Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Fuels’ Category

Electricity Distribution and Power Generation in Tamil Nadu – Energy Crisis and its Impacts

Posted by Snapjudge மேல் திசெம்பர் 4, 2007

கண்ணாமூச்சி ஆடும் மின்சாரம்

எஸ். ஜெய்சங்கர்

உலகமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு, வெளிநாடுகளுக்கு நமது சந்தையைத் திறந்துவிட்டாகிவிட்டது. வெளிநாட்டு முதலீடுகள் ஏராளமாகக் குவிகின்றன. தொழில்நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொருளாதார ரீதியில் நமது நாடு 9 சதவீத முன்னேற்றத்தை எட்டியுள்ளது என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுடன் நம் நாட்டு வணிகர்கள் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதில், அனைத்து வசதிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்ட இந்திய நிறுவனங்கள் மட்டுமே உற்பத்திச் செலவைக் குறைத்து, உலகச் சந்தையில் காலூன்ற முடிகிறது.

சிறு, குறு நிறுவனங்களின் இன்றைய நிலையோ பரிதாபமாக உள்ளது. தொழிலை மிகுந்த லாபகரமாக நடத்தவும் முடியாமல், அதை விட்டு விலகவும் முடியாமல், புலி வாலைப் பிடித்த கதையாகிவிட்டது. இதில் தொழிலை நசுக்க, முன்னறிவிப்பற்ற மின்தடை எனும் இம்சை வேறு இவர்களை வாட்டத் தொடங்கிவிட்டது.

மின்சாரத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை மேற்கொள்ளும் இந்த சிறு, குறு தொழிற்சாலைகள், தினசரி பல முறை ஏற்படும் மின்வெட்டால் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டுள்ளன.

வேலையே நடக்காதபோது, தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்க முடியாமல் தாற்காலிக விடுமுறைகளும் அறிவித்துள்ளன. மிகப்பெரிய தொழில் துறை நிறுவனங்களாக இருந்தாலும், ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி, உற்பத்திச் செலவை அதிகரிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வருகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறு, நடுத்தர தொழிற்சாலைகளின் தொகுப்புகள் கொண்ட தொழிற்பேட்டை பகுதிகள், நகர்ப்பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மின்தடையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இவை அமைந்திருப்பது கிராமப் பகுதிகளிலா? நகரப் பகுதிகளிலா? என்பது நிச்சயம் அரசுக்குத் தெரியாமல் இருக்காது.

தமிழகத்தின் மின்தேவை தினசரி 8,500 மெகாவாட். இதுபோக, வெளிமாநிலத்துக்கு 500 மெகாவாட் மின்சாரத்தை விற்பனை செய்து வந்துள்ளது தமிழகம். ஆனால், இன்றைய நிலையில் மின் உற்பத்தி குறைந்து போனதால், வெளி மாநிலத்துக்கு விற்பனை செய்யப்பட்ட மின்சாரம் நிறுத்தப்பட்டு, தமிழகத்துக்கு 7,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தினசரி வழங்கப்படுகிறது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தினசரி 1,500 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துபோய்விட்டது. காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என விளக்கம் அளிக்கிறது தமிழக அரசு.

உண்மையில், தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், தனியார் காற்றாலைகள், தனியார் தொழிற்சாலைகளில் இருந்து 10,500 மெகாவாட் மின்சாரத்தை தினசரி உற்பத்தி செய்ய முடியும். ஆனால், 7,500 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தியாகிறது. எங்கு தவறு நடக்கிறது என்பது அரசுக்குத் தெரியும்.

இதனால், மாநகராட்சிப் பகுதிகளான சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மின்தடை ஏற்படுகிறது.

கிராமப்புறங்களில் மின் தடை ஏற்பட்டால், சிறிது நேரம் வீட்டுக்கு வெளியே காற்றாட இருக்க முடியும். தீப்பெட்டிகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியது போன்ற குடியிருப்புகளில் வசிக்கும் நகர்ப்புற மக்கள், மின்தடையால் தங்களுக்கு ஏற்படும் “புழுக்கத்தை’ தீர்க்க எங்கு செல்வது? ஆனால், நகரில் மின்தடையே இல்லை என்கிறார் மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி.

மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் செயல்படும் துணை மின் நிலையங்களில், தினசரி எத்தனை முறை, எவ்வளவு நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது என்ற விவரங்கள் நிச்சயம் அரசுக்குத் தெரிந்திருந்தும், “தமிழக நகரப் பகுதிகளில் மின்தடை இல்லை, கிராமப்பகுதிகளில் மட்டுமே மின்தடை’ எனும் பதிலைக் கூறியிருக்கிறது அரசு.

அரசின் கூற்றுப்படியே கிராமப் பகுதிகளில் மட்டும் மின்தடை என்றாலும், அங்கும் பாதிப்புகள் அதிகம் உள்ளன. இலவச மின்சாரம், மானிய விலையில் மின் மோட்டார் தந்த அரசு, அதை இயக்கத் தேவையான மின்சாரத்தைச் சரியாகத் தருவதில்லை. ஆற்றுப் பாசனம் அற்ற பகுதிகளில் கிணற்றுப் பாசனம் ஒன்றே வழி. இந்த விளை நிலங்களில் மோட்டார்களை இயக்க முடியாமல், விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

கிராமப் பகுதிகளை ஒட்டிய ஆற்றுப் படுகைகளில் இருந்து, பெரிய மின் மோட்டார்கள் மூலம் நகருக்குக் கொண்டு வரப்படவேண்டிய குடிநீர் விநியோகமும் தடைப்படுகிறது.

