Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Her’ Category

The History of Sarees – Art of wearing saris, Tamil Nadu Heritage & Culture, Textile Commerce

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

நீலக் கலரு ஜிங்கிச்சா.. பச்சைக் கலரு ஜிங்கிச்சா!

தேவி கிருஷ்ணா


புடவைக்கு ஆசைப்படாத பெண்ணும் உண்டா? வாங்குகிறார்களோ, இல்லையோ புடவைகளைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்ப்பதற்காகவாவது புடவைக் கடைகளுக்கு விசிட் அடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் கம்மி. புடவை மீது பெண்களுக்கு இருக்கும் ஆசைக்கு சற்றேறத்தாழ மூவாயிரம் ஆண்டு சரித்திரம் இருக்கிறது என்கிறார் “நூலோர்’. புடவையின் சரித்திரத்தைப் பார்ப்போமா?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வரலாற்றில் சேலை இடம் பெற்றிருந்தது. சங்க காலத்துக்கு முன்பு தாழையையும் பூவையையும் சேர்த்து உருவாக்கப்பட்ட தாழை ஆடைகளை பெண்கள் அணிந்து வந்தார்கள். உடைகளை கொடிகளாலும் நொச்சி இலைகளாலும் ஆக்கிக் கொண்டார்கள். விழாக் காலங்களில் நெய்தல் மலர்களால் தாழையுடை செய்தார்கள். இடுப்பிலும் மார்பிலும் மகளிர் தாழையுடை அணிந்தார்கள் என சங்ககால வாழ்வியல் கூறுகிறது. காலம் செல்ல பருத்தி உடையும் பட்டு உடையும் அணிந்தார்கள்.

பருத்தி உடை முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்றும் இங்கிருந்து மேல் நாடுகளுக்குப் பரவியது என்றும் வயர்சாண் மார்சல் கூறுகிறார். பால் ஆவி போன்ற மெல்லிய துணிகளும் பாம்பு தோல் போன்ற அழகான துணிகளும் காகிதம் மெல்லிய துணிகளும் சாக்கு போன்ற முரட்டுத் துணிகளும் நெய்யப்பட்டன. இங்கிருந்து மாதூரம் எனப் பெயர் பெற்ற புடவைகள் காசி, பாடலிபுரம் முதலிய இடங்களுக்கு அனுப்பப்பட்டது என்று 3-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அர்த்த சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ரோம் முதலிய நாடுகளுக்கும் துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

அன்று நெசவு செய்பவர்கள் காருகர் என்று அழைக்கப்பட்டனர். வடகம், பாடகம், கோங்கலம், சித்திர கம்பி, பேடகம் எனப் பல பெயர்களில் ஆடைகளை சூடி மகிழ்ந்தனர். நீலம், சிவப்பு, மஞ்சள், கருப்பு முதலிய நிறங்களில் ஆடைகள் நெய்யப்பட்டன. அவற்றில் நுண்ணிய வேலைப் பாடுகள் இருந்தன. பருத்தியும் பட்டும் கொண்ட துணிகள் துகில் எனப்பட்டன.

நீளமாக நெய்யப்பட்ட துணிகள் பிறகு வெட்டப்பட்டு வேட்டிகளாகவும் துண்டுகளாகவும் பயன்படுத்தினர். இதனால் இவை அறுவை என்றழைக்கப்பட்டது. பருத்திப் புடவைகளுக்கு கலிங்கம் எனப் பெயர். பட்டு ஆடைகள் நூலாக் கலிங்கம் எனப்பட்டது.

நெய்வதில் தேர்ந்த தமிழன் அதற்கு சாயம் தீட்டுவதிலும் சிறந்து விளங்கினான். மலர்கள், செடி- கொடிகள், இலைகள் ஆகியவற்றின் சாறுகளில் வண்ணமேற்றினான். அவுரி செடியிலிருந்து ஏற்கப்பட்ட சாயம் ஐரோப்பியர்களின் மனதைக் கவர்ந்தது. இதில் இருந்து கிடைத்த நீல நிறச் சாயத்தை இண்டிகோ என்று அழைத்தனர்.

கடுக்காய், கொன்றைப் பூ போன்றவையும் சாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.

நாகரிகம் வளர வளர துணிகளின் ரகங்களும் வண்ணங்களும் மேலும் சிறப்படைந்தன. 18-19 ஆம் நூற்றாண்டுக்குச் செல்வோம். புடவைகள் முப்பாக சிறப்படைந்தன. அதாவது உடல், பார்டர், முந்தி என மூன்று பகுதிகள் உள்ள புடவைகள். ஆட்டுமுழி, புளியங் கொட்டை, சொக்கட்டான், வைரஊசி, பாய் பின்னல் மற்றும் மயில் கழுத்து, கிருஷ்ண மேகவர்ணம் போன்ற இரட்டைக் கலப்பு நிறங்களும் மோஸ்தராக இருந்தது.

