Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Habits’ Category

Book reading habits for Kids – Children, Literature, Knowledge, Entertainment

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2008

குழந்தைகளைக் கிழிக்காத புத்தகங்கள்

தஞ்சாவூர்க்கவிராயர்

புத்தகங்களைக் கிழித்துவிடாதீர்கள் என்று குழந்தைகளிடம் சொல்லுகிறோம்.

புத்தகங்களே! குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்கிறார் ஒரு புதுக்கவிஞர்.

குழந்தைகள் படிக்கிற புத்தகங்களைப் பார்க்கும்போது அவை எங்கே குழந்தைகளைக் கிழித்து விடுமோ என்று பயமாகத்தான் இருக்கிறது.

மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் பெரும்பாலும் குழந்தைத்தனமாக இருக்கின்றன.

குழந்தைகளுக்கு இப்படிச் சொன்னால் புரியாது; இதற்கு மேல் சொன்னால் புரியாது என்று நாமாகவே ஓர் அபிப்பிராயம் வைத்துக்கொண்டு எழுதுகிறோம். இது தவறு. குழந்தைகள் நம்மைவிடப் புத்திசாலிகள்.

குழந்தைகளுக்கு இருக்கிற புத்தம்புதுசான பார்வை நமக்குக் கிடையாது. இன்னும் களங்கப்படாத மனசு அல்லவா குழந்தைகள் மனசு?

குழந்தைகள் பார்வையில் தென்படும் உலகம் குற்றமற்றது. அழகு நிரம்பியது. அதனால்தான் குழந்தை எதைப் பார்த்தாலும் சிரிக்கிறது. குழந்தைகளுக்கான புத்தகம் எழுத குழந்தை மனசு வேண்டும். “தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு; அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி…’ அப்படியே ஒரு குழந்தை எழுதிய மாதிரியே அல்லவா இருக்கிறது.

குழந்தைகளுக்கு ஏராளமாகப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. வழவழதாளில் பளீரென்ற வண்ணப் புத்தகங்கள். உள்ளே யானை, குதிரை படங்கள். விலையும் யானை விலை, குதிரை விலையாகத்தான் இருக்கிறது.

நரிக்கு எட்டாத திராட்சைப் பழங்கள் மாதிரி குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் இந்தப் புத்தகங்கள் காய்த்துத் தொங்குகின்றன!

சின்னஞ்சிறு வயதிலேயே நல்ல புத்தகங்களை குழந்தைகளின் நண்பனாக்கி விட வேண்டும். அவை கேட்கிற புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றும் நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் மேசைமீது ஒரு காமிக்ஸ் புத்தகம் இருந்தது. “பையனுக்கா?’ என்றேன்.

“எனக்குத்தான்’ என்றார் சிரித்தபடி.

“அலுவலக டென்ஷனில் இருந்து விடுபட நான் காமிக்ஸ் புத்தகங்கள்தான் படிப்பேன்’ என்றார்.

குழந்தை வளர வளர குழந்தமை தொலைந்து போகிறது. “இன்னும் என்ன குழந்தையா நீ?’ என்று கேட்டு கொஞ்சநஞ்சம் பாக்கியிருக்கும் குழந்தை மனத்தையும் கருகச் செய்து விடுகிறோம்.

குழந்தையின் கேள்விகள் அற்புதமானவை. அவற்றுக்குப் பதில் சொல்லும்போது நாமும் குழந்தையாகி விடுகிறோம்.

புகைவண்டிப் பயணத்தின்போது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் தன் குழந்தையை “சும்மா இரு, சும்மா இரு’ என்று அதட்டிக் கொண்டே வந்தார்.

“குழந்தை பாவம். என்ன வேண்டுமாம்?’ என்று கேட்டேன்.

“என்னவோ அசட்டுத்தனமாக தொணதொணக்கிறான். எரிச்சலாக வருகிறது’ என்றார்.

அவனை என் அருகே அழைத்து, “சொல்லு, என்ன வேணும்?’ என்று கேட்டேன்.

“மாமா, ரயில் என்ன சாப்பிடும்?’ என்று கேட்டான்.

இதுவா அசட்டுத்தனமான கேள்வி? அழகான கவிதை அல்லவா இது? ரயிலுக்கு உயிர் உண்டு. அதுவும் மனிதர்களைப் போலவே நகர்கிறது. மூச்சு விடுகிறது. கத்துகிறது என்பதால்தானே இந்தக் கேள்வியை குழந்தை கேட்கிறது?