தொடர்ந்து 24 மணி நேரமும் மோட்டார் இயங்கினாலே, நகர்ப்புற குடிநீர்த் தேவையைத் தீர்க்க முடியாத நிலையில், இந்த மின் துண்டிப்பால் 13 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டிய அவலநிலை. இது அரசுக்குப் பொதுமக்களிடையே அவப்பெயரைத் தேடித் தருகிறது.

இந்நிலை ஓரிரு நாள்களில் சரியாகும் எனத் தொடர்ந்து இரு மாதங்களுக்கும் மேலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் தமிழக மக்கள்.

சென்னை, மேட்டூர், குந்தா, தூத்துக்குடி, உடன்குடி ஆகிய இடங்களில் புதிய மின்னுற்பத்தி நிலையங்களை அமைத்து, அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் தமிழகத்தின் எதிர்காலப் பற்றாக்குறையைத் தீர்க்கலாம்.

மக்கள் படும் துயரங்களைச் சுட்டிக்காட்டும்போது, அதை ஏற்றுத் தீர்வு காணும் மனோதிடம் அரசுக்கு தேவை. முன்னறிவிப்பற்ற மின்தடை பிரச்னைக்கு தற்போதைய தேவை உடனடித் தீர்வு மட்டுமே. அரசின் மறுப்பறிக்கையும் விளக்கமும் அல்ல.

————————————————————————————————————
மின்வெட்டா, மின்னல் வெட்டா?

தொழில்துறையிலும் விவசாயத்திலும் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் தொடர்ந்து விளங்குவதற்குக் காரணமே மின்சாரத்துறை என்றால் அது மிகையாகாது. அந்தத் துறைக்கு அமைச்சராக இருக்கும் ஆர்க்காடு என். வீராசாமி பழுத்த அரசியல்வாதி, நிர்வாகத்தின் நெளிவு சுளிவுகள் தெரிந்தவர்; எல்லாவற்றுக்கும் மேலாக முதலமைச்சரின் நிழல் போன்றவர், முதல்வரின் மனம் அறிந்து செயல்படுபவர்.

இத்தனை பீடிகைகள் போடுவதற்குக் காரணமே, சமீப மாதங்களாக எல்லா மாவட்டங்களிலும் விவசாயிகள் முதல் தொழிலதிபர்கள் வரை வேதனையோடு பேசிவரும் அறிவிக்கப்படாத மின்சார வெட்டைக் குறைக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லையே என்ற கவலைதான்.

தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தித் திறன் 10,098 மெகாவாட். மின்தேவையின் உச்சபட்ச அளவு 8,800 மெகாவாட். ஆனால் இப்போது உற்பத்தி ஆவதோ 7,500 மெகாவாட்தான். எனவே அன்றாடம் சுமார் 2 மணி முதல் 8 மணி நேரம்வரை மின்சாரத் தடை ஏற்படுகிறது. சராசரியாக 4 மணி நேரத்துக்கு மின்சாரம் தடைபடுகிறது.

காற்றாலைகளிலிருந்து கிடைத்துவந்த மின்சாரம் குறைந்துவிட்டதால் 1,500 மெகா வாட் அளவுக்கு மின்சாரவரத்து குறைந்துவிட்டதாகவும், மத்திய தொகுப்பிலிருந்து இப்போது 1,000 மெகாவாட் கிடைக்காததாலும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக மாநில அரசு தெரிவிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் மின்சாரத் தேவை 4,000 மெகாவாட் அதிகரித்த நிலையில், மின்னுற்பத்தியோ 531 மெகாவாட் அளவுக்கு மட்டுமே அதிகரித்திருப்பதாக அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவிக்கிறார்.

புதிய தொழில்பிரிவுகளால் ஆண்டுக்கு 600 முதல் 700 மெகாவாட் வரை மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது என்று இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

மின்சார பற்றாக்குறையால் ஜவுளி ஆலைகளால் முழுத் திறனில் இயங்க முடியாமல் போனதாகவும் இதனால் மட்டும் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள காற்றாலைகளில் கிடைக்கும் மின்சாரத்தைத் தொகுப்பாகப் பெற, மாநில மின்சார வாரியம் நல்ல கட்டமைப்பு வசதிகளைச் செய்துகொண்டால் 3,686 மெகாவாட் மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்று அத்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

அறிவிக்கப்படாத மின்சார வெட்டால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கோயமுத்தூர் மாவட்டமும் பின்னலாடைத் தொழில் கேந்திரமான திருப்பூரும்தான். கோயமுத்தூர் மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உயர் அழுத்த மின் இணைப்புகளாகும். கோவை மாவட்டத்தில் மட்டும் மின்நுகர்வு அளவு 1,200 மெகாவாட் ஆகும். இது மாநிலத்தின் மின் உற்பத்தியில் 13.5%.