முன் காலத்தில் காஞ்சிப்பட்டு சேலைகள் கனமாக இருக்கும். ஒரு புடவை 2 சேர், 3 சேர் (பழைய அளவுகள்) எடை இருக்கும். ஜரிகையையும் வேலைப் பாட்டையும் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் இப்போது பெண்கள் வெயிட் இல்லாத புடவைகளையே விரும்புகிறார்கள். டெஸ்ட்டட் ஜரிகைப் புடவைகள் என்பவை தாமிரத்தில் தங்க முலாம் பூசுவார்கள். இவை எடை குறைவாக இருக்கும்.

பெரிய விலை கொடுத்து வாங்கும் பட்டுச் சேலைகளை எப்படி பராமரிப்பது?…

புடவைகளை பீரோக்களில் வைக்கும் போது ஒரு மெல்லிய மல்-மல் துண்டில் சுற்றி வைத்தால் ஜரிகை கருக்காமல் புடவை புத்தம் புதிதாக இருக்கும். கொஞ்சம் சூடம் அல்லது நெப்தலின் உருண்டைகளையும் பீரோ தட்டுகளில் போட்டு வைக்க வேண்டும்.

ஒவ்வொரு தடவையும் புடவையைக் கட்டிய பிறகு அதை காத்தாட வெளியில் போட்ட பிறகு மடித்து வைக்கவும். மழைக்காலத்தில் பட்டுப் புடவைகளை இளம் வெயிலில் கால் மணி நேரம் போட்டு எடுத்து வைக்க வேண்டும். இப்படி செய்தால் புடவை 70 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும்.

பூந்திக் கொட்டையை இடித்து அதைத் தண்ணீரில் போட்டு ஊர வைத்தால் சோப்புத் தண்ணீர் மாதிரி கிடைக்கும். அதைக் கொண்டு கையினால் புடவைகளைக் கசக்கிப் பிழிந்து காய வைத்தால் பட்டின் பளபளப்பும் மென்மையும் காக்கப்படும்.

போதுமா புடவை கதை?
—————————————————————————————————————————————————————————
ஒலையில் நெய்த சேலை!

நாகரீகத்தின் வேகமான வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும்விதத்தில் புதுப்புது வகைகளிலும், விதங்களிலும் செயற்கை நூலிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய சேலை வகைகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. என்னதான் செயற்கை இழைகளின் மீதான மோகம் நம்மை ஈர்த்தாலும், இயற்கை வழியில் தாவர நாரைப் பயன்படுத்தி ஆடைகளை உருவாக்கும் முயற்சிகளும் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்த வகையில் ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனை மரத்தின் ஓலைகள் தற்போது நவநாகரீக சேலைகள் நெய்யவும் பயன்படும் என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாகச் சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

ஏற்கெனவே, சணல், வாழை நார் உள்பட பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி சேலைகளை உருவாக்கிச் சாதனை புரிந்து வரும் இச் சங்கத்தினர் தற்போது பனை ஓலையிலும் சேலை நெய்யமுடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

விசைத்தறி, செயற்கை இழை ஆடைகள் என பல்வேறு போட்டிகளுக்கிடையே பாரம்பரிய கைத்தறி நெசவுத் துறையை நம்பி அதனை முன்னிலை படுத்தும் பல்வேறு கட்டங்களில் போராடி வருகிறார் அனகாபுத்தூர் சணல் நெசவாளர்கள் சங்கத்தின் தலைவர் சேகர். இந்தச் சோதனையான காலகட்டத்திலும் புதிய சாதனைகளை நிகழ்த்தி வரும் சேகர் “”வாழை நார் உள்ளிட்ட பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி சேலைகளை உருவாக்கி வருவதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாது கடல்கடந்தும் பல்வேறு வெளி நாடுகளிலும் இவ்வாறு தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

குறிப்பாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இத்தகைய புதிய முயற்சிகளுக்கு அந்தந்த நாட்டு அரசுகளிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இத்தகைய சேலை ரகங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது.

இந் நிலையில் கோவையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி பனை ஓலையில் சேலை நெய்ய முடியும் என நம்பினார். பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி வரும் எங்களை அந்த மாணவி அணுகினார்.