நாம்தான் குழந்தைகளை உதாசீனப்படுத்துகிறோம். மேலைநாடுகளில் குழந்தைகளைப் பெரிய மனிதர்களாகவே நடத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி:

லண்டனில் ஒரு குழந்தைகள் பூங்கா. அங்கே வாத்துகளோடு ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அதன் விரலை ஒரு வாத்து கடித்துவிட்டது. காயம் ஒன்றும் பலமில்லை. பூங்கா நிர்வாகமே குழந்தையின் விரலுக்கு மருந்து போட்டுவிட்டது. அங்கே ஓர் அறிவிப்புப் பலகை இருந்தது. அங்கே இருந்த வாத்துகள் மாட்சிமை தங்கிய இங்கிலாந்து மகாராணியாரின் பெயரில் உள்ள கருணை நிதியிலிருந்து பராமரிக்கப்படுவதாக ஒரு குறிப்பு இருந்தது.

குழந்தை உடனே இங்கிலாந்து மகாராணியாருக்கு ஒரு கடிதம் எழுதியது: “நீங்கள் வளர்க்கிற வாத்து என்னைக் கடித்துவிட்டது. விரலில் காயம்’ என்று எழுதியது.

கடிதம் மகாராணியாரின் பார்வைக்குப் போயிற்று. அவர் உடனே பதில் எழுதினார்:

“குழந்தாய்! உன் கடிதம் கிடைத்தது!

நான் வளர்க்கும் வாத்து உன்னை விரலில் கடித்து விட்டதற்காக வருந்துகிறேன். அதற்காக உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். காயம் ஆறியிருக்கும் என்று நம்புகிறேன்.

உன் பிரிமுள்ள,

விக்டோரியா.

நம் நாட்டில் இப்படிப்பட்ட கடிதம் எங்கே போயிருக்கும் என்று சொல்லத் தேவையே இல்லை அல்லவா?

குழந்தைகளை மதிக்கிற, குழந்தைகளைப் புரிந்துகொள்கிற, குழந்தமையைப் பாதுகாக்கிற பொறுப்புணர்ச்சி சமுதாயம் முழுவதும் உண்டாக வேண்டும். அப்போதுதான் அசலான குழந்தை இலக்கியம் இங்கே சாத்தியப்படும். பெரிய பெரிய இலக்கிய ஜாம்பவான்கள் கூட குழந்தை இலக்கியத்தின்பால் அக்கறை காட்டுவதில்லை.

குழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லாத சமூகம் என்பது தண்ணீரில்லாத நாற்றங்காலுக்குச் சமம்.

பள்ளிக்கூடங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குழந்தைகளைப் பந்தயக் குதிரைகளாக மாற்றும் வேலை அங்கே மும்முரமாக நடக்கிறது. குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் அபத்தக் களஞ்சியமாக இருக்கின்றன.

குழந்தைகளை நூலகங்களில் பார்க்கவே முடிவதில்லை. வாசிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது. தொலைக்காட்சியும் கணினி விளையாட்டும் குழந்தைகளை கூடத்தை விட்டு வெளியேறாதபடி கட்டிப் போட்டுவிட்டன.

அண்மையில் நடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளுக்கான புத்தக அரங்குகளில் கூட்டம் மொய்த்தது. புத்தக வாசிப்புக்காக குழந்தைகள் ஏங்குவதையும், தொலைக்காட்சி தோற்றுப் போய்விட்டதையும் காண முடிந்தது.

தஞ்சாவூரில் அனன்யா பதிப்பக அதிபர் அருள் என்பவரும் இரா. சேதுராமனும் சேர்ந்து ஓசைப்படாமல் ஒரு மாபெரும் குழந்தைகள் கதைக் களஞ்சியத்தை உருவாக்கி வருகிறார்கள்~விழுதுகள் என்ற பெயரில்.

குழந்தைகளால் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது இக் களஞ்சியம் என்பது தான் இதன் சிறப்பு. பாட்டி வடை சுட்ட கதையை ஒரு குழந்தை எப்படிச் சொல்கிறது பாருங்கள்.