இப்போதைய பிரச்னை மின்சார வெட்டு மட்டும் அல்ல, மின்வெட்டு எப்போது ஏற்படும் என்பது நிச்சயமாகத் தெரியாததும் ஆகும். இதனால் ஆலைகளில் உற்பத்தியைத் திட்டமிட முடிவதில்லை.

ஒரு நாளைக்கு 7,000 கிலோ நூல் இழை உற்பத்தி செய்த ஒரு ஜவுளி ஆலையில் இப்போது 600 கிலோ முதல் 1,000 கிலோ வரைதான் அதிகபட்சம் உற்பத்தி செய்ய முடிகிறது. 500-க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகளில் 40% அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு நூற்பாலை சங்கத் தலைவர் ஏ.பி. அப்பாகுட்டி வேதனையோடு தெரிவிக்கிறார்.

மின்வெட்டு காரணமாக டீசல் பம்புகள், ஜெனரேட்டர்கள் விற்பனை 100% அதிகரித்திருப்பது இந்த பிரச்னையின் பரிணாமத்தை இன்னொரு கோணத்தில் உணர்த்துகிறது.

அமைச்சரின் அறிக்கைகளும் புள்ளிவிவரங்களும் அந்தநேரச் சமாதானத்துக்கு வேண்டுமானால் பயன்படலாமே தவிர, பிரச்னையை தீர்க்க உதவாது. நடுநிலைமையுடன் ஆலோசனை கூறக்கூடிய நிபுணரை நியமித்து, உரிய பரிந்துரையைப் பெற்று, அதை மின்னல் வேகத்தில் செயல்படுத்துவது ஒன்றே தமிழக அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

—————————————————————————————————————————————————

தமிழகத்தை வாட்டும் மின்வெட்டு!

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

பொன்விழா கொண்டாடிய தமிழ்நாடு மின்சார வாரியம், ஒரு காலத்தில் தேவைக்கு அதிகமாக மின்உற்பத்தி செய்து பிற மாநிலங்களுக்கு விற்று லாபம் ஈட்டியது. இன்றைக்குத் தமிழகம் தனக்குத் தேவையான மின்சாரம் கிடைக்காமல் அல்லல்பட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மின் வெட்டாலேயே மக்களுக்கு ஷாக் அடிக்கிறது. விவசாயிகள் மட்டுமல்ல, ஆலைத் தொழிலாளிகள், தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் எனச் சகலரும் பாதிக்கப்படுகின்ற நிலை. விவசாயிகள் எந்த நேரம் மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு தங்களுடைய பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச தூக்கமும் உணவும் இல்லாமல் பம்ப்செட் அருகே காத்துக் கிடக்கின்ற நிலைமை. இரவு நேரங்களில் மின்சாரம் வந்தாலும் பாம்புகளுக்கும், நட்டுவாக்களிகளுக்கும் பயப்படாமல் கடும் இருட்டிலும் பாடுபடுகின்ற நிலையில் இன்றைக்கு விவசாயிகள் இருக்கின்றனர். வியர்வை சிந்தி வியர்வையை அறுவடை செய்யும் விவசாயிக்குப் பலமுனைத் தாக்குதல்கள். விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு விலை இல்லை. உரத்தட்டுப்பாடு. இதற்குமேல் மின்வெட்டு. தலைநகர் சென்னையில் மின்சாரம் கிடைத்தாலும் மற்ற பகுதிகளில் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இதற்கு மேல் அரசுப் பரிவாரங்கள் பகலில் ஆலையை இயக்காமல் இரவில் ஆலைப் பணிகள் நடக்கட்டும், வாரத்திற்கு ஒரு நாள் ஆலையின் இயந்திரச் சக்தியை நிறுத்திவிடுங்கள் என்று கூறும் ஆலோசனைகள். இதெல்லாம் ஆலைகளில் பணியாற்றிவரும் தொழிலாளிகளுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் பெரும் கேடு ஏற்படுத்தும்.

தமிழகத்தில் 10,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 55 சதவீதம் தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும், 28 சதவீதம் மத்திய அரசு உற்பத்தி நிலையங்களில் இருந்தும், 11 சதவீதம் தனியார் மூலமும், 3.5 சதவீதம் வெளிமாநிலங்களில் இருந்தும் கிடைக்கிறது. காற்றாலையின் மூலம் 3,000 மெகா வாட் தற்பொழுது கிடைக்கிறது.

இப்படி இருக்க, மின்வெட்டு, மின் தட்டுப்பாடு ஏன் என்று தெரியவில்லை. அதற்குக் காரணம் தமிழக அரசின் மெத்தனப் போக்கே ஆகும். பல ஆண்டுகளாக மின் உற்பத்தி மற்றும் விநியோகம் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் சரிசெய்யப்படவில்லை. பழுதுபட்ட இயந்திரங்களைத் திரும்பத் திரும்ப ஓட்டுவது, இயந்திரங்கள் பராமரிப்பில் சரியான கட்டுப்பாடு இல்லாதது, இந்தப் பணியில் நிரப்பப்பட வேண்டிய பொறியாளர்கள், பணியாளர்கள் நிரப்பப்படாமல் இருப்பது, இதற்குமேல் பல்துறை பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்துக்குப் படையெடுத்ததனால் மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தகவல், தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களுக்குத் தடையின்றி மின்சாரம் வழங்க பல ஒப்பந்தங்கள் தொடர்ந்து கையொப்பமிடப்படுகின்றன. அதற்கேற்ப உரிய திட்டங்கள் இல்லை. 120 தொழிற்பூங்காக்களுக்கு மட்டுமே 700 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட குளறுபடிகளால்தான் இந்தத் தட்டுப்பாடு.

