மூலிகை மூலை: மாதுளையின் மகிமை!
விஜயராஜன்
நீண்ட சின்னதான இலைகளையும், சிவப்பு நிறப் பூக்களையும் பழத்தினுள் சாறுள்ள விதைகளையும் உடைய முத்துக்களையும் உடைய முள் உள்ள செடி இனமாகும். ஆனால் இது செடி வகையிலும் சேராமல், மர வகையிலும் சேராமல் நடுத்தர வகையாக வளரக் கூடியது. ஐந்து அடி வரை வளர்கின்றது. இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவக் குணம் உடையவை.
நோயை நீக்கவும், உடலைத் தேற்றவும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யவும் உபயோகப்படுத்தப்படுகின்றது. பழம் மிகவும் குளிர்ச்சியைத் தருகின்றது. இந்தியாவிலும், தமிழகம் எங்கும் பழத்திற்காகவே தோட்டங்கள் வளர்க்கப்படுகின்றன.
வேறு பெயர்கள்: பல சாடவம், பலபூரகம்
ஆங்கிலத்தில் : Punica granetum, Linn; Punicaceze
மருத்துவக் குணங்கள்: மாதுளை பூச்சாறு பதினைந்து மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்டு கலந்து இருவேளை தொடர்ந்து குடித்து வர வாந்தி, மயக்கம், உடல் சூடு, மூலக் கடுப்பு, அடிக்கடி மலம் கழிக்கும் உணர்ச்சி, இரத்த மூலம் குணமாகும்.
மாதுளம் பிஞ்சு, கொழுந்து, நாவல் மரப்பட்டை அல்லது நாவல் கொழுந்து வகைக்கு கைப்பிடியளவு எடுத்து அரைத்து சாறு பிழிந்து சங்களவு 48 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர நீரிழிவு இருந்த இடம் தெரியாமல் குணமாகும். இதைத் தொடர்ந்து குடித்து வர, சீதபேதி, இரத்த மூலம், மது மேகம், வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
மாதுளம் பூச்சாறும், அருகம்புல் சாறும் வகைக்கு 10 மில்லியளவு வீதம் எடுத்துக் கலந்து 3 வேளையாகக் குடித்து வர மூக்கில் இருந்து இரத்தம் வடிதல் நிற்கும்.
மாதுளம் பூவை கைப்பிடியளவு எடுத்து அத்துடன் கசகசாவை கொஞ்சம் எடுத்து வறுத்துச் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து அத்துடன் பொடுதலை பூண்டுக்காய் 5-ம், சிறிது நன்னாரி வேர் இரண்டையும் அரைத்து பாக்களவு எடுத்து நன்கு புளித்த மோரில் கலந்து முதலில் உள்ள மாதுளம் பூ விழுதையும் சேர்த்துக் கலக்கி தொடர்ந்து 21 நாட்கள் காலையில் மட்டும் வெறும் வயிற்றில் குடித்துவர நீரிழிவு, சொருக்கு மூத்திரம் குணம் அடையும்.
மாதுளம் பூ உலர்ந்தது 10 கிராம், பட்டை 20 கிராம், 2 டம்ளர் நீரில் போட்டு சிறிது படிகாரம் சேர்த்துக் கொதிக்க வைத்து வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண், தொண்டை ரணம், விழுங்க முடியாத வலி குணமாகும்.
மாதுளம் பிஞ்சை அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட உடனே பேதி நிற்கும். மாதுளம் பழச்சாற்றை புழு வெட்டு உள்ள இடத்தில் சூடேறத் தேய்க்க 3 நாளில் அரிப்பு நிற்கும். நாளடைவில் அந்த இடத்தில் முடியும் முளைக்கும்.
மாதுளம் பழத்தோலை நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து அதேயளவு சுக்கு, மிளகு, சீரகம் பொடி செய்து கலந்து சிறிது நெய் அல்லது வெண்ணையோடு சாப்பிட காய்ச்சல் குணமாகும்.
மாதுளம் வேர்ப்பட்டை, செடிப்பட்டை விதை சம அளவாக எடுத்து இடித்து பொடி செய்து 3 கிராம் எடுத்து 2 வேளை வெந்நீரில் சாப்பிட்டு வர கர்ப்பாயாச நோய் தீர்ந்து பிள்ளைப் பேறு உண்டாகும். மாதுளம் பழச்சாறுடன் சிறிது கற்கண்டு கலந்து குடித்து வர உடல் சூடு தணிந்து குளிர்ச்சியடையும். மாதுளம் பழச்சாறு 100 மில்லியுடன் 20 மில்லி இஞ்சிச்சாறு, 30 மில்லி தேன் கலந்து 2 வேளையாக குடித்து வர ஈளை, இருமல் குணமாகும். மாதுளம் வித்தை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர மேகக் கடுப்பு நீங்கும்.