Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Graduate’ Category

Compulsory rural service required for Doctor graduation – Medical Education

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

State of MBBS – Analysis on Medical education « Tamil News


கட்டாய கிராமப்புற மருத்துவ சேவைஜி.ஆர்.ரவீந்திரநாத்

“கிராமப் பகுதிகளில் பணியாற்ற டாக்டர்கள் மறுக்கிறார்கள் என்ற காரணத்தைக் கூறி’ எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவுடன் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் கட்டாய சேவைசெய்ய வேண்டுமென மத்திய அரசு சட்டம் கொண்டு வரவுள்ளது. இந்தச் சேவையை முடித்த பிறகுதான் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டு தொழில் செய்ய முடியும். இதற்கேற்ப எம்பிபிஎஸ் படிப்புக் காலத்தை ஐந்தரை ஆண்டுகளில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்தவும் மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.இச்சட்டம் இளம் டாக்டர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதோடு நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண்கள் மருத்துவம் பயில்வதைத் தடுத்துவிடும். நமது மருத்துவக் கல்வி, மருத்துவத் துறை, மக்கள் நல்வாழ்வுக் கொள்கை ஆகியவற்றில் உலக வங்கியின் விருப்பங்களுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.இந்தியாவில் 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களிலும் 70 சதவீத மருத்துவர்கள் நகர்ப்புறங்களிலும் இருப்பது வருந்தத்தக்கது. இதற்கு நமது சமூகப் பொருளாதார நிலைமைகளே காரணம். இந்தியாவில்

  • 3,043 சமுதாய மருத்துவ மையங்களும்
  • 22,842 ஆரம்ப சுகாதார மையங்களும்
  • 1, 37, 311 துணை மையங்களும்

உள்ளன என்று 2003-ம் ஆண்டு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

  • ஆரம்ப சுகாதார நிலையங்களில் 13.3% மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

சமுதாய மருத்துவமனைகளில்

  • 48.6% அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள்,
  • 47.9% மகப்பேறு மருத்துவர்கள்,
  • 46.1% பொது மருத்துவர்கள்,
  • 56.9% குழந்தை மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கிராமப் புறங்களில்

  • 75% அறுவைச் சிகிச்சை மருத்துவர்களும்
  • 73% மகப்பேறு மருத்துவர்களும்
  • 86% குழந்தை மருத்துவர்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.

காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுகள் அக்கறை காட்டாததும் பணி நியமனத் தடை ஆணையும்தான் இந்த நிலைக்குக் காரணம்.
நிரந்தர வேலைவாய்ப்பை வழங்காமல், ஒப்பந்த அடிப்படையில் தாற்காலிகமாக மிகக்குறைந்த தொகுப்பூதியத்தில் மருத்துவர்களை நியமிப்பதால் மருத்துவர்கள் அரசுப்பணிகளில் சேரத் தயங்குகின்றனர்.

கிராமப்புற மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்தாததும் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் தங்க குறைந்தபட்ச வசதிகளைக்கூட செய்து கொடுக்காததும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. பல சமுதாய மருத்துவ மையங்களுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சொந்தக் கட்டடமே இல்லை. நூற்றுக்கணக்கான மையங்களில் கழிப்பிட வசதியே இல்லை.

கிராமப்புற மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்க கட்டாய கிராமப்புற சேவைதான் தீர்வு என்கிறது அரசு. கட்டாய கிராமப்புற சேவை பயனளிக்காது என்பதோடு, மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடும் என்பதுதான் இளம் மருத்துவர்களின் எதிர்வாதம்.

மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் வெறும் 0.9% மட்டும் ஒதுக்கப்படுகிறது. உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மிகக் குறைவாக நிதிஒதுக்கீடு செய்யும் நாடு இந்தியாதான். மொத்த உற்பத்தியில் 5% ஒதுக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், ஊரகப்புற மருத்துவமனைகளுக்கு அதிகநிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மருத்துவம் தனியார் மயம் ஆவதும், பெரிய நிறுவனங்களாவதும் மருத்துவர்களை நகரங்களிலேயே குவியச் செய்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

1980-களில் 57% ஆக இருந்த தனியார் மருத்துவமனைகள் 2000-ல் 73% ஆக உயர்ந்துள்ளது. 1980களில் மக்களின் ஒட்டுமொத்த மருத்துவச் செலவில் அரசின் பங்களிப்பு 22% ஆக இருந்தது. இன்று 16% ஆகக் குறைந்துவிட்டது.

மருத்துவர்களை நிரந்தர ஊழியர்களாகப் நியமித்து கிராமப்புறங்களில் 2 ஆண்டு கட்டாய சேவை செய்த பின்னரே பணிவரன்முறை செய்யப்படும் என்ற நடைமுறையைக் கொண்டு வரவேண்டும். டாக்டர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. டாக்டர்களின் ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும்.

கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றுவோருக்குக் கூடுதல் சம்பளமும் பதவி உயர்வில் முன்னுரிமையும் இதர சலுகைகளும் வழங்க வேண்டும். முதுநிலை மருத்துவம் பயில நுழைவுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். மிகவும் பின்தங்கிய மலைப்பகுதிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கலாம். இத்தகைய மருத்துவமனைகளில் மருத்துவர்களை பணியமர்த்த தனியாகவே சிறப்புப் பணி நியமன முறையைக் கையாளலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இடமாறுதல் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் உள்ளூர் மருத்துவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கலாம். ஒழுங்காகப் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்.

ஊழல் முறைகேடுகளை ஒழிக்க அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். கட்டாய கிராமப்புறச் சேவையில் எம்பிபிஎஸ் முடித்த டாக்டர்களை பணியாற்ற வைப்பதால் மக்களுக்கு பெரிய அளவில் பயனில்லை. அரசின் புள்ளிவிவரப்படியே மகப்பேறு, குழந்தைகள்நல, பொது மற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களின் பற்றாக்குறையே கிராமப்புறங்களில் உள்ளது. இதற்கு முதுநிலை படிப்பு படித்த டாக்டர்கள்தான் கிராமப் பகுதிகளுக்கு அதிகம் தேவைப்படுகின்றனர்.

இக்குறைபாட்டைப் போக்க இப்படிப்புக்கான இடங்களை அதிகப்படுத்த வேண்டும். எம்பிபிஎஸ் படித்த டாக்டர்களுக்கு குறிப்பிட்ட துறைகளில் பயிற்சியளித்து அவர்களைப் பயன்படுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் பட்டயப் படிப்பு படிக்கும் தனியார் மருத்துவர்களை ஓராண்டு காலம் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் முழு ஊதியத்துடன் பணியாற்றச் செய்ய வேண்டும். சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை சரி செய்யப்பட்டதும் இந்தக் கட்டாயச் சேவையைக் கூட ரத்து செய்ய வேண்டும்.

தற்சமயம் ஆண்டுதோறும் இந்தியாவில் 29, 500 டாக்டர்கள் படித்து முடித்து வெளிவருகிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 40 ஆயிரம் ஆகஉயர்ந்துவிடும். ஒவ்வோராண்டும் இவர்களைக் கட்டாய கிராமப்புறச் சேவையில் தாற்காலிகமாகப் பணியமர்த்தினால் அது 40 ஆயிரம் டாக்டர்களுக்கான பணியிடங்களை நிரந்தரமாக ஒழித்துக் கட்டிவிடும். மேலும் இந்த திட்டத்துக்கான எம்பிபிஎஸ் படிப்பை ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவது சரியல்ல. ஒரு நபர் எம்பிபிஎஸ் படிப்பைத் தொடங்கி எந்தவிதமான தடங்கலும் இன்றி எம்சிஎச், டிஎம் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர்ச்சியாகப் படித்து முடிக்க குறைந்தபட்சம் 13 ஆண்டுகளாவது அவசியம்.