சில ஆண்டுகளுக்கு முன்னால் 0.4 சதவீத மின் உற்பத்தி தனியாரிடம் இருந்தது. தற்பொழுது தனியார் உற்பத்தி 28.18 சதவீதமாக உயர்ந்து விட்டதால் இதற்கான கட்டணங்களும் பன்மடங்கு உயர்ந்துவிட்டன. ஆண்டுக்கு ஒருமுறை மின்சாரத்தை வாங்க 12,016 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்து தமிழக அரசு கொடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளது. விவசாயம் மட்டும் இல்லாமல் நெசவுத் தொழிலும், விசைத்தறிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டம் போன்ற பகுதிகளில் சாதாரண நெசவாளிகள் தத்தளிக்கின்றனர். திருப்பூர் பின்னல் ஆடைதொழில்கூட ஓரளவுதான் ஜெனரேட்டர்களைக் கொண்டு இயங்க முடிகிறது. விசைத்தறி நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் மின்தடையால் உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கொங்கு மண்டலத்திலுள்ள ஆலைகள், நூற்பாலைகளில் எட்டு மணிநேரம் மின்வெட்டு உள்ளது என்று செய்திகள் வருகின்றன. திருப்பூரில் மட்டும் மின்வெட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். மின்சாரப் பாதிப்பால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. தாமிரபரணியில் இருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்ற மானூர் கூட்டுக் குடிநீர்த் திட்டமும் செயல்படாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல் இழந்து உள்ளன.

1991-இல் மின்துறையில் தனியார் மற்றும் அன்னிய மூலதனம் 25 சதவீதத்தை எட்டியது. அதில் ஐந்து மாநிலங்கள் குறிப்பிடும் அளவுக்கு ஆர்வத்தைச் செலுத்தின. மகாராஷ்டிரம் முதலிடமும் தமிழகமும் கர்நாடகமும் அதற்கு அடுத்த இடங்களையும் பிடித்தன. தமிழ்நாட்டில் மட்டும் இதற்காக முடக்கப்பட்ட மூலதனத்தின் பங்கு 8 சதவீதம்.

1995இல் ஒரிசா மாநிலத்திலும் 1998இல் ஆந்திர மாநிலத்திலும் மின்சாரக் கட்டுப்பாடு குழுமங்கள் அமைக்கப்பட்டன. இவை மின் விநியோகத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து அவற்றைத் தனியாருக்கு விற்கின்ற திட்டங்கள் தொடங்கப்பட்டன. இது தொடர்பான தனியார் அன்னிய மூலதனம் போன்றவற்றில் மின்துறை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஒழுங்குபடுத்தும் சட்டத்தை 2006 மார்ச் மாதம் மத்திய அரசின் மின் அமைச்சகம் கொண்டு வந்தது. தமிழகம் இன்று சுமார் 17 கோடி குறைந்த அழுத்த மின் பயனீட்டாளர்களையும், சுமார் 6,000 உயர் அழுத்த மின் பயனீட்டாளர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 45 லட்சத்து 22 ஆயிரம் பேர் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தமிழ்நாடு மின் வாரியத்தின் மொத்தத்தில் 58 சதவிகிதத்தை வழங்குபவர்களாக இருக்கிறார்கள். மகாராஷ்டிரத்தை அடுத்து மின்வாரியத்தில் பணியாற்றுகிறவர்கள் இங்குதான் அதிகம். 94 ஆயிரம் பேர் மின்வாரியத்தில் பணியாற்றுகிறார்கள்.

2003 – 2004 மின் கட்டுப்பாடுக் கழகத் தகவலின்படி யூனிட் விற்பனை கீழ்க்கண்டவாறு உள்ளது.

புனல் மின்சாரம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 0.59, தமிழ்நாடு மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.09, மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இருந்து அவசரத்திற்கு வாங்கிய மின்சாரம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.17, மத்திய அரசின் அனல் மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.22, பி.பி.என். பவர் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.56, தனியார் காற்றாலை யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.70, அணுமின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.71, கரும்புச் சக்கை யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.87, தமிழ்நாடு மின்வாரியத்தின் எரிவாயு மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 3.09, தனியார் அனல்மின் நிலையம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 3.99, தனியார் எரிவாயு மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 4.65

2003 – 2004இல் வசூல் கட்டணம் ரூ. 10,545 கோடி. மானியமும் ஏனைய வருமானங்களும் மொத்தத்தில் ரூ. 477 கோடி. அந்த ஆண்டின் இழப்புத் தொகை ரூ. 2,743 கோடி. இதனால் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரைகள் எழுந்தன. அந்த ஆண்டின் இழப்பை ரூ. 663 கோடியாகக் குறைக்க வேண்டும் என்பதற்காக மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் மின்வாரியம் மின்சாரம் வாங்குவதற்கு 49 சதவீதமும், எரிபொருளுக்கு 24 சதவீதமும், வட்டிக்கு 7 சதவீதமும், பராமரிப்புக்கு 12 சதவீதமும் ஏனைய மற்ற செலவுகள் 8 சதவீதமுமாக மின்வாரியத்தில் செலவுக் கணக்கு இருந்தது.

