மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தக் கோரும் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
சென்னை, பிப். 7: சென்னை மாநகராட்சி மன்றத்தில் 100 வார்டுகளுக்கு நடக்கவிருக்கும் மறுதேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துமாறு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏ.கே. வெங்கடசுப்பிரமணியன் இவ்வழக்கைத் தொடர்ந்தார்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி கே. சந்துரு ஆகியோர் இவ்வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்தனர். அப்போது மாநிலத் தேர்தல் ஆணையர் சார்பாக பதில் மனுவைத் தாக்கல் செய்தார் மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி. பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தபிறகு இவ்வழக்கு தொடரப்பட்டிருப்பதால், இம்மனு விசாரணைக்கு ஏற்றதல்ல. சென்னை மாநகராட்சியில் 100 வார்டுகளில் தேர்தல் நடத்த 4,830 வாக்கு இயந்திரங்கள் தேவை. அதற்காக 11,050 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒவ்வொரு இயந்திரத்தையும் பரிசோதித்து, சான்றிதழ் வழங்க வேண்டும். வரும் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்த நடைமுறைகளை மேற்கொள்ள போதுமான அவகாசம் இல்லை. எனவேதான் வாக்குச் சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இத்தேர்தலை விடியோ மூலம் பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாக்குச் சீட்டுகளில் வாக்களிக்கப்பட்ட கடந்த தேர்தலில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதை யாரும் குறை சொல்லவில்லை. அது மட்டுமின்றி மின்னணு வாக்கு இயந்திரத்திலும் நம்பிக்கை இல்லை என்று சில அரசியல் கட்சிகள் கூறுகின்றன என்றும் மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி வாதாடினார்.
மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் எல்.என். ராஜா வாதாடினார். வாக்கு இயந்திரங்களை உடனே பயன்படுத்த நம்மிடம் திறமை உள்ளது. ஆனால் அரசுக்கு அதைப் பயன்படுத்தும் எண்ணம் இல்லை என்றார் அவர்.
இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.