மூலிகை மூலை: இதய பலவீனத்துக்குத் தூதுவளை!
விஜயராஜன்
சிறிதாக உடைந்த முள் உள்ள இலைகளையும் மித ஊதா நிறப் பூக்களையும், உருண்டையான பச்சை நிறக் காய்களையும், சிவப்பு நிறத்தில் பழங்களையும், வளைந்த முட்கள் நிறைந்த தண்டினையும் உடைய சிறு கொடி இனமாகும். இதைப் பந்தல் போட்டு வளர்ப்பது சிறந்த முறையாகும். கொடிகளில் முட்கள் இடைவிடாமல் அப்பி இருக்கும். ஐந்து ஆண்டுகள் வரை வளரக் கூடியது. சரியான முறையில் வளர்த்து வந்தால், அதற்கும் அதிக நாட்கள் வளர வாய்ப்பு உண்டு. வேர் முதல் பழம் வரை எல்லாமே மருத்துவக் குணம் கொண்டவை. இதன் இலையும், பூவும் கோழையை அகற்றவும், உடலைப் பலப்படுத்தவும், காமத்தைப் பெருக்கவும் செய்யும். இதன் காய், பழம் பசியைத் தூண்டும், மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படும். தமிழ்நாடெங்கும் இது பரவலாக வளரும் செடியினம்.
வேறு பெயர்கள்: சிங்க வல்லி, ரத்து நயத்தான், தூதூவளை, தூதூளம், தூதுளை.
ஆங்கிலத்தில்: Soanum Grilobalum, Solanaceae
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம். தூதுவளை இலைகளை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி பொடியை 1 டம்ளர் பசும்பாலில் காலையில் மட்டும் தொடர்ந்து குடித்து வர நாவறட்சி, கபநீர், மூட்டு வலி, காசநோய் குணமாகும்.
தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, குழம்பாகக் கடைந்தோ உண்டு வரக் கபக் கட்டு நீங்கி உடல் பலம் பெறும்.
ஆடா தொடை இலையை ஆவியில் வாட்டி பின்னர் அதைச் சாறு பிழிந்து ஒரு சங்களவு எடுத்து சிறிது தேன் கலந்து குடித்து வர இருமலுடன் துப்பும் சளியில் இரத்தம் கலந்து வருவது உடனே நிற்கும். அத்துடன் 10 சொட்டு தூதுவளை இலையைச் சாறு பிழிந்து குடிக்க, சவ்வு போன்று இழுத்துக் கொண்டு இருக்கும் இருமலும் நீங்கும்.
தூதுவளை இலையைச் சாறு பிழிந்து அதேயளவு நெய்யில் காய்ச்சி 1 தேக்கரண்டியளவு 2 வேளை குடித்து வர, எலும்புருக்கிக் காசம், மார்புச் சளி உடனே நீங்கும்.
தூதுவளைக் காயை நிழலில் உலர்த்திக் காயவைத்து தயிர், உப்பு சேர்த்து பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உணவுடன் உண்டு வர மனநலம் பாதிப்பு, இதய பலவீனம், மலச்சிக்கல் குணமாகும்.
தூதுவளை சமூலத்தை 50 கிராம் அளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 150 மில்லியளவுக்கு வற்றக் காய்ச்சி வடிக்கட்டி 2 வேளை குடித்து வர, இரைப்பு, சுவாசகச் சளி, இருமல் குணமாகும்.
தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி புகை பிடிப்பது போல செய்து வர, இரைப்பு இருமல், மூச்சுத் திணறல், சளி இளகி வெளியேறும்.
தூதுவளைப் பூக்கள் 10 எடுத்து 1 டம்ளர் பாலில் காய்ச்சி வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்து 48 நாட்கள் இருவேளை குடித்து வர, தாது விருத்தி, உடல் பலம், முகவசீகரம் பெறலாம்.