தனியார்மயத்தில் 2007 வரை ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட்டு இன்றைக்கு பல தனியார்கள் மின் உற்பத்தித் துறையில் தங்கள் கால்களைப் பதிக்க அரசிடம் அணுகி உள்ளனர். 2003 – 2004 கணக்கின்படி ஒரு யூனிட்டுக்கு தனியாரிடம் இருந்து பெற்ற மின்சாரத்தின் விலை, தமிழ்நாடு மின் வாரியத்துக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களில் தயாரித்த மின்சாரத்தின் விலையைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்காக இருந்தது. இப்படித் தேவையில்லாமல் அதிகப்படியான செலவுகளை அரசு தனது தவறான அணுகுமுறையால் செய்ய வேண்டியுள்ளது. 1999-வது ஆண்டின்படி 2,564 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய தனியாருக்கு அனுமதி கொடுக்கலாம் என்ற நிலை வந்தால் தமிழக மின்வாரியம் கடனாளியாகி, திவாலாகி கதவைச் சாத்த வேண்டிய நிலைக்குத்தான் தள்ளப்படும் என்ற பரிந்துரையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோதும் அரசு மெத்தனமாக இருந்துள்ளது. 2001-ஆம் ஆண்டில் தனியார் மின்நிலையங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 2.25-க்கு மேல் தரமுடியாது என்று அரசு அறிவித்ததற்கு தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் கடுமையாகப் போராடின.

இவ்வாறு பல எச்சரிக்கைகள், அறிக்கைகள் மூலம் தனியார் மயமாக்கப்படுவது சரியில்லை என்று தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்பட்டும் பாராமுகமாக இருப்பது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு மின்சாரக் கட்டுப்பாடுக் கழகத்தை எதிர்த்து இரண்டு வழக்குகள் தொடுத்தார். தனியார் நிறுவனங்களான பன்னாட்டு நிறுவனத்துக்கு நிதியமைச்சரின் துணைவியார் நளினி சிதம்பரம் வாதாடினார். இறுதியில் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மின்சார விலையைக் குறைக்க வேண்டும் என்பதே தீர்ப்பாக அமைந்தது.

தனியார் புகுந்ததால் பல சிக்கல்கள் ஏற்பட்டன. நெய்வேலியை ‘ஞ’ யூனிட் நடத்தி வரும் எஸ்.டி.சி.எம்.எஸ்., சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏசியா பிரௌன் பொவேரி, அமெரிக்காவின் சி.எம்.எஸ். போன்ற பன்னாட்டு மின் உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளை லாபத்துக்கு விற்கத் திட்டமிட்டாலும் முடியாமல் 2007-இல் ஒரு சில நிறுவனங்களை அபுதாபி நேஷனல் எனர்ஜி என்ற அமைப்புக்கு விற்றுவிட்டன. மகாராஷ்டிரத்தில் என்ரான் போன்று கொள்ளை அடிக்க முடியவில்லை என்ற விரக்தியில் ஒரு சில நிறுவனங்கள் விட்டுவிட்டு ஓடிவிட்டன. இப்படிப் பல நிறுவனங்கள் கால் வைத்ததும், மின்துறையில் நமக்கு ஏற்பட்ட பாதகங்களாக அமைந்துவிட்டன.

உத்தேசிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டதுதான் இந்தப் பற்றாக்குறைக்கு ஒரு காரணம்.

அத்திட்டங்கள்:

1. தூத்துக்குடியின் தமிழ்நாடு மின்சார வாரியமும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து 1,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க திட்டங்கள் இருந்தபொழுதும் அதை நிறைவேற்றக்கூடிய வகையில் விரைவான செயல்பாடுகள் இல்லை.

2. ஜெயங்கொண்டான் தமிழ்நாடு மின்வாரியம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இணைந்து 500 மெகா வாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

3. குந்தாவில் 500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய அளவில் திட்டங்கள் இருந்தபொழுதும் தமிழ்நாடு மின்சார வாரியம் அதைக் கவனிக்காமல் இருக்கிறது.

4. நெல்லை மாவட்டம் உடன்குடியில் 1,500 மெகா வாட் உற்பத்தி செய்யும் நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டுகிறது.

5. வடசென்னை மின்உற்பத்தி நிலையத்தில் இருந்து மேலும் 600 மெகா வாட் உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் இருந்தும் அதற்கான செயல்பாடுகள் இல்லை.

6. இதேபோன்று மேட்டூரிலும் 500 மெகா வாட் மின் உற்பத்தி அதிகரிக்கக்கூடிய சூழல் இருந்தும் தமிழ்நாடு அரசு பாராமுகமாக இருக்கிறது.

7. கோயம்பேடில் அன்றாடம் கிடைக்கின்ற காய்கறிக் கழிவில் இருந்து மரபுசாரா எரிசக்தி மூலம் 550 மெகா வாட் கிடைக்கக்கூடிய அளவுக்கு மின்உற்பத்தி செய்யலாம் என்ற திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.

