நிபந்தனைகளும் நியாயங்களும்
இரா.சோமசுந்தரம்
ஒரு சட்டம் அல்லது புதிய நிபந்தனை புகுத்தப்படும்போது அதற்கான காரணங்கள் இல்லாமல் செய்யப்படுவதில்லை.
அத்தகைய நிபந்தனை அல்லது சட்டத்தை எதிர்க்கும்போது ‘இதை இப்போது அமல்படுத்துவதன் அவசியம் என்ன?’ என்று கேள்வி கேட்பதும், அதற்கு அரசு சொல்லும் காரணத்தை விவாதத்துக்கு உட்படுத்துவதும், பெருந்திரளானோரின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அது அமலாகும்படி பார்த்துக் கொள்வதும் நியாயமான அணுகுமுறைதான்.
இப்போது பட்டியல் வகுப்பு மாணவர்கள் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே உதவித்தொகை தரப்படும் அல்லது தொடரும் என்ற நிபந்தனைக்கு பட்டியல் வகுப்பு மாணவர்கள் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள்) எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
திடீரென இப்படியொரு நிபந்தனையை மத்திய அரசு கொண்டுவரக் காரணம் என்ன? என்பது பற்றி மாணவர்களும் சரி, அரசியல் தலைவர்களும் சரி, யாருமே பேசவில்லை.
இந்த நிபந்தனையை மத்திய அரசு விலக்கிக் கொள்ளாவிட்டாலும், மாநில அரசு தனது நிதியில் இந்த மாணவர்களுக்கு உதவித்தொகையை நிபந்தனையின்றி வழங்கும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அவரும்கூட, இதன் பின்னணி என்ன? என்பது குறித்து விளக்கவோ, அல்லது மாணவர்களுக்கு அறிவுறுத்தவோ முயலவில்லை.
ஏன் இத்தகைய நிபந்தனையை மத்திய அரசு மேற்கொள்ள நேரிட்டது?
மத்திய, மாநில அரசுகள் மட்டுமன்றி சில தனியார் அறக்கட்டளைகளும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் உண்டுஉறைவிட வசதியும் அளிக்கின்றன. அல்லது அதற்கான செலவை ஏற்கின்றன.
இந்தத் தனியார் அறக்கட்டளைகளின் கருணை நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இவர்களிடம் சலுகையைப் பெறும் மாணவர், ஒரு பருவத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர் உதவித்தொகை அல்லது இலவச விடுதி சலுகையை இழந்துவிடுவார். மீண்டும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே (எந்தப் பாடத்திலும் ‘அரியர்ஸ்’ இல்லாத போதுதான்) அவருக்கு இலவச சலுகை மறுபடியும் தொடரும். அதுவரை, ஒன்று அவர் விடுதியிலிருந்து வெளியேற வேண்டும். அல்லது பொது மாணவர்களுக்கு இணையாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிபந்தனை, அந்த மாணவர்கள் தங்கள் படிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் கவனம் சிதறினால், கல்விக் கட்டணம் கையைக் கடிக்கும்.!
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கும் அவர்களது இலவச உண்டுஉறைவிடத்துக்கும் மத்திய, மாநில அரசுகள் ஆயிரம் கோடிக்கும் அதிகமாகச் செலவிடுகின்றன.
இந்த மாணவர்களுக்கு இதுவரையிலும் எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காத மத்திய அரசு, இப்போது அதை நடைமுறைப்படுத்துவது ஏன்? உயர்கல்வியில் இந்த மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு குறைந்துள்ளதுதான் காரணம். இதை உயர்கல்வி உலகம் நன்கு அறியும். ஆனால் அவர்களும் அரசியல்வாதிகள் போலவே மெüனம் சாதிக்கிறார்கள்.
எந்த நிபந்தனையும் இல்லாமல் இருந்துவிட்டு, இப்போது 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்று அரசு நிபந்தனை விதிப்பது அதிகபட்சமான எதிர்பார்ப்பாக இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறவேண்டும் (அரியர்ஸ் இருக்கக்கூடாது) என்று எதிர்பார்க்கும் உரிமைகூட அரசுக்கு இல்லாமல் போகுமா?
நகரங்களில் உள்ள கல்லூரியில் இடம் கிடைத்து, இலவச உண்டுஉறைவிடத்தில் தங்குவதற்கும் இடம் கிடைத்துவிட்டால், பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்வியை முடிக்கும்வரை (மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு) கல்வியில் ஆர்வம் செலுத்துவதில்லை.
இந்த உண்மையை அறிந்துகொள்ள ஒரு புள்ளிவிவரத்தை எடுத்துப் பார்க்கலாம். அரசின் கல்வி உதவித் தொகை மற்றும் உணவு உறைவிட சலுகை பெறும் மாணவர்களில் எத்தனை பேர் அனைத்துப் பருவத் தேர்வுகளிலும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் (அரியர்ஸ் இல்லாதவர்கள்) என்பதை கல்வித் துறை மிக எளிதில் கணினி உதவியுடன் பட்டியலிட முடியும்.
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 60 சதவீத மதிப்பெண் நிபந்தனையை வைத்தால், பெரும்பாலான மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்காமல் போகும் என்ற அச்சம் முன்வைக்கப்படுகிறது.
ஆனால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இந்த மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. அத்துடன், பொது ஒதுக்கீட்டிலும் இடம்பெறும் அளவுக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.
அரசின் நிபந்தனையை எதிர்ப்பவர்கள் யார்? கல்லூரியிலும் மாணவர் விடுதியிலும் இடம் கிடைக்கப்பெற்று, கல்வியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, தங்கள் கவனத்தை நகர வாழ்வின் மோகத்தில் சிதறவிடும் மாணவர்கள்தான்.
அனைவரும் 60 சதவீத மதிப்பெண் பெறுவது கடினம் என்று கருதினால், பருவத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் குறைந்தது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நிபந்தனையை மட்டுமாவது ஏற்க முன்வர வேண்டும்.
எந்த நிபந்தனையும் இல்லாமல் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கேட்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.