எம்பிபிஎஸ் படிப்பு காலத்தை ஆறரை ஆண்டுகளாக உயர்த்தினால் அது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் மருத்துவம் பயிலும் ஆர்வத்தைக் குறைத்துவிடும். திருமணம் போன்ற காரணங்களால் பெற்றோர்கள் பெண்களை மருத்துவ படிப்புக்கு அனுப்பத் தயங்குவர். பணபலம் உள்ள ஆண்கள் மட்டுமே படிக்கும் துறையாக மருத்துவக் கல்வி மாறிவிடும்.

தற்பொழுது பிளஸ்2வில் உயிரியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இவ்வாண்டு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்த பலர், பொறியியல் படிப்புக்கு மாறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்களின் வேலைவாய்ப்பை, உரிமைகளைப் பாதிக்காத வகையில் கிராமப்புற மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளை நிறைவு செய்ய ஆக்கப்பூர்வமாக அரசு முயலவேண்டும்.

(கட்டுரையாளர், சமூக சமதுத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலர்.)

——————————————————————————————————-
மாறட்டும் மருத்துவமனை நடைமுறைகள்!

இரா. சோமசுந்தரம்

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களில் பெரும்பாலானோர், வெளியிடத்தில் “தனி ஆலோசனைகள்’ வழங்குவதும், தனியார் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைகள் செய்வதும் நடைமுறையில் உள்ளன. இதனால் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் அறுவைச்சிகிச்சைகள் மூன்று வகையாக நடைபெறுகின்றன.

அவை: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கேயே அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, ஓரளவு குணமாகும்வரை தங்கி, பின்னர் வீடு திரும்புவோர். அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று, அதே அரசு மருத்துவர் ஆலோசனையின்பேரில் தனியார் மருத்துவமனையின் அறுவைக்கூடத்தில் சிகிச்சை முடித்துக் கொண்டு, தொடர் மருத்துவத்துக்கு அரசு மருத்துவமனை படுக்கைக்குத் திரும்புகிற அல்லது புறநோயாளியாக வந்து மருந்து பெற்றுச் செல்வோர். அரசு மருத்துவமனைக்கே வராமல், அரசு மருத்துவரின் தனிஆலோசனையைப் பெற்று, அவர் சொல்லும் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை முடித்து வீடு திரும்புவோர்.

எந்தவொரு மருத்துவச் செலவையும் ஏற்கும் சக்தி இல்லாத பரம ஏழைகள்தான் முதல் வகை சிகிச்சை பெறுகின்றனர்.

“கார்ப்பரேட்’ மருத்துவமனைகளில் ரூ.50 ஆயிரம் செலவழிக்க வசதியில்லாமல், ரூ.20 ஆயிரத்தில் சிகிச்சையை முடித்துக் கொள்ள விரும்புவோர் மூன்றாவது வகையைத் தேர்வு செய்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை குறைவு.

நடுத்தர வருவாய்க் குடும்பத்தினர்தான் இரண்டாவது சிகிச்சையை மிக அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களால் மருத்துவத்துக்குத் தனியாக செலவு செய்யும் சேமிப்புகள் ஏதுமில்லை. நோய்வந்த பிறகே அந்த நோய்க்கான சேமிப்பு அல்லது செலவுத் தொகை ஒதுக்கப்படுகிறது. கார்ப்பரேட் மருத்துவமனை வாசலைக்கூட இவர்களால் மிதிக்க முடியாது. தனியார் மருத்துவமனைகளில் ஆலோசனை பெற்று, மருந்து வாங்கும் சக்தி இருந்தாலும், அறுவைச்சிகிச்சை, ஒரு வாரம் படுக்கையில் இருப்பது ஆகிய செலவுகள் அவர்களது ஓராண்டு வருமானத்தை விழுங்கக்கூடியவை. இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அதே நேரத்தில் அறுவைச்சிகிச்சையை மட்டும் தரமான இடத்தில் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இந்த நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு இருக்கிறது.

அரசு மருத்துவமனையை நாடவும், அதே நேரத்தில் உயிருக்கு ஆபத்தில்லாத சிகிச்சையை விரும்பவும் செய்யும் நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் இந்த தற்காப்பு முயற்சியை அரசு ஏன் சட்டப்படி முறைப்படுத்தக்கூடாது?

தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மருத்துவ வசதிகள் கொண்ட அறுவைக்கூடங்கள் உள்ளன. இவற்றில் நவீன துணைக் கருவிகளைக் கொண்டுள்ளவை மிகச் சிலவே.

தாலுகா அளவில் உள்ள மருத்துவமனைகளில் பல கோடி ரூபாய் செலவழித்து எவ்வளவு நல்ல எக்ஸ்-ரே கருவிகள், ஸ்கேன் கருவிகள் வாங்கி வைத்தாலும், அவை சில மாதங்களில் நிச்சயம் பழுதாகிவிடுகின்றன.

ஆகவே, எல்லா நகரங்களிலும் பரவலாக உள்ள தனியார் மருத்துவமனைகளின் அறுவைச் சிகிச்சைக்கூடங்களைப் பயன்படுத்திக் கொள்ள சரியான அணுகுமுறையை அரசு உருவாக்கினால் பயனுள்ளதாக அமையும்.

தனிஆலோசனையின்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, என்டோஸ்கோபி, ஈசிஜி, எக்ஸ்-ரே, மருந்துகள், அறுவைக்கூடம் வாடகை எல்லாவற்றிலும் குறைந்தபட்சம் 15 சதவிகிதம், ஊக்கத்தொகையாக மருத்துவருக்கு அவர்களால் வழங்கப்படுவது என்பது ஊர் அறிந்த ரகசியம். இந்த ஊக்கத் தொகையை அரசு சட்டப்படி வழங்க முன்வந்தால், மருத்துவத்தில் பட்டுப்போன மனிதாபிமானம் மீண்டும் தளிர்க்கும்.

அரசு மருத்துவமனை மருத்துவர்களும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புவது குற்றமல்ல. அவர்கள் திறமையானவர்களாக இருந்து அவர்களைத் தேடிவரும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் அதிகரிக்கும்போது அதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தனியார் மருத்துவமனை அறுவைக்கூடங்களுக்கு செலுத்தப்படும் கட்டணத்தில் 20 சதவிகிதத்தை சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும், 20 சதவிகிதத்தை மருத்துவமனைக்கும் அளிக்க வகை செய்யலாம்.

வருமான வரி ஏய்ப்பு குறித்த தகவலைத் தருபவருக்கு, கண்டுபிடிக்கப்பட்ட வரிஏய்ப்புத் தொகையில் ஒரு பங்கை அரசாங்கமே அளிக்கும்போது, உயிரைக் காக்கும் மருத்துவருக்கும் அரசே சட்டப்படி கமிஷன் கொடுத்தால் என்ன தவறு?

தற்போது அரசு மருத்துவமனையில் பணியாற்ற திறமையான மருத்துவர்கள் தயங்குவதன் காரணம், அவர்களுக்கு வெளியில் நிறைய வருவாய் கிடைக்கிறது என்பதுதான். அந்த வாய்ப்பை அரசு மருத்துவமனையிலேயே ஏற்படுத்திக் கொடுத்தால் தவறில்லை; பணிபுரிய நிறைய மருத்துவர்கள் முன்வருவார்கள்.

விபத்து, தற்கொலை, வெட்டு, குத்து என்றால் முதலில் அரசு மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்ற நிலைமை இப்போது இல்லை. தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று, காவல்நிலையத்தில் வழக்கைப் பதிவு செய்யும் மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

இதேபோன்று தனியார் மருத்துவமனைகளின் அறுவைக்கூடங்களைப் பயன்படுத்தவும், அங்கே அரசு மருத்துவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு சிகிச்சை அளிக்கவும் புதிய மாற்றங்கள் இன்றைய தேவையாக இருக்கிறது.