8. தமிழகத்தில் உள்ள காற்றாலைகளுக்குத் தேவையான காற்று வீசவில்லை என்ற காரணத்தால் உரிய உற்பத்தி இல்லை என்று தமிழக அரசு குறிப்பிட்டாலும், இத்துறை தனியார் வசம் இருப்பதால் அதற்குத் தேவையான வசதிகளையும் கட்டுப்பாடுகளையும் அரசு செய்யாததால் காற்றாலைகள் மின்உற்பத்தி பின்தங்கியுள்ளன.

9. சூரியவெப்பம், கடல் நீர், நிலக்கடலைத் தோல் போன்றவற்றில் இருந்து மின் உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளை அறிய வேண்டும்.

காற்றாலைகள் மூலம் 3626 மெகாவாட், சர்க்கரை ஆலைக் கழிவுகள் மூலம் 213 மெகாவாட், தாவரங்கள் மூலம் (பயோமாஸ்) 99 மெகாவாட், குப்பைகள் மூலம் 4.25 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று திட்டமிடப்பட்டது.

மரக்காணத்தில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நீர்மின் குழுமம் மூலம் காவிரி புனல்மின் திட்டம், ஓகேனக்கல் புனல்மின் திட்டம் அமைக்கவும் இதன்மூலம் 390 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. காவிரிப் பிரச்னையைப் போல் இதிலும் கர்நாடகம் மூக்கை நுழைக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூரில் அமைக்க இருந்த மின் உற்பத்தித் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட்டுவிட்டது.

பல அணைகள் நிரம்பி இருந்தபொழுதும் மின்உற்பத்தி எப்படி முடங்கியது என்று தெரியவில்லை. அதைச் சரிசெய்ய அரசு கவனம் செலுத்தவில்லை.

தொலைநோக்குப் பார்வை இல்லாமல் மின்துறை சீரழிவை நோக்கிச் செல்கிறது.

Posted in Agriculture, Arcot, Commerce, Consumption, Distribution, DMK, Economy, Electricity, energy, Exports, Farmers, Farming, Finance, Fuels, Generation, Generators, Govt, Impact, Impacts, Industry, Inefficiency, Inverters, Kalainjar, Karunanidhi, Megawatts, MK, Motors, MW, NLC, Power, Power cut, Power Cuts, Powercut, Powercuts, Production, SEZ, Stalin, Sufficiency, Veerasamy, Water | 1 Comment »

Raman Raja: Science & Technology – New Inventions and Innovations: Research and Developments for Practical use

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2007

நெட்டில் சுட்டதடா…: ஆசையைத் தூண்டும் மேசை!

ராமன் ராஜா – தினமணிக் கதிர்

2007 – ம் ஆண்டின் மிகச் சிறந்த விஞ்ஞான, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் எவை என்று பாப்புலர் சயன்ஸ் இதழ் பட்டியல் இட்டிருக்கிறது. அதிலிருந்து சில மாதிரிகள்:

* சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றும் விஞ்ஞானம், ஐன்ஸ்டைன் காலத்திலிருந்தே இருந்து வந்தாலும், இன்னும் பரவலான உபயோகத்துக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்த சோலார் செல்லுக்குச் செலவு அதிகம்; கண்ணாடித் தகடுகளில் சிலிக்கன் சில்லுகளைப் பொருத்த வேண்டியிருப்பதால், அதைத் தயாரிப்பதும் கையாள்வதும் கடினமாக இருக்கிறது. எனவே இந்தியா போன்ற நாடுகளில் அபரிமிதமாகக் கிடைக்கும் சூரிய சக்தி அனைத்தும் ஜவ்வரிசி வடகம் , வத்தல்கள் காய்வதற்கு மட்டுமே உபயோகமாகிறது. இப்போது நானோ டெக்னாலஜியின் உதவியால் மெல்லிய அலுமினியக் காகிதத்தில் செய்தித்தாள் மாதிரி சோலார் செல்களை அச்சிடும் முறையைக் கண்டுபிடித்துவிட்டார்கள். இந்த ஒரு கண்டுபிடிப்பினால் சோலார் தொழில்நுட்பமே கொள்ளை மலிவாக ஆகிவிட்டது. இனி கட்டடங்களின் கூரை, சுவர் எல்லாவற்றையும் சோலார் காகிதத்தால் போர்த்தி மூடிவிடலாம். கலிபோர்னியாவில் பத்து லட்சம் வீடுகளில் சூரிய ஒளி சேகரிப்புத் திட்டம் கொண்டு வரப் போகிறார்கள். இந்தக் கட்டடங்களில் வசிப்பவர்கள் எல்லாருக்குமே இந்திய விவசாயிகள் மாதிரி இலவச மின்சாரம் கிடைக்கும்!