“ஒரு ஊரில் காக்கா இருந்தது. அப்போது காக்கா வடை சுட்டது. அந்தக் காக்கா வடை சுட்டு முடித்ததும் காக்காக்கள் பறவைகள் காக்காகிட்ட வந்தது. காக்காவும் பறவையும் சேர்ந்து சாப்பிட்டன. பறவைகளும் காக்காக்களும் சேர்ந்து விளையாடின. பிறகு எல்லோரும் தூங்கினார்கள். மறுநாள் காலையில் எல்லோரும் எழுந்தனர். முகம் கழுவினர். எல்லோரும் சாப்பிட்டன. பறவைகளும் காக்காக்களும் வீட்டுக்குச் சென்றார்கள்.’

இது மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு சிறுமி எழுதிய கதை. மற்றொரு கதையில் கரடியும் யானையும் ஒரே வீட்டில் வசிக்கின்றன. அங்கு விருந்தாளியாக சிங்கம் வருகிறது. ஒரு கதையில் பால் வேண்டும் என்று பூனையிடம் எலி கெஞ்சுகிறது. குழந்தைகளின் மனங்களிலிருந்து புறப்பட்டு வரும் புதிய காற்று அப்பப்பா என்ன ஒரு வாசம். எப்பேர்ப்பட்ட கற்பனை.

உலகம் பூராவும் ஹாரிபாட்டரின் கதைப் புத்தகங்கள் பரபரப்பாக விற்கப்பட்டதன் காரணம் என்ன? குழந்தைகளின் மனசைப் புரிந்துகொண்டு எழுதியதுதான் காரணம்!

தமிழ்நாட்டில் வசதி படைத்த குழந்தைகள் மட்டும் ஹாரிபாட்டர் புத்தகம் வாங்கிப் படித்து மகிழ்ந்தார்கள். “ஏழைக் குழந்தைகள் பாவம் என்ன செய்வார்கள்?’

இப்போதுதானே அவர்களை ஓட்டல்களிலிருந்தும் தொழிற்சாலைகளிலிருந்தும் கல்குவாரிகளிடமிருந்தும் மீட்டிருக்கிறோம்? அவர்களின் கைகளிலிருந்து மேசை துடைக்கும் துணியையும், ஸ்பானரையும், பெட்ரோல் பிடிக்கும் குழாய்களையும் அப்புறப்படுத்தி நல்ல புத்தகங்களைக் கொடுக்க வேண்டும்.

அழகான ஆச்சரியமான புத்தகங்கள்.

குழந்தைகளைக் கிழிக்காத புத்தகங்கள்!

(இன்று உலகக் குழந்தைகள் புத்தக தினம்)

Posted in Books, Children, Comics, Entertainment, family, Fiction, Habits, Intelligence, Kids, Knowledge, Library, Listen, Literature, publications, Publishers, Read, Story | 1 Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to avoid Steroids

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உயிர் காக்கும் உயர்ந்த மருந்துகள்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

அலோபதி மருத்துவத்தில் உயிர்காக்கும் மருந்தான STEROID இருப்பது போல், ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளதா?

ருக்வேதம் நோய் பற்றிய வர்ணனையில் இருவகையான நோய்களைப் பற்றி குறிப்பிடுகிறது. தோன்றும் வகையறிய முடியாதபடி ஊடுருவிப் பாய்ந்து முழு உருவம் பெற்ற பின்னரே உணரப்படுபவை, ரக்ஷஸ் எனும் பெயர் கொண்டவை. மீண்டும் மீண்டும் தலை தூக்குபவை, அமீவா எனப் பெயர் உடையவை.

