவிட்டு தமிழக ஏரிகளின் இன்றைய நிலைமை, அதன் முந்தைய பயன், ஏரிகளை அரசும் மக்களும் புறக்கணித்ததால் ஏற்பட்டு வரும் இழப்புகள் ஆகியவற்றை ஒருமுறை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஏரிகள் உள்ளன. ஒவ்வொரு ஏரியும் நிரம்பியவுடன் மதகுகள் திறக்கப்பட்டு அடுத்த ஏரிக்குத் தண்ணீர் செல்லும்படியான அமைப்புகள் கொண்டவை. இந்தத் தொடர்ச்சி குறைந்தபட்சம் 15 ஏரிகள் வரையிலும்கூட இருக்கும்.
ஒவ்வொரு ஏரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஹெக்டேர் விவசாய நிலத்துக்குத் தண்ணீர் தரவல்லவை. இவற்றைப் பராமரிக்கும் பணி பயனாளிகளான மக்களிடம் அல்லது பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த ஏரிகள் ஆண்டுதோறும் நிரம்புபவை அல்ல. 5 ஆண்டுகளில் சராசரியாக 3 முறை மட்டுமே நிரம்பின. இதையெல்லாம் மனத்தில் வைத்து, அந்த ஏரிக்குரிய விவசாயிகள் பயிர்களை வகைப்படுத்திக் கொண்டார்கள். நீரைப் பகிர்ந்து கொண்டார்கள்.
தமிழகத்தில் 1960-ம் ஆண்டில்
- ஆறு, வாய்க்கால் பாசனத்தின் மூலம் 881 ஆயிரம் ஹெக்டேர் (36 சதவீதம்)
- ஏரிப் பாசனத்தில் 936 ஆயிரம் ஹெக்டேர் (38 சதவீதம்)
- கிணற்றுப் பாசனத்தில் 597 ஆயிரம் ஹெக்டேர் (24 சதவீதம்)
- மற்ற பாசனங்களில் 46 ஆயிரம் ஹெக்டேர் (2 சதவீதம்) என
- மொத்தம் 2462 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயம் நடைபெற்றது.
புள்ளியியல்துறை தகவலின்படி ஏறக்குறைய அதே பரப்பளவில்தான் 2003-ம் ஆண்டிலும் விவசாயம் நடைபெற்றுள்ளது. ஆனால்,
- 38 சதவீதமாக இருந்த ஏரிப் பாசனம் 18 சதவீதமாகவும்
- ஆறு, வாய்க்கால் பாசனம் 26 சதவீதமாகவும் குறைந்துவிட்டது.
- 24 சதவீதமாக இருந்த கிணற்றுப் பாசனம் 54 சதவீதமாக உயர்ந்துவிட்டது.
அதாவது ஆறு, வாய்க்கால் பாசனத்தில் குறைந்த 10 சதவீதமும் ஏரிப் பாசனத்தில் குறைந்த 20 சதவீதமும் சேர்ந்து 30 சதவீதம் விளைநிலங்கள் கிணற்றுப் பாசனத்துக்கு மாறியுள்ளன.
தமிழக விவசாயத்தில் 30 சதவீதம் கிணற்றுப் பாசனத்துக்கு மாறியுள்ளதால், பம்புசெட் மூலம் நீர் இறைக்கும் இலவச மின்சாரத்தின் அளவு உயர்ந்து மானியத்தின் அளவும் ரூ.3 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக உள்ளது.
தமிழக அரசு- இதில் கட்சிப் பாகுபாடே வேண்டாம்- ஏரிகளைப் பாதுகாத்திருந்தால் 20 சதவீதம் விளைநிலங்களைக் கிணற்றுப் பாசனத்துக்கு மாறாமல் தடுத்திருக்க முடியும்.
1980 முதல் 2005 வரை பல்வேறு அமைப்புகள் மூலம் தமிழகத்தில் 2136 ஏரிகள் ரூ.473 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன. இதில் உலக வங்கியும் நபார்டும் மட்டுமே ரூ. 150 கோடி வரை செலவிட்டுள்ளன. மாநில அரசு 290 ஏரிகளுக்காக ரூ.62 கோடி செலவிட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரமே, அரசு ஏரிகளைக் காப்பதில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது என்பதற்கு ஒரு சான்று.