=========================================================
மூலிகை மூலை: தாமரை
விஜயராஜன்
சேற்றுப் பகுதியில் இருக்கும் வேர்க்கட்டுள்ள கிழங்கில் இருந்து கிளம்பி மிருதுவான தண்டுப் பகுதி வெளியேறி அதைத் தொடர்ந்து வட்டமான பெரிய இலைகளை நீர்ப்பரப்பில் பெற்றிருக்கும். அதற்கு மேல் கூம்பு மலரையும் பெற்று இருக்கும். தாமரை இலையின் மேல் பரப்பில் நீர் ஒட்டாத ஒரு தன்மை இருக்கும். தண்ணீர் மேல் மட்டத்தில் பாய் விரித்தாற் போல மிதந்து கொண்டு இருக்கும். இது நேராக வளரும் நீர்க் கொடி இனமாகும். பூ, விதை மருத்துவக் குணம் உடையது. தாமரை மலர்கள் தாது வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும் மருத்துவக் குணம் உடையது. தமிழகம் எங்கும் குளம், குட்டை, கோவில் தடாகத்திலுள்ள பொய்கைகளில் தானாகவே வளர்கின்றது.
வேறு பெயர்கள்: அம்புயம், அம்புசாதம், அரவிந்தம், அன்புசன் மடம், அம்போசம், அம்போருசம் ஆசிய பத்திரம், ஆய் மலர், ஆசைய பத்திரம், இரதிகாந்தன், கந்தோதம், கமலம், கசம், கரோசம், சரோருகம், சலகாங்கம், சலசம், சல சங்கமம், சல நகம்.
வகைகள்: வெண் தாமரை, கல்தாமரை, செந்தாமரை, வெண்ணிற பூக்களைக் கொண்ட தாமரை, வெண் தாமரை என்றும், இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்களைக் கொண்ட தாமரை செந்தாமரை என்றும் பெயர் பெற்றுள்ளது. செந்தாமரையை விட வெண் தாமரைக்கே மருத்துவக் குணம் அதிகம் உள்ளது.
ஆங்கிலத்தில்: Nelumbium speciosum, Wild, Nymphaeqceae
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம். வெண்தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி ஒரு கிலோ அளவு எடுத்து 3 லிட்டர் நீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊறப் போட்டு மறுநாள் அதை அடுப்பில் வைத்து 1 லிட்டர் அளவிற்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி, சர்க்கரை 1 கிலோ கலந்து தேன் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு 15 மில்லி எடுத்து வெந்நீரில் கலந்து 2 வேளை குடித்து வர, உடல் சூடு, தாகம் அடங்கி கண் குளிர்ச்சி பெறும்.
தாமரை இதழ்களை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 5 கிராம் பொடியைத் தேன்விட்டு குழப்பி 2 வேளை சாப்பிட்டு வர, இருதயம் பலப்படும். இரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் சீராக அனுப்பும்.
செந்தாமரை பூவின் இதழ்களை 10 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்துவர உடல் சூடு தணியும்.
தாமரை விதைகள் நன்றாகக் காய்ந்ததாக ஒரு கையளவு எடுத்து 1 டம்ளர் பசும் பாலில் 12 மணிநேரம் இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் இந்தப் பாலை மட்டும் குடித்துவர, உடல் குளிர்ச்சி அடைந்து மூத்திரம் வெள்ளையாகப் பிரிந்து போகும்.
தாமரை விதையை 1 கிராம் எடுத்து அதை 1 டம்ளர் பாலில் கலந்து 2 வேளை குடித்துவர உடல் சூடு தணிந்து தாது வளர்ச்சி அடையும்.
கல்தாமரையை பாலில் அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர, வீரிய விருத்தியும், தேக பலமும் உண்டாகும். (குட்ட வியாதி உள்ளவர்களுக்கு இது ஆகாது.)
============================================
மூலிகை மூலை: பசிக்கு…ருசிக்கு… கறிவேம்பு!