———————————————————————————————————–
“கருணை’ என்பது கிழங்கு வகை!

இரா. சோமசுந்தரம்
மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் ஓராண்டுக்கு கிராமங்களில் பணிபுரிவதைக் கட்டாயமாக்கும் திட்டத்தை மருத்துவ மாணவர்கள் எதிர்க்கின்றனர். போராட்டங்கள் நடத்துகின்றனர்.

ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள், “நாங்கள் மக்களுக்கு எதிரியல்ல’ என்ற வசன அட்டைகளைத் தாங்கும்போதும் “குக்கிராமத்திலும் சேவை செய்ய நாங்கள் ரெடி, நிரந்தர வேலைதர நீங்கள் ரெடியா?’ என்ற வசன அட்டையை ஏந்தி நிற்பதைப் பார்க்கும்போதும் மருத்துவக் கவுன்சிலின் மெய்யான நோக்கத்தைப் புரிந்துகொண்ட பின்புதான் இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்களா என சந்தேகம் வருகிறது.

தற்போது நான்கரை ஆண்டுகள் படிப்பு, ஓராண்டு மருத்துவமனையில் தொழில் பழகுதல் என்ற அளவில் ஐந்தரை ஆண்டுகளாக உள்ள மருத்துவப் படிப்பு, கிராமப்பகுதியில் ஓராண்டு சேவையை வலியுறுத்துவதன் மூலம் ஆறரை ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் மருத்துவம் கிடைக்கச் செய்யும் நோக்கத்தில்தான் இந்திய மருத்துவக் கவுன்சில் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

மருத்துவக் கவுன்சிலின் புதிய நடைமுறைப்படி, இந்த இளம் “மருத்துவர்கள்’ கிராமப்பகுதிகளில் ஓராண்டு பணியாற்றிய பின்னர் அவர்களது மருத்துவப் படிப்புக்கான சான்றிதழ் அளிக்கப்படும். அதன் பின்னரே அவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளை, சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர முடியும்.

மேற்படிப்புக்குத் தடையாக, ஓராண்டு கிராம மருத்துவ சேவை குறுக்கே வந்து நிற்பதை இம்மாணவர்கள் விரும்புவதில்லை. இந்தப் போராட்டத்தின் அடியிழையாக இருப்பது இந்த நெருடலான விஷயம்தான்.

கிராமங்களில் பணியாற்ற மருத்துவர்கள் வருவதில்லை என்பதுதான் அரசின் பிரச்னை. இந்த மாணவர்கள் கிராமங்களில் பணியாற்றத் தயார் என்றால் இவர்களுக்கு நிரந்தர வேலை தருவதில் அரசுக்கு என்ன சிக்கல் இருக்க முடியும்?

மருத்துவக் கவுன்சில் குறிப்பிடும் ஓராண்டு கால கிராம மருத்துவ சேவைக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த மாணவர்கள் முன்வைத்தால் அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்தப் புதிய திட்டத்திலும்கூட ஓராண்டு முழுவதும் கிராமப்புறங்களில் பணியாற்றும் அவசியம் ஏற்படாது. ஏனென்றால் நான்கு மாதங்களுக்கு தாலுகா அளவில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்ற வேண்டும்.

நான்கு மாதங்களுக்கு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். நான்கு மாதங்களுக்கு சமுதாய நலக் கூடங்களில் பணியாற்ற வேண்டும். இதன்படி பார்த்தால், கடைசி நான்கு மாதங்கள் மட்டுமே அவர்கள் போக்குவரத்து வசதிகள் குறைந்த கிராமப்பகுதியில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.

அதிலும் தற்போது மினி பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ்கள் செல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலைமை இருப்பதை மறுக்க முடியாது.

தங்களுடன் சமகாலத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள், நான்காவது ஆண்டிலேயே வளாக நேர்காணல் மூலம் வேலை கிடைக்கப்பெற்று, கைநிறையச் சம்பாதிக்க முடியும் என்றால், மருத்துவர்களுக்கு மட்டும் ஏன் ஆறரை ஆண்டுகள் என்று கேள்வி எழுப்புவது சரியானதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது.

சொல்லப்போனால், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் 5 ஆண்டுகள் படிப்பு மற்றும் ஓராண்டு தொழில் பழகுதல் என 6 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பட்டச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவக் கல்லூரி நீங்கலாக, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மூலம் பட்டம்பெறும் ஒவ்வொரு மருத்துவ மாணவருக்கும் அரசு மறைமுகமாக ஏற்கும் செலவினங்கள் பல லட்சம் ரூபாய் வரை ஆகின்றது என்பது இவர்களுக்குத் தெரியாதது அல்ல.

இவர்களில் 69 சதவிகிதத்தினர் அரசு இடஒதுக்கீட்டில் வாய்ப்பு பெற்றவர்கள். அரசு தங்களுக்கு அளித்ததை ஈடு செய்யும் வகையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றவும் ஓராண்டு மருத்துவ சேவையின்போது தங்கள் மருத்துவ அறிவை மேலும் வளப்படுத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இதனை ஏன் கருதக்கூடாது?.

படிப்பின் குறிக்கோள் பணம் என்றாகிவிட்டது. மாணவர்கள் மட்டுமல்ல } மருத்துவப் பேராசிரியர்களுக்கும்!

அதிக அளவு தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ள ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்றைய சிக்கல் விநோதமானது. கற்பிக்கப் பேராசிரியர்கள் இல்லை.

திறமையானவர்கள் அனைவரும் விருப்ப ஓய்வு பெற்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்காகச் சென்றுவிட்டனர். மிக அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்குப் பாடம் நடத்த பேராசிரியர்கள் இல்லை.

குறைந்த மதிப்பெண்களுடன் பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து சேர்ந்த வசதிபடைத்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க பேராசிரியர்கள் இருக்கிறார்கள்.

ஏழை சொல் அம்பலம் ஏறாது. அத்தோடு, ஏழையின் நோய்க்கு சிகிச்சையும் கிடையாது. புதுமைப்பித்தன் சொன்னதைப்போல, “கருணை’ என்பது கிழங்கு வகையில் சேர்க்கப்பட்டுவிட்டது!

———————————————————————————————————-
மருத்துவம் வெறும் வியாபாரமல்ல!

Dinamani Op-ed Sep 6, 2007/Thursday
படித்தவர்கள் பெரும்பாலும் சுயநலத்துடன் செயல்படுகின்றனர் என்பதற்கு இப்போதைய உதாரணம், கிராமசேவை செய்ய மறுக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம். ஐந்தரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பு முடிந்த பிறகு மருத்துவர்கள் ஓராண்டு காலம் கிராமப்புறங்களில் கட்டாயம் சேவை செய்ய வேண்டும் என்கிற திட்டத்தை இவர்கள் எதிர்ப்பது ஏன் என்பது புரியவில்லை. மருத்துவர்களுக்கு சமூகக் கடமை உண்டு என்பதை இவர்கள் உணர மறுப்பது நியாயமில்லை.