ஏரிகள் என்பவை பாசன நீருக்காக மட்டுமல்ல. மண் இழப்பைத் தடுத்தல், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பயன்பாடுகளும் ஏரிகளால் உள்ளன.
இன்று சேலத்தில் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் ஒரு ஏரிதான். அதன் பெயரே- பஞ்சம்தாங்கி ஏரி. எத்தகைய கடுமையான பஞ்சம் வந்தபோதும் வற்றாத ஏரி என்ற பொருளில் அவ்வாறு அழைத்து வந்தனர். ஆனால் அதற்கான நீர்வரத்துப் பாதைகளை அடைத்துவிட்டு, பல காலமாக நிரம்பாமல் வீணாகக் கிடக்கிறது என்று பொதுப்பணித்துறையின் சான்று பெற்று, பஸ் நிலையமாக மாறிவிட்டது.
இப்படியாகத்தான் எல்லா ஏரிகளையும் இழந்தோம், இழந்து வருகிறோம். இன்றைய தேவை “ஏரி காக்கும் அரசு’
மழைக் காலத்தில் சென்னை நகர் மிதந்ததைக் கண்ட பின்னும் ஏரிகள் மீது அக்கறை செலுத்தாமல் இருக்கலாமா?
====================================================
நன்னீர் பற்றாக்குறையால் திணறும் ஆசியா
கே.என். ராமசந்திரன்
திபெத் பீடபூமியில் ஏராளமான பனி குவிந்து கிடக்கிறது. அது உருகிப் பத்து பெரிய ஜீவநதிகளாகப் பாய்கிறது. திபெத்தின் சராசரி வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதன் காரணமாக அதிக அளவில் பனி உருகி அந்த ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம். கொஞ்ச காலத்துக்குப் பிறகு எல்லாப் பனியும் உருகித் தீர்ந்து அந்த ஜீவநதிகள் மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஓடும் நதிகளாகிவிடக் கூடும். அதன்பின் மழை பொய்த்தால் வறட்சிதான்.
காடு அழிப்பு, கால்நடைகள் அளவுக்கு மீறி மேய்தல், தவறான நதிநீர் மேலாண்மை, தவறான நீர்ப்பாசன உத்திகள், நீர் மாசு போன்ற காரணங்களால் ஆசியாக் கண்டம் நன்னீர்ப் பற்றாக்குறையால் திணறுகிறது. அளவுக்கு மீறி நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டுச் சுற்றுச்சூழல் சிதைக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவும் சீனாவும் இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளைப் பெருமளவில் சார்ந்திருக்கின்றன. அவற்றில் நீர் வரத்து குறைந்தால் இரு நாடுகளுக்குமிடையில் தண்ணீர்ப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அவை நதிகளின் போக்கை மாற்றியமைக்க முனைந்தால் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகள் சண்டைக்கு வரும்.
இப்போதே சீனா சட்லஜ் நதி உற்பத்தியாகும் இடத்துக்கருகில் ஓர் அணையைக் கட்டியிருக்கிறது. அத்துடன் பிரம்மபுத்ரா நதியிலிருந்து வடக்கேயுள்ள மஞ்சள் நதிக்கு நீரை எடுத்துச் செல்லவும் திட்டமிடுகிறது. சீனாவின் நீர்த்தேவை முழுவதையும் திபெத்திலிருந்து நிறைவு செய்து கொள்ள அது முனையும்போது, இந்தியாவுடன் மோதல் ஏற்படுவது உறுதி.
ஆசிய நாடுகள் எல்லாவற்றிலுமே இதேபோன்ற எல்லைப் பிரச்சினைகளும் நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகளும் எழும். நாடுகளுக்கிடையில் போர்கள் கூட மூளலாம்.