இந்த இருவகையான நோய்களும் இன்று பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றில் தோன்றும் அறிகுறிகளால் மனிதன் வேதனையுறும் போது STEROID மருந்துகள் அந்த அறிகுறிகளை அமுக்கி மனிதனை முடக்கிவிடாமல் அவனை நடக்கும்படி செய்கின்றன. அறிகுறிகளை மட்டுமே அமுக்கி விடுவதால் நோய் நீங்கி விட்டது என்று உறுதியாகக் கூற இயலாது. தடாலடி வைத்திய முறைகளால் நோய் நீங்கி நிரந்தர இன்பத்தை ஒருவரால் பெற இயலாது. ஒரு நோயை ஏற்படுத்தும் காரணம், உடலில் தனக்கு ஏதுவான காலத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், அந்தக் காலநிலை தனக்கு அனுகூல நிலையை அடைந்ததும், அந்தக் காரணத்திற்கு தக்கபடி நோயின் சீற்றத்தை வெளிப்படுத்துவதாகவும் ஆயுர்வேதம் கூறுகிறது. உடலில் தென்படும் அறிகுறிகளை வைத்து அந்தச் சீற்றத்தை ஏற்படுத்தும் தோஷ நிலைகளை நன்கு கணித்து, அந்த தோஷம் எதனால் கெட்டது என்ற காரணத்தையும் ஒரு மருத்துவனால் கூற இயலுமானால் அந்த மருத்துவர் ஒரு சிறந்த மருத்துவ நிபுணராகவே கருதப்படுகிறார். ஏனென்றால் அவர் நோய்க்கான காரணத்தை நிறுத்தச் சொல்லி, கெட்டுள்ள தோஷத்தை அறிகுறிகளின் வாயிலாக அறிந்து அதைச் சீர்படுத்தும் நோக்கில் உணவும், நடவடிக்கையும், மருந்தையும் உபதேசிக்கிறார். இந்த நல்உபதேசம் நபஉதஞஐஈ மருந்துகளைவிட சிறந்தவை.

மனிதனின் உயிரைக் காப்பவை மட்டுமே மருந்தல்ல. உடலுக்கும் மனதிற்கும் நலம் தரும் உணவையும் நடவடிக்கைகளையும் அமைத்துக் கொண்டவன், செயலைச் செய்வதற்கு முன் நிதானித்துச் செயலாற்றுபவன், புலன்களால் உணரப்படும் பொருள்களில் நப்பாசை காரணமாக ஈடுபடாதவன், பொறுமை உள்ளவன், உண்மையான நற்செயல்களைத் தயங்காமல் கூறி அதன்படி நடக்கத் தூண்டும் உயர்ந்த நண்பனைப் பின்பற்றுபவன் நோயற்றிருப்பான் என்று ஆயுர்வேத நூலாகிய சரகஸம்ஹிதையில் காணப்படுகிறது.

“”இதையெல்லாம் நான் கடைபிடிக்காது போனதினால்தான் ரக்ஷஸ் வகை வியாதியும், அமீவா வகையும் என்னைப் பீடித்துள்ளன; STEROID மருந்துகளால்தான் காலம் தள்ளுகிறேன். இதிலிருந்து விடுபடுவதற்கான உயிர் காக்கும் மருந்து உள்ளதா” என ஒரு நோயாளி ஆயுர்வேத மருத்துவரை அணுகி கேட்பாரேயானால், அதற்கான தீர்வை அவரால் இருவகையில் மட்டுமே தர இயலும்.

அவை சோதனம் மற்றும் சமனம் எனும் இரு வைத்திய முறைகளேயாகும். உடலின் உட்புறக் கழிவுகளை அகற்றும் பஞ்சகர்மா எனும் ஐவகைச் சிகிச்சைகளான வாந்தி, பேதி, வஸ்தி எனும் எனிமா, நஸ்யம் எனும் மூக்கில் மருந்து விட்டுக் கொள்ளும் முறை மற்றும் ரத்தக் குழாய்களைக் கீறி, கெட்ட ரத்தத்தை வெளிப்படுத்துதல் ஆகியவை சோதனம் எனும் வைத்திய முறைகளாகும். நோயும் பலமாக இருந்து நோயாளியும் பலசாலியாக இருக்கும் நிலையில் மட்டும் இந்தச் சிகிச்சை முறையைச் செய்ய இயலும்.

நோயின் தாக்கம் குறைவாகவும், நோயாளியும் பலமின்மையினால் வருந்துபவராக இருந்தால் சமனம் எனும் 7 வகை சிகிச்சை முறைகளே போதுமானது.

1. உணவைப் பக்குவம் செய்யக்கூடியது.

2. பசித்தீயை வளர்ப்பது.

3. பட்டினியால் உடல் கெடுதியை அகற்றுவது.

4. தண்ணீர் தாகத்துடன் இருக்கச் செய்வது.

5. உடற்பயிற்சி.

6. வெயிலில் அமர்ந்திருப்பது.

7. எதிர்காற்றை உடலில் படும்படி செய்வது.

மேற்கூறிய சிகிச்சை முறைகளை STEROID மருந்தை உட்கொள்ளும் நோயாளிக்குத் தகுந்தவாறு உபயோகித்து அவரை அதிலிருந்து விடுபடச் செய்து, நோயின் தாக்கத்தையும் குறைத்து அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆயுர்வேதத்தால் தர இயலும் என்பதே தங்கள் கேள்விக்கான விடை.