வெளிப்படையாகத் தெரியும் சில அம்சங்களால் பனை ஓலையை ஆடை ரகங்களை நெய்ய பயன்படுத்த முடியாது எனப் பலரும் நினைத்தனர். நாங்கள் பனை ஓலையை மிகமிக மெல்லிய இழைகளாகப் பிரித்தோம். பின்னர் பருத்தி நூலிழைகளுடன் பனை ஓலை இழைகளைக் குறுக்காகப் பயன்படுத்தினோம். இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.

சேலையில் டிசைகள் வரும் இடங்களில் வழக்கமான இழைகளுடன் பனை ஓலை இழைகளைப் பயன்படுத்தியது சிறப்பாக அமைந்தது. இது சேலைக்குப் புது பொலிவை அளிப்பதாக அமைந்தது. தற்போது ஒரு சேலையில் பருத்தி இழைகளுடன் சுமார் 40 சதவீத அளவுக்குப் பனை ஓலை இழைகளைப் பயன்படுத்தி வருகிறோம். பனை ஓலை இழைகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி மேலும் மெல்லிய இழைகள் எடுத்தால் சேலையில் இதன் அளவை மேலும் அதிகரிக்க முடியும். இதற்கு அரசின் தொழில்நுட்ப உதவி அவசியமாகிறது. பனை ஓலையைப் பயன்படுத்தி நெய்யப்படும் சேலைகள் செயற்கை இழை சேலை மோகத்தில் இருந்து மக்களின் கவனத்தைத் தாவர நாரின் பக்கம் இழுக்கும் என்பதில் ஐயமில்லை” என்கிறார் சேகர் நம்பிக்கையுடன்.

ஆதி மனிதன் இலையைத்தான் ஆடையாகப் பயன்படுத்தினான் இப்ப… ஓலை சேலை…!

வி. கிருஷ்ணமூர்த்தி

புதுமை பூக்கும் புடவைகள் « Snap Judgment

Posted in Chennai, Commerce, Cotton, Culture, Deepavali, Designer, Diwali, Expensive, Fabrics, Females, Garments, Her, Heritage, History, Ladies, Lady, Rich, Sarees, Saris, She, Shopping, Silk, Tamil Nadu, TamilNadu, Textiles, Women | Leave a Comment »

Leena Manimekalai: Chennai Loyola College & Thupatta Police

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

துப்பட்டாவில் படபடக்கும் தமிழ்க் கலாசாரம்

லீனா மணிமேகலை

அறிவும் ஆற்றலும் கொண்ட பெண் இந்த சமூகத்தில் தனிமனிதராக மதிக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு “இல்லை’ என்று சொல்லவேண்டிய இடத்தில்தான் நாம் இப்போதும் இருக்கிறோம்.

பெண்ணின் இருப்பு வெறும் உடலாகவே கணக்கிடப்படுகிறது. இந்திய – குறிப்பாக – தமிழ்ச் சமூகத்தின் கலாசார நடவடிக்கை என்பது பெண்ணுடல் மீதான கண்காணிப்பாகவும் விசாரணையாகவுமே குறுகிக் கிடக்கிறது.

சமூகம், முதலில் தனது அதிகார இயந்திரங்களான மதத்தையும் சாதியையும் கொண்டு பெண்ணின் விருப்பங்களையும் தேர்வுகளையும் கட்டுப்படுத்துகிறது. அடுத்ததாக கற்பு / தாய்மை போன்ற கற்பிதங்களால் பெண்ணின் காதல் / காமம் ஆகிய உணர்வுகளைக் கட்டமைக்கிறது.

தொடர்ச்சியாக குடும்பம், உழைக்குமிடம் தவிர்த்த பெண்ணின் வெளியையும் மறுதலிக்கிறது. இந்த வரையறையிலிருந்து விலகி தனித்த அடையாளத்துடன் ஒரு பெண் தனக்கென பாதையை வகுத்துக்கொள்ள முற்படும்போது அது குருட்டுச்சந்தாகவே முடிகிறது என்பதுதான் கசப்பான உண்மை.

சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரியில் காட்சி ஊடகவியல் துறையினர், “கனாக்களம் – 2007′ என்கிற கருத்தரங்கின் கலந்துரையாடலில் “சினிமாவும் சமூகமும்’ என்னும் தலைப்பில் என்னைப் பேச அழைத்திருந்தனர். காலை பத்து மணியளவில் கல்லூரி வாசலை அடைந்த என்னை நிறுத்திய கல்லூரியின் காவலர்கள், அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டனர். நான் அழைப்பிதழைக் காட்டினேன்.

“உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் ஜீன்ஸýம் குர்தாவும் அணிந்திருக்கிறீர்கள் – துப்பட்டா அணியவில்லை’ என்றார்கள். ஒரு நிமிடம் எனக்குத் தலைசுற்றியது; நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேனா அல்லது தாலிபான்களின் ஆப்கானிஸ்தானில் இருக்கிறேனா என்ற இடக்குழப்பம் ஏற்பட்டது.

கிணுகிணுத்த கைபேசியைத் தட்டினால் அமைப்பாளர்கள், “சிறிது நேரம் பொறுங்கள், நாங்கள் வந்துபேசி அழைத்துச் செல்கிறோம்’ என்றார்கள். நிமிடங்களில் ஒரு மாணவி ஓடிவந்து கறுப்புத் துப்பட்டாவைத் தந்து “இதை அணிந்துகொண்டு உள்ளே வாருங்கள்’ எனக் கெஞ்சும் தொனியில் கேட்டபோது எனக்குச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.

“”சுதந்திரமாக ஆடையணிந்துகூட வரமுடியாத இடத்தில், சுதந்திரமான சினிமாவை நேசித்துப் பணியாற்றிக் கொண்டிருக்கும் எனக்கு எந்தப் பணியும் இல்லை” என்று மட்டும் குறிப்பிட்டுவிட்டுத் திரும்பிவிட்டேன்.

அழைப்பிதழில் இடம்பெற்றிருந்த மற்ற பேச்சாளர்களான பாலுமகேந்திரா, பாமரன், ஞாநி, வசந்தபாலன், எஸ். ராமகிருஷ்ணன், லெனின், அஜயன்பாலா ஆகியோர் ஆண்களாக இருந்ததால், அவர்களுக்குத் துப்பட்டா பிரச்னை இருந்திருக்காது என்று சிந்தனை ஓடியது.

கல்வி நிலையங்கள் தமிழ்க் கலாசாரத்தைத் துப்பட்டாவில் கட்டிக்காக்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டனவா என்று கடுங்கோபம் வந்தது. பதினெட்டு வயதில் தங்கள் நாட்டை யார் ஆள வேண்டும் என்று முடிவு செய்யும் ஓட்டுரிமை பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்குத் தங்களுக்கான உடையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுப்பதையே பல தளங்களில் நான் எதிர்த்துப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன்.

எழுத்தும் சினிமாவுமாக விடுதலையைப் பற்றிய சிந்தனையையும் படைப்புகளையும் மட்டுமே சுவாசித்துக் கொண்டிருக்கும் என்னை, நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைத்து, துப்பட்டாவைக் கொடுத்து, என் இருப்பையே கேள்விக்குறியாக்கிவிட்ட லயோலா கல்லூரி எனக்கு என்ன பதில் வைத்திருக்கிறது?

ஒவ்வோர் ஆண்டும் தரத்தின் அடிப்படையிலான சர்வேக்களில், இந்தியாவின் சிறந்த கல்லூரிகளின் தரவரிசையில் ஐந்து முதல் பத்தாம் இடத்திற்குள் ஸ்டார் தகுதியில் இடம்பிடிக்கும் லயோலா கல்லூரி, தனி மனித உரிமைக்குத் தரும் மரியாதையில் எந்த இடத்தில் தன்னை நிறுத்திக் கொள்கிறது?

பல கல்லூரிகளில் நடைமுறையிலிருக்கும் பெண்களுக்கான உடை பற்றிய கோட்பாடுகளின் வரலாறு மிக சுவாரஸ்யமானது. கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள், மாணவிகளின் உடை விஷயத்தால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்-படிப்பிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. அதனால் கல்லூரி மேலாண்மை மாணவிகளின் உடைகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்களாம். உடனே கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்குத் துப்பட்டா கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறது; ஜீன்ஸிற்குத் தடா போட்டிருக்கிறது என்று கேள்வி.

இதை விசாரித்துக் கொண்டிருக்கும்போது எனது தோழரும், பெண்ணிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான ஓவியா ஒரு வரலாற்று நிகழ்ச்சியை நினைவுபடுத்தினார். சுதந்திரத்திற்கு முன் நமது நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி, கல்லூரியில் அனுமதி கேட்டபோது மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் “ஒரு பெண் கல்லூரிக்கு வருவதா, எங்கள் பிள்ளைகள் கெட்டுப்போவார்கள் – நாங்கள் விண்ணப்பங்களைத் திரும்பப் பெறுவோம்’ என்று சொன்னார்களாம். அதைக் கேள்விப்பட்டு கலக்கமுற்ற தாளாளர், அன்றைய அரசுப் பிரதிநிதியான வெள்ளைக்கார கவர்னரிடம் முறையிட்டாராம்.

