படித்ததில் கிடைத்தது
சலூர், ஆரிகரு, நிகமா, கொரூலா, பொதுகே, மனார்பா – இதெல்லாம் என்ன என்கிறீர்களா? ஒரு வேளை ஜப்பானிய வார்த்தைகளோ என்று குழம்புகிறீர்களா? குழப்பம் வேண்டாம்.
சலூர் அல்லது சாலூர் என்றால் சேலம்.
ஆரிகரு என்றால் திருச்சி உறையூர்.
நிகமா என்றால் நாகப்பட்டினம்
கொரூலா என்றால் காரைக்கால்.
பொதுகே என்றால் பாண்டிச்சேரி.
மனார்பா என்றால் சென்னை மயிலாப்பூர்.
இப்படி நம்ம ஊர்ப் பெயர்களை வாய்நிறைய அழைத்தவர் தாலமி. கி.பி.119 – 161 ஆண்டுகளில் எகிப்தில் வாழ்ந்த அறிஞர். அவர் எழுதிய புவியியல் புத்தகம் ஏழாம் தொகுதியில் இந்தத் தகவல்கள் இருக்கின்றன.
(வி.எஸ்.வி.இராகவன் எழுதிய “தாலமி’ என்ற நூலிலிருந்து கிடைத்த தகவல்)
ஆராய்ச்சி: கம்ப்யூட்டர் – கீ போர்டு – கைகள்!
ந.ஜீவா
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எல்லாருடைய வீடுகளிலும் ரேடியோ கூட இல்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு எல்லாருடைய வீடுகளிலும் டி.வி.இல்லை. ஆனால் இப்போது குடிசைகளின் கதவைத் தட்டி டி.வி. நுழைந்துவிட்டது. இன்னும் பத்தாண்டுகளில் கம்ப்யூட்டர் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்குக் காலம் மாறிவருகிறது.
கம்ப்யூட்டர் படிப்பும் அந்தத் துறையில் வேலைவாய்ப்பும் பெருகிவிட்டதைப் போலவே அது தொடர்பான பிரச்சினைகளும், உடல் நலக் குறைபாடுகளும் அதிகரிப்பது இயல்பானதே.
ஒரு நாளைக்குப் பத்து, பன்னிரண்டு மணி நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி, கழுத்து வலி, கண்ணில் பிரச்சினைகள், தலைவலி போன்றவை ஏற்படுவது சாதாரணம்.
மணிக்கட்டில் வலியும் அதைத் தொடர்ந்து விரல்களில் பாதிப்பும் பின்னர் கம்ப்யூட்டரில் வேலை செய்ய முடியாத அளவுக்குக் கைகள் பாதிக்கப்படுவதும் வெளிநாடுகளில் எப்போதோ ஏற்பட்டுவிட்டன. நமது நாட்டில் அவ்வாறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்று ஆராய்ச்சி செய்துள்ளனர் தஞ்சை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் கே.முகம்மது அலியும் சென்னை ஸ்ரீஇராமச்சந்திரா மெடிக்கல் காலேஜைச் சேர்ந்த டாக்டர் சத்தியசேகரனும். போலந்தில் இருந்து வெளிவரும் Intertnational journal of JOSE occupational safety and Ergonomics என்ற உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சி இதழில் அவர்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரை வெளிவந்து சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் பாதிப்புகள் ஏற்படாமல் எவ்வாறு தடுத்துக் கொள்வது என்பது பற்றியும் டாக்டர் முகம்மது அலியிடம் பேசினோம்.
