அருணாசலப் பிரதேசம் எங்களுடையதே: சீனா
இட்டாநகர், மே 27:அருணாசலப் பிரதேசம் தொடர்பாக சீனா- இந்தியா இடையே ஏற்கெனவே சர்ச்சை உள்ள நிலையில் இப்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. சீனா செல்லவிருந்த குழுவில் இடம்பெற்றிருந்த அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு விசா அளிக்க சீனா மறுத்துவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீனாவுக்கு செல்ல இருந்த 102 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பயணத்தை இந்திய அரசு ரத்து செய்து விட்டது. இவர்கள் சனிக்கிழமை காலையில் சீனப் பயணம் மேற்கொள்ள இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைக்குரிய பகுதியாக இருப்பதால் அருணாசலப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரிக்கு விசா வழங்க இயலாது என்று சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி கன்டு, அதிர்ச்சி தெரிவித்ததுடன் கடும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.
அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சீனா விசா தர மறுத்தது குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மாநில முதல்வர் ஆலோசனை நடத்தினார். வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, அருணாசலப் பிரதேச மாநிலம் முழுவதும் இந்தியாவின் பகுதியே ஆகும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தன.
சீன தூதர் பேட்டி: “இந்தியர்கள் யாரும் சீனா வருவதை மகிழ்சியுடன் வரவேற்கிறோம். ஆனால் சர்ச்சைக்குரிய பகுதியான அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த அதிகாரிகளை நாங்கள் அதிகாரிகள் என்று ஏற்றுக் கொள்வது கடினம்’ என்று இந்தியாவுக்கான சீன தூதர் சுன் யுக்ஸி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அருணாசலப் பிரதேசம் தொடர்பாக ஓர் ஆண்டில் இரண்டாவது முறையாக சர்ச்சை எழும் வகையில் சீன தூதர் சுன் யுக்ஸி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா- சீனா இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்க இருதரப்பும் ஒருபக்கம் முயன்று வருகின்றன. இந்திய ராணுவத் தலைமை தளபதி ஜே.ஜே. சிங், சீனாவுக்கு தற்போதுதான் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு விசா அளிக்க சீனா மறுத்தது, அருணாசலப் பிரதேசம் எங்களுடையதே என்ற அதன் அடாவடியான போக்கு இருதரப்பு உறவில் விரிசலுக்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.
——————————————————————————
மரியாதைக்குரிய அண்டை நாடு!
எம். மணிகண்டன்
அண்மையில் அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு விசா வழங்க சீனா மறுத்தது.
இதையடுத்து, அங்கு செல்ல இருந்த இந்தியக் குழு தனது பயணத்தை ரத்து செய்துவிட்டது. “விசா மறுக்கப்படவில்லை; சீனாவில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல விசா தேவையில்லை என்றுதான் கூறினோம். அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விசா இல்லாமலேயே சீனாவின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம்’ என்பதுதான் சீனாவின் நிலை.
இதன் மூலம், அருணாசலப் பிரதேசம் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்று சீனா மீண்டும் உரிமை கோர முயற்சிக்கிறது என்று இந்தியாவின் தரப்பில் கூறப்பட்டது. வழக்கம்போல், இந்திய அரசியல்வாதிகள், “எந்த நிலையிலும் அருணாசலப் பிரதேசத்தை சீனாவுக்கு விட்டுத் தர முடியாது’ என வீர வசனம் பேசினர்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் ஜெர்மனியில் நடந்த ஜி-8 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் ஆகியோர் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.
இந்தச் சந்திப்பின்போது அருணாசலப் பிரதேச விவகாரம் குறித்து “அனல் பறக்கும் விவாதம்’ நடக்கும் என பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு.
“சீனா எங்கள் மரியாதைக்குரிய அண்டைநாடு’ என மன்மோகன் சிங் வர்ணிக்க, “இரு தரப்பு உறவுகள் மேம்பட ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுத்து வருகிறோம்’ என்று பதிலுக்கு ஐஸ் வைத்தார் சீன அதிபர். இப்படியாக, இந்த விவகாரம் திடீரென எழுவதும், சில நாள்களில் மறக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.
அருணாசலப் பிரதேசத்தின் மீது சீனாவுக்கு “அதீத ஆசை’ ஏற்பட, அதன் புவியியல் அமைவே முதல் காரணம். அருணாசலப் பிரதேசத்தைக் கைப்பற்றிவிட்டால், மேற்குவங்கத்தில் உள்ள குறுகிய “சிலிகுரி’ துண்டுப் பகுதியை ஆக்கிரமித்து விடலாம்.
