கருமமே கண்ணாயினார்!
Ôதமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு தயங்கக் கூடாதுÕ என்று கோபம் காட்டியிருக்கிறது உச்ச நீதிமன்றம். தமிழக ஆளும் கூட்டணியில் அதற்குச் சில எதிர்வினைகள்..!
Ôகோர்ட் சொன்னால் என்ன… பஸ்ஸை நிறுத்திப் பார்ப்போமே என்று என்னைப் போன்றவர்கள் எங்கள் தலைவரிடம் சொன்னோம்!Õ என்று உண்ணாவிரத மேடையில் நின்று பொங்கியிருக்கிறார் ஓர் அமைச்சர்.
Ôகர்நாடக அரசும் கேரள அரசும் தீர்ப்புகளை மதிக்காமல் போனபோது, உச்ச நீதிமன்றம் ஏன் இதுபோன்ற கடுமையைக் காட்டவில்லை?Õ என்று கேட்டிருக்கிறார் இன்னொரு தலைவர்.
உணர்வுகளில் என்னதான் வேகம் இருந்தாலும்… கடைசியில் என்ன ஆனது? நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் அவசரமாக Ôஓட்டப்பட்டனÕ; Ôமூடப்பட்டÕ கடைகள் காவல்துறை உந்துதலோடு Ôதிறக்கப்பட்டனÕ; அரசு ஊழியர்கள் உடனே ஆஜராகும்படி அழைக்கப்பட்டனர்!
Ôவேண்டாம் அரசு பந்த்Õ என்று உச்ச நீதிமன்றம் சொன்னதும், Ôஅதே நாளில் வேறு வழியில் எதிர்ப்பைக் காட்டுவோம்Õ என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கத் தேவையில்லை! உண்ணாவிரதப் போராட்டத்தை, ஒரே ஒருநாள் மட்டும் தள்ளிவைத்து, அந்தத் தத்துவத்தின் ஆதிகர்த்தாவான மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று நடத்தியிருந்தால்… உணர்வுகள் இன்னும்கூடப் பலமாக வெளிப்பட்டு இருக்குமே! அரசு விடுமுறை என்பதால், எந்தக் கேள்விக்கும் இடமில்லாமலும் போயிருக்கும்.
தமிழகத்தின் நலனுக்காகவே சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டுவருவது அரசின் நோக்கமாக இருந்தால்… இனியாவது, உணர்ச்சிவேகத்தில் முடிவுகள் எடுக்கக் கூடாது; யார் வாய்க்கும் அவல் போடக் கூடாது; யார் பெரியவர் என்கிற கௌரவ யுத்தத்துக்கு வழிவகுக்கக் கூடாது; நோக்கமே மறந்துபோகுமளவு விவகாரம் திசை திரும்பிச் செல்ல துளியும் இடமளிக்கக் கூடாது!
கருமமே கண்ணாயினார்க்கு இவையும்தான் தகுதிகள்!