யானைக்கால் நோய்க்கான கிருமியின் மரபணு ஆய்ந்தறியப்பட்டது
![]() |
![]() |
யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரது கால்கள் |
உலக அளவில் பல நாடுகளில் லட்சக் கணக்கான மக்களை தாக்கும் யானைக்கால் நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த அரிய கண்டுபிடிப்பின் மூலம், யானைக்கால் நோய்க்கான மருந்துகள் அல்லது நோய் தடுப்பு மருந்துகளை உருவாக்க வழிபிறக்கும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
உலக அளவில் இந்த நோயின் காரணமாக, 13 கோடி மக்கள் பீடிக்கப்பட்டுள்ளார்கள். பார்வை இழப்புக்கு அடுத்தபடியாக உலக அளவில் வலது குறைவுக்கான, இரண்டாவது காரணமாக இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் உலகில் 80 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. கொசுக்கடி காரணமாகவே இந்த நோய் பரவுகிறது.
இது தொடர்பான ஆராய்ச்சிகள் லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியிலும், மேலும் மூன்று அமெரிக்க நிறுவனங்களிலும் நடைபெற்றபோதே இந்த நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணுக்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.
இந்த கண்டுபிடிப்பின் மூலம், அந்த மரபணுவில் எவ்வகையான புரதங்கள் உள்ளன என்று தெரியவந்திருப்பதாகவும், அவற்றை மேலும் ஆராய்ச்சி செய்வதன் மூலம், இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கவும், தடுப்பு முறைகளை முன்னெடுக்கவும் பெரும் வாய்ப்பு ஏற்படும் என இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் டேவிட் குய்லியானோ கூறியுள்ளார்.
இந்த முடிவுகள் மேலும் பல நாடுகளில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் பலருக்கு தங்களது ஆய்வுகளை வேகமாக முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.