Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Gallium’ Category

Depletion of world Mineral reserves – Consumption of Antimony, Gallium, Tantalum, Indium

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

கனிமங்களின் சாதம், தாதுக்களும் பிரமாதம்

நெல்லை சு.முத்து

பூமி சூடேறி வருவதால் பனிப்படலங்கள் வட துருவப் பிரதேசத்தில் இருந்து உருகி அட்லாண்டிக் கடலில் கலக்கின்றன. இது பழைய செய்தி. ஆனால் ஒவ்வொரு 40 மணி நேரமும் கிரீன்லாந்து பனிப்படலங்கள் ஒரு கன கிலோமீட்டர் அளவுக்குக் கரைந்து வருகிறதாம். பாசதேனாவில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் எரிக் ரிக்னாட் தரும் தகவல் இது.

இந்த நீர், சென்னை போன்ற பெரு நகரங்கள் ஆண்டுதோறும் பயன்படுத்தும் தண்ணீர் அளவுக்குச் சமம். தமிழ்நாடு முழுவதும் 8 மில்லிமீட்டர் தண்ணீர் நிறைந்த மாதிரி. சென்னையில் மட்டும் இந்த வடதுருவப் பனி உருகிய நீரைக் கொண்டு வந்து ஊற்றினால் இரண்டு மாடி வீடுகள் நீருக்குள் மூழ்கிவிடும்.

சுற்றுச்சூழல் என்றதுமே நம்மவர் நினைவுக்கு வருவது

  • ஓசோன்,
  • கரியமில வாயு,
  • வாகனப்புகை – உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுச் சமாச்சாரங்கள் மட்டும்தாம். எல்லாரும் இன்று வாகனப்புகை பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறோம். “”மீட்டர் போட்ட ஆட்டோ வேண்டும். புகைவிடாத லாரி வேண்டும்” என்று புதுக்கவிதை பாடுகிறோம். ஆனால் அதைக் காட்டிலும் இன்னோர் அபாயம் காத்திருக்கிறது.

தர்மம் தலைகாக்கும் என்ற நம்பிக்கை இங்கு பலருக்கு இல்லை. தலைக்கவசம் அணிந்துதான் பயணம் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 67 லட்சத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவற்றால் சாலைகளில் பெரும் போக்குவரத்து நெருக்கடி.

இங்கிலாந்தில் கார்டிஃப் பல்கலைக் கழகத்தின் புவிவளப் பேராசிரியை ஹேசல் ப்ரிச்சார்டு என்ற பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம். “”இங்கு தெருவெல்லாம் இவ்வளவு சுத்தமாக இருக்குதே” என்று அசந்து போனார். சாலையில் ஒரு வண்டி கூட இல்லையே என்ற அர்த்தத்தில் அல்ல. வியப்புக்குக் காரணம்- வீதி உண்மையிலேயே துடைத்துப் போட்ட மாதிரி இருந்ததாம். தெருவின் புழுதி எல்லாம் பாதசாரிகளின் காலணிக்குள் அல்லவா தஞ்சம் புகுந்து இருந்தது.

காலுறைகளில் வெறும் வியர்வை நாற்றம்தான்; ஆனால் காலணியின் புறப்பகுதியில் சகதி, சாணி போன்றவை ஒட்டி இருக்கும். அவர் காலணியிலோ கொஞ்சம் பிளாட்டினம் படிந்து இருந்ததாம். காலில் வெள்ளிக் கொலுசு அணியலாம். தங்கக் காப்பு கூட தரிக்கிறார்கள். ஆனால் பிளாட்டினம் அணிந்த உலகின் முதல் பெண்மணி ஹேசல் ப்ரிச்சார்டு. பிளாட்டினம் உண்மையில் மிகவும் அரிய வகை உலோகம். பூமியில் பிளாட்டினமோ, ரேடியமோ, சுமார் 79,840 டன்கள் செறிந்து உள்ளது. 89,700 டன்கள் தங்கம்; ஆனால் பிளாட்டினத்திற்குத் தங்கத்தைக் காட்டிலும் விலை அதிகம்.

