சரத் பவார் பிரதமர் ஆக முடியுமா?
நீரஜா செüத்ரி – தமிழில்: லியோ ரொட்ரிகோ
கடந்த வாரம் பிரிட்டனின் பிபிசி வானொலிக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார். அதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை வெகுவாகப் புகழ்ந்திருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு சோனியா ஆற்றியுள்ள சேவையையும், அவரது துணிச்சலையும் இந்திய நாட்டின் பிரச்சினைகளை அவர் புரிந்துகொண்டிருப்பதையும் பவார் பெரிதும் பாராட்டியிருந்தார். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறியதால் தான் “ஒரு விலையைக் கொடுக்க’ நேர்ந்தது என்று அவர் ஒப்புக்கொண்டுமிருந்தார்.
மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பவாரின் கட்சியும் அங்கம் வகிக்கிறது; மத்திய வேளாண் துறை அமைச்சராகவே இடம்பெற்றுள்ளார் பவார். எனவே, சோனியாவை அவர் புகழ்ந்து பேசியிருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்த வேண்டிய காரணம் ஏதும் இல்லை. ஆனால், அதற்கு மாறாக, அவரது பேட்டிக்குப் பலப்பல அர்த்தங்கள் கூறப்படுகின்றன.
நேரு ~ காந்தி குடும்பத்தினருடன் பவாருக்கு அவ்வளவு சுமுக உறவு இருந்ததில்லை. வெளிநாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட சோனியா எப்படி நமது நாட்டின் பிரதமர் ஆகலாம் என்று கேள்வி எழுப்பியதன் காரணமாக காங்கிரûஸ விட்டு வெளியேறியவர் பவார். இருந்தபோதிலும் மகாராஷ்டிரத்திலும் தேசிய அளவிலும் மக்கள் அளித்த தீர்ப்பைப் புரிந்துகொண்டு பக்குவத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார். இந் நிலையில், சோனியாவைப் புகழ்ந்து பவார் பேசியிருப்பது பல ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
ஒன்று: காங்கிரஸ் கட்சியில் அவர் மீண்டும் இணைவதற்கான அடித்தளத்தை அமைக்கவே அவர் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால், இது முற்றிலும் ஏற்புடையதாக இல்லை. மகாராஷ்டிரத்தில் சிவ சேனைக் கட்சி பிளவுபட்டு, பால் தாக்கரேயின் செல்வாக்கு சரிந்துகொண்டு இருக்கும் நிலையில், மாநிலத்தின் தனிப் பெரும் தலைவராக உயர்ந்து நிற்பவர் சரத் பவார் மட்டுமே ஆவார். தேசியவாத காங்கிரஸ் என்றாலே சரத் பவார்தான். மிகப் பெரும் செல்வாக்குடனும் தனித்துச் செயல்படும் சுதந்திரத்துடனும் இருக்கும் அவர், மீண்டும் காங்கிரஸில் இணைய வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.
இரண்டு: மும்பை மாநகராட்சித் தேர்தல் வரவிருப்பதால், அதை மனத்தில் கொண்டு சோனியாவை அவர் புகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கேரளத்தின் பட்ஜெட்டுக்குச் சமமான வரவு ~ செலவுகளைக் கொண்டதாக மும்பை மாநகராட்சி இருக்கலாம்; ஆனால், மாநகராட்சி அரசியலைக் கடந்த பெரிய தலைவராகிவிட்டார் பவார்; எனவே, சிவசேனை ~ பாஜக கூட்டணியிடமிருந்து மும்பை மாநகராட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸிடமிருந்து ஒருசில சீட்டுகளை அதிகம் பெறுவதற்காக பவார் அவ்வாறு பேசியிருப்பார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம்.
மூன்று: அண்மையில் மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது மகள் சுப்ரியா சுலேவின் அரசியல் எதிர்காலத்தை மனத்தில் வைத்து சோனியாவை பவார் புகழ்ந்து பேசியிருக்கலாம் என்னும் கருத்து. தேசியவாத காங்கிரஸ் போன்ற பிராந்தியக் கட்சிக்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்வது சுப்ரியாவுக்குப் பெரும் சவாலான பிரச்சினை. அதோடு, இத்தனை ஆண்டுகளாக சரத் பவாரால் வளர்த்து உருவாக்கப்பட்டுள்ள அவரது சகோதரர் மகன் அஜீத் பவாருக்கும் கட்சியில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. அதிகாரத்துக்காக அவருடன் போட்டியிட வேண்டிய நிலைகூட சுப்ரியாவுக்கு ஏற்பட்டுவிடலாம். மேலும், பல ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்ததால் உலக நடப்புகளை நன்கு அறிந்துவைத்திருப்பவர் சுப்ரியா சுலே; ஆங்கிலத்தில் நல்ல திறமை உடையவர்; ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றில் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் உடையவர்; தொண்டர்கள் எளிதில் அணுகக்கூடியவராக இருப்பவர்; இந்த அனுபவங்களால், இப்பொழுதே அவரிடம் நல்ல அரசியல் முதிர்ச்சி தெரிகிறது. எனவே, தேசிய அரசியலுக்கே அவர் மிகவும் ஏற்றவராக இருப்பார் என சரத் பவார் கருதியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஆனால், மகாராஷ்டிர அரசியலில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அவருக்குத்தான் தில்லியிலும் செல்வாக்கு இருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதோடு, மகாராஷ்டிரத்தில் ஒருவர் ~ தில்லியில் ஒருவர் என கட்சியின் அதிகாரத்தை மகளுக்கும் சகோதரர் மகனுக்கும் இடையே பங்கு போடுவதும் நடைமுறையில் சாத்தியமில்லாதது என்பதை அறியாதவரல்லர் சரத் பவார்.
