அன்புமணி-எய்ம்ஸ் மோதல் உச்சகட்டம்: அதிகாரிக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு
புதுதில்லி, பிப். 4: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்த எய்ம்ஸின் மக்கள் தொடர்பு ஆலோசகருக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
எய்ம்ஸின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த வர் பி.கே.தாஸ். கடந்த ஜன.31-ஆம் தேதி இவர் ஓய்வு பெற்றார். அன்றைக்கே அவரை எய்ம்ஸ் மக்கள் தொடர்பு ஆலோகராக மீண்டும் நியமித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. எய்ம்ஸின் தலைவர் என்ற முறையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்நிலையில் எய்ம்ஸ் அலுவலகத்துக்கு சென்ற தாஸ், சனிக்கிழமை காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
“என்னைத் தடுத்திய நிறுத்திய காவலர்கள், அவ்வாறு செய்யுமாறு எய்ம்ஸ் இயக்குனர் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தனர்’ என தாஸ் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பி.கே.தாஸ் நியமிக்கப்பட்டவுடன் அவருக்குப் போட்டியாக ராஜு சிங் என்பவரை மக்கள் தொடர்பு அலுவலரின் பொறுப்பைக் கவனிப்பதற்காக நியமித்தார் எய்ம்ஸ் இயக்குனர் வேணுகோபால். இதையடுத்து தற்போது பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இடஒதுக்கீட்டையும் பின்பற்றவில்லை: மருத்துவ பேராசிரியர்கள் நியமனத்தில் விதிகளை மீறிய “எய்ம்ஸ்’
புதுதில்லி, மார்ச் 6: அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (எய்ம்ஸ்), மருத்துவப் பேராசிரியர்களை நியமிப்பதில், அப்பட்டமாக விதிகளை மீறியுள்ளது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2003-ல் எய்ம்ஸ் 164 துணைப் பேராசிரியர்களை நியமித்தது. இதில் 84 பேர் இணைப் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
துணைப் பேராசிரியர்கள், வெளிநாடுகளில் உள்பட வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, எய்ம்ஸ் பதவி உயர்வு அளித்துள்ளதாக மத்திய அரசு தனது பிரமாண வாக்குமூலத்தில் கூறியுள்ளது.
விதிகளை மீறி சட்டவிரோதமாக 164 பேராசிரியர்களை எய்ம்ஸ் நியமித்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா மற்றும் மார்க்கண்டேய கட்ஜு அடங்கிய பெஞ்ச் உத்தரவின்பேரில் மத்திய அரசு இந்த பிரமாண வாக்குமூலத்தைத் தாக்கல் செய்துள்ளது.
பணி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய விதிகளும் பின்பற்றப்படவில்லை. எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த 13 பேரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 46 பேரும் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எஸ்.டி. பிரிவில் 8 பேரும் இதர பிற்படுத்தப்பட்டோர் 17 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணைப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டது மற்றும் குறிப்பிட்ட சில துணைப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதை மறுஆய்வு செய்ய உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.