டாக்டர் கே. முகம்மது அலி
நம்முடைய நாட்டில் குறிப்பாகச் சென்னையில் கடந்த பத்தாண்டுகளாகவே ஐ.டி. கம்பெனிகள் அதிகரித்துவிட்டன. நிறையப் பேர் கம்ப்யூட்டர் படித்துவிட்டு இரவும் பகலும் கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து வேலை செய்கின்றனர். இந்த ஐ.டி.கம்பெனிகளில் வேலைசெய்யும் பலர் ஒரு நாளைக்கு பத்துமணி நேரம், பன்னிரண்டு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்கிறார்கள். அது தவிர, வீட்டுக்கு வந்தும் அலுவலக வேலைகளைச் செய்பவர்களும் உள்ளனர். போதாக் குறைக்கு இன்டர்நெட் கனெக்ஷன் வேறு வாங்கி வைத்திருப்பவர்கள் வீட்டிற்கு வந்து மேலும் இரண்டுமணி நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருப்பார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். கழுத்து வலி, முதுகு வலி, கண்எரிச்சல், தலைவலி, உடல்பலவீனமாக உணர்தல், மன இறுக்கம் எல்லாம் சாதாரணம் என்று சொல்லக் கூடிய அளவில் மணிக்கட்டில் வலி ஏற்படும். மணிக்கட்டுப் பகுதியில் உள்ள மீடியன் நரம்பில் ஏற்படும் பாதிப்பினால் இது ஏற்படுகிறது. இதனால் கைவிரல் மரத்துப் போகும். இரவுநேரத்திலும் காலையில் எழும்போது கைவிரல்களில் வலி அதிகமாகத் தெரியும். ஆரம்ப நிலையிலேயே இதைக் கவனிக்கவில்லையென்றால் பின்னர் கைத் தசைகள் பாதிக்கப்பட்டு கைகளினால் வேலையே செய்ய முடியாத நிலை ஏற்படும். இந்த நோய்க்கு Carpal tunnel syndrome என்று பெயர்.
நமது நாட்டில் கம்ப்யூட்டர் வேலை வாய்ப்புகள் பெருகி வரும் சமயத்தில் இந்த மாதிரியான பாதிப்புகள் எந்த அளவுக்கு உள்ளன என்பதைப் பற்றி அறிய ஆராய்ச்சி மேற்கொண்டோம். நானும் டாக்டர் சத்தியசேகரனும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டோம்.
சென்னையில் உள்ள சுமார் 33 கம்பெனிகளில் இந்த ஆராய்ச்சிக்காக ஏறி இறங்கினோம். ஆராய்ச்சி செய்வதற்கான அனுமதி வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. பெரும்பாலான கம்பெனிகள் மல்ட்டி நேஷனல் கம்பெனிகளாக இருப்பதால் அதன் தலைமையகங்கள் வெளிநாடுகளில் உள்ளன. அவர்கள் முறைப்படி அனுமதி பெற வேண்டியிருந்தது. கடைசியில் எங்கள் ஆராய்ச்சிக்கு உட்பட்ட கம்பெனிகள் வெறும் 21 தான். அதில் மொத்தம் பணிபுரியும் 4276 பேரில் 648 பேரை “ராண்டம் சாம்பிளிங்’ என்கிற முறையில் தேர்ந்தெடுத்து ஆராய்ச்சியை மேற்கொண்டோம்.
ஆராய்ச்சியின் முடிவில் எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தன. கம்ப்யூட்டரில் வேலைசெய்பவர்களில் எட்டுப் பேருக்கு ஒருவருக்கு இந்த மணிக்கட்டு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
எங்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவர்கள் பெரும்பாலோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் தாம். அதிலும் ஆண்களே அதிகம். பொதுவாகப் பெண்களைவிட இந்தத் துறையில் ஆண்களே அதிக நேரம் வேலை செய்வதும் எங்கள் ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்தது. ஆண்கள் சராசரியாக 12 மணி நேரம் செய்தால் பெண்கள் 8 மணிநேரம்தான் வேலை செய்வது தெரிந்தது. இதனால் ஆண்களுக்கு இந்தப் பாதிப்புகள் அதிகம். மேலும் ஆண்கள் வீட்டிற்குப் போயும் இன்டர்நெட்டில் மூழ்கிவிடுவதும், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவையும் காரணம்.
டாக்டர் சத்தியசேகரன்
இந்தப் பிரச்சினை வருவதற்கு முக்கியக் காரணம், கம்ப்யூட்டரில் கீ போர்டில் டைப் செய்யும் போதும், மெüûஸப் பயன்படுத்தும் போதும் மணிக்கட்டு அருகே கை மடங்கியிருக்கும்படி வேலை செய்வதுதான். அதனால் மீடியன் நரம்பு பாதிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க முழங்கையும் மணிக்கட்டும் நேர்கோட்டில் இருக்கும்படி வைத்து வேலைசெய்ய வேண்டும். இதற்கு உட்காரும் இருக்கை வேலை செய்பவரின் உயரத்திற்குத் தக்கபடி ஏற்றி இறக்கி அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்படி இருக்க வேண்டும்.
