வேண்டாம் விபரீதம்
மனித வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் இயற்கையானவை. அதற்கு இடைப்பட்ட காலத்தில் மனிதனின் இயக்கத்தால்தான் இந்த மனித குலம் பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறது. பிறக்கின்ற ஒவ்வொருவருக்கும் இறப்பு நிச்சயம் என்றாலும்கூட, மனிதனே தனது இறப்பை முடிவு செய்து கொள்வதை இச்சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை. சமூகத்தில் உள்ள பழக்க வழக்கங்கள் காரணமாக, பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிந்து பெண் சிசுக்களைக் கருவிலேயே அழிக்கும் போக்கு சட்ட விரோதம் என்றபோதிலும், இலை மறைவு காய் மறைவாக அது நடந்து வருகிறது.
அதேபோல் முதுமையினாலும் விபத்துகளினாலும் ஏற்படும் இறப்புகள் அளிக்கும் துயரத்தைவிட, மனித வாழ்க்கையைத் தாங்களே முடித்துக் கொள்வது என்பது மிகவும் துயரம் அளிக்கக் கூடியது. தற்கொலை செய்து கொள்ளும் போக்கு சமீப காலங்களில் அதிகமாகி வருவது கவலை அளிக்கிறது. மகாராஷ்டிரம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் சாகுபடி பொய்த்துப் போய், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சிகள் நமது மனசாட்சியை உலுக்குவதாக உள்ளன. விவசாயிகளுக்கான மறுவாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்தி, அவர்களைக் கடன் தொல்லைகளிலிருந்து மீட்பதன் மூலம்தான் விவசாயிகளைத் தற்கொலை முயற்சிகளிலிருந்து தடுக்க முடியும்.
திரைப்பட நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் மட்டுமன்றி, சில டாக்டர்கள் கூட தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுக்கிறார்கள். எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ போன்ற தேர்வுகள் மாணவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையாகத் திகழ்கின்றன. இத்தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்களில் சிலர் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். கோழை மனம் கொண்ட சில மாணவர்கள் விபரீத முடிவை எடுக்கும் சூழ்நிலைக்கு உள்ளாகிறார்கள். பொதுவாக, குடும்பப் பிரச்சினைகள், தேர்வுத் தோல்விகள், கடுமையான கடன் தொல்லை போன்றவை தற்கொலைக்குக் காரணங்களாக அமைகின்றன.
நமது நாட்டில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தையும் தாண்டும் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
சென்னை நகரில் 2004-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1196. இந்த எண்ணிக்கை 2005-ல் 2275 ஆக உயர்ந்துள்ளது என்று “சிநேகா‘ என்ற தற்கொலைத் தடுப்பு அமைப்பு தரும் தகவல் கவலை அளிக்கும் விஷயமாகும். பொதுவாக தற்கொலை முயற்சிக்கு அதிகச் சாத்தியங்கள் கொண்ட இளம் வயதினருக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, உளவியல் ஆலோசனை அமைப்புகளைப் பரவலாக ஏற்படுத்த வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயங்களில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டி, தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பயிற்சி முகாம்களை, சில ஆண்டுகளாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப் பணித் திட்ட அமைப்பு நடத்தி வருகிறது. இதுபோன்ற முயற்சிகளைப் பரவலாக்க வேண்டியது அவசியம். தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அரசு அமைப்புகள் தீவிரப் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம், மனஉளைச்சலுக்கு ஆளாகி விபரீத முடிவை எடுப்பவர்களைச் சாவின் விளிம்பிலிருந்து மீட்க முடியும்.