நினைவலைகள்: அன்று சொன்னது… இன்று நடக்கிறது!
டாக்டர் எச்.வி. ஹண்டே
வரலாற்று நூல் ஆசிரியர்களும், அரசியல் மேதைகளும், பல அரசியல்வாதிகளும், ராஜாஜி பற்றி கூறுகின்ற ஒரு கருத்து இது:
“”இந்திய சுதந்திரத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக (1942 – ல்), நாட்டுப் பிரிவினை குறித்த ராஜாஜியின் கொள்கைத் திட்டம் (Rajaji Formula) ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். இரண்டாவது உலக யுத்தத்தில், தோல்வி பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, மகாத்மா காந்திக்கு அன்றைய தினம் மிகுந்த முக்கியத்துவம் தந்திருக்கும். ஜின்னாவுக்கு அவர்களுக்கு அரசியலில் பிடியே கிடைத்திருக்காது. உக்ரேனும், ரஷ்யாவும், பிரிந்த பிறகும் நட்புமிக்க அண்டைநாடுகளாக வளர்ந்திருக்கின்றன. அது மாதிரி இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த பிறகும் நட்புடன் இருந்திருக்கும். இந்திய நாடு இன்னும் வலிமையுள்ள நாடாக ஆகியிருக்கும். பல இரத்த ஆறுகள் ஓடிய நிலை முழுவதுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.”
இந்த ஒருமித்த கருத்தைப் பலர் தெரிவிக்கிறார்கள். கடைசியாக ராஜாஜியின் அதே கொள்கைத் திட்டம்தான், மெüண்ட்பேட்டன் திட்டம் என்ற பெயரில், 1947 ஜூன் மாதத்தில் அனைவராலும் ஏற்றுக் கொண்டு, இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.
இதே கருத்தினை ஸ்ரீபிரகாசாவும் கூறுகிறார். ஸ்ரீபிரகாசா சென்னை மாகாணத்தின் கவர்னராக 1952 – 54-ல் இருந்தவர். ராஜாஜி மாகாண முதலமைச்சராக இருந்த கால கட்டம் அப்போது. அதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜாஜியின் 89 வது பிறந்த நாளில், அவரைப் பற்றி ஸ்ரீபிரகாசா இவ்வாறு கூறினார்:
“”ராஜாஜி தொலை நோக்கு படைத்தவர். எந்தப் பிரச்சினை, எப்படி மாற்றமடைந்து வளரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடியவர். பாகிஸ்தான் உருவாகும் என்பதை அவரால் முன்னதாகவே கண்டு கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரையும் இது குறித்து அவர் எச்சரித்தார். அவருடைய கருத்து ஏற்றுக் கொள்ளப்படாததால் நிலைமை மோசமடைந்தது. ராஜாஜியின் சொற்களை முதலிலேயே கேட்டு நடந்திருந்தால், கண்ணீர் சிந்த வேண்டிய அவசியமில்லாமல், நியாயமான பாகிஸ்தானை நாம் அண்டை நாடாக அடைந்திருக்கலாம். ஆனால் தீர்க்க முடியாத வடிவில் பிரச்சினைகளைத் தரக்கூடியதொரு பாகிஸ்தானைப் பெற்றோம். நண்பர்களாகத் தொடர்ந்து இருக்க வேண்டிய மக்களிடையே, காழ்ப்புணர்ச்சியும், பகைமையும் வளர்ந்தோங்க வழி வகுத்தோம்.”
இதே போல பொருளாதார வல்லுநர்கள், ராஜாஜி வலியுறுத்தியபடியே போட்டிச் சந்தைப் பொருளாதாரத்தையும் (Market Economy) தனியார்மயமாக்குதலையும் 35 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
1992 இல் பி.வி.நரசிம்மராவ் மற்றும் மன்மோகன்சிங் தலைமையில், அரைகுறை மனதோடு, வேறு வழியின்றி நாட்டுப் பொருளாதாரம் ராஜாஜி வலியுறுத்திய திசையில் திருப்பி விடப்பட்டது.
35 ஆண்டுகள் முன்னதாக 1957 – ல் ராஜாஜி இதே நடவடிக்கைகளுக்காக, எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். பர்மிட் – லைசென்ஸ் – கோட்டா ராஜை ஒழித்துக் கட்டவேண்டுமென்றும் அறைகூவல் விட்டார்! யாரும் கேட்கவில்லை.
அப்போதே ராஜாஜியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்றைய இந்தியா வளமிக்க நாடாக விளங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
தென்கொரியாவை விட , மலேசியாவை விட, நம்முடைய நாடு பொருளாதாரரீதியாக ஜப்பான் நாட்டிற்கு ஈடாக வளர்ந்திருக்கும் என்று வேதனை அடைகிறார்கள் பலர்.