நான்கு: பவார் ஒன்றைச் சொல்கிறார் என்றால், அதற்கு நேர் எதிரானதையே அவர் மனத்தில் நினைத்திருக்கிறார் என்று பொருள் என்று இன்னொரு விளக்கத்தை அளிக்கின்றனர் அவரது அதிருப்தியாளர்கள். சோனியா காந்தியை அவர் புகழ்ந்து பேசுகிறார் என்றால், அவருக்கு எதிரான தாக்குதலை அவர் தீவிரப்படுத்தத் திட்டமிடுகிறார் என்று அர்த்தம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு எத்தனையோ விளக்கங்கள் கூறப்படுகின்றன. ஆனால் அதிகம் பேசாதவரான பவார், தனது உள்ளத்தில் இருப்பதை அவ்வளவு சுலபமாக வெளிப்படுத்திவிடக் கூடியவரல்லர். பலவிதத் திட்டங்கள் அவர் சிந்தனையில் இருக்கக்கூடும். 2009ம் ஆண்டிலோ அல்லது தேர்தல் நடக்கும் பொழுதோ என்னென்ன நிகழக்கூடும் என்பதை அவர் இப்பொழுதே கூறுவார் என எதிர்பார்க்க முடியாது. எத்தகைய சாத்தியக்கூறானாலும் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே அது அமையும்; என்றபோதிலும் சிறிது வாய்ப்புக் கிடைத்தால்கூட அதைப் பயன்படுத்தி நாட்டின் பிரதமர் பதவியை அடைய முடியுமா என்ற முயற்சியில் இறங்காமல் விடமாட்டார் பவார்.
அவ்வாறு அவர் பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறதா? பிராந்தியக் கட்சிகளின் ஒட்டுமொத்த பலம் கணிசமாக அதிகரித்து, பாஜகவும் பலவீனமான நிலையில் இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை தேர்தலுக்குப் பின்பு ஏற்பட்டால், நிச்சயமாக பிரதமர் ஆவதற்கான ஒரு வாய்ப்பு பவாருக்குக் கிடைக்கக்கூடும்; ஒருவேளை, காங்கிரஸýக்கும் பாஜகவுக்குக்கும் தலா 100 இடங்களுக்குக் குறைவாகக் கிடைத்து, பிராந்தியக் கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும் சேர்ந்து ஓர் அரசை அமைக்கக்கூடிய சூழ்நிலை உருவானாலோ; அல்லது, மிகவும் பலவீனமான நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டு, பாஜகவை அதிகார பீடத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டிய கட்டாயத்தின் காரணமாக பிராந்தியக் கட்சிகள் அரசு அமைக்க ஆதரவு கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலோகூட சரத் பவாருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
இன்றைய நிலையில், பிராந்தியக் கட்சித் தலைவர்களிலேயே பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தலைவராக இருப்பவர் அனேகமாக பவாராகத்தான் இருக்கக்கூடும். முலாயம் சிங் யாதவ், ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு ஆகியோரிடையே ஒரு புதிய கூட்டணி ஏற்பட்டு இருப்பது தொடர்பான செய்திகள் அண்மை நாள்களாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்போதைக்கு “மூன்றாவது அணி’க்கு வாய்ப்பு இல்லை என்று பவார் கூறினாலும்கூட, அந்தப் புதிய கூட்டணியுடன் பவாரின் பெயரும் சேர்த்தே பேசப்படுகிறது. நிர்வாகத் திறன் மிக்கவரான பவாருக்கு, பல்வேறு கட்சித் தலைவர்களுடனும் நல்லுறவு உண்டு. எனவே, மேற்கூறிய சூழ்நிலைகள் உருவானால், பாஜகவுக்கும்கூட அவர் ஏற்புடையவராகவே இருப்பார். எனவே, சோனியா காந்தியுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள அவர் விரும்புவார் என்று கூறுவது வியப்பளிப்பதாக இருக்கிறது.
நரசிம்மராவ் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்திலிருந்தே அவர் ஒரு தேசியத் தலைவராக உருவெடுத்துவிட்டார். மகாராஷ்டிரத்தை அங்குலம் அங்குலமாக அறிந்த, மாநிலத்தின் மக்கள் தலைவராக இருக்கும் அதே நேரத்தில், அவரது அரசியல் பாணியானது மேல்நிலைக்குச் சென்றுவிட்டது.
பிரதமர் பதவி தனக்குக் கிட்டாமல் போய்விட்டால்கூட பரவாயில்லை; தனது மகளின் அரசியல் பாதை வலுவானதாக அமைக்கப்பட்டுவிட வேண்டும் என்று சரத் பவார் விரும்பக்கூடும். கட்சியில் அடுத்த தலைமுறைத் தலைவர்களை வளர்த்து உருவாக்குவதுதான் தனது முக்கிய கடமை என்று பிபிசி வானொலிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியை பவார் பாராட்டியிருப்பதை எந்தக் கோணத்தில் பார்த்தாலும், அதை நல்லுறவு நடவடிக்கையாகவும் பவாரின் பண்பட்ட அரசியலின் அடையாளமாகவுமே கருத முடியும்.