“நேஷனல் ஜியாகிரஃபி சேனலில்’ அறிவுஜீவி இளம் இந்தியர்கள் நிகழ்ச்சி
மும்பை, நவ. 18: அறிவுஜீவிகளாகத் திகழும் நான்கு இளம் இந்தியர்களின் திறமையை விவரிக்கும் சிறப்பு நிகழ்ச்சி “நேஷனல் ஜியாகிரஃபி சேனலில்’ ஒளிபரப்பாக உள்ளது.
மனித மனத்தின் தன்மை மற்றும் எதன்மூலம் மனிதர்கள் அறிவாளிகளாகத் திகழ்கிறார்கள் என்பதை விவரிக்கும் “என்னுடைய அபார மூளை’ என்ற தொடராக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
10 தொடர்கள் கொண்ட இந்நிகழ்ச்சி டிசம்பர் 10 முதல் டிசம்பர் 21 வரை ஒளிபரப்பாகவிருக்கிறது, தேசியவிருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நடிகை கொங்கணா சென் சர்மா இந்நிகழ்ச்சியை தொகுத்தளிப்பார்.
நம்மில் பலர் அறிவுஜீவிகளாக உள்ளனர். அத்தகைய திறமை உடையவர்களைப் பற்றிய தகவலை அனைவருக்கும் அறியவைப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்று “நேஷனல் ஜியாகிரஃபி சேனல்’ நிர்வாக இயக்குநர் நிகில் மிர்சந்தானி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்த இதர விவரம்:
இளம்வயதிலேயே அபார திறமையுடன் விளங்கும் ஹைதராபாதை சேர்ந்த சித்தார்த் நாகராஜன் மற்றும் நிசால் நாராயணம், பெங்களூரை சேர்ந்த ததாகத் அவதார் துளசி, மும்பையை சேர்ந்த ராகவ் சச்சார் ஆகிய நான்கு இளைஞர்களைப் பற்றிய சிறப்பு அம்சங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளன.
இவர்களில் சித்தார்த் நாகராஜனின் தற்போதைய வயது 10. குழந்தைப் பருவத்திலேயே, அதாவது தனது மூன்று வயதிலேயே டிரம் இசைநிகழ்ச்சியை தனியாக நடத்திய சிறப்பு அம்சம் பெற்றவர் இவர்.
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து 12 வயதாகும் நிசால் நாராயணம் கணிதத்தில் அபார திறமை பெற்றவர். கணித கோட்பாடுகள் பற்றிய இவரது ஆறு புத்தகங்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன.
சிறுவயதிலேயே தனது தந்தையின் நிதிநிலை அறிக்கையில் தவறுகள் இருந்ததைக் கண்டறிந்த மேதை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மிக இளம் வயதில் கின்னஸ் புத்தகத்தில் சாதனையாளராக இடம்பெற்ற இந்தியர் என்பது அவரது மற்றொரு சிறப்பு.
அடுத்த அறிவுஜீவி ததாகத் அவதார் துளசி, தனது 9 வயதிலேயே பள்ளிப்படிப்பை முடித்தவர். பட்டப்படிப்பு பட்டத்தை மறு ஆண்டிலேயே பெற்றார். 12-வது வயதில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிஎச்டி பட்டம் பெற்றவர்களில் மிகவும் இளையவர் என்ற பெருமை பெற்றார். தற்போது இவரது வயது 20.
ராகவ் சச்சார் தனது 4 வயதிலேயே இசைக்கருவிகளை லாவகமாக வாசித்து புகழ்பெறத் தொடங்கினார். ஆண்டுதோறும் ஒரு இசைக்கருவி என்ற அடிப்படையில் இதுவரை 24 இசைக்கருவிகளில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய இசை நிகழ்ச்சிகளில் குறைந்தபட்சம் 10 இசைக் கருவிகளை வாசிப்பார். இதில் புல்லாங்குழல், ஹார்மோனியம், மூன்று வகையான சாக்சபோன்கள் உள்ளிட்டவையும் அடங்கும். இவரது தற்போதைய வயது 26.
“நேஷனல் ஜியாகிரஃபி சேனலில்’ ஒளிபரப்பாகவிருக்கும் “என்னுடைய அபார மூளை’ நிகழ்ச்சியில் 7 வயது பியானோ இசை மேதை மார்க் யூவை பற்றிய சிறப்பு அம்சங்களும் இடம்பெற உள்ளன.