ராஜாஜியின் பல்வேறு உன்னதமான கருத்துக்களும் தீர்வுகளும் அவரது காலத்து மக்களில் பலரால் புறக்கணிக்கப்பட்டன. அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டன. ஆனால் பிற்கால நிகழ்ச்சிகள் ராஜாஜியின் கருத்துக்களின் உயர்வை உறுதி செய்யும் வகையிலேதான் அமைந்தன.
எடுத்துக்காட்டாக, ராஜாஜி தன்னுடைய சிறைவாசத்தின் போது 1921 ஆம் ஆண்டில் எழுதிய நாட்குறிப்பிலிருந்து , ஒரு பகுதியின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.
“”நாம் ஒருவிஷயத்தை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டுக்கு சுதந்திரம் வந்துவிட்டால், உடனேயே ஒரு சிறந்த அரசாங்கம் வந்துவிடாது. மக்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடைத்துவிடாது. நீண்டகாலத்துக்கு இவை கிடைக்காதென்றே நான் நினைக்கிறேன். தேர்தல்கள், அதையொட்டி ஊழல்கள், அநியாயங்கள், பணக்காரர்களின் பலம், ஆணவம், நிர்வாகத்தினரின் திறமையின்மை இவையெல்லாம் ஒன்று சேர்ந்து, நமக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் நமது வாழ்க்கையை நரகமாக்கும்.
நீதி, திறமை, அமைதி, நேர்மையான நிர்வாகம் ஆகியவை, சுதந்திரத்துக்கு முன்னால் இருந்த அளவுக்கு இப்போது இல்லையே என்று பலர் எண்ணி வருந்தும் நிலை ஏற்படும். அகெüரவம், அடிமைத்தனம் ஆகியவற்றிலிருந்து நமது இனம் காப்பாற்றுவிட்டது என்பது ஒன்றுதான் நமக்குக் கிடைத்த லாபமாக இருக்கும்.
அனைவருக்கும் பொதுவான முறையில், ஒழுக்கம், தெய்வபக்தி, அன்பு இவற்றைக் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கக் கூடிய கல்வி ஒன்றுதான் நமது ஒரே நம்பிக்கை. இதில் வெற்றியடைந்தால்தான் நாட்டு சுதந்திரம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். இல்லாவிடில் அது பணம் படைத்தோரின் அடக்குமுறைக்கும் அக்கிரமத்துக்கும்தான் நம்மை அழைத்துச் செல்லும்.
ஒவ்வொருவரும் நேர்மையானவராகவும், கடவுளுக்குப் பயப்படுகிறவராகவும், மற்றவரிடம் அன்பு காட்டுவதில் கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவப்பூர்வமாக அறிந்தவராகவும் இருந்தால், இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்.
ஆனால் ஒன்று. இந்த இலட்சியத்தை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வருவதானால், அதற்கு, வேறெந்த இடத்தையும் விட, இந்தியாவைத்தான் நம்ப வேண்டும்.”
நாடு சுதந்திரம் அடைவதற்கு 27 ஆண்டுகள் முன்னதாக இப்படி ஒரு கருத்தை அவரால் எப்படி எழுத முடிந்தது? என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்நாட்டு மக்களின் மனப்பான்மை, செயல்திறன் மற்றும் பலஹீனங்களையும் அவர் எவ்வளவு துல்லியமாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது இதிலிருந்து விளங்குகிறது.
எது எப்படியிருப்பினும், நம்நாட்டு மக்களிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை இறுதிவரி தெளிவாக்குகிறது. அவரது அச்சங்கள் முழுதும் உண்மை ஆகிவிட்ட நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். ஆனால் இறுதிவரிகளில் அவர் வெளியிட்டிருக்கும் நம்பிக்கையை உண்மையாக்குவது இக்காலத்து இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.
ராஜாஜி தமது காலத்திற்கு மிகவும் அப்பாற்பட்டு, எதிர்காலத் தொலை நோக்குடன் சிந்தித்தார், செயலாற்றினார். உலகளாவிய சிந்தனை அவருடையது. இவ்வுலகே அவருக்கு சிறியதோர் கோளாகத் தோன்றியது எனலாம். நாடுகளின் எல்லைகளைக் கடந்து மனித இனத்தை முழுவதும் தழுவிய நிலையில் அவர் சிந்தித்தார்.
எழுபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக, இந்நாடு முழுதும் தனது செல்வாக்கை நிலைநிறுத்திய மாமனிதராக அவர் விளங்கினார். எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு படிப்பினை மட்டுமல்ல, அவரது வாழ்க்கை வரலாறு. அது நாட்டு மக்களை நன்னெறியில் செயலாற்றுவதற்கு ஊக்கந்தரும் உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பும் கூட.
“வருங்கால இந்தியா வளமான இந்தியாவாக வளர வேண்டுமென்றால், மக்கள் மனதில் பதிய வேண்டிய மாமனிதரின் வரலாறாக ராஜாஜியின் வரலாறு இருக்கிறது’