தமிழக இடஒதுக்கீடு சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்த்தது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஜயன் வாதம்
புதுதில்லி, நவ. 1: தமிழக இட ஒதுக்கீடு சட்டத்தை, நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தாத வகையில், அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்த்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு வாதிட்டார் மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன்.
சட்டங்களை இயற்றி அவற்றை 9-வது அட்டவணையில் சேர்க்க நாடாளுமன்றத்துக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் தலைமையிலான 9 நீதிபதிகள் பெஞ்ச், திங்கள்கிழமை முதல் விசாரித்து வருகிறது. தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டம் உள்பட பல்வேறு மாநில சட்டங்களை இதில் சேர்த்தது குறித்தும் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
ஒரு சட்டம் இயற்றப்பட்டு, அதை 9-வது அட்டவணையில் சேர்த்து விட்டால், அது நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது என்ற பாதுகாப்பைப் பெற்று விடுகிறது.
மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமனை அடுத்து, “வாய்ஸ்’ என்ற நுகர்வோர் அமைப்பின் சார்பில் செவ்வாய்க்கிழமை வாதிட்ட விஜயன், கேசவானந்த் பாரதி வழக்கில் 1973-ம் ஆண்டு நீதிமன்றத்துக்குப் பிறகு தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டம் 1994-ம் ஆண்டு 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டதால், அது நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது என்றார்.
அரசியல் சட்டத்தின் பிரிவு 31 (ஏ)-ன் கீழ் நிறைவேற்றப்பட்ட சட்டங்களைத் தவிர, மற்ற சட்டங்களை 9-வது அட்டவணையில் சேர்க்க முடியாது. ஆனால், தமிழக இட ஒதுக்கீடு சட்டம் 31 (ஏ)-வின் கீழ் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
எழுத்து மூலம் நீதிமன்றத்தில் அளித்த மனுவில், 9-வது அட்டவணை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். 94 சதம் மக்கள் இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அறிவித்துவிட்ட பிறகு, இட ஒதுக்கீடு அர்த்தமற்றதாகிவிட்டது. தமிழக இட ஒதுக்கீடு சட்டம், அரசியல் சட்டத்துக்கு முரணானது என்றும், அதை அமல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.