யார் காதில் விழப் போகிறது?
ரயில்களில் உள்ள கழிப்பறைகளை நவீனப்படுத்த ரூ. 4000 கோடி செலவிடப்படவுள்ளது. 36,000 ரயில்பெட்டிகளில் இந்த நவீன கழிப்பறைகள் 2011-13-ம் ஆண்டுக்குள் அமைக்கப்படும் என்றும் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
“விமானங்களைப் போன்று, குறிப்பிட்ட நிலையங்களில் ரயில் நிற்கும்போது இக்கழிப்பறைகளை இயந்திரங்களே சுத்தம் செய்யும்’ எனப்படுகிறது.
ரயில் நிலையங்களில் மிகவும் மோசமான சுகாதார சீர்கேட்டுக்குக் காரணமாக இருப்பவை ரயில் தண்டவாளங்களுக்கு இடையே கிடக்கும் மனிதக் கழிவுகள் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ரயில்வே பிளாட்பார மேடையில் உணவுப் பொருள் விற்பனை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, துர்நாற்றமும் ஈக்களும் ஒருபுறம் பரவிக்கொண்டிருக்கும் இத்தகைய சுகாதாரக் கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மிகமிக முக்கியம்.
ரயில்வே எடுத்துக் கொண்டுள்ள இந்த நவீன கழிப்பறைத் திட்டத்தால் சுகாதார நோக்கம் உண்மையாகவே நிறைவேறுமா என்று சிந்தித்துப் பார்க்கும்போது இரண்டு காரணங்கள் தயக்கத்தை ஏற்படுத்துகின்றன.
முதலாவதாக, ரயில்வே குறிப்பிடும் நவீன கழிப்பறை என்பது “”கழிவுகள் ஒழுகாப் பசுமைச்சூழல் கழிவறைகள்” என்று அழைக்கப்படுபவை. கழிவுகளில் நீர்பகுதியை மட்டும் வடிகட்டி, குளோரின் சேர்ப்பதன் மூலம் தொற்றுக் கிருமிகள் நீக்கப்பட்ட நீரை தண்டவாளத்திற்கு இடையே கசியச் செய்வதே இதன் செயல்முறை. கெட்டியான கழிவுகள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் அப்புறப்படுத்தப்படும்.
ஆனால் இது நடைமுறையில் வெற்றிகரமாக இல்லை என்பது ஏழு ஆண்டுகளுக்கு முன்பே, சோதனை அடிப்படையில், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் செய்துபார்த்து கைவிடப்பட்டது. நீர் வடிகட்டும் பகுதியில் கழிவுகள் தேங்கி கிருமிகள் சேர்வதும், துர்நாற்றமும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வடிப்பானை மாற்ற வேண்டிய பொருட்செலவும் இதனைக் கைவிடக் காரணங்களாக அமைந்தன.
இரண்டாவதாக, ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும்போது கழிப்பறையைப் பயன்படுத்தாதீர் என்ற வேண்டுகோளை “”மீறினால் ரூ.100 அபராதம்” என்று மாற்றி அமைத்தாலே போதும்! ரயில் நிலையங்களில் புகைபிடித்தால் அபராதம் என்பது அமலுக்கு வந்தபிறகு ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் புகைபிடிப்போர் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆகவே, இதற்காக ரூ. 4000 கோடி ஒதுக்க வேண்டுமா என்று யோசிக்கும்போது ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று மனதில் மின்னி மறைகிறது: “ஓடும் ரயில்களைச் சுத்தப்படுத்தும் பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு’
கூட்டிக் கழித்துப் பார்த்தால் “சுத்தமாகப்’ புரிந்துவிடுகிறது.
தோல்வி கண்ட ஒரு திட்டத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ள ரயில்வே நிர்வாகம், தான் முன்பு அறிவித்த, இந்நேரம் செயல்படுத்தியிருக்க வேண்டிய, “ரயில் குடிநீர்’ திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டது.
ஒவ்வொரு ரயில் பயணியும் குடிநீர் பாட்டில் இல்லாமல் பயணம் செய்ய இயலாது. விலைகொடுத்து வாங்கிய குடிநீர் என்பதால், சக பயணியிடம் ஒரு மிடறு தண்ணீர் கேட்பதுகூட, இரத்தலுக்கு ஒப்பாக கூச்சம் தருகிறது.
ரயில்வே நிர்வாகம் குடிநீர் தயாரித்தால் தரமுள்ளதாக இருக்குமா என்ற கேள்விகள் எழுந்தபோது, தற்போது ரயில்களில் விற்கப்படும் குடிநீரையே, ஒவ்வொரு ரயில் பயணியும் (இரண்டாம் வகுப்பு பயணி சாச்செட்டிலும், முதல்வகுப்பு பயணி பாட்டிலிலும்) பயணச் சீட்டின் ஒரு பகுதியைக் கிழித்துக் கொடுத்து, பயண தூரத்துக்கேற்ப நிர்ணயிக்கப்படும் அளவுகளில் பெறலாம், அதற்கான தொகையை ரயில்வே நிர்வாகம் ஈடுசெய்யலாம் என்ற ஆலோசனைகள்கூட முன்வைக்கப்பட்டன.
ஆனால் விரையும் ரயிலின் பேரோசையில் இதெல்லாம் யார் காதில் விழப்போகிறது!