Posted in Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Body, Diet, Good, Habits, Health, Medicines, Natural, Nutrition, Physical, steroids, Swaminathan, Yoga | Leave a Comment »

Healthcare Advice – Fat content vs Thin weight: Exercise, Dietary Restrictions, Lifestyle choices

Posted by Snapjudge மேல் மே 31, 2007

ஆரோக்கியம்: பெண்ணுக்கு இளமை எதுவரை?

ரவிக்குமார்
Doctor Kausalya Nathan

என் பாதவிரல்களைப் பார்க்கமுடியாமல்

நானே எனக்கு எதிரியாய்…!

– இது தொந்தியால் ஏற்படும் பிரச்சினையைச் சொல்லும் ஒரு நொந்த கவிதை!

மாடிப்படியேறுவது தொடங்கி, உட்கார்ந்து, எழுந்து கொள்வதற்குக்கூட மூச்சு முட்டும். காரணம், நம் உடல் பருமன்.

உடல் பருமனுக்கான காரணங்கள், அதைத் தவிர்ப்பதற்கான விஷயங்கள் குறித்து இங்கே நமது கேள்விகளுக்கு நறுக்குத் தெறித்தாற்போல் பதில் கூறியிருப்பவர் டாக்டர் கௌசல்யா நாதன். சென்னையிலிருக்கும் அப்பல்லோ மற்றும் மலர் மருத்துவமனைகளில் வயது நிர்வாக மருத்துவ நிபுணரான டாக்டர் கௌசல்யா இனி உங்களுடன்…

Apollo Doctor Kowsalya

பொதுவாகவே நம் பெண்கள் பக்தியை வெளிப்படுத்துவதற்காக நாளுக்கொரு கடவுளுக்கு விரதம் இருப்பார்கள். விரதம் இல்லாத நாட்களிலும் சராசரி குடும்பத்தில் இருக்கும் பெண்கள் உணவு உண்பதில் ஆர்வம் காட்டாமல்தானே இருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்களுக்கு உடல் பருமன் ஏன்?

விரதம் இருக்கும் நாட்களிலும் பழங்கள் சாப்பிடலாம். பாயசம், சூப்.. என ஏதாவது குடிக்கலாம். எதுவுமே சாப்பிடாமல் இருந்தால், நம் உடலில் ஹார்மோன்களின் சுழற்சி சமச்சீராக இருக்காது. வயிற்றில் சுரக்கும் அமிலங்களால் பலவிதமான விளைவுகள் ஏற்படுகின்றன. 18 முதல் 40 வயது நிலைகளில் இருக்கும் பெண்கள் பெரும்பாலோர்க்கு உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது.

“உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு’ என்று ஒüவையார் கூறியது தெரிந்தோ என்னமோ.. இன்றைய இளம் பெண்கள் குண்டாகி விடக்கூடாது என்பதில் ரொம்பக் கவனமாக இருந்து, அநியாயத்திற்கு மெலிதான உடல்வாகுடன் இருப்பது சரியா?

குண்டாகி விடக்கூடாது என்பதில் விழிப்புணர்வுடன் இருப்பது ஆரோக்கியமான விஷயம்தான். அதற்காகப் பிறர் பரிதாபப்படும் அளவுக்கு மெலிந்து போய்விட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. ஒவ்வொருவரின் உயரத்திற்கு ஏற்ற எடையை, அந்தந்த வயது நிலைகளுக்கு ஏற்ப கடைப்பிடிக்க வேண்டும்.

ஒருபக்கம் வீட்டில் தயாராகும் உணவுகளைக் குண்டாகிவிடுவோம் என்ற காரணத்துக்காகத் தவிர்க்கும் இன்றைய இளம் பெண்கள், துரித வகை உணவுகள், ஏற்கனவே தயார் செய்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், பர்கர், பீட்ஸô, பாஸ்தா, குளிர்பானங்கள்… என நமது உணவுப் பழக்கத்தில் இல்லாத உணவுகளை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உணவுப் பழக்கங்களிலும் இன்றைய இளம் பெண்கள் தகுந்த விழிப்புணர்வைப் பெற்றிருக்க வேண்டும். இந்த மாதிரியான உணவுப் பழக்கங்கள் அவர்களை நிச்சயம் உடல் பருமன் பிரச்சினையில்தான் கொண்டு போய்விடும்.

