சேவை: இராணுவத்தில் பெண்கள்!
மு.வெ.
ஆணுக்கு பெண் நிகர் என்று சொல்லி பல வருடங்களாக ஆகிவிட்டன. உண்மையில் அப்படி இருக்கிறதா? பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீட்டில் இன்னும் பிரச்சினைகள் இருந்தாலும், ஆங்காங்கே சில நம்பிக்கை தரக்கூடிய விஷயங்களும் தென்படுகின்றன. அப்படிப்பட்ட நம்பிக்கை அளிக்கும் ஒன்றுதான், நமது இந்திய இராணுவத்தில் பெண்களின் பங்களிப்பும்.
இந்திய இராணுவத்தில் 1993-ஆம் ஆண்டில்தான் பெண்கள் சேர்க்கப்பட்டனர். ஜூனியர் லெவல் கிரேடில் அப்போது வேலை நிறைய காலியாக இருந்தது. அந்த சமயத்தில் பெண்கள் சேர்க்கப்பட்டனர்.
பொதுவாக இருபத்தியொரு வயது முதல் இருபத்தி ஐந்து வரை வயதுள்ள பெண்கள் ஆறு மாதத்திற்கொருமுறை சுமார் 5000 பேர் விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் அவர்களிலிருந்து தேர்வு செய்யப்படுகிறவர்களோ வெறும் பத்து பேர் மட்டும்தான்! தேர்வு செய்யப்படுகிறவர்கள் ஐந்து வருடம் ஆபீஸர் கிரேடில் பணிபுரிவார்கள். அவர்கள் மேலும் சிறப்பாகப் பணிபுரிந்தால் மேலும் ஐந்து வருடம் பணி நீட்டிக்கப்படும்.
இவர்களுக்கு ஒன்பது மாதம் டிரெயினிங் கொடுக்கப்படுகிறது. இராணுவத்தில் வெவ்வேறு இடங்களில் பணியிலிருக்கும் ஆண், பெண் இருவரும் திருமணம் செய்து கொண்டால், அவர்கள் ஒரே இடத்தில் பணியில் இருக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
இராணுவத்தில் பணியிலிருக்கும் காவாலி, “”பொதுவாக ஸ்போர்ட்ஸ், என்.சி.சி.யில் இருந்த பெண்கள்தான் அதிகமாக இராணுவத்தில் சேர்கிறார்கள். ஆண்கள் அளவுக்கு எங்களுக்கு வேலைப் பளு அதிகம் இல்லை என்றாலும், போதிய அளவு சம்பளமும், சமூகத்தில் மரியாதையும் கிடைக்கின்றது. ஆண்களுக்கு இணையாக எங்களுக்கும் பயிற்சி கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சல்வார் கமீசில் இருக்கும் போதுதான் பெண்கள் என்று உணருகிறோம்” என்கிறார்.
இராணுவத்தில் பொறியியல், கல்வித் துறை, சிக்னல்ஸ், ஹாஸ்பிடல் போன்ற துறைகளில் பெண்களுக்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது. 2005-ன் கணக்குப்படி இராணுவத்தில் 40000 ஆண் அதிகாரிகளுக்கு 918 பெண் அதிகாரிகளும், கடற்படையில் 6000 ஆண் அதிகாரிகளுக்கு 100 பெண் அதிகாரிகளும், விமானப்படையில் 15000 ஆண் அதிகாரிகளுக்கு 454 பெண் அதிகாரிகளும் உள்ளனர்.
அதிகம் படிக்காதவர்கள் தான் பெரும்பாலும் இராணுவத்தில் சேருவார்கள் என்ற நிலை இருபது வருடங்களுக்கு முன்னால் எல்லாம் இருந்தது. ஆனால் இந்த நிலையையும் தற்போதைய பெண்கள் மாற்றி விட்டனர். எம்.பி.ஏ., படித்திருக்கும் ரேணுதத்தா, “”இராணுவப் பணியை பாதுகாப்பானதாகவும், சவாலானதாகவும் உணர்கிறேன்” என்கிறார்.