பலர் வீடுகளில் கம்ப்யூட்டர் வாங்கி விடுவார்கள். ஆனால் அதற்கேற்ற பொருத்தமான மேஜையோ, நாற்காலியோ வாங்கமாட்டார்கள்.
அதற்கடுத்து தொடர்ச்சியாக வேலை செய்யாமல் அரை மணிநேரத்துக்கு ஒரு தடவை 5 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். 2 – 3 மணி நேரங்கள் தொடர்ந்து வேலை செய்தால் குறைந்தபட்சம் கால் மணி நேரமாவது ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும்.
மானிட்டருக்கும் கைக்கும் உள்ள தூரத்தைப் பொருத்தமான அளவில் வைக்க வேண்டும். மணிக்கட்டு ஒரு போதும் மடங்கவே கூடாது.
2004 ல் நாங்கள் செய்த இந்த ஆராய்ச்சியை நாங்கள் போலந்தில் உள்ள ஆராய்ச்சி இதழுக்கு அனுப்பி வைத்தோம். அந்த இதழ் சர்வதேச தொழிலாளர் அமைப்பாலும் (ILO), சர்வதேச எர்கானமிக்ஸ் அமைப்பாலும் (IEA) அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. எந்த ஆராய்ச்சிக் கட்டுரையை அனுப்பி வைத்தாலும் அவர்கள் உடனே “ஓகே’ சொல்லிவிடமாட்டார்கள். இத்துறை சார்ந்த பல நிபுணர்களின் பார்வைக்கு கட்டுரை அனுப்பி வைக்கப்படும். அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகே கட்டுரை பிரசுரிக்கப்படும். அது 2006 டிசம்பர் மாதம் பிரசுரிக்கப்பட்டது.
எல்லாராலும் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை மட்டுமே வெளியிடும் இணையதளமான www.pubmed.com ் இலும் எங்களுடைய கட்டுரை வெளிவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சியை இந்தியாவிலேயே நாங்கள்தான் முதன் முறையாகச் செய்துள்ளோம்.
2004 இல் சண்டிகாரில் நடந்த IAPSM – இன் தேசியமாநாட்டில் இந்தக் கட்டுரைக்கு “இளம் ஆண்விஞ்ஞானிகளின் சிறந்த ஆராய்ச்சிக்கான விருது கொடுத்தார்கள்.
இந்த ஆராய்ச்சியைச் செய்து உண்மையைக் கண்டுபிடிப்பது மட்டும் எங்கள் நோக்கமல்ல. கம்ப்யூட்டரில் தொடர்ந்து பணிபுரிபவர்களுக்கு இம்மாதிரியான பிரச்சினைகள் இனியும் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
எனவே இதுகுறித்து கம்ப்யூட்டரில் பணிபுரிபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். அவர்கள் வேலை செய்யும் கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு தேவையான ஆலோசனைகளைச் சொல்கிறோம். குறிப்பாக ஸீட்டிங் அரேன்ஜ்மென்ட் பற்றிச் சொல்கிறோம். அரசுக்கும் இந்த ஆராய்ச்சி முடிவுகளைத் தெரிவிக்க முயற்சி எடுத்து வருகிறோம்.
முகங்கள்: நீதியின் ஏ.கே.47!
ஞாயிறு
ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வலம் வரும் டிராஃபிக் ராமசாமி (74) அநீதிகளுக்கு எதிரான ஓர் ஏ.கே.47!
பொதுமக்கள், போலீஸ், அரசியல்வாதி, வக்கீல், முதல்வர் என யார் தவறு செய்தாலும் “பொது நல வழக்கு’ மூலம் தட்டிக் கேட்பவர்! வெற்றி பெறுபவர்!
லேட்டஸ்ட் வெற்றி -“ஹெல்மெட் கட்டாயம்!
இந்த டிராஃபிக் ராமசாமி தன் டெரிஃ”பிக்’ பயண அனுபவத்தை அவரே இங்கு சொல்கிறார். நோ டிராஃபிக் “ஜாம்’!