* எப்போதோ, எங்கேயோ கேட்ட ஒரு பழைய பாட்டின் டியூன் லேசாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் பாடலின் முதல் வரியோ, பாடியவர் பெயரோ சுத்தமாக நினைவில்லை. அந்தப் பாட்டை இப்போது மறுபடி கேட்க ஆசைப்பட்டால் எப்படித் தேடுவது? இதற்காக நான்கு கல்லூரி மாணவர்கள், படிப்பை விட்டு விட்டுப் பல காலம் ஆராய்ச்சி செய்து ஒரு மென்பொருள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நம் கம்ப்யூட்டரின் மைக்கை இவர்களின் இணைய தளத்தில் இணைத்துக் கொண்டு பாத்ரூமில் பாடும் பாணியில் பாட்டை முனகியோ, விசிலடித்தோ காட்டினால் போதும். முழுப்பாட்டையும் தேடிக் கொண்டு வந்துவிடும்! கேட்பதற்கு சுலபமாகத் தோன்றினாலும் இதற்குக் கம்ப்யூட்டர் இயலின் உத்தமமான டி.எஸ்.பி. தொழில் நுட்பங்கள் தேவை. பெரிய பெரிய இன்னிசைக் கம்பெனிகளாலேயே செய்ய முடியாமல் இருந்து வந்த விஷயம் இது.

ஹில்லாரி டாஃப், ஜான் லென்னன் போன்றவர்களின் இரண்டு லட்சம் பாடல்கள் இருக்கின்றன. எனக்குப் பிடித்த ஏசுதாஸ் பாட்டு ஏதாவது இருக்கிறதா என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டு பாடிப் பார்த்தேன். அகப்படவில்லை. (அந்தக் காலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் சொந்தமாகத்தான் இசையமைத்திருக்கிறார் என்று தெரிகிறது)

* பிரம்மன் மாதிரி முப்பரிமாணப் பொருள்களைப் படைக்கும் பிரின்டர் ஒன்று வந்திருக்கிறது. ஒரு மைக்ரோவேவ் அடுப்பு போலத்தான் சின்னதாக இருக்கிறது. நமக்கு வேண்டிய பொருளின் பிம்பத்தை கம்ப்யூட்டரில் வடிவமைத்துவிட்டு ஒரு பொத்தானைத் தட்டினால், அந்தப் பொருளை அப்படியே ப்ளாஸ்டிக்கில் வனைந்து கொடுத்துவிடும். இந்தப் பிரிண்டரை உபயோகித்து இயந்திர பாகங்களின் மாடல்கள், பொம்மைகள், சின்ன சிற்பங்கள் எதை வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம். இந்தப் பிரிண்டரில் அரிசி உளுந்தைப் போட்டால் இட்லி செய்துதரும் மாடல் வரும்போது , உடனே வாங்கலாம் என்றிருக்கிறேன்.

* உலகத்தில் அழிவே இல்லாதவை இரண்டு: ஒன்று, அரசாங்கத்தில் ஊழல், மற்றது பிளாஸ்டிக். வருடா வருடம் சேரும் 30 ஆயிரம் கோடி டன் பிளாஸ்டிக் குப்பைகளை என்ன செய்வது என்பது உலகத்தின் 21 ம் நூற்றாண்டுக் கவலைகளில் முக்கியமானது. இதற்குத் தீர்வாக மிரெல் என்று உயிரியல் பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மக்கா சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக்கை மண்ணில் புதைத்தால் மக்கிப் போய் உரமாகிவிடும். சோளத்தில் இருக்கும் சர்க்கரைப் பொருள்களை பிளாஸ்டிக்காக மாற்றித் தருவது, மரபீனிகள் மாற்றப்பட்ட ஒரு பாக்டீரியா. நம் வயிற்றில் சாதாரணமாகக் காணப்படும் சீதபேதி பாக்டீரியாதான்!

* இந்தக் கண்டுபிடிப்பை இந்தியாவில் சிறு தொழில் பேட்டை சர்தார்ஜி யாராவது முயன்று பார்க்கலாம்: ஒரு ஏர் கண்டிஷனர். அதனுடன் கங்காருக் குட்டி மாதிரி ஒட்டிக் கொண்டு ஒரு ஃப்ரிட்ஜ். அதற்குள் ஒரு முன்னூறு காலன் தண்ணீர்த் தொட்டி. இரவு நேரத்தில் சில்லென்று அப்படியே ஐஸ் பாறையாக மாறும். பகல் நேரம் முழுவதும் பனிக் கட்டி மெல்ல உருகிக் கொண்டே வரும். ஏஸியின் குளிர்க் குழாய்களைச் சுற்றி இந்த ஐஸ் போர்வை இருப்பதால் அறை நன்றாகக் குளிர்வதுடன் மின்சாரமும் 20 சதவிகிதம் மிச்சமாகிறது.

* உலகத்திலேயே உயரமான குடியிருப்புக் கட்டடம், சிகாகோவில் அவர்கள் கட்ட ஆரம்பித்திருக்கும் ஸ்பயர் என்ற ஊசிமுனைக் கோபுரம். இரண்டாயிரம் அடி உயரம் . ஆயிரக்கணக்கான ஃப்ளாட்கள். முதல் ஆறு மாடியும் கார் பார்க்கிங். மேல் மாடியில் இருந்து பார்த்தால், தொடு வானத்தில் பூமியின் வளைவு தெரியும்!

