Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Folklore’ Category

Tamil Traditions & Culture Festival – Folk Arts Celebration in Erode: Sriram Chits

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

மரபு: காகங்கள் சொல்லும் காலம்!

தமிழ்மகன்

ஈரோடு மாவட்டத்தில் பிப்.22 முதல் 24 வரை மூன்று நாட்களுக்கு நடைபெற்ற கொங்கு மண்டல மரபுக் கலைவிழா நகரையே ஒரு கலக்கு கலக்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.

விழாவில் மரபு சார்ந்த இந்த நிகழ்த்துக் கலைகளுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரன், சேலம் காவல்துறை துணை ஆணையர் சின்னசாமி, டாக்டர் வெ. ஜீவானந்தம், ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் இராமராஜ் எனப் பல்வேறு அதிகார மையங்களைச் சேர்ந்தவர்களும் வந்து குரல் கொடுத்தது வியப்பளிக்கும் விஷயமாக இருந்தது. மரபுக்கலைகள் குறித்து ஆய்வு நோக்கோடு அவர்கள் பேசியதும் ஆச்சர்யம் ஏற்படுத்தியது.

2002-ல் ஈரோடு மொடக் குறிச்சியில் இந்த விழாவுக்கான வித்திட்டவர் எழுத்தாளர் தேவிபாரதி. “”எங்கள் குடும்பத்திலேயே பலர் “பொன்னர் சங்கர்’ கூத்துக் கலைஞர்களாக இருந்தார்கள். அதுவே எனக்கு இதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. கூடவே கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் எழுதிய “நூற்றாண்டுத் தனிமை’யைப் போன்ற மரபின் பின்னணியை ஒட்டி ஒரு நாவல் எழுத உத்தேசித்து பல கூத்துக் கலைஞர்களைச் சந்தித்தேன். இதுதான் மரபுக் கலைஞர்களுடன் எனக்கு ஏற்பட்ட ஈடுபாட்டுக்கான காரணங்கள்.

மொடக்குறிச்சியில் நடைபெற்ற விழாவை அறிந்து எழுத்தாளர் அம்பை வந்து சந்தித்தார். அப்போது மரபுக் கலைஞர்கள் பற்றிய ஆவணப் படம் ஒன்றும் தயாரித்தோம். இந்த ஆண்டு காலச்சுவடு பதிப்பகம், ஸ்ரீராம் சிட்ஸ் இணைந்து இந்த மரபுக் கலைவிழாவை ஏற்பாடு செய்தது” என்று விழாவுக்கான முன்கதைச் சுருக்கத்தைச் சொன்னார் தேவிபாரதி. மூன்று நாள்கள் நடைபெற்ற இந்தக் கலைவிழாவின் சுவாரஸ்யத் துளிகள்…

தப்பாட்டம், சலங்கையாட்டம் என ஈரோடு வ.உ.சி பூங்காவில் இருந்து மரபுக் கலைஞர்களின் பேரணி ஆரம்பித்தது. விழாவில் பங்கு பெற்றகலைஞர்களிடமும் சிறப்பு விருந்தினர்களிடமும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஈடுபாட்டுடன் பேசியதிலிருந்தே அவருக்குப் பண்பாட்டுக் கலைகள் மீதிருந்த ஆர்வத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.

முதல் நாள் இரவு கரூர் கே.ஆர். அம்பிகா குழுவினரின் “அரிச்சந்திரா’ நாடகமும் இரண்டாம் நாள் இரவில் கரூர் ஆர்.டி.எஸ். நெடுமாறன் குழுவினரின் “சித்திரவள்ளி’ இசை நாடகமும் “பொன்னர் சங்கர்’ உடுக்கடிக் கூத்தும் நடைபெற்றது. மூன்றாம் நாள் இரவு கூத்தம்பட்டித் திருமலைராஜன்- பவானி அர்ஜுனனின் “மதுரைவீரன்’ இசைக் கூத்து நடைபெற்றது.