“”ஏப்ரல் ஒண்ணு முட்டாள்கள் தினம். அன்னைக்குதான் நான் பிறந்தேன். வருஷம் 1934. முட்டாள்கள் தினத்தில் பிறந்தவர்கள் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள் என்பதை மாற்றவேண்டும் என்கிற எண்ணம் எனக்குச் சின்ன வயதிலிருந்தே உண்டு. அதை இப்போது நான் அறிவாளிகள் தினம்னு மாற்றியிருக்கிறேன் என்று கூடச் சொல்லுவேன். தனக்குச் சரியென்று பட்டதைச் சரியென்றும் தவறென்று பட்டதைத் தவறு என்றும் சொல்வது தவறே இல்லை. இந்த எண்ணமும், இந்தக் கொள்கையும்தான் என் மூச்சே. இதை நான் சின்ன வயதிலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன்.
பச்சையப்பன் கல்லூரியில் ஃபெல்லோ ஆர்ட்ஸ் முடிச்சிட்டு பி.அண்ட்.சி மில்லுல படிப்படியா முன்னேறி அதிகாரியா வேலை செஞ்சேன். எங்க அப்பாவும் அங்க வேலை பார்த்தார். எனக்குக் கல்யாணம் செய்து வைக்க அப்பா முடிவு செய்தார். பொண்ணு பார்த்து நிச்சயதார்த்தம் முடிச்சு கல்யாணப் பத்திரிகையும் அடிச்சாச்சு. எனக்குத் தெரியாமலேயே எங்கப்பா பொண்ணு வீட்டாரிடம் வரதட்சணை கேட்டிருக்கிறார். ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரதட்சணை. இந்த விஷயம் தெரிந்ததும், வரதட்சணை வாங்கக்கூடாதுனு சொன்னேன். எங்கப்பா ஒத்துக்கல. வாங்கியே ஆகணும்னு ஒத்தக் கால்ல நின்னாரு. வாங்கக்கூடாதுனு நான் ரெட்டைக் கால்ல நின்னேன். இது ரெண்டு பேருக்குள்ளேயும் பெரிய எதிர்ப்பா கிளம்பிடுச்சு. பத்திரிகை அடிச்சு கொடுத்தப் பிறகும் கல்யாணத்தை நிறுத்துவதற்கு அப்பா முயற்சித்தார். பி.அண்ட்.சி மில்லுல எனக்கு மேல இருந்த அதிகாரிகளிடம் சொல்லி வேலையைவிட்டுத் தூக்கிடுவதாக மிரட்டினார். நான் அஞ்சவில்லை. எதிர்ப்புகளை மீறி வரதட்சணை வாங்காம நிச்சயம் செய்த பெண்ணையே மணம் முடித்தேன். வீட்டைவிட்டு தனியாகவும் வந்துவிட்டேன். எங்கூட பிறந்தவங்க பத்துபேரு. கூட்டுக் குடும்பமா இருந்தோம். அதோடு பிரிந்ததுதான், இன்று வரை சேரவில்லை. சில காலத்திற்கு பிறகு பி.அண்ட்.சி மில்லு வேலைய உதறிவிட்டு வந்து, சமூகத்தில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக்கேட்பதுதான் என் வேலை என்று உறுதி எடுத்துக்கொண்டேன்.
ஆரம்பத்தில் தவறு செய்கிற ஊழியர்கள் மீது பெட்டிஷன் போட்டு நடவடிக்கை எடுத்தேன். அப்போது அதிகாரிகளும் உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுத்தார்கள். போகப் போக பெட்டிஷனுக்கு மதிப்பு இல்லாமல் போனது. போட்ட பெட்டிஷன்கள் குப்பைக் கூடைக்குத்தான் போயின. இதன்பிறகுதான் பொதுநல வழக்குப் போடத் தொடங்கினேன்.