ஸ்பயரின் சிறப்பு, வழக்கமான சதுர டப்பா அபார்ட்மென்ட்கள் போல இல்லாமல், கட்டடமே ஒரு ஸ்க்ரூ ஆணி போன்ற முறுக்கின டிசைனில் இருக்கிறது. புயல் காற்றே அடித்தாலும் கட்டடத்திற்குப் பாதிப்பு இருக்காது. காற்றின் வேகம் முழுவதும் திருகாணியில் சுழன்று மேல் பக்கமாகப் போய்விடும். கட்ட ஆரம்பிக்கும் முன் பூமி பூஜை, ரிப்பன் வெட்டல், பொன்னாடை போர்த்தல் ஏதுமில்லை. திடீரென்று ஒரு நாள் ஆட்களுடன் மேஸ்திரி வந்தார். தோண்ட ஆரம்பித்தார். அவ்வளவுதான். பிளேன், கிளேன் எதுவும் வந்து மோதிவிடக் கூடாதே என்று வேண்டிக் கொண்டு ஒரு தேங்காயாவது உடைத்திருக்கக் கூடாதோ?

* இன்னும் பல விந்தைகள் இருக்கின்றன. விபத்தில் கையை இழந்தவர்களுக்காக, மனித விரல்கள் போலவே தத்ரூபமாக மடக்கிப் பிரிந்து, பரத நாட்டியம் முத்திரை பிடிக்கும் செயற்கைக் கை. ஒரு தண்ணீர் டம்ளர் சைúஸ இருக்கும் செயற்கை நுரையீரல். பழைய ஓட்டை உடைசல் கார் டயர், ப்ளாஸ்டிக்கையெல்லாம் மைக்ரோ வேவ் அடுப்பில் காய்ச்சி, அதிலிருந்து சமையல் எரி வாயு தயாரிக்கும் இயந்திரம். விமானப்படை வீரர்களுக்காக, தலையைத் திருப்பாமலே பின்பக்கமும் பார்க்க உதவும் ஹெல்மெட். நாறாத பெயின்ட்…என்று துறை வாரியாக நிறையக் கண்டுபிடிப்புகள்.

*இந்தப் பட்டியலிலேயே என்னுடைய தனிப்பட்ட செல்லப் பிராணி, மைக்ரோசாப்ட் தயாரித்திருக்கும் சர்ஃபேஸ் கம்ப்யூட்டர் என்ற மேசை மேற்பரப்புக் கணினி. ஒரு கண்ணாடி மேஜை. அடியில் கம்ப்யூட்டர். மேஜையின் மேற்பரப்புதான் கம்ப்யூட்டர் திரை. மேஜையின் விரலால் தொட்டால் கம்ப்யூட்டருக்குப் புரியும். ஓவியர்கள் மேஜைத் திரையில் வெறும் பிரஷ்ஷால் தீற்றிப் படம் வரைய முடியும். வண்ணக் கலவையெல்லாம் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்தான்! நாலு நண்பர்கள் சேர்ந்தால் மாயச் சீட்டுக் கட்டுகளை மேஜை மீது பரத்திக் கொண்டு சீட்டாடலாம். ஆட்டத்திற்கு ஒரு கை குறைந்தால் கம்ப்யூட்டரே விளையாடும்.

இந்த மேஜையின் புதுமை என்னவென்றால், தன் மீது வைக்கப்படும் பொருட்களை அதனால் உணர முடியும். உதாரணமாக டேபிள் மீது ஒரு டிஜிட்டல் காமிராவை சும்மா வைத்தாலே போதும். நாம் எடுத்த படங்களையெல்லாம் டவுன்லோடு செய்து மேஜை பூராவும் இறைத்து விடும். போட்டோக்களை விரலால் தொட்டுத் திருப்பலாம். இழுத்துப் பெரிதாக சிறிதாக ஆக்கலாம். போட்டோவில் நம் முகத்தில் ஏதாவது செய்து சீர்திருத்தவும் முடியும். அதேபோல் ஒரு செல்போனை இந்த மேஜை மீது வைத்தால், ப்ரீ பெய்ட் கார்டில் பணம் குறைந்துவிட்டதைப் புரிந்து கொண்டு தானாகவே பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொடுத்துவிடும்.

ஹோட்டல்களில் சாப்பாட்டு மேஜைதான் மெனுகார்ட். எதிரில் ஆள் உட்கார்ந்ததுமே, பன்னீர் பட்டர் மசாலாவின் ஜொள்ளு சொட்டும். வண்ணப்படங்களைக் காட்டிச் சபலப்படுத்தும். நாம் ஒரு மெது வடையின் படத்தை மெதுவாக விரலால் தொட்டால் போதும், ஆர்டரைப் பதிவு செய்து கொண்டு விடும். சாப்பிட்ட பிறகு கிரெடிட் கார்டை எடுத்து மேஜை மீது வைத்தால், பில்லுக்குப் பணம் பிடுங்கிக் கொண்டு நன்றி தெரிவிக்கும்.

இப்போது என் கவலையெல்லாம், ஹெடெக் மேஜை மேல் சாம்பார் சிந்திவிடாமல் சாப்பிட வேண்டுமே என்பதுதான்.

Posted in Audio, Buildings, Chicago, Civil, computers, Computing, Conservation, Construction, Design, designers, Development, DSP, Electricity, energy, Environment, Find, Fuels, Hardware, Hitech, Innovations, Invent, Invention, M$, Microsoft, MP3, MS, music, Nano, Nanotech, Nanotechnology, Natural, Palm, Plastics, Pollution, Power, R&D, Recycle, Research, RnD, Science, Solar, Songs, structures, Surface, Tall, Tech, Technology, Touch, Touchscreen | Leave a Comment »