நம் நாட்டில் மருத்துவ வசதி நகரங்களில்தான் கிடைக்கிறது, கிராமப்புறங்களில் கிடைப்பதில்லை என்பது உலகறிந்த உண்மை. இன்னும் சொல்லப்போனால் பல கிராமங்கள் இப்போதும் நாட்டு வைத்தியத்தையும், முறையாக மருத்துவப் படிப்பு படிக்காத அரைகுறை போலி மருத்துவர்களையும் நம்பித்தான் இருக்கின்றன என்பது அதிர்ச்சி தரும் உண்மை. போதிய மருத்துவ வசதி இன்மையில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவையும் ஒப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனம் (ரஏஞ). அமெரிக்கா மற்றும் வளர்ச்சி அடைந்த மேலைநாடுகளில் ஆயிரம் பேருக்கு மூன்று அல்லது நான்கு மருத்துவர்கள் என்கிற நிலைமை இருக்கும்போது, இங்கே இன்னும் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமைகூட ஏற்படவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

ஒரு விஷயத்தை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் குக்கிராமம்வரை ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்தி மருத்துவ வசதி கிராமப்புறங்களைப் போய்ச் சேர வேண்டும் என்பதில் நமது மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டன. இதற்காக, நிதிநிலையறிக்கையில் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 1951-ல் வெறும் 725 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தன. இப்போதோ ஏறத்தாழ 2 லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆரம்பத்தில் 5,842 பேருக்கு ஒரு மருத்துவர் என்றிருந்த நிலைமை மாறி இப்போது சுமார் 1,500 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்போது, இந்தியாவில் சுமார் 6,50,000 மருத்துவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது மருத்துவக் கழகக் குறிப்பு. ஆனால் இந்த மருத்துவர்களில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் நகரங்களில்தான் இருக்கிறார்களே தவிர கிராமங்களில் இருப்பதில்லை. தங்களுக்கு வசதியான வாழ்க்கையும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பள்ளிக்கூடங்களும் கிராமங்களில் கிடைப்பதில்லை என்பதுதான் அவர்களது வாதம்.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 73 விழுக்காடு மக்கள் வாழும் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் பலவற்றிலும் மருத்துவர்கள் பெயருக்கு அவ்வப்போது வந்து போகிறார்களே தவிர சேவை மனப்பான்மையுடன் அங்கே தங்கிப் பணியாற்றுகிறார்களா என்றால் இல்லை. பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறுதான்.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை 11,000. இவர்களில் சென்னை உள்பட நகரங்களில் பணிபுரிபவர்கள்தான் சுமார் 7,500 பேர். அதேபோல, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவர்கள் சுமார் 35,000 பேர் என்றால் இவர்களில் 21,000 பேர் நகரங்களில்தான் மருத்துவசேவை செய்கிறார்கள். சமூக சேவை, சமுதாயத்துக்குத் தங்களது பங்களிப்பு என்கிற வகையில், அசௌகரியங்களையும் வருமான இழப்பையும் கருதாமல் ஓராண்டு காலம் நமது மருத்துவர்கள் கிராமப்புற சேவையாற்ற முன்வர மறுப்பது, மருத்துவத் துறையின் மகத்தான சேவைக்கே களங்கம்.

மருத்துவப் படிப்பு தனியார்மயமாக்கப்பட்டதன் தொடர் விளைவுதான், “நாங்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற மாட்டோம்’ என்கிற மருத்துவர்களின் பிடிவாதத்துக்குக் காரணம். கிராமங்களில் சேவை செய்தால் வேலை நிரந்தரம் செய்து தர முடியுமா என்கிற எதிர்க்கேள்வி அர்த்தமில்லாததாகத் தெரிகிறது. இந்தியாவையும் இந்தியாவின் பெருவாரியான மக்களையும் அவர்களது அவலநிலையையும் சரியாகப் புரிந்துகொள்ளாத மருத்துவர்கள் இருந்தும் என்னதான் பயன்? இவர்களை உருவாக்க அரசும் சமுதாயமும் தனது வரிப்பணத்தை ஏன் விரயமாக்க வேண்டும் என்று கேள்வி கேட்க யாருமே இல்லை என்பதுதான் அதைவிட வருத்தமான விஷயம்.

ஓராண்டு காலம் கிராமப்புற சேவையாற்றும் திட்டம் என்பது கிராமப்புற மக்களின் சமூக பொருளாதார நிலைகளை நமது மருத்துவர்கள் அறிவதற்கு நிச்சயமாக வழிகோலும். வரவேற்கப்பட வேண்டிய இந்தத் திட்டத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு சமூக சிந்தனை இல்லை என்று சொல்வதா, இல்லை சுயநலத்திற்கு அவர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள் என்று சொல்வதா? மருத்துவம் வெறும் வியாபாரமல்ல என்பதை மறந்துவிடக் கூடாது!