காலை நேரங்களில் அமர்வுகளில் எழுத்தாளர் பெருமாள் முருகன், தேவி பாரதி, செல்வராஜ் போன்றோரின் கிராமப்புறக் கதைகளில் சோம்பேறிகளுக்கான அறிவுரை, சித்தி கொடுமை, சமயோசித புத்தியால் சமாளித்தல் போன்ற பொதுத்தன்மையைக் கவனிக்க முடிந்தது. அதையெல்லாம் கேட்க வாய்ப்பில்லாமல் இன்றைய குழந்தைகள் மெகா சீரியல்களிலும் சினிமா பாட்டு நிகழ்ச்சிகளிலும் தங்களைத் தொலைத்துவிட்டு நிற்கும் அவலமும் நினைவுக்கு வந்தது.

“”இத்தகைய கிராமிய கதைகள் மூலமாக அந் நாளைய கிராமியச் சூழலையும் அறியமுடிகிறது. காக்கைகள் தீய குணம் பெற்றவையாகச் சித்திரிக்கப்படுவது பிற்காலக் கதைகளில்தான். நன்னூலில் ஏழாம் வேற்றுமைக்கு உதாரணமாக “கருப்பின் கண் மிக்குளது அழகு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, காக்கைகள் அறிவாளிகளாகவும் அழகானவையாகவும் சித்திரிக்கப்பட்ட காலகட்டம் தொல்காப்பிய காலகட்டம் என்று தெரிகிறது. கருப்பு நிறம் அறியாமையின் நிறம் என்று சிந்திக்கத் தொடங்கியது பிற்காலங்களில்தான்…” என்ற பெருமாள்முருகனின் கருத்து சிந்திக்கத் தகுந்தது. காக்கைகள் கதைகள் மூலம் காலத்தை அறியமுடியும் என்பது ஆச்சர்யம்தான்.

புலவர் செ.இராசுவின் கொடுமணல் அகழ்வாய்வுகள் பற்றிய பேச்சு வரலாற்றுக் காலகட்டத்துக்கு அழைத்துச் செல்வதாக இருந்தது.

எழுத்தாளர்கள் சுகுமாரன், யுவன் சந்திரசேகர், குவளைக்கண்ணன், அய்யப்ப மாதவன், கடற்கரய், ரெங்கையா முருகன் போன்ற பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

மரபுக்கலைகளுக்குப் புத்துயிர் ஊட்டும் இந்த முயற்சிக்கு வாழ்த்து சொல்லி புறப்பட்டோம்.

Posted in Arts, Culture, Erode, Folk, Folk Arts, Folklore, Kaalachuvadu, Kalachuvadu, Lit, Literature, Research, Sangam, Tradition | Leave a Comment »

Losing our heritage & Folk Arts Tradition – Interview with World cultural forum் Member

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

புதிய பார்வை: “”நாட்டுப்புறக் கலைகளை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்!”

உலகமயத்தினால் கிராமப்புறம் அழிந்து கொண்டிருக்கிறது. நாட்டுப்புறக் கலைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. நமது நாட்டைத் தொழில்மயம் ஆக்கவேண்டும் என்பதற்காக மேற்கத்தியமயமாக்கி விட்டார்கள்.

நமக்கு நல்ல ரோடே இல்லை. ரோல்ஸ்ராய்ஸ், ஃபோர்டு, பென்ஸ் போன்ற கார்கள் இங்கு அவசியமா?”

-இப்படியெல்லாம் ஆவேசப்படுகிறார், World cultural forum் என்கிற அமைப்பின் உறுப்பினரான சாரதா ராமநாதன்.

