ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பாத வெடிப்புக்கு மூலிகை தைலம்!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
என் மனைவி ஆண்டாளுக்கு வயது 73. இரண்டு கால்களின் பாதங்கள் மற்றும் நகச் சந்துகளிலும், பாத ஓரங்களிலும் வெடிப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்படுகிறாள். அவள் பூரண குணமடைய மருந்துகள் கூறவும்.
அதிக நேரம் தண்ணீரில் நின்று கொண்டு துணி துவைத்தல், சமையல் அறையில் தண்ணீர் விட்டு தரையைச் சுத்தப்படுத்திய பிறகு காய்ந்த துணியால் துடைக்காமல், சிமென்ட் தரையில் அதிக நேரம் நின்று கொண்டே சமையல் செய்தல், இரவில் கால்களை அலம்பித் துடைத்த பிறகு பசு நெய் அல்லது விளக்கெண்ணெய் பூசாதிருத்தல், உடல் காங்கை எனப்படும் உடற்சூட்டைக் குறைக்க சூரத்தாவாரை, ரோஜா மொக்கு, காய்ந்த திராட்சை, கடுக்காய்த் தோல் போட்டு ஊறிய தண்ணீரைக் குடிக்காமல் அசட்டையாக இருத்தல், உணவில் உட்புற வறட்சி தரும் கசப்பு, துவர்ப்புச் சுவையை அதிகம் சேர்த்தல், செருப்பு அணியாமல் பல இடங்களுக்கும் வெறும் கால்களுடன் நடந்து செல்லுதல் போன்ற சில காரணங்களாலும், உடல் பருமனாயிருத்தல், பகல் தூக்கம் போன்றவற்றால் கிளறப்படும் பித்த சீற்றம் ஆகியவற்றாலும் பாதங்களில் வெடிப்பு ஏற்படலாம். இதைப் போக்க ஓர் எளிய வழியுண்டு.
பூங்காவி, இந்துப்பு, வெள்ளைக் குங்கிலியம், குக்கில், வெல்லம் இவற்றை வகைக்கு 10 கிராம் எடுத்துக் கொள்ளவும். பசுவின் நெய்(கிடைக்காவிட்டால் தேங்காய் எண்ணெய்) 120 மி.லி. எடுத்து உருக்கி அதில் குக்கிலையும் வெள்ளைக் குங்கிலியத்தையும் போட்டுக் கரைந்ததும் சூட்டுடனிருக்கும்போதே தேன்மெழுகு 20 கிராம் போட்டு இறக்கிவைத்து அதில் பூங்காவி இந்துப்பு வெல்லம் இந்த மூன்றையும் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். காலை அலம்பித் துடைத்த பின் இந்தக் களிம்பைத் தடவ வெடிப்பு மறையும். தங்கள் மனைவிக்கு வெடிப்பு நிறைய உள்ளதால் கால் பாதங்களை முதலில் வென்னீர் விட்டு ஒத்தடம் கொடுத்தபின் இதை உபயோகிக்கவும்.
இதெல்லாம் செய்வதற்கு நேரமில்லை, தயாரித்து விற்கப்படும் களிம்பு ஏதேனும் இருக்கிறதா? என்று நீங்கள் கேட்டால் அதற்கும் பதிலுண்டு. ஜீவந்த்யாதி யமகம் எனும் பெயரில் மூலிகைத் தைலம் விற்கிறார்கள். அதை வாங்கி, பஞ்சில் முக்கி, பாதங்களை நன்கு சுத்தப்படுத்திய பிறகு வெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் தடவி விடவும். வெடிப்பின் உட்புறப் பகுதிகளில் முழுவதுமாக இந்த எண்ணெய் ஊற ஊற தோல் மிருதுவாகி அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து விடும். பஞ்சில் முக்கி எடுத்த இந்த எண்ணெய்யை அப்படியே பாதங்களில் வைத்து ஒரு கைத்தறித் துணியால் கட்டியும் வைக்கலாம். காலை இரவு உணவிற்கு முன்பாக சுமார் 1 மணி நேரம் ஊற விடவும். அதன்பிறகு வெதுவெதுப்பான தண்ணீரால் கால்களைக் கழுவி விடவும். அரிசி வடித்த கஞ்சியினால் கழுவி, அதன் பின்னர் தண்ணீரால் அலம்ப, பாதங்கள் மிருதுவாகிவிடும். வெடிப்பு இடுக்குகளில் அழுக்குச் சேராத வகையில் பாதங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
வெடிப்புள்ள பகுதிகளில் எழுந்து நடக்கும் போது வலி இருந்தால் இரவில் படுக்கும் முன் பிண்ட தைலம் பூசி விடவும். இது சிறந்த வலி நிவாரணி மட்டுமல்ல, வெடிப்பையும் குணமாக்கும்.
முக்கால் ஸ்பூன் பசுநெய், கால் ஸ்பூன் தேன் குழைத்து காலை, இரவு உணவிற்கு முன்பாக நக்கிச் சாப்பிட, உடலின் வெளிப்புறத் தோலில் ஏற்படும் வெடிப்பு, ஆறாத புண் போன்றவை ஆறிவிடும். வயிற்றில் புண், வாய்ப்புண், ஆசனவாய் எரிச்சல், சிறுநீர் எரிச்சல் போன்றவையும் குணமாகிவிடும்.
வெடிப்புகளில் அரிப்பு இருந்தால் சததெüத கிருதம் எனும் ஆயின்ட்மென்ட் தடவ மிகவும் நல்லது.
உணவில் தயிர், கத்தரிக்காய், புளிப்பான ஊறுகாய், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம். புலால் உணவையும் தவிர்க்கவும்.