———————————————————————————————————————————————————————-

தேவை, கிராமப்புற கட்டாய மருத்துவச் சேவை

நள்ளிரவைத் தாண்டிய நேரம்! தஞ்சை ராஜாமிராசுதார் மருத்துவமனையின் வாயிலை ஒரு மாட்டுவண்டி அவசரமாகத் தாண்டுகிறது. அந்த வண்டி மகப்பேறு மருத் துவப் பிரிவை நோக்கி வருகிறது. வண்டியில் ஒரு பெண்ணின் முனகல் சப்தம்.
பயிற்சி மருத்துவர்களாகிய நாங்கள் அவ் வண்டியை நோக்கி ஓடி, வைக்கோலுக்கு நடுவே பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த அந்த கிராமத்துப் பெண்ணை, கைத்தாங்கலாகப் பிடித்து வந்து பிரசவ வார்டில் படுக்க வைத்தோம். பிரசவத் தின்போது தலை வருவதற்குப் பதிலாக குழந் தையின் ஒரு கை வெளியே வந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் கொண்டி ருப்பது தெரிந்தது.
உடனே மருத்துவச் சிகிச்சை அளித்தும் – குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிய வில்லை; அதிக உதிர இழப்பு காரணமாக தாயைக் காப்பாற்ற முடியவில்லை; ஏன் முடி யவில்லை? உடனே மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியவில்லை; ஏன் முடியவில்லை? அவர்கள் இருந்த கிராமத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு சிறப்பு மருத் துவ உதவி இல்லை. அந்தப் பெண் செய்த பாவம் ~ அவள் கிராமத்தில் வாழ்ந்ததுதான்.
இதைப்போல கிராமத்துத் தாய்மார்கள் சரியான சிகிச்சை கிடைக்காமல் இன்றும் மாண்டு போகிறார்கள். தாய்மார்களின் பிர சவ கால உயிரிழப்பை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. அப்படியே பிரசவமானா லும் பச்சிளங்குழந்தைகள் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் இறக்கும் விகிதத்தை நம் மால் கணிசமாகக் குறைக்க முடியவில்லை.
நாட்டின் முன்னேற்றத்துக்கு சுகாதார மேம் பாடும் முக்கியம். நிலைமை வேறாக உள்ளது.
கிராமத்தில் அனைவருக்கும் அடிப்படை மருத்துவ வசதி அத்தனையும் கிடைக்க வேண்டும். கனடா நாட்டிற்கு மேல்படிப்பு பயிற்சிக்காகச் சென்றிருந்தபோது அங்கு நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் அவச ரமாகக் கொண்டு வருவதைக் கண்டு வியந்து போனேன். நம் நாட்டில் அவசர சிகிச்சைப் பிரிவு அடித்தளத்தில் இயங்குவது போல் டொரண்டோ நகரில் 20-வது மாடியின் மேல் தளத்தில் குழந்தைகள் மருத்துவமனை இயங் குவதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
அங்கே கனடா மக்களின் உயிரைக் காக்க உல கத் தரம் வாய்ந்த மருத்துவமனைகளை காப் பீட்டு உதவியுடன் அரசுதான் நடத்து கிறது. பச்சிளங் குழந்தைகளின் உயிர் காக்க ஹெலிகாப்டர்கள் விரைந்து வருகின்றன. இங்கே வெள்ளத்தில் எத் தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என்பதனைப் பார்க்க அமைச்சர் பெரு மக்களையும் அதிகாரிக ளையும் தான் ஹெலிகாப் டர் சுமந்து வருகிறது.
என்ன வித்தியாசம்! தாஜ்மகாலை உலக அதிசயம் என்று கொண்டாடுகிறோம். ஆனால் அது தன் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய காதல் மாளிகை என்றுதான் பலருக்குத் தெரியும்.
ஆனால் அவரது மனைவியார் பிரசவத்தின் போது இறந்ததையடுத்து அந்த தாஜ்மகால் கட்டப்பட்டது என்பது தனி முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் ஒரு மருத்துவராக அந்த தாஜ்மகாலைப் பார்க்கும்போது எனக்கு அதன் கலைநயம் கண்ணுக்குத் தெரி யாது. பிரசவகால மரணங்களைத் தடுக்கும் ஒரு சின்னமாக இருக்க வேண்டும் என்ற எண் ணமேதான் மேலோங்கும். நமது மருத்துவர் கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் அமெரிக்கா வில் மட்டும் இருக்கிறார்கள் என்பது பெரு மையாக இருக்கிறது. அதனால் நம் நாட்டுக் குப் பயனில்லையே.
நம் நாட்டில் ஏறத்தாழ 450 மருத்துவக் கல் லூரிகளில் ஆண்டுக்கு 30,000 மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்றும், இன்னமும் கிரா மப் பகுதிகளில் தேவையான மருத்துவர்கள் இல்லை. 75 சதவிகிதம் இந்தியர்கள் கிராமத் தில் வாழ்ந்தாலும், அங்கே பணிபுரிவது வெறும் 20 சதவிகிதம் மருத்துவர்கள் மட் டுமே. போதாக்குறைக்கு அங்கே போலி மருத் துவர்கள் தொல்லை வேறு.
வெளிநாடு சென்ற மருத்துவர்கள் குண் டுக்கு அஞ்சி திரும்பியிருக்கிறார்களே தவிர, தொண்டு செய்வதற்காகத் திரும்பி வருவதில் லையே? 2020-ல் வல்லரசு நாடுகளில் ஒன் றாக நம் நாடு வளர வேண்டும் என்று நாம் கனவு காணும் வேளை யில், மகப்பேறு காலத்தில் தாய்மார் கள் உயிரிழக்கும் பரிதாபம், பெண் சிசுக்கொலை, பச்சிளம் குழந்தைக ளின் மரண விகிதம் போன்றவை இன்னும் நம் நாட்டில் அதிகமாகக் காணப்படுகின்றன. பிர சவ கால உயிரிழப்பை வளர்ந்த நாடுகள் தடுத் துவிட்ட நிலையில் நம் நாட்டில் அது தொட ரும் அபாயம் உள்ளது.
கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக் கடிக்கும், நாய்க் கடிக் கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால் உயிரிழப்பு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கி றது. இதுபோன்ற அவல நிலையை அடி யோடு நிறுத்த, மத்திய சுகாதாரத்துறையின் கிராமப்புற சேவைத்திட்டம் வரவேற்கத்தக் கதே. ஆனால் இளம் மருத்துவர்களைப் படித்து முடித்த கையோடு கிராமப்புறத்திற்கு அனுப்பி வைப்பதால் மட்டும் கிராமங்களில் மருத்துவத் தேவைகள் பூர்த்தியாகி விடாது.
கிராமப்புற மருத்துவப் பணிக்கான அடிப்ப டைக் கட்டமைப்பைச் சரி செய்ய வேண்டும்.
பணிமுதிர்ச்சி பெற்று ஓய்வு பெற்ற மருத்து வர்களை, கர்நாடக அரசு செய்வது போல் பணியமர்த்தி அவர்களின் மேற்பார்வையில் இளம் மருத்துவர்கள் கிராமங்களில் பணி யாற்றச் செய்யலாம். அவர்களுக்கான ஊதி யம் 8 ஆயிரம் என்பது இந்தக் காலகட்டத்தில் குறைவு என்பதை அரசு உணர்ந்து அதிகப்ப டியான ஊதியத்தை பணி ஊக்கக் கொடை யாக அளிக்க வேண்டும்.
அவர்கள் பணி செய்யும் இடங்களில் தங்கு மிடம், தொலைபேசி வசதி, வாகனவசதி எல் லாம் செய்து தர வேண்டும். மருத்துவக் கல் லூரிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தத்தெ டுத்து – ஆண்டு முழுவதும் மருத்துவ மாண வர்களை பயிற்சி காலத்திலேயே கிராம சேவைக்குப் பழக்க வேண்டும்.
ஒரு பக்கம் டெலிமெடிசின், மெடிக்கல் டூரி ஸம் என்று பெருமை பேசிக் கொள்கிறோம்.
அதேநேரத்தில் கிராமங்களின் மருத்துவ அவ லங்களை மறக்கவோ, மறைக்கவோ கூடாது.
ஏழை மக்களின் வரிப்பணத்தில் இலவச மருத்துவக் கல்வி பெறும் மாணவர்கள் அவர் களுக்கு நன்றிக் கடனாக சிறிது காலம் சேவை செய்ய மறுத்து வெளிநாடு செல்ல நினைப் பது தவறுதான். இதில் போராடத் தேவை இல்லை. மருத்துவ மாணவர்கள் தங்கள் சமு தாயக் கடமையை உணர வேண்டும்.
கிராம சேவைத்திட்டத்தின் ஆழத்தைப் புரிந்துகொண்டு மருத்துவர்கள் இறைவ னுக்கு அடுத்தபடியானவர்கள் என்ற மக்க ளின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி நடந்து கொள்ள வேண்டும். அரசும் அதற் கேற்ற மாதிரித் திட்டங்களை வகுக்க வேண் டும். தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்க ளையும் இதில் கட்டாயமாக ஈடுபடுத்த வேண்டும்.
ஆசிரியர் தொழிலும் மருத்துவத் தொழி லும் புனிதமான பணிகளாக ஆண்டாண்டு காலமாகப் போற்றப்பட்டவை. எனவே மருத் துவர்கள் தங்களுக்குள் ஓர் ஆத்ம பரிசோ தனை செய்து கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் மருத்துவம் ஒரு சேவைத் துறையாக இருந்தது. தற்போது மருத்துவ மனை சார்ந்த தொழிலாகியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் இளம் மருத்துவ மாணவர்களுக்கு சேவைக்கான நல்வழி காட்ட வேண்டியது அனைவரது கடமை.
மருத்துவச் சேவைக்கான அரிய வாய்ப் பைப் பெற்ற மருத்துவ மாணவர்கள் படித்து முடித்தபின் ஓராண்டு கிராம மக்களுக்கு மருத்துவம் செய்வதைப் பெரும் பேறாகக் கருதி இன்முகத்துடன் ஏற்றுச் செல்ல வேண் டும்.
அங்கே ஏழைகளின் சிரிப்பில் இறைவ னைக் காணலாம். அவர்களை கருணையு டன் தொட்டு வைத்தியம் பார்த்தால் நோய் பறந்து விடும். அங்கேதான் நீங்கள் கடவுளாக மதிக்கப்படுவீர்கள்!

கட்டுரையாளர்: நிறுவனர், பெண்சக்தி இயக்கம்.
———————————————————————————————————————————————————————-
நல்லது நடக்கிறது!