இவர் ஒரு திரைப்பட இயக்குநரும் கூட. தேவதாசிகளின் வாழ்வை மையமாக வைத்து இவர் எடுத்த திரைப்படம் “சிருங்காரம்’ சென்ற ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

அவரை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

உலகமயத்தால் நாட்டுப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

உலகமயம், தொழில்மயம் என்கிற பெயரில் நாம் கிராமப்புறங்களைக் கவனிக்க மறந்துவிட்டோம். அதனால் கிராமப்புறங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு வருகிறார்கள். இதனால் கிராமப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன.

உலகமயத்தால் ஓரளவுக்கு பலன் பெற்றது நடுத்தர மக்கள்தாம். நடுத்தர மக்கள் மட்டும்தான் இந்தியாவா? எல்லாரும் கம்ப்யூட்டர் வேலைக்கு வர முடியுமா? அப்படி வந்து விட்டால் விவசாயம் செய்வது யார்? உணவு எப்படிக் கிடைக்கும்?

தொழில்மயத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை நாம் விவசாயத்திற்குக் கொடுக்கவில்லை. நம்மிடம் தண்ணீரைச் சீராகப் பயன்படுத்துவதற்கான உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை.

கிராமப்புறம் நசிந்து போனால் நாட்டுப்புறக் கலைகள் உயிர்வாழ்வது எப்படி? நமது பாரம்பரியச் செவ்வியல் கலைகள் கோயில் குளத்தைச் சுற்றி வளர்ந்தவை. நாட்டுப்புறக்கலைகள் கிராமப்புறத்தையும் அங்குள்ள மக்களின் வாழ்வைச் சுற்றியும் வளர்ந்தவை. நாட்டுப்புறக் கலைகள் மேம்பட வேண்டுமானால் நாட்டுப்புறம் மேம்பட வேண்டும்.

சினிமாவிலும் டிவியிலும் இன்று நாட்டுப்புறப் பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பலர் நாட்டுப்புறப் பாடல்களைப் பதிவு செய்து ஆடியோ கேசட் வெளியிடுகிறார்கள். அப்படியானால் நாட்டுப்புறக் கலைகள் வளர்வதாகத் தானே அர்த்தம்?

டிவியிலும் சினிமாவிலும் நாட்டுப்புறக் கலைகளைப் பிசினஸ் ஆக்கிவிட்டார்கள். இதனால் நாட்டுப்புறக் கலைகளில் ஒரிஜினாலிட்டி போய்விட்டது. நாட்டுப்புறக் கலைகள் சுயமாக வளர வேண்டும்.

நாட்டுப்புறப் பாடல்களை ஆடியோ கேசட்களிலும், சிடியிலும் சிலர் பதிவு செய்து விற்கிறார்கள். ஆனால் அது தாத்தா போட்ட பாட்டு. இவர்கள் என்ன நாட்டுப்புறப் பாடலுக்குப் புதிதாகச் செய்தார்கள்? என்பதுதான் கேள்வி. சினிமாவில் கானாப் பாட்டு அதன் தனித்தன்மையை இழந்துவிட்டது.

கானாப்பாட்டில் சினிமாத்தனம் வந்துவிட்டது. மக்கள் பாடும் கானாப் பாட்டில் இருந்த அந்த உயிர்ப்பு எங்கே? உணர்வு எங்கே?

கிரியேட்டிவிட்டிக்கு முழுச் சுதந்திரம் அவசியம். நாட்டுப்புறக் கலைகள் வளர எந்தத் தடையும் இல்லாத முழுச்சுதந்திரம் அவசியம். சினிமாவுக்கோ, டிவிக்கோ லாபம்தான் முக்கியம். லாப நோக்கம் வருகிறபோது சுதந்திரம் அடிபட்டுப் போகிறது. லாப நோக்குடன் இயங்கும் சினிமாவால் கிரியேட்டிவ் கலைகளான நாட்டுப்புறக் கலைகளை எப்படி வளர்க்க முடியும்? இயல்பான அகத் தூண்டுதலால் ஒருவர் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. பெயின்டிங் பண்ணினால் லண்டனில் நல்ல விலை கொடுத்து வாங்குவார்கள் என்பதற்காகப் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. அது இயல்பானதல்ல; அங்கே கிரியேட்டிவிட்டிக்கு இடமில்லை. பணத்துக்குத்தான் இடம். பணம் பண்ணும்போது கிரியேட்டிவிட்டி அடிபட்டுப் போகிறது.