முதல் வழக்கு ஐகோர்ட்டு பகுதியில் உள்ள ஒரு ரோட்டை ஒன்வேயாக மாற்றியது தொடர்பானது. ஐகோர்ட்டு உள்ள பாரிமுனை பகுதி நெரிசல் மிகுந்த பகுதி. ஒன் வே மாற்றிய பிறகு பல விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். ஒன் வேயாக மாற்றிய முதல்நாள் ஒரு கண்டக்டர் உயிரிழந்தார். ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு ரோடைக் கிராஸ் செய்கிறபோது வேனில் அடிபட்டு இறந்துபோனார். இப்படி ஒன்றரை வருடத்தில் 28-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இது இருவழிச் சாலையாக இருந்தபோது விபத்தில் இறந்தோர் எண்ணிக்கையைவிட அதிகம். இந்தப் புள்ளிவிவரங்களுடன், இறந்தவர்கள் போட்டோ உட்பட அனைத்து விவரங்களையும் சேகரித்து பொதுநல வழக்குத் தொடர்ந்தேன். போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் என் கருத்தை ஒத்துக்கொள்ளவில்லை. கோர்ட்டில் ஒரு போக்குவரத்து காவல்துறை அதிகாரி, “”ஐகோர்ட்டு உள்ள பாரிமுனை பகுதியை ஜெர்மனியில் உள்ள சாலை அமைப்புகள் போல மாற்றி அமைக்கப்போகிறோம். இதில் ஒரு கட்டம்தான் ஒன் வே. இது இங்கு அவசியமானது” என்றார். அதற்கு நான் “”இந்த அதிகாரி ஜெர்மனிக்குதான் லாயக்கு… தமிழ்நாட்டுக்கு லாயக்கில்லை. அவரை அங்கேயே மாற்றிவிடுங்கள்”என்று சொன்னேன். இதன் பிறகு நீதிபதிகள் விசாரித்து பாரிமுனை பகுதிக்கு ஒன் வே சரிவராது என்று தீர்ப்பு வழங்கினர். இந்த வழக்கில் ஒரு சோகச் சம்பவம் என்னவென்றால். எந்த அதிகாரி பாரிமுனை பகுதியை ஜெர்மனியாக மாற்றி அமைக்கிறேன் என்று சொன்னாரோ அவருடைய சகோதரி கணவர் தீர்ப்பு வருவதற்கு முதல்நாள் விபத்தொன்றில் அதே சாலையில் இறந்துபோனார். அதன் பிறகு மீன்பாடி வண்டிகள் குறித்து வழக்குத் தொடர்ந்தேன். சைக்கிள் ரிக்ஷா தொழிலாளர்களின் நலனின் அக்கறை கொண்டு, .25 குதிரை திறனுள்ள மோட்டாரை சைக்கிள் ரிக்ஷாவில் பொருத்திக்கொள்ள அனுமதி கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆனால் போகப்போக சைக்கிள் ரிக்ஷா என்ற பெயரில் மீன்பாடி வண்டியில் மோட்டார் வாகனங்களுக்குப் பொருத்தக்கூடிய மோட்டாரைப் பொருத்தி ஓட்டி வந்தனர். இந்த மீன்பாடி வண்டியில் அடிபட்டு இறந்தால் எந்த நஷ்ட ஈடும் பெற முடியாது. இதைக் கருத்தில்கொண்டு பொதுநல வழக்குத் தொடர்ந்தேன். முதல்கட்டமாக சென்னைக்குள் மீன்பாடி வண்டிக்குத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. புறநகர் பகுதிகளில் மட்டும் இப்போது ஓடிக்கொண்டு இருக்கிறது. அங்கேயும் இதற்கு தடைவிதிப்பது தொடர்பாக வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
அதைப்போல அடுக்ககங்கள் தொடர்பாக வழக்குத் தொடர்ந்தேன். 85 அடிகள் கொண்ட சாலையில் 3 மூன்று மாடிக் கட்டடங்கள்தான் கட்டலாம். ஆனால் அனுமதி பெறாமல் பலர் பலமாடி கட்டடங்கள் கட்டியுள்ளனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னையில் 32 அடுக்ககங்களை இடிக்கச் சொல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி பல தரப்பிலும் இருந்து மிரட்டல் வந்தன. 30 லட்சம் ரூபாய் பணம் தருவதாகவும் கூறினார்கள். நான் வாங்க மறுத்துவிட்டேன்.
