பதவிக்கு ஏற்ற நடத்தை இல்லை: கலாம் மீது தாக்கரே மீண்டும் தாக்கு
மும்பை, பிப். 4 குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நடத்தை அவரது பதவிக்கு ஏற்றதாக இல்லை என சிவசேனைக் கட்சித் தலைவர் பால் தாக்கரே குற்றம் சாட்டினார்.
மும்பை மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கட்சித் தலைமையகத்தில் பத்திரிகையாளர்களிடம் தாக்கரே சனிக்கிழமை கூறியதாவது:
குடியரசுத் தலைவர் ஆவதற்கு அவருக்கு நாங்களும்தான் வாக்களித்தோம். ஆனால் குடியரசுத் தலைவர் ஆன பிறகு அவரது நடத்தை அந்தப் பதவிக்கு ஏற்றபடி இருக்கிறதா? இல்லை என்பதுதான் பதில்.
நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பான வழக்கில் முகமது அப்சல் குருவுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகும், அதை நிறைவேற்றுவது தொடர்பான கோப்பு இன்னும் கலாம் மேஜையில்தான் கிடக்கிறது.
கடந்த வாரம் தாணேயில் நடைபெற்ற பேரணியில் கலாமைப் பற்றி நான் தவறாக என்ன சொல்லி விட்டேன்? நான் ஒரு கார்ட்டூனிஸ்ட் என்பதால் ஒருவர் நீண்ட முடி வைத்துக் கொள்வது பற்றி நான் விமர்சனம் செய்ததில் தவறு ஏதும் இல்லை.
மும்பை மாநகராட்சி தேர்தல் வெற்றி: மும்பை மாநகராட்சித் தேர்தலில் சிவசேனைக்கு கிடைத்த வெற்றி என்னைத் திகைப்படையச் செய்துவிட்டது. இந்த வெற்றிக்கான பெருமை கட்சி நிர்வாகத் தலைவர் உத்தவ் தாக்கரேவையும் அவரது குழுவினரையுமே சாரும் என்றார் பால் தாக்கரே.