ஜுலை மாதத்தில் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது
கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் உடல்நலன் குறித்து சந்தேகம்
கியூபாவின் தலைநகர் ஹவானாவில் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ அணிவகுப்பு ஒன்று, அந்நாட்டின் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ இல்லாமல் இடம்பெற்றுள்ளது. இதனை அடுத்து ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் உடல்நலன் குறித்து மேலும் பல ஊகங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த ஜுலை மாதத்தில் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு பாரிய அறுவை சிகிச்சை நடந்த பின்னர், தற்காலிகமாக அதிகாரத்தினை ஏற்று இருக்கும் அதிபரின் சகோதரர் ராவூல் காஸ்ட்ரோ, பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
தன்னுடைய உரையில் பல தசாப்த காலங்களாக மோதலில் இருக்கும் அமெரிக்கர்களுடன் பேச்சுக்களை நடத்த தயாராக இருப்பதாக ராவூல் காஸ்ட்ரோ கூறினார்.
எண்பது வயதான ஃபிடல் காஸ்ட்ரோ அறுவை சிகிச்சைக்கு பின்னர் வெளி உலகத்தின் பார்வையில் தென்படவில்லை. எனினும் அவர் நன்றாக குணமடைந்து வருவதாக கியூபாவின் அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.
நாட்டை விட்டு வெளியேறி இருந்த ஃபிடல் காஸ்ட்ரோ, மீண்டும் நாட்டிற்குள் திரும்பி புரட்சியினை முன்னின்று நடத்திய ஐம்பதாவது வருடத்தினை குறிக்கும் வகையில் இன்றைய அணிவகுப்பு நடைபெற்றது. இந்த புரட்சி ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து ஃபிடல் காஸ்ட்ரோ அதிகாரத்தில் அமர்ந்தார்.