விஜயராஜன்
கொத்தான மாற்று அடுக்கில் அமைந்த நறுமணமுள்ள இலைகளையும் கொத்தான மலர்களையும் கரிய நிறமான பழங்களையும் உடைய நடுத்தர குறுமர வகையைச் சார்ந்ததாகும். இலை மருத்துவ குணம் உடையது. இதனை மருந்தாகப் பயன்படுத்துவதால் பசியைத் தூண்டும். தாதுபலம் பெருகும். வயிற்றில் வெப்பமுண்டாகி வாயுவைக் கலைக்கும். கறிவேம்பினால் தாளிக்காத ஒரு குழம்பு ஒரு குழம்பா? என்று கேட்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காய்கறிச் சமையலுக்கு மணமூட்டியாகப் பயன்படுகிறது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தோட்டக்கால்களில் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படுகின்றது.
வேறு பெயர்கள்: கருவேப்பிலை, கறிவேப்பிளை.
ஆங்கிலத்தில்: Murraya konigii, spreng (Bergera konigii) Rutaceae.
இனி மருத்துவ குணங்களைப் பார்ப்போம்.
கறிவேம்பு நன்றாக முற்றியது 100 கிராம் எடுத்து சுக்கு 25 கிராம் கடுக்காய்த் தோல் 50 கிராம் இவற்றை நிழலில் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகைப் பொடியை வெந்நீரில் இருவேளை குடித்துவர அழிந்து போன சுரப்பிகள் புதுப்பிக்கப்பட்டு ருசியில்லாத நாக்கில் ருசி ஏற்படும். நாம் உண்ணும் உணவுகள் சீர் பெறாமல் வயிற்றில் உளைச்சலைக் கொடுத்தால் அதைச் சமப்படுத்தும். வாத, பித்தங்கள் உடலில் எங்காவது ஒளிந்து கொண்டு இருந்தால் அவற்றை வெளியேற்றும்.
கறிவேம்பு இலையைக் கைப்பிடியளவு, மிளகாய் 2 இவற்றை நெய்யில் வதக்கிப் பழம்புளி, வறுத்த உப்பு சேர்த்து துவையல் செய்து, சாப்பிடும்போது முதல் வாய் உணவுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட குமட்டல், வாந்தி, அசீரண பேதி, சீதபேதி, செரியா மந்தம், வயிற்றுக் கோளாறு குணமாகும்.
கறி வேம்பு இலை, மருதாணி இலை, கரிசலாங் கண்ணி இலையின் தண்டு, கைப்பிடி அளவுடன் சிறிது வேப்பிலையின் கொழுந்தையும் சேர்த்து அரைத்து தலையில் தடவி வர பித்த நரை, இளநரை மாறும்.
கறிவேம்பு, சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு, பொரித்தப் பெருங்காயம் சம அளவாக எடுத்து நிழலில் உலர்த்தி இடித்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை பொடியை நெய்விட்டுப் பிசைந்து சுடு சோறுடன் கலந்து உண்ண மலச்சிக்கல் பேதி நிற்கும். குடல் பலவீனத்தால் ஏற்படுகின்ற பேதியும் நிற்கும்.
கறிவேம்பைத் தொடர்ந்து உணவில் உபயோகித்து வர சளி, கபநீர்க்கட்டு அடங்கும்.
கறிவேம்பு ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முறுங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி நான்கு வேளை 50 மில்லி வீதம் குடித்துவர சளி, இருமல், காய்ச்சல், வாதக் காய்ச்சல் குணமாகும்.
கறிவேம்பு இலை, கொத்தமல்லியிலை, பூண்டு, புதினாக்கீரை, உளுத்தம் பருப்பு, பிரண்டைத் தண்டு, கடுகு இவற்றை நல்லெண்ணையில் வதக்கி அதைப் பின்னர் சட்டினியாக அரைத்து எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு மறுபடியும் தாளித்து ஊறுகாயாக உணவுடன் சேர்த்துவர கபாலநீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும்.
கறிவேம்பு இலையை நிழலில் உலர்த்தி காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியுடன் சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து இரண்டுவேளை தொடர்ந்து சாப்பிட்டு வர நீர்க் கோவை, சூதக வாய்வு குணமாகும்.
கறிவேம்பு ஈர்க்கு, சுக்கு, சீரகம், ஓமம் வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி சிறிது சர்க்கரை சேர்த்துக் குடிக்க செரியாமை, வாயு நீங்கும்.