இந்த வழக்கில் மட்டுமல்ல பல வழக்குகளில் மிரட்டப்பட்டுள்ளேன். ஒருமுறை ஐகோர்ட்டு அருகில் போக்குவரத்துகளைச் சரிசெய்துகொண்டிருந்தேன். வழக்கு போடுவது மட்டும்தான் என் வேலை என்று நினைக்கக்கூடாது. போக்குவரத்துகளைச் சரிசெய்கிற பணியிலும் ஈடுபடுவேன். போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரமும் செய்கிறேன். ஐகோர்ட்டு அருகில் போக்குவரத்தைச் சரிசெய்து கொண்டிருக்கும்போது மாலை நேரம். கூட்டம் அதிகம். எனக்கு ஒரு கண் சரியாகத் தெரியாது. அதற்காகக் கண்ணாடி போட்டிருப்பேன். இதைத் தெரிந்துகொண்ட ஒருவன் கண்ணாடியைத் தட்டிவிட்டு கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டான். இத்தனைக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் சிறிது தூரத்தில்தான் நின்றிருந்தார். அவரிடம் புகார் கொடுத்தேன் அவருக்குத் தெரிந்துதான் இந்தச் சம்பவம் நடந்தது. ஒரு நடவடிக்கையும் இல்லை. ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தேன். அவர்கள் உத்தரவின்பேரில் எனக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. போலீஸ் பாதுகாப்பு அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல. மக்களும் கேட்டுப் பெறலாம் என்பதற்காகத்தான் போலீஸ் பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டேன். என்னைப் போல என் வீட்டாருக்கு எந்தவித தொந்தரவும் வரக்கூடாது என்பதற்காக நான் அவர்களோடு இல்லை. கோடம்பாக்கத்தில் ஒரு நண்பர் வீட்டில் இருக்கிறேன். நாளுக்குநாள் எதிரிகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். வக்கீல்கள், அரசியல்வாதிகள், முதல்வர்கள் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இது எனக்குச் சந்தோஷத்தையே அளிக்கிறது. என் ரோல் மாடல் இராஜாஜி. தவறென்றால் எங்கும், யாரையும் தட்டிக் கேட்பேன்.” என்று கையில் கேமரா எடுத்துக்கொண்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் சகிதம் எங்காவது தவறுகள் நடக்கிறதா என்று பஸ்ஸில் ஏறி பயணிக்கத் தொடங்குகிறார் டிராஃபிக்!
மேடை: இங்கே கடம்; அங்கே க்ளே}டிரம்!
ரவிக்குமார்
கர்நாடக இசை உலகில் மூத்த தலைமுறை, சமகாலத்தில் வாசித்துக் கொண்டிருக்கும் தலைமுறை, வளர்ந்து வரும் இளந்தலைமுறை, இந்த மூன்று தலைமுறை இசைக் கலைஞர்களும் தங்களின் கச்சேரிக்கு கடம் வாசிப்பதற்கு ஃபர்ஸ்ட் சாய்ஸôக விரும்புவது, “கடம்’ சுரேஷ்!
“”கடவுள் அனுக்கிரகத்தோடு, அனுசரிப்புடன் கூடிய வாசிப்பு முறையை நான் பின்பற்றுவதுதான், மூத்த தலைமுறை கலைஞர்கள் முதல் இளந்தலைமுறை கலைஞர்கள் வரை பலரும் நான் பக்கவாத்தியம் வாசிக்கவேண்டும் என்று விரும்புவதற்குக் காரணம்” என்கிறார் அடக்கத்தோடு சுரேஷ்.
கடம் தவிர மிருதங்கம், கஞ்சிரா, மோர்சிங் போன்ற வாத்தியங்களை இசைப்பதிலும், கொன்னக்கோலிலும் சிறப்புப் பயிற்சி பெற்றிருக்கும் சுரேஷ், சமீபத்தில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடந்த இரண்டாவது உலகளாவிய தாள வாத்தியக்காரர்கள் பங்கேற்ற இசைத் திருவிழாவில் பங்கேற்று கடம் வாசித்திருக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்த ஒரே இந்தியக் கலைஞர் “கடம்’ சுரேஷ் என்பதால், இந்தியர்கள் “காலரை’த் தூக்கி விட்டுக் கொள்ளலாம்! இனி அவரின் இசைப் பயணத்திலிருந்து சில ஞாபகத் துளிகள்!
