ரூ.240 கோடி மின்கட்டணம் செலுத்தும் நகரம்: மின்தடையால் அவதியுறும் திருப்பூர் பனியன் நிறுவனங்கள்
திருப்பூர்,பிப். 14: ஆண்டுக்கு சுமார் ரூ.240 கோடி மின் கட்டணம் செலுத்தும் பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரில், நாள்தோறும் ஏற்படும் மின்தடையால் பனியன் தொழில் நிறுவனங்களில் பெருமளவில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
திருப்பூர் நகருக்கு ஈரோடு அருகே உள்ள ஈங்கூர் துணை மின் நிலையம், கோவை அருகே உள்ள அரசூர் துணை மின் நிலையம் ஆகிய 2 இடங்களிலிருந்து மின்சாரம் பெறப்பட்டு, நகரில் உள்ள 10 துணை மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
திருப்பூர் பகுதியில்,
- வீட்டு இணைப்புகள் 99 ஆயிரத்து 450,
- தொழிற்சாலை மின் இணைப்புகள் சுமார் 22 ஆயிரத்து 250,
- மேலும் தெருவிளக்குகள் என மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 157 மின் இணைப்புகள் உள்ளன.
- ஒட்டு மொத்தமாக திருப்பூர் பகுதியிலிருந்து மாதம் தோறும் சுமார் ரூ.20 கோடி மின் கட்டணம் வசூலாகிறது.
- ஆண்டுக்கு சுமார் ரூ.240 கோடி திருப்பூர் பகுதியில் மின் கட்டணம் செலுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் அதிக அளவில் மின் கட்டணம் செலுத்தும் நகரம் திருப்பூர்.
உற்பத்தி அடிப்படையில் கூலி பெறும் பனியன் தொழிலாளர்களுக்கு மின்வெட்டு காரணமாக கூலியில் வெட்டு விழுகின்றது.
பாதிப்பு குறித்து “”டிப்” சங்கத் தலைவர் அகில்மணி கூறியது:
உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பின்னலாடை இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் “”இன்வென்டர்” பழுதாகின்றன. டீசல் செலவு அதிகமாகிறது. அதிக அளவில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் மேலும் மாசுபடுகின்றது என்றார்.
நகரில், சாய ஆலைகள் அமைத்து வரும் சாயக்கழிவுநீர் மறுசுத்திகரிப்பு நிலையங்களுக்கும், பனியன் தொழில் நிறுவனங்கள் தொழிற்கூடங்களை விரிவாக்கம் செய்து வரும் நிலையிலும், எதிர்வரும் காலத்தில் பனியன் தொழிற்துறை உபயோகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும்.
மின் வெட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது,
- பல்லடம் பகுதியில் 230 கே.வி.துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3 முதல் 6 மாதங்களுக்கு இப்பணி முடிவடையும்.
- இதன் பின் திருப்பூர் நகரில் பெருமளவில் மின் வெட்டு இருக்காது.
- இதேபோல் பெருமாநல்லூர் பகுதியில் 230 கே.வி.துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது.
- நகரில்
- நொச்சிபாளையம்,
- மங்கலம் சாலை,
- அருள்புரம்,
- மண்ணரை,
- திருவள்ளுவர் நகர்,
- மாதேஸ்வரா நகர்,
- கே.ஜி.புதூர் கல்லூரி சாலை ஆகிய 8 இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றனர்.
கர்நாடகத்தில் மின்தடை அமலாகிறது: முதல்-மந்திரி குமாரசாமி அறிவிப்பு
பெங்களூர்,பிப்.23-
கர்நாடக மின்சார கழகத்தின் உயர்மட்ட குழு கூட்டமும், மின்சார தட்டுப்பாடு குறித்தும் ஆலோசிப்பதற்காக மந்திரி சபை கூட்டமும் நேற்று விதான சவுதாவில் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்தபின்னர் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக மாநிலத்தில் தீவிர மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவியை நாங்கள் நாடினோம். மத்திய தொகுப்பில் இருந்த 500 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால் மத்திய அரசு கொடுக்க இயலாது என்று கூறிவிட்டது.
மின் துண்டிப்பு செய்வது என்பது அரசின் நோக்கம் அல்ல. மாநில மக்களுக்கு சிறந்த மின் வினியோகத்தை வழங்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும்.
