பரிமளத்தைப் பறிகொடுத்தோம்
இரா. செழியன்
அறிஞர் அண்ணாவின் மகன் பரிமளம் திடீரென மறைந்தது என்னைப் போன்றோர்க்கு சோகம் மிக்க தாங்கொணாத அதிர்ச்சியைத் தந்துள்ளது.
1944இல் அண்ணாவுடன் நான் முதலில் காஞ்சிபுரம் சென்றபொழுது பரிமளம் மூன்று வயதுச் சிறுவனாக இருந்தான். அவனுடைய தம்பிமார்களாக இளங்கோவன், கௌதமன், பாபு ஆகியோர் இருந்தனர். பரிமளம் அண்ணாவினாலும், எங்களாலும் “பரி’ என்று அன்புடன் அழைக்கப்பட்டான். உற்சாகமான, பொறுப்புள்ள மகனாக, மாணவனாக, பிறகு மருத்துவராக பரிமளம் வளர்ந்தான். அண்ணா ஈடுபடும் ஒவ்வொரு காரியத்திலும், “திராவிட நாடு’ இதழாக இருந்தாலும், நூல் வெளியீடாக இருந்தாலும், அண்ணாவின் நாடகமாக இருந்தாலும், ஒவ்வொன்றிலும் பரிமளத்தின் பங்கு இல்லாமல் போகாது.
மலேசியா, சிங்கப்பூர், கிழக்கு நாடுகளுக்கு அண்ணாவுடன் நானும் சென்றிருந்தபொழுது, அங்கிருந்து அவனுக்காக ஒரு “ஸ்டெதாஸ்கோப்’ வாங்கி வந்தோம். பரிமளம் அப்பொழுது மருத்துவக் கல்லூரியில் மாணவன். அவன் டாக்டராக ஆவதில் அண்ணாவுக்குப் பெரும் மகிழ்ச்சி. பரிவும், பண்பும், பாசமும், நேசமும் உள்ள ஒருவராகவே பரிமளம் வளர்க்கப்பட்டார். அவரும் வளர்ந்து வந்தார்.
அண்ணாவின் காலத்திலேயே பரிமளம் அரசியல் கட்சியில் நேரடியாக ஈடுபாடு காட்டவில்லை. அண்ணாவும் அந்த முறையில் அவரை வளர்க்கவில்லை. அண்ணா முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு கூட நான்கு மாதங்கள் கழித்துத்தான் சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள அண்ணாவின் அறைக்குப் பரிமளம் சென்றார். அரசாங்க நிர்வாகத்திலும், அதிகாரிகளிடமும் எந்த வகையிலும் அவர் தொடர்பு கொண்டதில்லை.
அண்ணா மறைந்த பிறகு, ஓரிரு ஆண்டுகள் அண்ணாவின் பிறந்த நாள், நினைவு நாள் ஆகிய நிகழ்ச்சிகளின்பொழுது, நானும் கடற்கரைக்கு மற்ற கழகத் தலைவர்களுடனும், தோழர்களுடனும் சென்று அண்ணாவின் சமாதி முன் அஞ்சலி செலுத்துவதுண்டு. ஆனால், வர வர சமாதிக்குச் செல்லும் ஊர்வலத்தில் முந்திச் செல்வதற்கும், முன் நிற்பதற்கும் நடைபெறும் நெருக்கடியை என்னால் ஈடுகொடுக்க முடியாமல் அவ்வாறு செல்வதை நான் தவிர்த்துக் கொண்டேன். ஆனால், ஒவ்வோராண்டும் அண்ணாவின் பிறந்த நாள் – நினைவு நாள் அன்று அண்ணி ராணி அம்மையாரைக் காண பரிமளம் அல்லது இளங்கோவன் இல்லங்களுக்குச் சென்று வருவேன். அண்ணா வாழ்ந்த இடத்தில் அவர்களுடன் இருந்தவர்களைக் காண்பதில், அண்ணாவைப் பற்றிப் பேசுவதில் ஒருவகை ஆறுதல் இருந்தது.
ராணி அம்மையார் மறைந்த பிறகு, ஆண்டுதோறும் அண்ணாவின் பிறந்த நாள், நினைவு நாள் அன்று நுங்கம்பாக்கம் அவென்யு சாலையிலுள்ள அண்ணாவின் தாயகத்திற்குத் தவறாமல் சென்று பரிமளத்தையும், அவர் குடும்பத்தினரையும் நான் காண்பது வழக்கம். பரிமளம் ஒரு முறை கூறினார்: “”நான் கூட அண்ணா சமாதிக்கு இப்பொழுது செல்வதில்லை.”
அண்ணாவின் கட்டுரைகள், கதைகள் ஆகியவற்றில் பல வெளியிடப்படாமல் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அவற்றையெல்லாம் சேகரித்து வெளியிடுவதில் பரிமளம் ஈடுபட்டிருந்தார்.
புதைந்து கிடக்கும் வரலாற்றுச் சான்றுகளைத் தேடி எடுக்கும் அகழ்வாராய்ச்சியாளர்களைப் போல, மறைந்து கிடக்கும் அண்ணாவின் இலக்கியப் படைப்புகளை வெளிப்படுத்துவதில் அரிய அகழ்வாராய்ச்சியாளராக பரிமளம் விளங்கினார். அதன் விளைவாக, இதுவரை மறைந்து கிடந்த அண்ணாவின் பல கட்டுரைகள், பேச்சுகள் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன.
சென்ற மாதம் அண்ணா நினைவு நாளன்று வழக்கம்போல் அவரது இல்லத்தில் பரிமளத்தைச் சந்தித்தேன். அப்பொழுதும் இதுவரை வெளிவராமல் உள்ள அண்ணாவின் கட்டுரைகளைத் திரட்டி வெளியிடுவது பற்றி ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் அவர் பேசினார்.
அண்ணாவின் குடும்பத்துடன் கலந்திருந்த நம்மில் பலருக்கு பரிமளத்தின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அன்னாரைப் பிரிந்து துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.