உலகமயத்தின் விளைவாக நமது நாட்டில் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது. பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது? வளர்ச்சியை மறுக்க முடியுமா?

உலகமயத்தால் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. இதனால் பலன் பெற்றோர் நடுத்தர வர்க்க மக்களே. நடுத்தர வர்க்க மக்கள் கோட், சூட், டை அணிவதற்காக கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கிராமப்புறத்தை நாம் அமுக்கினோம் என்றால் நாமும் சேர்ந்து அமுங்கிவிடுவோம் என்பதைப் பலர் மறந்துவிடுகிறார்கள்.

“இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்றார் மகாத்மா காந்தி. அவர் சொன்னதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கிராமப்புறத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் காந்தியின் குறிக்கோள்.

ஆனால் நமது அரசியல்வாதிகள் ஏழை மக்களை ஏழைகளாகவே வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள். அப்போதுதான் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களின் வாக்குகளைப் பெற முடியும்.

இன்றையச் சூழலில் நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க வாய்ப்பே இல்லையா?

நம்மிடம் பழம்பெருமை பேசும் பழக்கம் உள்ளது. பழம் பெருமை பேசுவதைவிட பழைமையை உயர்த்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

நமது பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற செவ்வியல்கலைகள், நாட்டுப்புறப் பாடல், ஆடல் போன்ற நாட்டுப்புறக் கலைகள், நமது பாரம்பரிய இலக்கியங்கள் இவற்றைப் பாதுகாக்க வேண்டும்.

“நமக்காகப் பணம்’ என்பது போய் “பணத்திற்காக நாம்’ என்று ஆகிவிட்டதுதான் பிரச்சினை.

உலகமயம் வந்தபின்னால் எதுவுமே இயற்கையாக இல்லை. நல்ல தண்ணீர் கிடைக்கிறதா? ஆக்சிஜன் கிடைக்கிறதா? எதுவுமே இயற்கையாகக் கிடைத்து நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க நேரடியாக அவற்றை மக்களிடம் எடுத்துச் செல்வதுதான் வழி. அது போல கிராமப்புற மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் நாட்டுப்புறக் கலைகளில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அதைவிடக் கிராமப்புறத்தில் வளர்ச்சி ஏற்பட்டால்தான் நாட்டுப்புறக் கலைகளும் அதன் இயல்பான போக்கில் வளர்ச்சி அடையும்.

கிராமப்புறங்களில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பது வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. நமது அரசியல்வாதிகள் கொஞ்சநாட்கள் உலகமயத்தை மறந்துவிட்டு கிராமப்புறத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திரும்பினால்தான் இதற்கு விடிவு ஏற்படும்.

கம்ப்யூட்டர் தொழில் அதிபர் நாராயணமூர்த்தி தேசிய ஹீரோவா? நமது கிராமப்புற மக்கள் தேசிய ஹீரோவா? என்பதுதான் இப்போதைய முக்கியமான கேள்வி.