உடல் பருமன் இந்தியாவில் மட்டுமே உள்ள பிரச்சினையா அல்லது உலகம் முழுவதும் உள்ள பிரச்சினையா?

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது. அமெரிக்காவில் 60 சதவீதத்தினருக்கு இந்த உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது. இந்தியாவில் 40 சதவிதத்தினருக்கு இருக்கிறது.

உடல் பருமனுக்கு தைராய்ட் பிரச்சினை முக்கியக் காரணமா?

அதுவும் ஒரு காரணம். தைராய்ட் பிரச்சினையைத் தவிர, பெண்களுக்கு வரும் பாலிசிஸ்டிக் ஓவரிஸ் நோய், மெனோபாஸ் காலங்களும் உடல் பருமன் நோய்க்கான இதர காரணங்கள்.

இது பரம்பரையாகத் தொடரும் நோயா?

பெரும்பாலும் உடல் பருமனுக்குப் பரம்பரை தொடர்பான காரணங்களும் இருக்கின்றன. இது தவிர, தூக்கமின்மை, ஒருவர் எந்தமாதிரியான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்பதும் முக்கியம். ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி செய்யும் பணியிலிருப்பவர்களுக்கும், ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றுபவர்களுக்கும் இந்த நோய் அதிகம் இருக்கிறது. இதுதவிர, மன அழுத்தம், பதட்டத்தில் இருப்பதும்கூட உடல் பருமனுக்குக் காரணமாகிறது.

இது வயதினால் வரும் கோளாறா?

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி பொதுவாக 40 வயதை நெருங்கும் போது கொஞ்சம் சதை போடும்தான். ஆண்களை விட பெண்களுக்கு அவர்களின் மாதவிடாய் பருவம் முடியும்போது, சமச்சீரற்ற ஹார்மோன் பெருக்கத்தால் இடுப்பு, தொடை பகுதிகளில் சதை அதிகளவு போடும். வயதை ஒரு காரணமாகச் சொல்லலாமே தவிர அதுவே காரணமாகிவிடாது. சின்னச் சின்ன குழந்தைகளுக்குக்கூட உடல் பருமன் நோய் இருக்கிறது!

இந்த நோயிலிருந்து எப்படி ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம்?

ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் 8-லிருந்து 10 டம்ளர் தண்ணீரை அருந்துங்கள். சில பெண்கள் இரவுப் பொழுதில் எதுவும் சாப்பிடாமல் தூங்குவார்கள். சில பேர் சாப்பாடு பாழாகிவிடக்கூடாதே என்பதற்காக, இருப்பதை எல்லாம் சாப்பிட்டு முடிப்பார்கள். பட்டினியாகப் படுப்பதும் தவறு. அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டுப் படுப்பதும் தவறு. ஒருசிலர் தலைவலி முதல் எந்தப் பிரச்சினை வந்தாலும் மருத்துவர்களை நாடாமல் அவர்களாகவே ஏதாவது மருந்து மாத்திரைகளை வாங்கிப் போட்டுக்கொண்டு சமாளித்து விடலாம் என்று நினைப்பார்கள். இது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.

அடிக்கடி இனிப்பு வகைகளைச் சாப்பிடுவது உடல் பருமனை வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பது மாதிரி அமைந்துவிடும். மாதத்திற்கு ஓரிரு முறை தரமான இனிப்பு வகைகளை, ஐஸ் க்ரீமை ருசிக்கலாம்.

காபி, டீக்கு சர்க்கரைப் போட்டு குடிப்பதைவிட வெல்லம் போட்டுக் குடியுங்கள். மது, சிகரெட் போன்ற எந்த கெட்ட பழக்கம் இருந்தாலும் அதை விட்டொழிப்பது நல்லது.

சுத்திகரிக்கப்பட்ட கார்போ-ஹைட்ரேட் உணவுகளான மைதா, கோதுமை, பாசுமதி அரிசி போன்றவற்றையும், நொறுக்குத் தீனிகளான நூடுல்ஸ், பீட்ஸô, சிப்ஸ் போன்றவற்றையும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

சில ஹெல்த்-சென்டர்களில் உடல் பருமனைக் குறைக்க மூன்று வேளை உணவுக்குப் பதில், ஐந்து வேளை உணவு உண்ணும் முறையைப் பரிந்துரைப்பது சரியா?