மின் தட்டுப்பாட்டை சமாளிக்க வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறோம். ஒரு வேளை மின்சாரம் கிடைக்க வில்லை என்றால் மின் துண்டிப்பு செய்யப்படும் நிலை ஏற்படும். அதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
மின்சார துறை மந்திரி ரேவண்ணா கூறியதாவது:-
தற்போது மாநிலத்தில் மாணவர்களுக்கு தேர்வு தொடங்க உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. எப்படியாவது மின் தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி கூறி உள்ளார். வெளியில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய முயற்சித்து வருகிறோம். மின்சாரத்தை துண்டிக்கும் முடிவு இன்னும் எடுக்கவில்லை. வருகிற மந்திரி சபை கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
மின் வினியோக கழகத்தில் இருந்து 50 மெகாவாட் மின்சாரத்தை பெறுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அடுத்த மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் பெறுவது குறித்து பேசி வருகிறோம்.
இவ்வாறு மந்திரி ரேவண்ணா கூறினார்.
============================================================
செய்தி வெளியீடு எண்-193 நாள்-2.4.2007
செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் மாநிலத்தின் எல்லா மின் நுகர்வோருக்கும் தடையில்லாத, நம்பகமான, தரமான மின்சாரம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதற்காக, தமிழ்நாடு அரசு
- வடசென்னை,
- எண்ணூர்,
- மேட்டூர் மற்றும்
- தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்களின் நிறுவுதிறனை 2500 மெகாவாட் அளவுக்கு அதிகரித்திட ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இவற்றைத் தவிர, நீலகிரி மாவட்டத்தில் 500 மெகாவாட் நீரேற்று புனல் மின் திட்டத்தை செயலாக்கி வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற உள்ள இந்த நிறுவுதிறன் அதிகரிப்புத் திட்டங்கள் அதிக அளவு மின் உற்பத்தி செய்வது மட்டுமின்றி மின் செலுத்துகை மற்றும் விநியோகக் கட்டமைப்பினையும் வலிவாக்கும். மாநில மின்சார அமைப்பிற்கு (GRID)) மின்சாரத்தை ஏற்றுவதற்குத் தேவையான மின் செலுத்துப் பாதைகள் நிறுவுவதற்கான செலவு உட்பட மேற்கண்ட திட்டங்களுக்கான மொத்த திட்ட முதலீடு 16 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளில் இத்திட்டங்களை நிறைவேற்றிட தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கடனுதவி அளித்திட ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் (Rural Electrification Corporation)) முன் வந்துள்ளது. இது ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், தமிழ்நாட்டுக்கு அளித்துள்ள கடனுதவிகளில் மிகப் பெரியதாகும். இது தமிழ்நாடு மின்சாரத் துறைக்கு, நிதித் தட்டுபாடின்றி அதன் விரிவாக்கத் திட்டங்களை நிறைவேற்ற உதவிடும். தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளித்திட மின்சார வாரியத்துக்கும், ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding)) ஏற்பட்டுள்ளது. இதில் 2.4.2007 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் முன்னிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் வாரியத் தலைவர் திரு.ஹன்ஸ் ராஜ் வர்மா அவர்களும், ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.அனில் கே.லகினா அவர்களும் கையெழுத்திட்டனர்.
மாண்புமிகு தமிழக மின்துறை அமைச்சர் திரு.ஆற்காடு நா.வீராசாமி அவர்களும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.எல்.கே.திரிபாதி, நிதித் துறைச் செயலாளர் மற்றும் சிறப்பு ஆணையர் திரு.கு.ஞானதேசிகன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் திரு.ஆர்.சத்பதி, தமிழ்நாடு மின்வாரியத்தின் உறுப்பினர் (கணக்கியல்), திரு.ச.கதிரேசன், தமிழ்நாடு மின்வாரியத்தின் உறுப்பினர் (உற்பத்தி) திரு.ச.அருணாசலம், திரு.பால் முகுந்த், இயக்குநர் (தொழில் நுட்பம்), ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், புதுடில்லி, திரு ரமா ராமன், செயலாண்மை இயக்குநர், ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், புதுடில்லி ஆகியோரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகும் நிகழ்ச்சியின் பொழுது உடனிருந்தனர்.
***
வெளியீடு-இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9.