நெரிசலை சமாளிக்க துணை நகரத்துக்கு மாற்றாக புதிய மாநகராட்சிகளை உருவாக்கலாம்- அரசுக்கு யோசனை
வி. கிருஷ்ணமூர்த்தி
சென்னை, செப். 8: சென்னையில் அதிகரித்துவரும் மக்கள் நெருக்கத்தைக் குறைக்க, புறநகர்ப் பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய மாநகராட்சிகளை உருவாக்கலாம் என நகர்ப்புற வளர்ச்சிக்கான பல்வேறு அமைப்புகள் யோசனை கூறியுள்ளன.
துணை நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டதை அடுத்து, இப் பிரச்சினைக்கு புதிய மாநகராட்சிகளை அமைப்பது மட்டுமே தீர்வாக அமையும் என இவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.
சென்னை மாநகரைவிட, “சென்னை பெருநகர்’ (சி.எம்.ஏ.) என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் வரையறுத்துள்ள பகுதிகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.
சென்னையில் தற்போது உள்ள மக்கள்தொகையைவிட சென்னை பெருநகர்ப் பகுதியின் மக்கள்தொகை 3 மடங்காக உள்ளது. இது அடுத்த 10 ஆண்டுகளில் 4 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர்ப் பகுதியில் (சி.எம்.ஏ.) தற்போது 16 நகராட்சிகள், 20 சிறப்பு நிலை ஊராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
இவை அனைத்தும் ஒரே மாதிரியான நகர்ப்புறத் தன்மையுடன் இருந்தாலும் மக்கள்தொகை அடிப்படையில் வெவ்வேறு நிலை உள்ளாட்சிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
இதனால் இப் பகுதிகளில் கழிவுநீர் அகற்றுதல், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சென்னையில் ஏற்பட்டுவரும் நெரிசலுக்கும், புறநகர்ப் பகுதிப் பிரச்சினைகளுக்கும் ஒரே சமயத்தில் தீர்வு காண வேண்டும்.
அதற்காக விவசாய நிலங்களையும், கிராமப்புறப் பகுதிகளையும் ஒட்டுமொத்தமாகக் கையகப்படுத்தி துணை நகரம் அமைப்பதை விட புறநகர்ப் பகுதிகளை ஒருங்கிணைத்து தனி நகரமாக அறிவிக்கலாம் என்கின்றனர் நகர்ப்புற வளர்ச்சி ஆய்வாளர்கள்.
புதிய மாநகராட்சிகள் சாத்தியமா?
தமிழகத்தில் தற்போது 6 மாநகராட்சிகள் உள்ளன. இவை தவிர திருப்பூர் 7-வது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும், ஈரோடு,
- தஞ்சாவூர்,
- வேலூர்,
- தூத்துக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக அறிவிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
உள்ளாட்சித் துறையில் இதற்காக ஓர் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள தேவையைக் கருதி சென்னைக்கு அருகே புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது குறித்தும் அரசு பரிசீலிக்கலாம் என பல்வேறு ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அடிப்படை வசதிகளை மேம்படுத்தினாலே போதும்: சென்னை மாநகரில் உள்ள அளவுக்கு, புறநகர்ப் பகுதிகளிலும் குடிநீர் விநியோகம், கழிவுநீர்-குப்பைகள் அகற்றுதல், சாலைகள், துரிதமான போக்குவரத்து ஆகிய வசதிகளை திட்டமிட்டு மேம்படுத்தினால் துணை நகரங்கள் தானாகவே உருவாகிவிடும்.
சென்னை புறநகரில் ஒரே மாதிரியான பகுதிகள் வெவ்வேறு நிலை உள்ளாட்சிகளாக இருப்பதால், சில பகுதிகளுக்கு மட்டுமே புதிய திட்டங்களின் பயன்கள் கிடைக்கின்றன.
இவ்வாறு பயன் பெறாமல் பின்தங்கியுள்ள பகுதிகள், மற்ற பகுதிகளுக்கு பிற்காலத்தில் இடையூறாக மாறிவிடும் என சிட்லபாக்கம் குடியிருப்போர் நலச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி. விஸ்வநாதன் கூறுகிறார்.
தீர்வு என்ன?
சென்னை பெருநகர்ப் பகுதியில் தாம்பரம் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகள், அம்பத்தூர் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளன.
இவற்றின் வளர்ச்சி வேகம் அடுத்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரிக்கும் என நகர்ப்புற வளர்ச்சித் துறை மதிப்பிட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, கிண்டி முதல் மறைமலை நகர் வரையுள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாநகராட்சியையும், மதுரவாயல் முதல் மணலி வரையுள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாநகராட்சியையும் உருவாக்கலாம் என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.