சய்யீத் பின்வாங்கினால்…
காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் தலைமையிலான அரசு கவிழும் ஆபத்து அகன்றுவிட்டதாகக் கூறலாம். ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சி அமைச்சர்கள் இனி அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கு கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் சட்டமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸýம் முப்தி முகம்மது சய்யீத் தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சியும் கூட்டணி அரசு அமைத்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு உள்ள நிலையில் முப்தி முகம்மது சய்யீத் மத்திய அரசைக் குறி வைத்து ஏற்க முடியாத சில கோரிக்கைகளை எழுப்பி நெருக்குதலை ஏற்படுத்த முற்பட்டார். காஷ்மீரில் உள்ள துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். அங்கு ராணுவத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரங்களை அகற்ற வேண்டும் என்பன அவற்றில் முக்கியமானவை.
காஷ்மீரில் எல்லைக்கு அப்பாலிருந்து எப்போதும் ஆக்கிரமிப்பு ஆபத்து உள்ளது. தவிர கடந்த பல ஆண்டுகளாகப் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். பயங்கரவாதிகள் எந்த நேரத்தில், எங்கு தாக்குவர் என்பது தெரியாத நிலையில் மக்களின் பாதுகாப்புக்காக ஆங்காங்கு துருப்புகளை நிறுத்தி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. முன்னர் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகம்மது சய்யீதுக்கு இதெல்லாம் தெரியும். தவிர துருப்புகளை எவ்விதம் ஈடுபடுத்துவது என்பது ராணுவத் தலைமை முடிவு செய்கிற விஷயம் என்பதையும் சய்யீத் அறிவார். ஆனாலும் சய்யீத் இதை அரசியலாக்க முற்பட்டார். இந்த விஷயத்தில் அவரது பிரசாரம் கிட்டத்தட்ட “படைகள் வெளியேற வேண்டும்’ என்று கூறுகிற தொணியில் இருந்தது. தங்களது கொள்கைத் திட்டத்தை சய்யீத் அபகரித்துக் கொண்டுவிட்டார் என்று ஹுரியத் மாநாட்டுக் கட்சி கூறுகிற அளவுக்கு சய்யீதின் பிரசாரம் அமைந்திருந்தது. அவரது இப் பிரசாரத்தின் பின்னணியில்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் கடந்த ஒருமாதமாக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கினர்.
சய்யீதின் பிரசாரத்துக்கு அரசியல் நோக்கம் உண்டு. 2002-ல் நடந்த தேர்தலைத் தொடர்ந்து சய்யீத் முதல் மூன்று ஆண்டுகள் காஷ்மீர் முதல்வராக இருந்தார். அடுத்த மூன்று ஆண்டுகள் காங்கிரûஸ சேர்ந்தவர் முதல்வராக இருக்க வேண்டும் என்பது உடன்பாடு. இதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குலாம் நபி ஆசாத் முதல்வரானார். அப்போதே சய்யீத் மீதி மூன்று ஆண்டுகளும் தாமே முதல்வராக நீடிக்க விரும்பி பல வாதங்களை முன்வைத்தார். ஆனால் அவை ஏற்கப்படவில்லை. ஆசாத்தின் ஆட்சியில் காங்கிரஸýக்கு நல்ல பெயர் ஏற்பட்டுவிட்டால் தமது கட்சி பின்னுக்குத் தள்ளப்படலாம் என்பது சய்யீதின் அச்சமாகும். தங்கள் கட்சிதான் காஷ்மீர் மக்களின் நலன்களைப் பற்றி அதிக அக்கறை காட்டுகிறது என்று பிரசாரப்படுத்தும் நோக்கில்தான் அவர் படைக் குறைப்பு விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்.
கடந்த பல வாரங்களாக சய்யீத் எவ்வளவோ நிர்பந்தித்தும் படைக் குறைப்பு விவகாரத்தில் மத்திய அரசு உறுதியாக நின்றது. கடைசியில் ஒரு கமிட்டியை நிர்ணயித்து அக் கமிட்டியிடம் இந்த விவகாரத்தை விடுவது என்று சமரச உடன்பாடு உருவாக்கப்பட்டது. இக் கமிட்டியில் தங்களது கட்சிப் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்று சய்யீத் வற்புறுத்தினார். இது முற்றிலும் நிபுணர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்று மத்திய அரசு எடுத்துக் கூறியபோது சய்யீத் மேலும் இறங்கி வந்து வேறு வழியின்றி இதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
சய்யீத் இப்போதைக்கு திருப்தி அடைந்துவிட்டதுபோல காட்டிக் கொள்ளலாம். எப்போதுமே ஆளும் கூட்டணியில் அடங்கிய கட்சிகள் தங்களது தனித்தன்மையைக் காட்டிக்கொள்ள தேர்தல் சமயத்தில் விலகிக் கொள்வது உண்டு. கூட்டணி அரசிலிருந்து விலகிக் கொள்வதை சய்யீத் இப்போதைக்கு ஒத்தி வைத்துள்ளதாகவே கூறலாம்.