என்.டி.ராமராவின் மகன் நடிகர் பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம் கட்சியில் சேருகிறார்
ஐதராபாத், ஜன.30-
ஆந்திராவில் பிரபலமாக விளங்கிய நடிகர் என்.டி.ராமராவ். அந்த மாநில மக்களால் கடவுளாக மதிக்கப்பட்டவர். சினிமா உலகில் பிரபலமாக இருக்கும் போதே கடந்த 1982-ம் ஆண்டு திடீரென அரசியலில் நுழைந்தார்.
தெலுங்கு தேசம் என்ற கட்சியை தொடங்கிய அவர் 9 மாதத்திலேயே அந்த மாநிலத்தில் ஆட்சியை பிடித்து முதல் மந்திரி ஆனார்.
1995-ம் ஆண்டு என்.டி.ராமராவின் மருமகனும், கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவரும், மந்திரி பதவி வகித்து வந்தவருமான சந்திரபாபு நாயுடு கட்சியில் என்.டி.ராமராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி அந்த கட்சியை கைப்பற்றினார். பின்னர் அவர் அடுத்த ஆண்டிலேயே தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தார்.
மறுவருடம் 1996-ல் என்.டி.ராமராவ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
என்.டி.ராமராவின் மூத்த மகன் ஹரிகிருஷ்ணா சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்து அந்த கட்சியில் இருந்து வந்தார். பின்னர் அவர் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மீண்டும் சமீபத்தில் அவர் கட்சியில் சேர்ந்தார்.
2-வது மகன் பாலகிருஷ்ணா. பிரபல முன்னணி நடிகர். பாலய்யா என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் கடந்த 2004-ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர்கள் 2 பேரை துப்பாக்கியால் சுட்டதாக வழக்கு தொடரப்பட்டது. 8 மாதங்களுக்கு பின்னர் இந்த வழக்கில் அவர் விடுதலையானார்.
கடந்த 18-ந் தேதி என்.டி.ராமராவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணா “என் தந்தை 1982-ம் ஆண்டு திடீரென அரசியலுக்கு வந்தது போல நானும் திடீரென அரசியலுக்கு வருவேன்” என்று தெரிவிதார்.
இந்த நிலையில் பாலகிருஷ்ணா நேற்று திடீரென தனது மைத்துனரும், முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை சந்திரபாபு நாயுடு தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடந்தது. ஆகவே பாலகிருஷ்ணாவின் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அவர் அரசியலில் குதிக்க முடிவு செய்திருப்பதாகவும் கருதப்படுகிறது.
இந்த சந்திப்பு பற்றி சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டதற்கு, “பாலகிருஷ்ணா அரசியலுக்கு வருவது பற்றி நாங்கள் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. எங்கள் குடும்ப விஷயங்கள் பற்றித்தான் பேசிக் கொண்டு இருந்தோம். அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. அவர் அரசியலுக்கு வர விரும்பினால் அவரே அது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்” என்று தெரிவித்தார்.
ஆனால் பாலகிருஷ்ணாவின் ஆதரவாளர்களும், ரசிகர்களும் அவர் அரசியலுக்கு வந்தால் தெலுங்கு தேசம் கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவதாக அமையும். ஏனென்றால் அந்த கட்சி கடந்த 2004-ம் ஆண்டு நடந்த சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்து இப்போது நெருக்கடியான கட்டத்தில் உள்ளது. ஆகவே பாலகிருஷ்ணா அரசியலுக்கு வருவதை அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.