திபெத்தில் சீனா ஏராளமான கனிமச் சுரங்கங்களைத் தோண்டி வருகிறது. அத்துடன் அங்குள்ள பனிமலைகள் மறைந்து தண்ணீர்ப் பஞ்சமும் ஏற்பட்டால் திபெத்தின் சுற்றுச்சூழலே முற்றிலுமாக வீணாகிப் போகும்.
இந்தியாவின் கங்கை – காவிரி இணைப்புக் கனவும் ஈடேறாது. உலகளாவிய வெப்பநிலை உயர்வின் காரணமாக இந்தியத் துணைக் கண்டத்தில் சராசரி மழையளவு பன்மடங்கு அதிகமாகும் என்று சொல்லப்படுவது ஓர் ஆறுதலான செய்தி. அதை வீணாகாமல் சேகரித்து வைக்க பெரிய ஏரிகளையும் அணைகளையும் உடனடியாக உருவாக்கியாக வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.
உலகளாவிய வெப்பநிலை உயர்வின் காரணமாகக் கடல் நீர் மட்டம் உயர்ந்து உள்நாட்டுக்குள் பரவுவது, பெருமழையால் ஏற்படும் வெள்ளங்கள், கோடைகளில் கடும் வறட்சி போன்ற பேரிடர்கள் ஏற்படும் என்று சொல்கிறார்கள். அதன் காரணமாக மக்கள், குறிப்பாக ஏழை எளிய மக்கள் உள்நாட்டில் பத்திரமான இடங்களுக்குக் குடிபெயர்வார்கள். அது பல சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். இப்போதே வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகச் சுமார் இரண்டு கோடி மக்கள் இந்தியாவில் குடியேறியிருக்கிறார்கள். கடல் மட்டம் உயர்ந்தால் வங்கதேசம் முழுவதுமே மூழ்கிப் போகலாம். அதேபோல மாலத்தீவுகளும் மூழ்கி விடும்.
நெய்தல் நிலப்பகுதி வேலைவாய்ப்புகளும், உற்பத்திகளும் கடுமையாகப் பாதிக்கப்படும். டெல்டா பகுதிகளிலும், தாழ்வான நிலப்பகுதிகளிலும் நடைபெற்று வந்த விவசாயம் அழியும் ஆபத்தும் உண்டு. அதன் காரணமாக வேலையிழக்கும் பல்லாயிரம் தொழிலாளர்கள் நகரங்களை நோக்கிப் படையெடுப்பார்கள். அவர்கள் வழக்கம்போல ஏரிகளையும் குளங்களையும் ஆக்கிரமித்துக் குடியேறுவார்கள். குளிர்காலங்களில் குளிர் குறைவாவது நோய்க்கிருமிகளைப் பரப்பும். கொசு போன்ற பூச்சிகளின் இனப்பெருக்கத்துக்கும் உதவும். மேலும் கதகதப்பான வானிலையை உண்டாக்கும். நோய்கள் பெருகி அரசின் சுகாதாரப் பராமரிப்புச் சுமையை அதிகமாக்கும். தொழிலாளர்களும் பணியாளர்களும் நோய்வாய்ப்பட்டு சேவைத் துறைகளும் உற்பத்தித் துறைகளும் முடங்கும்.
உலகளாவிய வெப்பநிலை 6 செல்சியல் டிகிரி வரை உயர முடியும் எனப் பயமுறுத்துகிறார்கள். பசுங்குடில் வாயுக்கள் எனப்படும் கரியமில வாயு, மீத்தேன் போன்றவைதான் உலகளாவிய வெப்பநிலை உயர்வுக்குக் காரணம். அந்த வாயுக்களை வளிமண்டலத்தில் பரப்புவதை நிறுத்திவிட்டால் கூட, இன்று வரை வளிமண்டலத்தில் கலக்கப்பட்டிருக்கிற கரிம வாயுக்கள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு வளிமண்டல வெப்பநிலையைத் தொடர்ந்து உயர வைத்துக் கொண்டேயிருக்கும்.
2099-ம் ஆண்டுக்குள் உலகளாவிய வெப்பநிலையில் 1.1 செல்சியஸ் டிகிரி வரை உயர்வு ஏற்படுவதைத் தடுக்கவே முடியாது.