மரபு: காகங்கள் சொல்லும் காலம்!
தமிழ்மகன்
ஈரோடு மாவட்டத்தில் பிப்.22 முதல் 24 வரை மூன்று நாட்களுக்கு நடைபெற்ற கொங்கு மண்டல மரபுக் கலைவிழா நகரையே ஒரு கலக்கு கலக்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.
விழாவில் மரபு சார்ந்த இந்த நிகழ்த்துக் கலைகளுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரன், சேலம் காவல்துறை துணை ஆணையர் சின்னசாமி, டாக்டர் வெ. ஜீவானந்தம், ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் இராமராஜ் எனப் பல்வேறு அதிகார மையங்களைச் சேர்ந்தவர்களும் வந்து குரல் கொடுத்தது வியப்பளிக்கும் விஷயமாக இருந்தது. மரபுக்கலைகள் குறித்து ஆய்வு நோக்கோடு அவர்கள் பேசியதும் ஆச்சர்யம் ஏற்படுத்தியது.
2002-ல் ஈரோடு மொடக் குறிச்சியில் இந்த விழாவுக்கான வித்திட்டவர் எழுத்தாளர் தேவிபாரதி. “”எங்கள் குடும்பத்திலேயே பலர் “பொன்னர் சங்கர்’ கூத்துக் கலைஞர்களாக இருந்தார்கள். அதுவே எனக்கு இதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. கூடவே கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் எழுதிய “நூற்றாண்டுத் தனிமை’யைப் போன்ற மரபின் பின்னணியை ஒட்டி ஒரு நாவல் எழுத உத்தேசித்து பல கூத்துக் கலைஞர்களைச் சந்தித்தேன். இதுதான் மரபுக் கலைஞர்களுடன் எனக்கு ஏற்பட்ட ஈடுபாட்டுக்கான காரணங்கள்.
மொடக்குறிச்சியில் நடைபெற்ற விழாவை அறிந்து எழுத்தாளர் அம்பை வந்து சந்தித்தார். அப்போது மரபுக் கலைஞர்கள் பற்றிய ஆவணப் படம் ஒன்றும் தயாரித்தோம். இந்த ஆண்டு காலச்சுவடு பதிப்பகம், ஸ்ரீராம் சிட்ஸ் இணைந்து இந்த மரபுக் கலைவிழாவை ஏற்பாடு செய்தது” என்று விழாவுக்கான முன்கதைச் சுருக்கத்தைச் சொன்னார் தேவிபாரதி. மூன்று நாள்கள் நடைபெற்ற இந்தக் கலைவிழாவின் சுவாரஸ்யத் துளிகள்…
தப்பாட்டம், சலங்கையாட்டம் என ஈரோடு வ.உ.சி பூங்காவில் இருந்து மரபுக் கலைஞர்களின் பேரணி ஆரம்பித்தது. விழாவில் பங்கு பெற்றகலைஞர்களிடமும் சிறப்பு விருந்தினர்களிடமும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஈடுபாட்டுடன் பேசியதிலிருந்தே அவருக்குப் பண்பாட்டுக் கலைகள் மீதிருந்த ஆர்வத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.
முதல் நாள் இரவு கரூர் கே.ஆர். அம்பிகா குழுவினரின் “அரிச்சந்திரா’ நாடகமும் இரண்டாம் நாள் இரவில் கரூர் ஆர்.டி.எஸ். நெடுமாறன் குழுவினரின் “சித்திரவள்ளி’ இசை நாடகமும் “பொன்னர் சங்கர்’ உடுக்கடிக் கூத்தும் நடைபெற்றது. மூன்றாம் நாள் இரவு கூத்தம்பட்டித் திருமலைராஜன்- பவானி அர்ஜுனனின் “மதுரைவீரன்’ இசைக் கூத்து நடைபெற்றது.
காலை நேரங்களில் அமர்வுகளில் எழுத்தாளர் பெருமாள் முருகன், தேவி பாரதி, செல்வராஜ் போன்றோரின் கிராமப்புறக் கதைகளில் சோம்பேறிகளுக்கான அறிவுரை, சித்தி கொடுமை, சமயோசித புத்தியால் சமாளித்தல் போன்ற பொதுத்தன்மையைக் கவனிக்க முடிந்தது. அதையெல்லாம் கேட்க வாய்ப்பில்லாமல் இன்றைய குழந்தைகள் மெகா சீரியல்களிலும் சினிமா பாட்டு நிகழ்ச்சிகளிலும் தங்களைத் தொலைத்துவிட்டு நிற்கும் அவலமும் நினைவுக்கு வந்தது.
“”இத்தகைய கிராமிய கதைகள் மூலமாக அந் நாளைய கிராமியச் சூழலையும் அறியமுடிகிறது. காக்கைகள் தீய குணம் பெற்றவையாகச் சித்திரிக்கப்படுவது பிற்காலக் கதைகளில்தான். நன்னூலில் ஏழாம் வேற்றுமைக்கு உதாரணமாக “கருப்பின் கண் மிக்குளது அழகு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, காக்கைகள் அறிவாளிகளாகவும் அழகானவையாகவும் சித்திரிக்கப்பட்ட காலகட்டம் தொல்காப்பிய காலகட்டம் என்று தெரிகிறது. கருப்பு நிறம் அறியாமையின் நிறம் என்று சிந்திக்கத் தொடங்கியது பிற்காலங்களில்தான்…” என்ற பெருமாள்முருகனின் கருத்து சிந்திக்கத் தகுந்தது. காக்கைகள் கதைகள் மூலம் காலத்தை அறியமுடியும் என்பது ஆச்சர்யம்தான்.
புலவர் செ.இராசுவின் கொடுமணல் அகழ்வாய்வுகள் பற்றிய பேச்சு வரலாற்றுக் காலகட்டத்துக்கு அழைத்துச் செல்வதாக இருந்தது.
எழுத்தாளர்கள் சுகுமாரன், யுவன் சந்திரசேகர், குவளைக்கண்ணன், அய்யப்ப மாதவன், கடற்கரய், ரெங்கையா முருகன் போன்ற பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
மரபுக்கலைகளுக்குப் புத்துயிர் ஊட்டும் இந்த முயற்சிக்கு வாழ்த்து சொல்லி புறப்பட்டோம்.