உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்: தேர்தல் ஆணையர்
பழனி, பிப். 3: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது 25 சதவீத இடங்களில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வாசுகி, எஸ்.பி. பாரி, டி.ஆர்.ஓ. பெர்னாண்டஸ், ஆர்.டி.ஓ. கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் கூறியது: தமிழகத்தில் காலியாகவுள்ள 533 பதவிகளுக்கு வரும் 8-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத் தேர்தலின் போது முதன் முறையாக சோதனை அடிப்படையில் 25 சதவீத இடங்களில் மிண்ணணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் வாக்குச் சீட்டுகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
கிராம ஊராட்சி வாரியாக வாக்காளர் கணக்கெடுப்பு விரைவில் நடைபெறும். தேர்தல் செலவு கணக்குகளை சமர்பிக்காத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கள்ள வாக்குகளை காட்டிக்கொடுக்கும் ஏற்பாட்டுடன் உ.பி.யில் வாக்குப்பதிவு!: தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்
லக்னெü, மார்ச் 2: கள்ள வாக்குகளைப் போடவிடாமல் தடுக்கும் ஏற்பாட்டுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படும் என்று அறிவித்தார் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி.
மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய லக்னெüவுக்கு வியாழக்கிழமை வந்த கோபாலசாமி நிருபர்களிடம் தெரிவித்ததாவது:
“மாநிலத்தில் வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் பணி சராசரியாக 70% முதல் 71% வரைதான் நிறைவேறியிருக்கிறது. இது 90% முதல் 95% வரை நடைபெறாமல் தேர்தல் நடைபெறாது. எனவே வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் என்ன செய்வது என்பது, அப்படி வழங்க முடியாத நிலை ஏற்பட்டால் -அதன் பிறகு தெரிவிக்கப்படும்.
வாக்குப் பதிவு இயந்திரத்தில் புதிய அம்சங்கள்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைத்தான் இம் மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் முதல்முறையாக பயன்படுத்தப் போகிறோம். அவற்றில் 2 புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 1. கண்பார்வை அற்றவர்களும் தொட்டு உணரும் வகையிலான எண்கள் அதில் பொறிக்கப்பட்டிருக்கும். 2. ஒவ்வொரு வாக்கு பதிவானதும் அந்த வாக்கு அளிக்கப்பட்ட நேரமும் சேர்ந்தே பதிவாகும். இதனால் வாக்குப்பதிவு எப்போது தொடங்கியது, எப்போது முடிந்தது என்பது தெரிந்துவிடும். வாக்குப் பதிவு முடிந்து சீல் வைத்த பிறகு அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை யாரும் முறைகேடாகப் பயன்படுத்த முடியாது. இப்படி சில ரகசிய ஏற்பாடுகள் அதில் உள்ளன. எனவே முறைகேடுகள் தவிர்க்கப்படும். அப்படி நடந்தால் இயந்திரமே சொல்லிவிடும் (மெஷின் போலேகா!).
வாக்குச் சாவடியில் மத்திய போலீஸ்: ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் மத்திய போலீஸ் படைதான் காவல் பணியில் ஈடுபடுத்தப்படும். எனவே தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறும்’ என்றார் கோபாலசாமி.