நான் இன்றைக்கு இசையுலகில் நல்லதொரு நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் எனக்குக் கிடைத்த குரு பரம்பரையினர்தான். லய மேதை ஹரிஹர சர்மா தான் எனக்கு முதல் குரு. இவர் விக்கு விநாயகராமின் தந்தை. விக்கு விநாயகராமிடமும் என்னுடைய பாடத்தைத் தொடர்ந்தேன். அதன்பின், உமையாள்புரம் நாராயணசுவாமியிடம் அவரின் கடைசி காலத்தில் அவரிடமிருந்த மிகப்பெரிய பொக்கிஷத்தை நான் அறிந்து கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அது, அவரின் தந்தை கோதண்டராம ஐயர் கடம் வாசிப்பில் தனக்கென உண்டாக்கியிருந்த பாணி. கையின் விரல்களைப் பயன்படுத்தித்தான் பெரும்பாலும் கடம் வாசிப்பார்கள். ஆனால் அவரது பாணி, கையின் விரல்கள், விரல் நகங்கள், விரல் மூட்டுகள்..என அனைத்தையும் பயன்படுத்தி வாசிக்கும் முறை. அதேபோல் டி.வி. கோபாலகிருஷ்ணனிடமும் இருபது வருடங்கள் வரை லயப் பயிற்சி பெற்றேன். 1980-லேயே டி.வி.ஜி.யுடன் இணைந்து கர்னாடிக் ஜாஸ் இசை நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கி விட்டேன். அப்போது திலீப் கீ-போர்டு வாசிப்பார். சிவா டிரம்ஸ் வாசிப்பார். அதன்பின் ஒவ்வொருவரும் தனித் தனி டிராக்கில் பிஸியாகிவிட்டோம். சிவா- டிரம்ஸ் சிவமணியாகி மும்பையில் செட்டிலாகிவிட்டார். திலீப், ஏ.ஆர். ரஹ்மானாக புகழ்பெற்ற இசையமைப்பாளராகி விட்டார். நானும் பிரபல வித்வான்களுக்கு கடம் வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
வீணை எஸ். பாலசந்தர் சீனாவில் இசை நிகழ்ச்சி வழங்கும் போது அவருக்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. மூத்த இசைக் கலைஞரான உமையாள்புரம் சிவராமன் ஜப்பானில் வழங்கிய இசை நிகழ்ச்சிக்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் பெருமையை எனக்கு அளித்தார்.
பொதுவாக நடனத்துக்கு கடம் வாத்தியத்தைப் பயன்படுத்துவது அரிது. ஆனால் மறைந்த நாட்டிய மேதை சந்திரலேகா “மகா காளி’ என்னும் பெயரில் மரபும், நவீனமும் கலந்த நாட்டிய நிகழ்ச்சியை ஐரோப்பா மற்றும் கனடா நாடுகளில் நடத்தினார். இந்த நிகழ்ச்சிகள் முழுவதிலும் நான் கடம் வாசித்தேன்.
கொல்கத்தாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞரான விக்ரம்கோஷ் தலைமையில் உருவான “ரிதம்ஸ்கேப்’ என்ற குழுவில் நானும் இடம்பெற்றேன். நாங்கள் 2004-ல் பார்சிலோனாவில், ஓர் இசை நிகழ்ச்சியை அளித்தோம்.
இன்றைக்கு பல உலக நாடுகளிலும் என்னுடைய கடத்தின் ஒலி கேட்பதற்குக் காரணம், மிருதங்க மேதையான காரைக்குடி மணிதான். அவரின் “ஸ்ருதிலயா’வின் மூலமாக மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.
தற்போது நான் பங்கேற்ற பார்சிலோனா இசை விழாவில், இரண்டு நாட்கள் என்னுடைய மியூசிக் கன்ஸர்ட் நடந்தது. என்னுடன் சேர்ந்து பெüலோ சிமினோ என்பவர் “ஃபிரேம் டிரம்’ என்ற தாள வாத்தியத்தை வாசித்தார். இந்த வாத்தியம் நம்மூரில் வாசிக்கப்படும் “டேப்’ மாதிரி இருக்கும். ஆனால் இதை கையில்தான் வாசிக்கவேண்டும். கடம் வாத்தியக் கலைஞர்களுக்கு மேற்கத்திய நாடுகளில் ஏகப்பட்ட வரவேற்பு இருக்கிறது. அங்கு கடத்திற்குப் பெயர் க்ளே-டிரம்! அதன் நாதத்திற்கு மயங்காத மேற்கத்தியர்களே கிடையாது எனலாம். ஃபிரேம் டிரம் வாசிக்கும் பெüலோ சிமினோ கூட என்னிடம் கடம் வாசிக்கக் கற்றுக் கொள்கிறார். எப்படி என்கிறீர்களா? எல்லாம் இ-மெயில், சாட்டிங், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித்தான்!