சுதந்திர இந்தியாவில் மருத்துவச் சேவையில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம். மருத்துவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளும் சென்னையில் இருக்கும் அளவுக்கு மற்ற பெருநகரங்களில் இல்லை என்றுதான் கூற வேண்டும். அதனால்தானோ என்னவோ, இந்தியா வின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், ஏன் உலகின் பல பாகங்களிலி ருந்தும் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் நோயாளிக ளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது.
தனியார் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும் தமிழக மருத்துவத்துறை, சாமானிய மக்களுக்குப் பயன்படும் அரசுத்துறை யில் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி யாருமே சிந்திப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் சொல்லப்போனால், அரசு மருத்துவம னைகளின் செயல்பாடு தனியார் துறைக்கு எள்ளளவும் குறையாத அளவுக்குத் தரத்திலும், சேவையிலும் இருக்கிறது என்று சொன்னால் பலரும் நம்ப மாட்டார்கள். காரணம், அரசு மருத்துவமனைகளின் வெளிப்புறத் தோற்றமும், அன்றாடப் பராமரிப்பும்தான்! 29 மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகள்; 156 தாலுகா அரசு மருத்துவமனைகள்; 1418 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; இவையெல்லாம் போதாதென்று 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகள். இத்தனை மருத்துவமனைகள் இருந்தும் மருத்துவச் சேவை அனைத்துத் தரப்பு மக்களையும் போய்ச் சேரவில்லை என் றால் அதற்கு முக்கியமான காரணம், மக்கள்தொகைப் பெருக்கம் தான்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதியுள்ளவர் கள் கூடுமானவரை அரசு மருத்துவமனைகளை நாடுவதில்லை.
இதற்குக் காரணம் அவர்களது வறட்டு கௌரவம் அல்லது அரசு மருத் துவமனைகளில் சரியான சிகிச்சை கிடைக்காது என்கிற தவறான கண்ணோட்டம் போன்றவை. முடிந்தவரை அரசை நம்பாமல் தனி யார் மருத்துவமனைகளை நோயாளிகள் நாடும்போது, உண்மையி லேயே வசதியற்றவர்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு அரசு மருத் துவமனைகளுக்குக் கிடைக்கிறது என்பதால் அதுவும் ஒருவகையில் நல்லதுதான்.
இப்போதும்கூட, பெருவாரியான நோயாளிகள் மருத்துவச் சிகிச் சைக்கு அரசு மருத்துவமனைகளைத்தான் நம்பி இருக்கின்றனர் என்ப துதான் உண்மை நிலை. விபத்து சம்பந்தப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு மட்டுமே எடுத்துச் செல்லப்பட வேண்டும் என் கிற தவறான கண்ணோட்டம் இப்போதும் இருப்பதால், அவசர சிகிச் சைப் பிரிவுகள் எந்தவொரு நேரத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருக் கும் நிலைமை தொடர்கிறது.

தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு சுமார் 11.5 லட்சம் பிரசவங்கள் நடைபெறுவதாகவும் இவற்றில் 6.5 லட்சம் பிரசவங்கள் அரசு மருத் துவமனைகளில்தான் நடைபெறுகின்றன என்கிற புள்ளிவிவரத்தை சமீபத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், கிராமப்புற மருத்துவ வசதிக்காகத் தமிழக அரசு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகவும் அறிவித்தி ருக்கிறார்.

இப்போதும், சுமார் அறுபது விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் தனியார் மருத்துவமனைக ளில் பெரும் பணம் செலவழித்து சிகிச்சை பெற முடியாத நிலைமை தான். மருத்துவச் செலவுக்குக் கடன் வாங்கி அதனால் வறுமையில் வாடும் கிராமப்புறக் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மருத்துவச் சேவையை ஏழை எளியோரும் பயன்பெறும் வகையில் மாற்ற வேண்டும் என்கிற அரசின் நல்லெண்ணம் கட்டாயமாக வர வேற்கப்பட வேண்டிய விஷயம். இந்த விஷயத்தில், அரசு மருத்துவ மனைகளைத் துப்புரவு செய்தல், அடிப்படை வசதிகளை அதிகரித் தல் போன்றவைகளுக்குத் தன்னார்வ நிறுவனங்களையும், சமூக சேவை நிறுவனங்களையும் ஈடுபடுத்தினால் என்ன? அரசு ஏன்முயற் சிக்கக் கூடாது?

———————————————————————————————————————————————————————-

புதுப்பிக்கப்பட்ட நாள்: 19 நவம்பர், 2007

தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் மீண்டும் தொடங்கியது

மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டுமென்று இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தவிருக்கும் விதிக்கு எதிராக தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களின் போராட்டத்தினை மீண்டும் தொடங்கியுள்ளார்கள்.

இது தொடர்பில் மருத்துவ மாணவர்கள் திங்கட்கிழமை முதல் வெவ்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள். அரசின் இந்தத் திட்டமானது உண்மையான கிராப்புற சேவையல்ல என்பது மாணவர்களின் வாதமாகவுள்ளது.

இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் பல இடங்கள் காலியாகவுள்ள நிலையில் மருத்துவப் படிப்பை ஆறு ஆண்டுகளாக அதிகரித்தால் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருவது குறைந்துவிடும் எனவும் மாணவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இந்தியாவில்தான் உலக அளவில் குழந்தைகள் இறப்பு அதிமாக இருக்கிறது என்றும் 73 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்ற காரணத்தினாலும், கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு எண்ணுகிறதாலும்தான் இவ்வாறான ஒரு திட்டத்தை அரசு முன்னெடுத்துவருகிறது என்று இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணிசெய்யவேண்டும் என்பது இருந்தது என்றும், காலகட்டத்தில் அது இல்லாமல் போனது என்றும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் கூட இன்னமும் ஐந்து அல்லது பத்தாண்டுகள்தான் இருக்கும் எனவும் அமைச்சர் அன்புமணி கூறுகிறார்.

இந்த சர்ச்சை குறித்து சுகாதார அமைச்சர், மருத்துவ மாணவர்கள் மற்றும் பலரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களை நியமிக்க கோரி பா.ம.க., போராட்டம்: ராமதாஸ்துõத்துக்குடி: “தமிழகத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் போதுமான டாக்டர்களை நியமிக்கக்கோரி பா.ம.க., போராட்டம் நடத்தவுள்ளதாக’ அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

துõத்துக்குடியில் அவர் கூறியதாவது: முதல்வர் கருணாநிதியை சந்தித்த மருத்துவ மாணவர்கள், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இன்று வரை நுõதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நானும் ஒரு டாக்டர் தான். டாக்டர்கள் நலனுக்கெதிராக செயல்பட மாட்டேன்.

“கடந்த ஆட்சியில் மாதம் எட்டாயிரம் ரூபாயில் தொகுப்பூதியத்திற்கு அரசு டாக்டர்களை நியமித்த’ ஜெயலலிதா, தற்போது கிராமப்புற சேவையை எதிர்த்து போராடுவது கண்டனத்திற்குரியது. மருத்துவ மாணவர்களின் ஓராண்டு கட்டாய கிராமப்புற சேவை, வெறும் பேச்சளவில் தான் உள்ளது. அரசாணையோ, பார்லியில் சட்ட முன்வரைவோ, மசோதாவோ தாக்கல் செய்யப்படவில்லை. பிரச்னை விவாதப்பொருளாகத்தான் உள்ளது.

கட்டாய கிராமப்புற சேவை குறித்து மருத்துவ மாணவர்களிடம் மூன்று மணி நேரம் பேசிய மத்திய அமைச்சர் அன்புமணி, மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் குழு அமைத்தார். எந்த மாநிலத்திலும் இல்லாத போராட்டம் தமிழகத்தில் நடக்கிறது. மத்திய அமைச்சர் அன்புமணி டில்லியில் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களும், கிராமப்புற சேவை திட்டத்தை வரவேற்று உடனடியாக கொண்டு வரவேண்டும் என்றனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் அதில் கலந்து கொண்டார். கையெழுத்து வேண்டுமானால் அமைச்சர் போடாமல் இருந்திருக்கலாம். தமிழக அமைச்சர் அப்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது ஏன்?

கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவ மாணவர்களுக்கு கிராமப்புற சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், அவர்கள் அபராதத்தை செலுத்த வேண்டும். நமது நாட்டு மருத்துவமனைகளில் அமெரிக்க தர சிகிச்சை தருவதற்குத்தான், மத்திய அரசு கட்டாய கிராமப்புற சேவை திட்டத்தை கொண்டு வருவதாக கூறியுள்ளது.

இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை துõண்டிவிட்டு அதை அரசியலாக்குகின்றனர். தமிழகத்திலுள்ள ஆயிரத்து 417 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயிரம் டாக்டர்களின் பணியிடம் காலியாக உள்ளது. நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அங்கு சென்று டாக்டர்கள் பணியாற்றலாம்.