இந்தப் பகுதிதான் இந்தியாவின் பெரும்பான்மை பகுதியை, வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கிறது. இப் பகுதியை இழந்துவிட்டால், வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் கையை விட்டுப் போய்விடும் அபாயம் இருக்கிறது.
மணிப்பூர், அசாம் மாநிலங்களில் நடக்கும் இந்திய அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டிவிடுவதற்கும் அருணாசலப் பிரதேசம் பயன்படும். அருணாசலப் பிரதேசத்தில் உள்ள நீர்மின் திட்டங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகள், அதிக கனிம வளங்கள் போன்றவையும் அப்பகுதி மீது சீனா கண் வைக்க காரணங்களாகும்.
இப்படியெல்லாம் செய்வதற்கு சீனா திட்டமிட்டிருக்கிறதோ இல்லையோ, இவை நடப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதால் இந்தியத் தரப்பு, அருணாசலப் பிரதேச விவகாரத்தில் உஷாராகவே உள்ளது.
ஏற்கெனவே, வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களுக்கு சீனா நிதியுதவி செய்கிறது என பரவலாக நம்பப்பட்டு வருகிறது. இதுவும், அருணாசலப் பிரதேசம் மீது சீனா கோரி வரும் உரிமையை, இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருவதற்கு மற்றுமொரு காரணம்.
1962 போருக்குப் பிறகு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட நீண்ட காலம் ஆனது. சீனாவின் “ஐந்து விரல் கொள்கையே’ இதற்குக் காரணம்.
திபெத் பகுதியை சீனாவின் உள்ளங் கையாக வைத்துக் கொண்டால், நேபாளம், பூடான், சிக்கிம், லடாக், அருணாசலப் பிரதேசம் ஆகியவையே அந்த ஐந்து விரல்கள். இந்தப் பகுதிகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சீனாவின் “ஐந்து விரல் கொள்கை’.
அதே சமயம், இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் நாடு என ஒரேயடியாக சீனாவை ஒதுக்கிவிட முடியாது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இருதரப்பு உறவுகளில் நல்ல முன்னேற்றம் இருந்தது.
ஆனால், பொக்ரான்-2 அணு குண்டு சோதனை நடத்தியபோது, மீண்டும் முடங்கிப் போன அரசு முறை உறவுகள், கடந்த சில ஆண்டுகளாக மேம்பட்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.
கடந்த பத்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் 15 மடங்காக உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக வர்த்தகம் செய்வது சீனாவுடன்தான்.
சீனாவின் “ஒரே சீனா’ கொள்கையை இந்தியா ஆதரித்து வருகிறது. அந்நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்கி, தைவானை இதுவரை தனி நாடு என இந்தியா அங்கீகரிக்கவில்லை. அந்நாட்டுடன் ராஜீய உறவுகள் எதையும் இந்தியா ஏற்படுத்திக் கொள்ளவில்லை. சீனாவுடன் நட்புறவோடு இருப்பதை இந்தியாவும் விரும்புகிறது என்பதற்கான சிறந்த சான்றுகள் இவை.
என்னதான் இருந்தாலும், பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்வது, அருணாசலப் பிரதேசத்துக்கு உரிமை கோருவது போன்றவை இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகின்றன.
இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டுதான், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது.
ஆனால் அண்மையில் சீனா சூசகமாகத் தெரிவித்திருக்கும் கருத்துகள், அவ்வளவு எளிதாகக் எடுத்துக் கொள்ளத் தக்கவை அல்ல. “ஐந்து விரல் கொள்கையை’ சீனா இன்னும் விட்டுவிடவில்லை என்பதற்கான அறிகுறிகள் இவை.
மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, “இந்தியாவின் முதல் எதிரி சீனாதான்’ என்று வெளிப்படையாகவே பேசினார் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.
“இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் பகையை ஏற்படுத்திவிட்டார் பெர்னாண்டஸ்’ என பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தியாவுக்குள் இவ்வளவு எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்காத அவர், கடைசியில் தனது கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டியதாயிற்று.
பெர்னாண்டஸ் கூறியது போல, சீனா முதல் எதிரியா? அல்லது இன்றைய பிரதமர் கூறுவது போல மரியாதைக்குரிய அண்டை நாடா? என்பதுதான் தற்போது நம்முன் நிற்கும் கேள்வி.