Posted in Artistes, artists, Arts, Chrungaram, Cinema, Crafts, Culture, Dance, Docu Drama, Documentary, Faces, Films, Folk, Folklore, global, Globalization, Goa, Heritage, Interview, Mime, Movie, people, Performance, Performers, Pride, Sarada, Saradha, Saratha, Sharada, Sharada Ramanathan, Sharadha, Sharatha, Srungaram, Srunkaram, Street, Tradition | Leave a Comment »

Sivaji (The Boss) opening song details – Superstar gifts 3 Lakhs for Folklore

Posted by Snapjudge மேல் நவம்பர் 22, 2006

`சிவாஜி’ படத்தில் `மெகா’ கரகாட்டம்: 64 கிராமிய கலைஞர்களுக்கு ரஜினி ரூ.3 லட்சம் பரிசு

இயக்குனர் சங்கர் என்றாலே பிரமாண்டத்துக்கு குறைவு இருக்காது. ரஜினியின் “சிவாஜி” படத்துக்காக அவர் இதுவரை இல்லாத அளவுக்கு காட்சிக்கு காட்சி இரட்டிப்பு மடங்கு பிரமாண்டத்தை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக ரஜினி ஆடும் பாடல் காட்சிகள் பிரமாண்டத்தின், பிரமிப்பின் உச்சியைத் தொடும் அளவுக்கு படமாக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அதிலும் ஒரு கிராமிய மணம் கமழும் பாடல் உலகத் தமிழர்கள் அனைவரிடமும் பரபரப்பாக பேசப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலம் சதாரா பகுதியில் வாய் எனும் மலை பிரதேசத்திலும், பஞ்ச தனி அணைக் கட்டிலும் இந்த பாடல் காட்சி 8 நாட்கள் படமாக்கப்பட்டது. இதில் தமிழகம், ஆந்திரா, கேரளா, மராட்டிய மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமியக் கலைஞர்கள் பங் கேற்றனர்.

இந்த பிரமாண்டத்துக்காக சங்கர் எடுத்த முயற்சிகள் ஏராளம். தமிழகத்தில் இருந்து முதலில் அவர் எதிர்பார்த்தது போல நாட்டுப்புறக் கலைஞர்கள் கிடைக்கவில்லை. கடைசியில் புஷ்பவனம் குப்புசாமி மூலம் முகப்பேரில் கலைக்கோட்டம் நடத்தி வரும் எம். அன்பரசனை அணுகினார். அன்பரசன் 2 நாள்அவகாசத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு சென்று 64 நாட்டுப்புறக்கலைஞர்களை தேர்வு செய்து ஒருங் கிணைத் தார்.

அதன் பயனாக 64 கலை ஞர்களும் சிவாஜி படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ஆடும் அரிய வாய்ப்பை பெற்றனர். ரஜினியுடன் இவர்கள் மயி லாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை என்று விதம் விதமாக கிராமிய நடனங்களை ஆடி தூள்கிளப்பி இருக்கிறார்கள். ரஜினியும் இந்த பாட்டில் பட்டையை கிளப்பி உள்ளாராம்.

இந்த பாடல் “சூட்டிங்” நடந்த 8 நாட்களும் 64 கலைஞர்களும் ரஜினியின் பாசத்தையும் துளி கூட பந்தா இல்லாத பண்பையும் கண்டு, அனுபவித்து நெகிழ்ந்து போய் விட்டார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி இவ்வளவு இறங்கி வந்து அன்பாக பழகுபவரா என்று 64 கலைஞர்களும் மெய்சிலிர்த்து விட்டனர். 64 பேரிடமும் தனித்தனியாக குடும்ப சூழ்நிலையை விசாரித்து அவர் தன் உணர்வையும் பகிர்ந்து கொண்டதை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாது என்கிறார்கள்.

இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தது போல பாடல் காட்சி படமாக்கி முடித்ததும் தமிழ் நாட்டுக்கு புறப்பட்ட 64 கலைஞர்கள் கையிலும் ரஜினி ஒரு கவரை திணித்தார். ஒவ்வொரு கலைஞனுக்கும் அதில் ரஜினி தன் சொந்த பணத்தில் இருந்து தலா ரூ.5 ஆயிரம் வைத்திருந்தார். அதைப் பார்த்ததும் ரஜினியின் இரக்க குணத்தை நினைத்து 64 கலைஞர்களும் நெகிழ்ந்து விட்டனர். அவர்களுக்கு ரஜினி மீது இருந்த மதிப்பும் மரியாதையும் இரட்டிப்பாக உயர்ந்தது.

