இரண்டாவது பசுமைப்புரட்சி
சுசி.திருஞானம்
இரண்டாவது பசுமைப்புரட்சிக்குத் தயார் ஆகுங்கள் என்று இந்திய விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மன்மோகன்சிங். இந்திய வேளாண்மைத் துறையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிவரும் தேக்கத்தை உடைத்து, விவசாயிகளின் வாழ்வை மலரச் செய்ய வேண்டும் என்ற உண்மையான அக்கறையுடன் விடப்பட்ட அழைப்பு இது.
இரண்டாவது பசுமைப்புரட்சிக்கு நமது உழவர்கள் அனைவரும் தயாராக வேண்டுமெனில், முதலாவது பசுமைப் புரட்சியின் அனுபவங்களைத் தொகுத்துக் கொள்வது அவசியம்.
உற்பத்தி பெருகியது: 1960-களின் தொடக்கத்தில் ஆரம்பித்த முதலாவது பசுமைப்புரட்சியின் முக்கிய உத்திகளாக கருதப்பட்டவை இறக்குமதி செய்யப்பட்ட விதைகள், செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி நஞ்சுகள், டிராக்டர் உள்ளிட்ட இயந்திரங்கள் போன்றவை ஆகும்.
அணைக்கட்டுகள், பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள், நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் போன்றவை நமது விவசாயக் கட்டமைப்பைத் தரம் உயர்த்தியிருந்த காலகட்டம் அது. கட்டமைப்பு மாற்றமும், புதிய உத்திகளும் இணைந்தபோது விவசாய விளைச்சல் மடங்குகளில் பெருகியது.
1950-ம் ஆண்டில் 50.8 மில்லியன் டன்னாக இருந்த நமது நாட்டின் உணவுப் பொருள் உற்பத்தி 1990-ல் 176 மில்லியன் டன்னாக உயர்ந்தது.
எதிர் விளைவுகள்: பசுமைப்புரட்சியில் பின்பற்றப்பட்ட சில தவறான உத்திகள் 1990-களின் தொடக்கத்திலிருந்தே எதிர் விளைவுகளைக் காட்டின.
இந்திய மண்ணின் மீதும், பயிர்கள் மீதும் ஆண்டுதோறும் 8 கோடி கிலோ நஞ்சு கொட்டப்பட்டதால் மண் மலடாகிப் போனது. மண்புழுக்களும், நுண்ணுயிர்களும் கொல்லப்பட்டதால் மண்ணின் உயிர்ப்புத்தன்மை வீழ்ச்சியடைந்தது. பயிர்களின் தாயான மண்ணின் உற்பத்தித் திறன் தாழ்ந்து போனது.
இதனால் 1997-ம் ஆண்டிலிருந்து (191 மில்லியன் டன்) 2005-ம் ஆண்டு வரை (204 மில்லியன் டன்) நமது நாட்டின் உணவுப் பொருள் உற்பத்தி சுமார் 200 மில்லியன் டன் என்ற அளவில் தேங்கிப் போய்விட்டது. கடந்த சில மாதங்களாக நமது நாடு பல லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்யும் அவல நிலையும் உருவாகிவிட்டது.
உற்பத்தியில் தேக்கம் ஏற்பட்ட அதே வேளையில், செயற்கை ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி நஞ்சுகள் ஆகியவற்றின் விலை மடங்குகளில் உயர்ந்துவிட்டது. இதனால் விவசாயிகள் கடனாளிகள் ஆகிவிட்டனர். சிறிய விவசாயிகள் சிறிய கடனாளிகள் – பெரிய விவசாயிகள் பெரிய கடனாளிகள் – இதுதான் இன்றைய இந்திய விவசாயத்தின் யதார்த்த நிலை.
தொடரும் தற்கொலைகள்: கடன் சுமை நெருக்கியதால், பயிருக்குத் தெளிப்பதற்காக வாங்கிய பூச்சிக்கொல்லி நஞ்சுகளைத் தாங்களே உட்கொண்டு பல்லாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
அதிகரிக்கும் இடுபொருள் செலவு, இறக்குமதி செய்யப்பட்ட மரபணு மாற்ற விதைகள் போன்றவை தரும் நெருக்கடிகளால் மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் விவசாயிகள் தற்கொலை இன்னமும் தொடர்கிறது.
முதலாவது பசுமைப்புரட்சியின் முன்னோடி மாநிலமாகச் செயல்பட்டது பஞ்சாப். கோதுமை உற்பத்தியிலும், நெல் உற்பத்தியிலும் 1970-களில் பெரும் சாதனை படைத்த பஞ்சாப், இந்தியாவின் “ரொட்டிக்கூடை’ என்று அழைக்கப்பட்டது.
