சவால்விடுக்கும் சாலை விபத்துகள்!
சா. ஜெயப்பிரகாஷ்
உலகில் ஒவ்வொரு வினாடியும் சாலை விபத்துகளில் 6 பேர் பலியாகின்றனர், அல்லது பலத்த காயமடைகின்றனர்.
2002-ல் உலகில் 12 லட்சம் மக்கள் சாலை விபத்துகளால் இறந்தனர். அவர்களில் 70 சதம் பேர் ஆண்கள். இந்தியாவில் சாலை விபத்தில் பலியாவோர் எண்ணிக்கை 2020-களில் தற்போதைய எண்ணிக்கையைவிட 147 சதம் உயரும் என்றும் கூறப்படுகிறது’. இவை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விடுக்கும் எச்சரிக்கை.
குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகப் பயணம், ஹெல்மெட் உள்ளிட்ட போதிய பாதுகாப்பு சாதனங்கள் இன்றி பயணம், மோசமான சாலைகள்- சாலைச் சூழல்கள், பாதுகாப்பில்லாத வாகன வடிவமைப்பு போன்றவையே சாலை விபத்துகளுக்குக் காரணங்கள்.
முடிந்தவரை விபத்துகளைத் தவிர்ப்பது, அடுத்த கட்டமாக, மரணத்தைத் தவிர்ப்பது என்று படிப்படியாகச் சிந்தித்தல் அவசியம்.
தமிழக அரசின் 2007-08 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக, சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொள்ள ரூ. 6 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், குறிப்பிடும்படியான, பயனுள்ள வகையிலான பிரசாரங்கள் நடந்ததாகத் தெரியவில்லை. நடந்ததாகக் கூறப்படும் சில பிரசாரங்களும் பெயரளவில் ஆங்காங்கே நடந்துள்ளன.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, கோர விபத்துகளைப் படம்பிடித்து குறும்படங்களாக்கி கல்லூரிகளில், திரையரங்குகளில் காட்டி, அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
அந்தப் படங்களில், சாலை விதிகளை மதித்தல், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதன் தீமைகள், அதிவேகப் பயணத்தால் ஏற்படும் பாதிப்பு போன்றவை குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கலாம்.
தமிழ்நாட்டிலுள்ள எந்த அரசு மருத்துவமனையிலும் தலைக்காயத்துக்கு சவால்விட்டு சிகிச்சை அளிக்கும் நிலை இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டாக வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில்கூட பெரும்பாலும் “சாதனை முயற்சி’ என்ற பெயரிலே இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் மூளை – நரம்பியல் நிபுணர்கள் உள்ளனர். பணிப்பளு காரணமாக இரவில் இவர்கள் யாரும் பணியில் இருப்பது சாத்தியமில்லை.
சென்னை போன்ற பெருநகரங்களிலும் இதே நிலை. மாநகரங்கள், நகரங்கள் தாண்டி, நாட்டின் பெரிய பரப்பை ஆக்கிரமித்திருக்கும் கிராமங்களில் தலைக்காயத்துக்கான உயர் சிகிச்சையை எதிர்ப்பார்ப்பதே தவறுதான்.
அரசு மருத்துவர்களுக்கு, மண்டை ஓட்டைப் பிளந்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்கான நவீன ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அவற்றுக்கான வசதிகளைத் தாராளமாகச் செய்து தரவும் அரசு திட்டமிட வேண்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆராய்ச்சித் தளத்தை விரிவுபடுத்தி பெருநகரங்களில் தலைக்காய நவீன அறுவைச் சிகிச்சைகளை அதிக அளவில் மேற்கொள்ளலாம்.
“பேரிடர் மேலாண்மை’ என்று பெரும் முயற்சியுடன் திட்டங்களைச் செயல்படுத்துவதைப்போல “விபத்து மேலாண்மை’த் திட்டத்தையும் வகுத்து செயல்படுத்தலாம்.
விபத்து நேர்ந்தவுடன் பாதிக்கப்பட்டவர்களை அறிவியல்பூர்வமாகப் பாதுகாத்து, முதலுதவி அளித்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுதல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் விதிமுறைகள் ஒரு குறுக்கீடாக அமையக்கூடாது.
“”முன்னைவிட நோயாளி தற்போது மேம்பட்டுள்ளார். நினைவின்றிக் கிடந்தவர் தற்போது கை, கால்களை அசைக்கிறார். தேறிவிடுவார். என்றாலும், தலைக்காயம்… எதுவும் சொல்ல முடியாது” என்று நமது அரசு மருத்துவர்கள் கூறுவதைப் படிப்படியாகவாவது குறைக்க வேண்டும்.
சாலை விதிகளை மதிப்போம்; விபத்துகளைத் தவிர்ப்போம்; விதியையும் மதியால் வெல்வோம்!