உணர்ச்சிப் பெருக்கில் இருந்த அவர்களை ரஜினி அத்துடன் விடவில்லை. 64 கலைஞர்களுடனும் தனித் தனியாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த போட்டோக்கள் 64 பேருக்கும் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டார்.

அதனால் தானோ என்னவோ இந்த 64 கலை ஞர்களும் ரஜினியுடன் பழகிய 8 நாள் அனுபவத்தை 8 ஜென்மத்துக்கு சமமானது போல கருதுகிறார்கள்.

இந்த 64 கலைஞர்களையும் ரஜினியுடன் ஆட வைத்த கலைக்கோட்டம் நிறுவனர் அன்பரசனும் ரஜினியின் பாசமழையில் நனைந்து விட்டு வந்துள்ளார். கலைமாமணி பட்டம் பெற்ற இவர் குடி யரசு தினவிழாவில் 300 கலைஞர்களை புதுமையான முறையில் ஆட வைத்து பாராட்டு பெற்றவர். இவர் கைவண்ணத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகள் முத்திரை பதித்துள்ளன. ஆனாலும் ரஜினியுடன் பழகிய 8 நாட்களும் மறக்க முடியாதவை என்கிறார்.

இது பற்றி அவர் கூறுகையில், “ரஜினி மனித நேயம் மிக்க நடிகர். ஒவ்வொருவருடனும் அவர் எளிமையாக நெருங்கி பழகினார். சூப்பர் ஸ்டார் என்ற பந்தா இல்லவே இல்லை. என்னைப் பார்க்கும் போதெல்லாம் புன்னகைப் பார். நான் அடையார் இசைக்கல்லூரியில் பேரா சிரியராக பணிபுரிகிறேன் என்றதும் சரிக்கு சமமாக உட்கார வைத்தே பேசினார். மற்றவர்கள் மனதுக்கு நன்கு மரியாதை கொடுக்கிறார். நான் அழைத்துச் சென்ற 64 பேருக்கும் 3 லட்சம் ரூபாயை அவர் கொடுத்து விட்டு, கலைஞர்கள் முகத் தில் மகிழ்ச்சியை கண்டதும், அவரும் சிரித்தார். அப் பப்பா… இவ்வளவு ஈகை குணம் உள்ளவரா என்று சிலிர்த்து போனேன். அவர் காட்டிய அன்பு கள்ளங் கபடலம் இல்லாதது. நினைத்து, நினைத்துப் பார்த்து மகிழக்கூடியது” என்றார்.

இயக்குனர் சங்கரை, “மக்கள் ரசனையை நன்கு புரிந்தவர்” என்றார். புறப்படும் போது “சஸ்பென்ஸ்” வைத்தப்படி அன்பரசன் மேலும் ஒரு தகவல் சொன்னார். “எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ரஜினி கிராமிய கலைஞர்களுடன் ஆடிய பாடல் 2007-ல் சூப்பர் ஹிட் பாட்டாக இருக்கும். பட்டி தொட்டி எல்லாம் இது தான் ஒலிக்கும். அது ஒரு மனம் கவரும் பாடல்” என்றார்.

அவர் சொல்ல, சொல்ல ரஜினியின் கிராமிய இசை, நடன பாட்டை எப்போது கேட்போம் என்ற ஆவல் அதிகமாகி விட்டது… கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். விரைவில் “சிவாஜி” பாடல் கேசட் வரப்போகிறது.

Posted in Folklore, Kalaikottam, M Anbarasan, music, Preview, Pushpavanam Kuppusamy, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Shankar, Shivaji, Sivaji, Sivaji the Boss, Songs, Superstar, Tamil Cinema, Tamil Movies | 2 Comments »