மூன்று வேளை உணவு; இரண்டு வேளை ஸ்நாக்ஸ் என்னும் அடிப்படையில் அப்படி சொல்லியிருப்பார்கள். பொதுவாக 90 கிலோவிலிருந்து 130 கிலோ எடை வரை இருப்பவர்களுக்கென்று பலவிதமான குணப்படுத்தும் முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதில் இதுவும் ஒன்று. நீங்கள் சாப்பிடும் உணவு குறித்த நேரத்தில் சக்தியாக மாற்றப்பட வேண்டும். உணவின் மூலமாகக் கிடைக்கும் கலோரி எரிக்கப்பட வேண்டும். உடல் உழைப்பு இல்லாத நேரத்தில் நம் உடலில் தங்கும் அதீத கொழுப்பு உடல் பருமனுக்குக் காரணமாகிறது.

பரதநாட்டியம் கற்றுக் கொண்டு பாதியில் நிறுத்தி விடுவது, விளையாட்டில் ஈடுபட்டு பாதியில் நிறுத்திவிடுவது போன்ற காரணத்தால் கூட உடல் குண்டாகிவிடுமா?

எட்டு இட்லி சாப்பிட்டுவிட்டு பரதநாட்டியம் ஆடியிருப்பீர்கள் அல்லது ஒரு கேம் டென்னிஸ் ஆடியிருப்பீர்கள். நாளடைவில் விளையாட்டை, நடனத்தை உங்களால் தொடரமுடியாத சூழ்நிலை ஏற்படலாம். அப்போது என்ன ஆகும்? பரதநாட்டியம் ஆட மாட்டீர்கள். ஆனால் வழக்கம் போல் எட்டு இட்லியைச் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவே மாட்டீர்கள். நீங்கள் செய்யும் வேலைக்கு ஏற்ற உணவைப் பழகிக் கொண்டீர்கள் என்றால், அதிலேயே உடல் பருமன் பிரச்சினைக்குப் பாதி விடை கிடைத்துவிடும்.

“பெண்ணுக்கு இளமை எதுவரை? பிள்ளைகள் இரண்டு பெறும் வரை..’ என்கிறது கண்ணதாசனின் ஒரு திரைப்பாடல். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இளமை மனதுக்கா, உடலுக்கா? என்பதை நாம் யோசிக்க வேண்டும். அகத்தின் அழகுதான் முகத்தில் தெரிகிறது. நம் மனதை எந்தளவுக்குப் பக்குவமாக வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம். வயதின் காரணமாகப் புற அழகில் எத்தனையோ மாறுதல்கள் நடக்கும்தான்.

30 வயதிலிருப்பவர்கள் 50 வயதானவர்களைப் போல் தளர்ந்து போய், சோகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது. 30 வயதிலிருப்பவர்கள் அந்த வயதுக்குரிய அழகுடனும், தெளிவுடனும் இருந்தாலே போதும். பெண்களுக்குத் தன்னம்பிக்கைதான் என்றைக்கும் அழகு.

Posted in Advice, Aerobic, choices, Cycling, Diet, Dietary, Doctor, Exercise, Fat, Female, Food, Girl, Habits, Health, Healthcare, Kid, Lady, Life, Lifestyle, Muscle, Run, She, Slim, Thin, Tips, Treadmill, weight, Weights, Women | 1 Comment »

Defer move to put skull symbols on beedis?

Posted by Snapjudge மேல் மே 9, 2007

புகை நடுவிலே…

புகைபிடிக்கும் பழக்கம் உடல்நலத்துக்குக் கேடு விளைவிப்பது என்பதில் மாறுபட்ட கருத்தே இல்லை.

புகைபிடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் இறக்கின்றனர். மேலும், புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்க்குச் சிகிச்சை மற்றும் நோயுற்ற காலத்தில் உற்பத்தி இழப்பு என மொத்தப் பொருள் இழப்பு ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி என மதிப்பிடப்படுகிறது.

புகைத்தல் தீங்கானது என்றாலும், பீடி, சிகரெட் தயாரிப்பது அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு தொழிலாக இருக்கிறது. இந்தத் தொழிலில் இந்தியாவில் 1 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர். 60 லட்சம் பேர் நேரடியாக இத்தொழிலில் பீடி சுற்றுபவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பெண்கள். மீதமுள்ளவர்கள் இதற்கான இலை மற்றும் புகையிலை உற்பத்தியாளர்களாக இருக்கிறார்கள்.

