எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரியில் ரூ. 2.20 கோடியில் நவீன வசதிகள்
சென்னை, மே 4: சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ரூ. 2.20 கோடியில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று செய்தித் துறை செயலர் து. ராசேந்திரன் தெரிவித்தார்.
இந் நிறுவனத்தின் 47-வது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:
எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர்களுக்கான பல்வேறு நவீன தொழில்நுட்ப சாதனங்கள், கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற கடந்த ஆண்டு ரூ. 1.50 கோடி ஒதுக்கப்பட்டது.
இதில் டி.டி.எஸ். மற்றும் டால்பி டிஜிட்டல் ஒலிப்பதிவுக் கூடம் ரூ. 72 லட்சத்தில் அமைக்கும் பணி விரைவில் நிறைவேற்றப்படும்.
இதே போல ரூ. 36 லட்சத்தில் ரி-ரெக்கார்டிங் தியேட்டர் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு வருகிறது.
இதுதவிர நடப்பு ஆண்டுக்கு ரூ. 70 லட்சம் அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
அதிநவீன கேமிராக்கள்: ஒளிப்பதிவுத் துறை மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் கேமிராக்களில் அதிநவீன சினிமாஸ்கோப் லென்ஸ்கள் விரைவில் பொருத்தப்படும்.
இதுதவிர 6 ஸ்டில் கேமிராக்கள் மற்றும் ஒரு விடியோ கேமிரா வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார் ராஜேந்திரன்.
முன்னதாக விழா சிறப்பு மலரை வெளியிட்டு, சிறந்த மாணவர்களுக்கு பல்வேறு விருதுகளை செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வழங்கினார்.
- செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் சி. கோசலராமன்,
- தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம. நாராயணன்,
- கல்லூரியின் முன்னாள் இயக்குநர் அமிர்தம்,
- கல்லூரி முதல்வர் ந. ரமேஷ்,
- மாணவர் பேரவைத் தலைவர் பா. நவீன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.