அது சரி, இந்தப் பிளாட்டினம் காலில் ஒட்டியது எப்படி? வேறு என்ன, வாகனப் புகைதான். பெட்ரோல், டீசல் எரிவாயுக்களால் ஏற்படும் மாசு மட்டுமே நம்மை மூச்சு முட்டப் பண்ணுகிறது. அந்த வாயுக்களை வாகன எஞ்ஜினில் எரியச் செய்யும் மின்பொறியில் பிளாட்டினம் தகடு இருப்பது நமக்குத் தெரியாது. அதனைக் காற்றில் புகையுடன் கலக்கப்போவது யாரு? நீங்கள்தாம். ஒவ்வொரு முறையும் ஸ்கூட்டர், கார், லாரி, ஆட்டோக்களை இயக்கும்போது பிளாட்டினம் தேய்ந்து காற்றில் கலக்கிறதாம்.

இந்தத் தகவல் அதிர்ச்சி அளிக்கிறதா? ஆனால் சமையல் மணக்கச் செய்யும் வனஸ்பதி தயாரிப்புத் தொழில்துறையில் கிரியா ஊக்கியே இந்தப் பிளாட்டினம்தான். பூமியில் இந்த உலோகப் புதையல் வறண்டு வருகிறது. ஏறத்தாழ 50 கோடி வாகனங்களை இத்தகைய எரிமின் கலன்களில் இயக்கினால் அவ்வளவுதான். அடுத்த 15 ஆண்டுகளில் பிளாட்டினம் இல்லாத பாலைவனம் ஆகிவிடும் நம் பூமி. பூமியில் கையிருப்பே 79,840 டன்கள்தான்.

பிளாட்டினம் மட்டுமா, வேறு பல அரிய உலோகங்களையும் நாம் சுரண்டி வருகிறோம். மணல் முதல் சணல் வரை அனைத்து வணிக ஒப்பந்தங்களும் கட்சிக்காரர்களுக்கே வாய்க்கும். உலோகச் சுரங்கம் தோண்டலில் மட்டும் கட்சி பேதம் இல்லை.

உலகில் வறண்டு வரும் மற்றோர் அரிய உலோகம் இண்டியம். இது ஏறத்தாழ 6000 டன்கள் செறிந்து உள்ளது. ஆனால் இன்று இந்த உலோகத்தைத் தகவல் தொழில்நுட்பக் கருவிகளுக்கான எல்.சி.டி தயாரிக்கும் துறை விழுங்கி வருகிறது. நவீனத் தொலைக்காட்சி, கணினித் திரைகள் வடிவமைப்பில் இடம்பெறும் திரவப் படிக ஒளிர் முனையங்கள் இவை. அடுத்த பத்தாண்டுகளில் இண்டியம் வளமும் மறையும் நிலை என்கிறார் ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானி.

2003 ஜனவரியில் கிலோ 60 டாலருக்கு விற்ற இண்டியம் இன்று 1000 டாலர். நான்கே ஆண்டுகளில் பதினாறு மடங்கு விலையேற்றம். இதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படும் நிலை இல்லை.

பூமி கஜனாவில் காலியாகிவரும் இன்னோர் அரிய உலோகம் காலியம். சூரிய மின்கலன்கள் தொழில்நுட்பத்தின் இதயம் போன்றது இது. இண்டியம் – காலியம் ஆர்சனைடுப் பொருளால் ஆனவையே. மின்னணுவியலில் பெரிதும் பயன்படுவது. இனி வரும் காலங்களில் சூரிய மின்கலன்களின் ஒரு சதவீதத் தேவைக்கு மட்டுமே இந்த காலியம், இண்டியம் உலோகங்கள் கைகொடுக்கும். நெதர்லாந்து நாட்டில் லெய்டன் பல்கலைக்கழக நிபுணர் ரேனே க்ளெய்ஜின் கணிப்பு இது.