வெள்ளைத்துரை அதற்கு, “பரவாயில்லை, அந்தப் பெண் மட்டும் படித்தால் போதும், மாணவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்’ என்றாராம். அந்த வெள்ளைத்துரைக்குப் பாவம் நமது கலாசாரம் தெரியவில்லை. தவறு செய்துவிட்டார்! சுதந்திர இந்தியாவின் கல்லூரி நிறுவனர்கள் அந்தத் தவறைச் செய்வார்களா என்ன? அப்புறம் தமிழ்க் கலாசாரம், பண்பாடெல்லாம் என்னாவது?

பெற்றோர்களை தங்கள் பிள்ளைகளுக்குப் புலனடக்கம் கற்றுத்தரச் சொல்லியனுப்பாமல், மாணவிகளுக்கு உடைக் கோட்பாடுகளைப் பிறப்பிக்கிறார்கள். நிச்சயம் மாணவர்கள் அணியும் உடையில் நமது மாணவிகள் மனக்கிலேசம் அடைய மாட்டார்கள். அப்படியே இருந்தாலும், சிரிப்பையும் சிறுநீரையும்கூட சிறுவயதிலிருந்து அடக்கப் பழகியிருக்கும் நமது பெண்களுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்?

எது எப்படியோ, துப்பட்டாவை எடுத்துவந்து என்னை அணிந்துகொள்ளச் சொன்ன மாணவியின் முகம் என்னைத் தூங்கவிடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. எப்படிப்பட்ட கோழைப் பூச்சிகளாக மாணவ சமுதாயத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? “உனக்குச் சுதந்திரம் வழங்க மறுக்கும் சமூகத்திடம் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாதே’ என்று ஊக்குவிக்காத கல்வியால் பெண்ணுக்கு என்ன பயன் இருக்க முடியும்?

குடும்பம், கல்வி நிறுவனம், சமூகம் என எல்லா அமைப்புகளும் பெண்ணின் உடலை மனதைக் கண்காணிக்கும் காவல் நிலையங்களாகச் செயல்படுவதால் நட்டமடைவது பெண் மட்டுமல்ல, மொத்த சமூகமும்தான்.

அரசோ, ஆணையோ, நிறுவனமோ, ஏன் தனிமனிதனோ, உறவோ, வாழ்க்கைத் துணையோ, சினேகிதனோகூட எதன் பெயராலோ அதிகாரத்தைச் செலுத்தும்போது அதை ஏன் என்று கேள்வி கேட்க முடியாத பூஞ்சைக்காளான்களாக நம்மை உருவாக்கிக் கொள்வதற்கு கல்வி அவசியமே இல்லை. பேசாமல் மாடு மேய்க்கப் போகலாம்.

பெண் விடுதலை உடையில் இல்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதைவிட உண்மை ஆண் ஆதிக்கம் என்பது பெண்களின் உடை விஷயத்தில் இருக்கிறது என்பதுதான்.

பிரச்னை “துப்பட்டா’ அல்ல. பெண்களை துப்பட்டா போடச் சொல்லும் ஆண்களின் மனோபாவம். பாமரன்களும், அஜயன்பாலாக்களும், வசந்தபாலன்களும், ஞாநிகளும் இந்தச் சம்பவத்தை சட்டை செய்யாததிலிருந்தே அவர்களது சமூகத்தில் எப்படிப்பட்ட சிந்தனை நிலவுகிறது என்பது தெரிகிறது. இதுதான் பெருவாரியான ஆண்களின் மனநிலை என்பதே உண்மை.

கல்விக்கூடங்களும் சரி, தங்கள் வகுப்பறைகளை மூடிவிட்டு துப்பட்டா கடைகள் நடத்தலாம். கலாசாரத்தையும் காத்துக் கொள்ளலாம். வருமானத்தையும் பெருக்கிக் கொள்ளலாம். வேறென்ன செய்வது?

(கட்டுரையாளர்: கவிஞர், திரைப்பட இயக்குநர்)

Posted in Censor, Colleges, Culture, Dhupatta, Discrimination, Dress, Fashion, Females, Feminism, Freedom, Her, Heritage, Independence, Lady, Leena, Liberation, Loyola, Manimekalai, Police, She, Society, Thupatta, Woman, Women | 16 Comments »