பீடியை சிகரெட் தொழிலோடு சேர்க்கக்கூடாது என்பதும் “சிகரெட்டைவிட பீடி நல்லது. நிகோடின் குறைவு’ என்ற வாதங்களும் ஏற்கக்கூடியவை அல்ல. புகைபிடித்தல் புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரமும் அவசியம்தான்.

ஆனால் அந்தப் பிரசாரத்தை மண்டையோடு எச்சரிக்கை மூலம் நடத்த அரசு விரும்புவதும், மண்டையோடு படத்தைப் போட்டால் பீடி விற்பனை சரிந்துவிடும் என்று பீடித் தொழிலாளர்கள் நம்புவதும் – இரு தரப்பினருமே நடைமுறையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றன.

சிகரெட் பாக்கெட்டுகளில் புகை பழக்கம் உடல்நலத்துக்குக் கேடானது என்று அச்சிட்டுத்தான் விற்கிறார்கள். விற்பனை குறைந்துவிடவில்லை. பீடி பிடிப்போர் அனைவரும் எழுத்தறிவில்லாத சாதாரண ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. அதனால் பீடி பாக்கெட்டுகளின் மீது எழுத்தால் எழுதுவதைக் காட்டிலும் குறியீடுகளால் மிரட்ட நினைக்கிறது அரசு.

அச்சுறுத்தும் வாசகங்கள், பயங்கர அடையாளங்களால் இத்தகைய பழக்கங்களைத் தடுத்துவிட முடியும் என்பது சரியல்ல. ஏனென்றால் இந்தத் “தப்பு என்பது தெரிந்து செய்வது’.

தகாத உறவினால் எய்ட்ஸ் வரும் என்றால், அரசு பாதுகாப்பான உறவை மட்டுமே பரிந்துரைக்க முடிகிறது. மதுவினால் உடல்நலம் கெடும் என்பது அனைவருக்கும் தெரியும். “மதுப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்று எழுதப்பட்டுள்ளதால் விற்பனை சரிந்துவிடவில்லை. மண்டையோடு போட்டால் மட்டும் பீடி விற்பனை சரிந்துவிடும் என்பது சரியான வாதமாக இல்லை.

பீடித் தொழிலாளர்களின் மிகப்பெரும் பிரச்சினை பன்னாட்டு சிகரெட் நிறுவனங்கள்தான். பீடியின் விலைக்கும் சாதாரண சிகரெட்டின் விலைக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து பீடித் தொழிலை அடியோடு ஒழிப்பதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம்.

நூறு சதவீத அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு சிகரெட் தொழிலில் அனுமதித்துள்ளது. குறிப்பாக அசாம், திரிபுரா மாநிலங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் மலிவான, நீளம் குறைவான சிகரெட்டுகளை உற்பத்தி செய்து பீடிச் சந்தையை சிதைக்கப் போகின்றன.

இன்றைய முக்கியமான பீடித் தொழிற்சங்கங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவை. மத்திய அரசு இக் கட்சிகளின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. இச்சூழலில் சிகரெட் தொழிலில் அந்நிய நேரடி முதலீட்டை தடுத்து நிறுத்துதல், பீடி சுற்றுவதற்கான கூலியை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயித்தல் என சாதித்துக் கொள்ள வேண்டுமே தவிர, மண்டையோட்டுப் பிரச்சினையில் முக்கியமானவற்றை மறந்துவிடக்கூடாது.

பீடிக் கட்டில் மண்டையோட்டை எவ்வளவு பெரியதாக அச்சிட்டாலும், சிகரெட் விலையைவிட பீடி மலிவாக இருக்கும்வரை பீடி விற்பனை குறையாது.

According to the medical journal Lancet, 13 per cent of all deaths in India by 2020 will be because of tobacco.

Posted in AIDS, Anbumani, Ban, Beedi, betelnut, Chew, Cigar, Cigarette, Commerce, Consumer, Cost, Customer, deaths, Economy, Employment, Filter, Finance, Govt, Habits, Health, Healthcare, Income, ITC, Jobs, manufacturers, Manufacturing, MNC, Nicotine, Pan Parag, Passive, Protest, Ramadas, Ramadoss, sales, skull, Smoke, smoking, Symbols, Tax, Tirunelveli, Tobacco, warning, workers, wrappers | Leave a Comment »