அரசு மருத்துவக் கல்லுõரியில் படிக்கும் ஒரு மாணவருக்கு டாக்டராவதற்கு மக்கள் வரிப்பணம் ரூ.13 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை செலவிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்து 645 டாக்டர்கள் படிப்பு முடிந்து வெளியே வருகிறார்கள்.

கிராமப்புற கட்டாய சேவை குறித்து மருத்துவ மாணவர்களுடன் பேச நானும், மத்திய அமைச்சர் அன்புமணியும் தயாராகவுள்ளோம். அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள டாக்டர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரியும், அங்கு மருந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்த பா.ம.க., முடிவு செய்துள்ளது. அதுகுறித்து வரும் 3ம் தேதி நடைபெறும் கட்சி செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
————————————————————————————————————–

“அன்புமணிக்கு அருகதை இல்லை’: தா. பாண்டியன்

சென்னை, டிச. 14: எங்களைப் பற்றி பேச மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கு அருகதை இல்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:

மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்பவர்களை, கிராம மக்களின் எதிரிகள் என்று அன்புமணி வர்ணித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸýம் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டை அனைத்துக் கட்சிகள் மீதும் கூறிவருகிறார். இதை இந்திய கம்யூனிஸ்ட் நிராகரிக்கிறது.

சிகிச்சை அளிப்பதால் மட்டுமே கிராம மக்களுக்கு சேவை கிடைத்துவிடும் என்று கூற முடியாது. கிராம மக்கள் சேவை என்றால், அவர்களுக்கு வேலை தரவேண்டும், தகுந்த ஊதியம், உற்பத்தி செய்கின்ற பொருள்களுக்கு நியாயமான விலை, கிராமங்களை இணைக்க தரமான சாலைகள், குடிநீர் வசதி மேலும் அங்குள்ள பள்ளிகளுக்கு சரிவர ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். இதில் கடைசியில் வருவதுதான் மருத்துவ சிகிச்சை.

கேபினட் அமைச்சர் என்ற வகையில் அன்புமணி அங்கம் வகிக்கும் மத்திய சுகாதாரத் துறை, ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆகிய உயர் கல்வித் துறைகளில் இதுவரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடம் ஒதுக்கவில்லை.

கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவராவது இந்தக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ளனரா? அல்லது ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளனரா? என்ற விவரத்தை அன்புமணி வெளியிடவேண்டும்.

அதன் பின்னரே கிராம மக்கள் மீது அவர் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வரும்.

மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கைமீது இதுவரை நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்படவில்லை.

உண்மையில் கிராமப்புற சேவை செய்யவேண்டும் என்றால், மத்திய அமைச்சரவை செய்யத் தவறி இருப்பதை அன்புமணி கண்டித்திருக்கவேண்டும். இதைச் செய்யத் தவறிய அவருக்கு, குறைகளைச் சுட்டிக் காட்டும் எங்களைக் குறித்துப் பேச அருகதை இல்லை.

எம்.ஆர்.எஃப். தொழிலாளர் பிரச்னையை சுமூகமாக தீர்த்துவைத்து, கதவடைப்பை நீக்க நிர்வாகம் முன்வரவில்லை என்றால் அனைத்து தொழிற் சங்கங்களும் இணைந்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏரி மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு லட்சம் குடியிருப்புகளை இடிக்கப்போவதாக அறிவித்திருக்கும் பொதுப்பணித் துறையின் எச்சரிக்கையை நிறுத்திவைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் கோவையில் விமான நிலைய விரிவாக்கத்துக்காக, மக்கள் குடியிருக்கும் பகுதிகளை இடிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதை தவிர்க்க மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்துவதாக கருணாநிதி தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னையைப் போக்க, அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்து மின் தட்டுப்பாடு இல்லாமல் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் தா. பாண்டியன்.
————————————————————————————————————–

Posted in +2, AIIMS, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Biz, Business, Childbirth, Children, City, Clinic, College, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Compulsory, Consumer, Cost, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Critic, Customer, Doctor, Economy, Education, Empty, Engg, Engineer, Engineering, Extortion, facilities, Females, Force, Foreign, Free, GH, GI, Govt, Graduate, Graduation, Health, Healthcare, Higher, Hospitals, HSS, Info, infrastructure, Justice, Law, MBBS, MD, medical, Medicine, Metro, MMC, Money, Moore, Munnabai, Munnabhai, Needy, ObGyn, Op-Ed, Operation, Opportunity, Permanent, PlusTwo, Poor, Postgraduate, Postgraduation, Practice, Pregnancy, Private, Ramachandra, Ramadas, Ramadoss, Rich, Rich vs Poor, Royapettah, Rural, School, seats, service, Sicko, Specialization, Stanley, State, Statistics, Stats, Study, Suburban, surgery, University, Urban, voluntary, Volunteer, Wealthy, WHO, Women | 14 Comments »

Education: Master of Arts in Dance (Interview & Introduction)

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

கல்வி: எம்.ஏ.நாட்டியா!

அஞ்சலி

தமிழகத்தில் நாட்டியக் கலைக்குப் பட்ட மேற்படிப்பு பயிற்றுவிக்கும் ஒரே கல்லூரி என்ற சிறப்பு அடையாறு ஜானகி- எம்.ஜி.ஆர். கலை அறிவியல் கல்லூரிக்கு மட்டுமே உண்டு. எம்.ஏ. நாட்டியா என்ற அந்த ஐந்தாண்டு படிப்பின் துறைத்தலைவராக இருப்பவர் ராஜஸ்ரீ வாசுதேவன். அவரைச் சந்தித்தோம்.

“”இந்த நாட்டியப் படிப்பில் நடனம், இசை, நாடகம் மற்றும் யோகா முக்கியப் பாடங்களாகப் போதிக்கப்படுகின்றன. வரலாறு, தத்துவம், இலக்கியம் ஆகியவை துணைப்பாடங்களாக உள்ளன. உதாரணத்துக்கு சிலப்பதிகாரத்தில் நாட்டியம், இசை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ள பகுதிகளை இலக்கியப் பாடங்களாக வைத்திருக்கிறோம். அதே போல தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் கற்பிக்கிறோம். அதில் மெய்ப்பாடு பகுதி நவரசங்களையும் சொல்வதாக இருக்கிறது. வரலாறை எடுத்துக் கொண்டால் சோழ, சேர, பாண்டிய, பல்லவ, விஜயநகர கலைநுட்பங்களைச் சொல்லித் தருகிறோம். தத்துவப் பிரிவில் சைவ சித்தாந்தம், வேதகாலம் ஆகியவற்றில் மிளிரும் கலாபூர்வமான தத்துவக் கோட்பாடுகளைக் கற்பிக்கிறோம். நாட்டிய நாடகங்கள் குறித்த வகுப்புகளும் இருப்பதால் சிறந்த நடிகர்களின் வீடியோ கிளிப்பிங்க்ஸ் காட்சியின் மூலமாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அனிதாரத்னம் போன்றோர் அவர்கள் நடத்தும் நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு அழைப்பார்கள். அது எங்கள் மாணவிகளுக்குச் சிறந்த நேரடி பயிற்சி அனுபவம். இம் மாதிரி நாட்டிய நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவரும் மாணவர்கள் நிகழ்ச்சியைப் பற்றிய விமர்சனம் எழுதித் தரவேண்டும். அது மாணவர்களின் இன்டர்னல் மதிப்பெண் பட்டியலில் சேர்க்கப்படும்.

நாட்டுப்புறக் கலைகளுக்கும் இதில் முக்கியத்துவம் தரப்படுகிறது. தப்பாட்டம் போன்ற கலைகளும் பயிற்றுவிக்கிறோம்.