கணிப்பொறித் திரைதான் பூமியை விழுங்கி ஏப்பம் விடுகிறது என்றால் நம் காதோரம் நெருங்கி உறவாடும் செல்ஃபோன் கூட பூமியின் வளத்தைப் பறித்து வருகிறதாம். என்ன செல்பேசித் தொழில்துறையினர் டான்டலம் என்கிற மற்றோர் அரிய உலோகத்தை இதற்காக அபகரித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் உலோகத் தாதுக்களில் பாதி டான்டலம் தானாம். அடுத்தபடி யுரேனியம். நாலில் ஒரு பங்கு. ரஷியாவிலோ அங்குள்ள உலோகங்களில் ஆறில் ஒரு பங்கு யுரேனியம். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் உலோகச் செல்வத்தில் பத்தில் ஒரு பங்கு யுரேனியம். உலகின் யுரேனிய வளம் 33 லட்சம் டன்கள். அணுமின் சக்தித் துறையினால் இந்த யுரேனியத்தின் பற்றாக்குறை வேறு தலைவிரித்து ஆடப்போகிறது.

உலகில் மிக அதிகமாகக் காணப்படும் உலோகத் தாதுக்களில்

  1. முதலிடம் பெறுவது அலுமினியம் -அதாவது 3235 கோடி டன்கள்.
  2. அடுத்தபடி தாமிரம் (94 கோடி டன்கள்),
  3. குரோமியம் (78 கோடி டன்கள்),
  4. துத்தநாகம் (46 கோடி டன்கள்),
  5. நிக்கல் (14 கோடி டன்கள்) போன்ற புழக்கத்தில் உள்ள உலோகங்களுக்கும் அடுத்த தலைமுறைக்குள் தட்டுப்பாடு வரும். ஆன்டிமனிக்கும் இதே முடிவுதானாம். அடுத்த பத்தாண்டுகளில் இதன் வளமும் வறண்டுவிடும்.

இன்று – “கனிமங்களின் சாதம், தாதுக்களும் பிரமாதம்’ என்று தலைவாழையில் உலோகங்களை உண்ணும் பகாசுரர்கள் யார்?

அமெரிக்காவில் 30 கோடி மக்கள். ஒவ்வொருவரும் ஆண்டுதோறும்

  • 107 கிலோ பாஸ்வரம்,
  • 20.3 கிலோ அலுமினியம்,
  • 8.1 கிலோ தாமிரம்,
  • 4.5 கிலோ துத்தநாகம்,
  • 5.3 கிலோ காரீயம் உண்டு வருகிறார்கள்.

நாமோ “பிளாட்டினம் இட்லி, வெள்ளித் தோசை, தங்கச் சோறு, பாஸ்வரச் சாம்பார், குரோமியக் குழம்பு, காரீயச் சட்னி, துத்தநாகத் துவையல்’ எல்லாம் சாப்பிடப் போவது மாதிரி நடந்து கொள்கிறோம். துறைதோறும் பணத்தைச் சுரண்டுவதற்கே வாதங்கள் புரிகிறோம். சுற்றுச்சூழல் என்ற உச்சரிப்பிலேயே “ஊழல்’ ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் எப்படி கனிமவள வறட்சியைத் தடுக்கப்போகிறோம் என்பதே இப்போதைய கேள்வி.

Posted in Air, Alloys, Aluminium, Antimony, Arctic, Auto, Automotive, Carbon, Cars, Cell, Cellphone, Chromium, Cooking, Copper, Earth, emissions, Empty, Environment, Expiry, Exploration, Gallium, Gas, Indium, Land, legs, Metals, Minerals, mines, Mobile, Natural, Nickel, oil, Ozone, Phones, Platinum, Pollution, Protection, Research, Rich, Shoes, Slippers, Socks, Surface, Tantalum, tantulum, Traffic, Warming, Water, Zinc | 1 Comment »