ஆனால் 1990-களில் பஞ்சாப் விவசாயிகள் பலரும் நொடித்துப் போயினர். “எங்கள் கிராமம் விற்பனைக்குத் தயார்’ என்று ஹரிகிருஷ்ணாபுரம் கிராமத்தில் விளம்பரப் பலகை மாட்டப்பட்டது. கடன் தொல்லையால் பஞ்சாப் விவசாயி தற்கொலை என்ற செய்திகளும் வெளிவரத் தொடங்கின.
விவசாயிகள் கடன் சுமையில் தள்ளப்பட்டதன் வரலாற்றுச் சூழலை தமிழக அரசு நன்கு உணர்ந்துள்ளது. “விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் அறவே ரத்து’ என்ற தேர்தல் முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த புதிய அரசு, 6866 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து, அவர்களின் சுமையைப் பகிர்ந்து கொண்டுள்ளது.
மேலும், கிலோ அரிசி 2 ரூபாய், ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் போன்ற பல துணிச்சலான நடவடிக்கைகளிலும் தமிழக அரசு ஈடுபட்டிருப்பது பற்றி சர்ச்சைகள் எழுந்த போதும், அடித்தட்டு மக்களின் சிரமங்கள் குறைக்கப்பட்டிருப்பது உண்மை.
வழிகாட்டும் முன்னோடி: விவசாயிகளை கடனில் வீழ்த்தும் ரசாயன விவசாயத்துக்கு மாற்றாக அறிவியல்பூர்வ இயற்கை விவசாயத்தை உயர்த்திப் பிடிப்பதில் தமிழக அரசு முன்னோடியாகத் திகழ்கிறது. ரசாயன உப்புகளால் நமது மண்வளம் குன்றிப்போனது குறித்து கவலை தெரிவித்துள்ள தமிழக வேளாண்மைத் துறையின் கொள்கை அறிக்கை இயற்கை விவசாய உத்திகளைப் பின்பற்றுவதன் அவசர அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகமும் பஞ்சகவ்யம், மூலிகைப் பூச்சிவிரட்டி போன்ற இயற்கை விவசாய உத்திகளின் அறிவியல் அம்சங்களை ஆய்வு செய்து, அங்கீகரித்து மாநிலமெங்கும் பரப்பிட முன் வந்துள்ளது. செயற்கை விவசாயமுறைக்கு இணையாக அறிவியல் பூர்வமான இயற்கை விவசாய முறை பரவ வேண்டும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் அழைப்பு விடுத்துள்ளார்.
விவசாயிகளின் முன் முயற்சி: ஈரோடு, கரூர், நெல்லை போன்ற மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான இயற்கை விவசாயப் பண்ணைகளைப் பார்க்கும்போது, தமிழக வேளாண்மை தலைநிமிரப் போகிறது என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
பல பயிர் உரம், மண்புழு உரம், பஞ்சகவ்யம், நுண்ணுயிர் கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி போன்ற இயற்கை விவசாய உத்திகளைப் பயன்படுத்தும் இயற்கை விவசாய முன்னோடிகள், வியக்கவைக்கும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். கரும்பு, நெல்லி, எலுமிச்சை போன்ற பல பயிர்களில் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் பார்க்கும் பல இயற்கை விவசாயிகளைப் பட்டியலிட்டுக் கூற முடியும்.
ரசாயன நஞ்சு கலக்காத அரிசி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை தேடிச்சென்று வாங்கும் நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தமிழக இயற்கை விவசாயிகளை உற்சாகப் படுத்தியுள்ளது.
திருப்புமுனை இங்குதான்: தமிழக அரசு விவசாயிகள் மீது கொண்டிருக்கும் நேர்மையான அக்கறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் இயற்கையோடு இயைந்த அறிவியல் முனைப்பு, இயற்கை விவசாய முன்னோடிகளின் துடிப்பான முன்முயற்சி இவை மூன்றும் ஒரே புள்ளியில் இணையத் தொடங்கியிருப்பது இந்திய வேளாண்மையின் திருப்புமுனை இங்குதான் ஏற்படப் போகிறது என்பதன் அறிகுறியே ஆகும்.
உணவை நஞ்சுபடுத்தாத விவசாயப் புரட்சி – விவசாயக் குடும்பங்களை கடனில் வீழ்த்தாத விவசாயப் புரட்சி – நமது உழவர்களை மீண்டும் தலை நிமிர்ந்து நடக்கச் செய்யும் இரண்டாவது பசுமைப்புரட்சி நெருங்கிவிட்டது. தமிழகம், அதற்கான முதலாவது முரசு கொட்டி, தலைமை தாங்கி வழிநடத்தும் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.