நான் இங்கிருந்து கடம் வாசித்து அதை ஒரு ஃபைலில் பதிவு செய்து, இ-மெயிலில் அனுப்பி விடுவேன். அந்த ஃபைலில் ஒரு மாதத்துக்கு தேவையான பாடம் இருக்கும். சந்தேகம் என்றால், சாட்டிங்கில் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வார். இப்படி என்னிடம் இணையத்தின் வழியாக இசை படிப்பவர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் பெரும்பாலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள். பெüலோ சிமினோ போன்று சில வெளிநாட்டவர்களும் உண்டு. தாகா என்ற ஜப்பானியருக்கு எப்படியோ நான் கடம் வாசித்திருக்கும் சி.டி. கிடைத்திருக்கிறது. அதில் கடத்தின் நாதத்தில் மனதைப் பறிகொடுத்த தாகா ஆகி குனோ, இந்த வாத்தியத்தைக் கற்றுக் கொண்டே தீருவது என்ற முடிவோடு இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னைச் சந்தித்தார். அவருடைய ஆர்வம் எனக்குப் பிரமிப்பூட்டியது. மடமடவென்று கடம் வாசிப்பில் இருக்கும் நுணுக்கங்களைத் தெரிந்து கொண்ட தாகா, இன்றைக்கு மானாமதுரைக்குச் சென்று கடம் வாத்தியங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கும் அளவுக்குத் தேறிவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
குரு, சிஷ்ய பாணிதான் இசையைக் கற்றுக்கொள்வதற்கான சரியான முறை. வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் நம்முடைய கலாசாரத்தின் வேரை இழக்காமல், கலை வடிவங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது இன்றைய தொழில்நுட்பம். இதை நான் தவறென்று சொல்லமாட்டேன். ஆனால் உள்ளூரில் இருப்பவர்கள் எல்லாம் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி இசையைக் கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தால் அவர்களை நான் ஆதரிப்பது கிடையாது. அவர்கள் நேரடியாகக் கற்றுக் கொள்வதுதான் நல்லது.
நமது மதத் தத்துவங்களின்படி மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை உடன் வருவது பானை. இப்படிப் பானை தொடர்பான தத்துவங்களை, சிந்தனைகளை தனது (ஒரு குயவன் அரை கடவுள்)‘அ ல்ர்ற்ற்ங்ழ் ஹ க்ங்ம்ண் எர்க்’ என்ற நூலில் 1960-ம் ஆண்டு எழுதியுள்ளார் பிரெஞ்ச் எழுத்தாளரும், தத்துவவியலாளருமான ழான் கேன்டீன். இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு ராஃப்பேல் ஓப்ரியான் என்னும் பிரெஞ்ச் குறும்பட இயக்குனர் “யதி’ என்னும் பெயரில் 45 நிமிடங்கள் ஓடும் ஒரு குறும்படத்தை 1996-ல் எடுப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்தார். அந்தக் குறும்படத்தின் பின்னணி இசையில் முழுக்க முழுக்க நான் கடம் வாசித்திருந்தேன். இந்தக் குறும்படத்துக்கு சிறந்த குறும்படத்திற்கான பரிசும் கிடைத்தது.
எந்த வேளையில் சிவதாண்டவமாடினாலும் அப்போதெல்லாம் வாசிக்கப்படும் பெருமையைப் பெற்ற இசை வாத்தியம் கடம். அதன் புகழ் வெளிநாட்டவர்களின் இந்தக் குறும்படத்தில் வெளிப்படுகிறது என்றால் அது மகிழ்ச்சியான விஷயம்தானே!” என்கிறார் சுரேஷ்.
-கடத்தின் நாதத்திற்கு நிகரேது!