எம்.ஏ. படிப்பில் நிகழ்ச்சியை நடத்த தேவையான அரங்க ஏற்பாடுகள், லைட்ஸ், ஆடியோ பற்றியும் பாடங்கள் உள்ளன. இப்போதே எங்கள் கல்லூரி மாணவிகளுக்கு டி.வி., ரேடியோ நிகழ்ச்சிகளில் பங்கு பெற அழைப்புகள் வருவது எங்களுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம். இக் கலைத்துறைப் படிப்புக்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. வெளிநாட்டில் பல கல்லூரிகள் எங்கள் மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கவும் தயாராக இருக்கின்றன” என்கிறார் ராஜஸ்ரீ.

இப் படிப்புக்குச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஒப்புதல் வாங்கி நடைமுறைப்படுத்தியவர் லதா ராஜேந்திரன். எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளியின் முதல்வராகவும் இக் கல்லூரியின் தாளாளராகவும் செயல்பட்டுவரும் அவரிடம் மேலும் விவரங்களுக்காக அணுகினோம்.

* நாட்டியத்துக்காக இப்படி ஒரு பட்ட மேற்படிப்பை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?

நான் பத்மாசுப்ரமணியத்தின் நாட்டிய மாணவி. கலாஷேத்ராவில் டிப்ளமோ பயிற்சி நடப்பதுபோல் பட்டப்படிப்பை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். இதை ஐந்தாண்டு இன்டகரேட்டட் பட்ட மேற்படிப்பாக நடத்துவதற்கான முன்வடிவை பத்மாசுப்ரமணியம் உள்ளிட்ட நாட்டியக் கலைஞர்களிடம் விவாதித்தோம். சென்னை பல்கலைக் கழகத்தின் இசைத்துறை தலைவர் ப்ரமிளா குருமூர்த்தியின் ஆலோசனையின் பேரில் சிலபûஸ செழுமைப்படுத்தினோம். இப்படியாக இந்த நாட்டியப் படிப்பு முழுவடிவம் பெற்றது.

* சிலபஸ் தயாரானவிதம் எப்படி?

சென்னை பல்கலைக் கழகத்தின் போர்ட் ஆஃப் ஸ்டடீஸ் மூலம் நாட்டியத் துறையைச் சேர்ந்தவர்கள், நாடகம் வரலாறு, தத்துவவியல், தமிழ்த்துறை, சமஸ்கிருதத்துறை அறிஞர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றனர். ஐந்தாண்டு படிப்பாக இருந்தாலும் மூன்றாண்டு படிப்புக்குப் பிறகு பி.ஏ. இளங்கலையோடும் நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் வேறு துறையில் பி.ஏ. முடித்தவர்கள் நாட்டியாவில் முதுநிலை (எம்.ஏ.) தொடர முடியாது.

* எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளியில் படிப்பவர்களுக்கு ஜானகி- எம்.ஜி.ஆர். கல்லூரியில் வாய்ப்பளிக்கிறீர்களா?

கண்டிப்பாக. எங்கள் பள்ளி மட்டுமன்றி மற்ற வாய் பேச

முடியாத, காது கேளாத மாணவர்களுக்கும் வாய்ப்பு தருகிறோம். நாட்டியப் படிப்பில் அவர்கள் பயில்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. மற்ற துறைகளில் பயில்கிறார்கள். சென்ற ஆண்டில் மட்டும் இது போன்றவர்கள் 15 பேர் கல்லூரியில் சேர்ந்தனர்.

* உங்களுக்கும் மறைந்த எம்.ஜி.ஆருக்கும் என்ன உறவு?

என் கணவர் ராஜேந்திரன், ஜானகி அம்மாளின் தம்பி.

Posted in Analysis, Anita, Anita rathnam, Anita ratnam, Anitha, Anitha rathnam, Anitha ratnam, Arts, Bachelors, Backgrounder, Culture, Dance, Degree, Education, Graduate, Heritage, Interview, Introduction, M&A, MGR, Padma Subramaniam, Padmasubramaniam, School, Student, Study, Syllabus | Leave a Comment »

Balu Mahendra to start new Film Institute in Chennai for aspiring Tamil Cinema entrants

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

பாலுமகேந்திராவின் புதிய திரைப்படக் கல்லூரி: செப்டம்பர் முதல் சென்னையில் தொடக்கம்

சென்னை, பிப். 24: பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா சென்னையில் புதிய திரைப்படக் கல்லூரியைத் தொடங்குகிறார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பாலுமகேந்திரா கூறியதாவது:

சினிமா மீது எனக்கு ஏற்பட்ட வெறி காரணமாக நான் தேடித் தேடிச் சேகரித்த அறிவு, பணியாற்றத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை எனக்குக் கிடைத்த அனுபவம் போன்றவற்றை இளைய தலைமுறையினருக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தத் திரைப்படக் கல்லூரியைத் துவக்குகிறேன்.

பண லாபம் கருதி இக்கல்லூரியைத் துவக்கவில்லை. தற்போது என்னிடம் போதிய பண வசதி கிடையாது. ஆனாலும் தைரியத்தோடு களமிறங்கியிருக்கிறேன்.

என் நண்பர்களும், உறவினர்களும், சினிமாவை நேசிக்கும் நல்ல உள்ளங்களும், என்னோடு பணியாற்றியவர்களும் எனக்குக் கைகொடுப்பார்கள் என்ற திடமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இக்கல்லூரி வரும் செப். 7-ம் தேதி முதல் சாலிகிராமத்தில் செயல்படும். இதில் பட்டயப் படிப்பு (டிப்ளமோ கோர்ஸ்) 12 மாதங்கள் கொண்டதாக இருக்கும். முதல் கட்டமாக ஒளிப்பதிவு, இயக்கம், நடிப்பு ஆகிய துறைகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

படத்தொகுப்பு மற்றும் ஒலிப்பதிவு ஆகிய துறைகளுக்கு அடுத்த ஆண்டில் இருந்து பயிற்சியளிக்கப்படும்.

இயக்கம், ஒளிப்பதிவு ஆகிய துறைகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பட்டதாரிகளாக இருக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் உள்ள 12 இடங்களில் 4 இடங்கள் வெளிநாட்டுத் தமிழ் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். இக்கல்லூரியில் சிறுகதை, கவிதை, புதினம் ஆகியவற்றை உள்ளடக்கிய தற்கால இலக்கியமும் ஒரு பாடத்திட்டமாக இருக்கும்.

அனைத்துத் துறைகளிலும் அத்தியாவசிய தொழில்நுடப்க் கோட்பாடுகள், அதிக எண்ணிக்கையிலான செய்முறைப் பயிற்சிகள் இடம்பெறும். ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவற்றை மாணவர்களுக்கு நானே நேரடியாகக் கற்றுக்கொடுக்கிறேன்.

தேசிய நாடகக் கல்லூரியைச் சேர்ந்த மூத்த கலைஞர் கோபாலி நடிப்புத்துறையின் முக்கிய ஆசிரியராக இருப்பார். கே. பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், மகேந்திரன், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் சிறப்பு ஆசிரியர்களாக வருகை தந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்துவர் என்றார் பாலுமகேந்திரா.

1966 முதல் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படத்துறையில் இருக்கும் பாலுமகேந்திரா 5 தேசிய விருதுகள், 8 மாநில விருதுகள் உள்பட பல விருதுகளை வென்றவர்.

இந்திய மற்றும் சர்வதேச அளவில் திரைப்படத்துறையின் முக்கியமான பல அமைப்புகளுக்கு தலைவராகவும், ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

Posted in Admissions, Balu mahendra, Camera, Chennai, Cinema College, College, Courses, Degree, Degrees, dialogues, Diploma, Direction, Director, Editing, Gopali, Graduate, Institute, Madras, Photography, Post graduate, Screenplay, Story writing, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Technicians, Technology, Thamizh Movies, Thamizh padam, TV, University | Leave a Comment »