Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007
பாதியில் முடங்கிய 3 மேம்பாலங்கள்: ரூ. 42 கோடி வீணாகும் அவலம்
சென்னை, ஆக. 2: சென்னை தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை காரணமாக ரூ. 42 கோடியில் தொடங்கப்பட்ட 3 மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
- தாம்பரம் சானடோரியம்,
- பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை,
- பல்லாவரம் திரிசூலம் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்படவில்லை.
தகவல் பெறும் உரிமைச் சட்டம்: இந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து இங்குள்ள குரோம்பேட்டை நியூகாலனி குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் வி. சந்தானத்துக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறையினர் அளித்துள்ள பதில் விவரம்:
சானடோரியம் மேம்பாலம்:
ரூ. 14.40 கோடி திட்ட மதிப்பீட்டில் 2003 டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்த மேம்பாலப் பணிகள் திட்டமிட்டபடி 2005 ஜூனில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
70 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவது, கிழக்குத் தாம்பரம் பகுதியில் இறங்குதளம் அமைக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு ஆகியவற்றால் இந்த மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி 2008 டிசம்பருக்குள் இந்த மேம்பாலப் பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.
பல்லாவரம் -துரைப்பாக்கம் ரேடியல் சாலை மேம்பாலம்:
ரூ. 22 கோடி திட்ட மதிப்பீட்டில் 2004 பிப்ரவரியில் இந்த திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன.
திட்ட மதிப்பீட்டில் ரூ. 20 கோடி, நிலம் கையகப்படுத்தவே செலவிடப்பட்ட நிலையில் இதுவரை 53 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 723 சதுர மீட்டர் நிலம் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 2006 பிப்ரவரியில் முடிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி 2008 ஜூனில் இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிக்கப்படும் என தெரிகிறது.
பல்லாவரம்- திரிசூலம் மேம்பாலம்:
ரூ. 5.75 கோடி திட்ட மதிப்பீட்டில் 2003 நவம்பரில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
இதுவரை 40.55 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்புத்துறை நிலத்தை ஒப்படைக்காததால் திட்டமிட்டபடி 2005-ல் இந்த மேம்பாலப் பணிகள் முடிக்கப்படவில்லை.
பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலம் கிடைத்த நாளில் இருந்து 12 மாதங்களுக்குள் இதன் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமதம் ஏன்?:
இந்த மூன்று மேம்பாலங்களும் பாதியில் முடங்கியதற்கு இவற்றுக்கு தேவையான நிலத்தை பெறுவதில் ஏற்பட்ட பிரச்னையே காரணம்.
பல கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் இத்தகைய திட்டங்களுக்கு முக்கியத் தேவை நிலம். ஆனால், இந்த திட்டங்களை உருவாக்கிய அரசு அதிகாரிகள் தேவையான நிலத்தை பெறுவதற்கான வழிமுறைகளை தெளிவாக வகுக்கவில்லை.
தனியார் பயன்பாட்டுக்கான பெரிய திட்டங்களுக்கு சாதாரண மக்களின் நிலங்கள் தேவை என்றால் விரைந்து செயல்பட்டு நிலத்தை கையகப்படுத்தும் அரசு நிர்வாகம், மக்களின் திட்டங்களுக்காக சில தனியாரிடம் இருந்து நிலத்தை பெறுவதில் மட்டும் ஆமை வேகத்தில் உரிய அக்கறை இன்றி செயல்படுவதே இத்தகைய திட்டங்கள் முடங்க முக்கிய காரணம் என இப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Posted in activity, ADMK, Airport, Auto, Bridge, Bus, Cars, Chennai, Commuter, completion, Construction, Dam, Data, Delays, DMK, Engineering, Expenses, flyover, Inflation, Information, infrastructure, L&T, Labor, laborers, Larsen, Larsen and Toubro, larsentoubro, Lights, Madras, Mayor, Overbridge, Pallavaram, Politics, Progress, Projection, Projects, Record, Roads, RTI, Scooter, Signal, Stalin, Stall, Statz, Surface, Tambaram, Thambaram, Thrisoolam, Thrisulam, Time, Toll, Toubro, Track, Transport, Trisoolam, Trisulam | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007
தருமபுரி அருகே பாலம் கட்டும் பணிக்கு 3 சிறுவர்களை நரபலியிட முயற்சி?
சிறுவர்களை நரபலியிட முயன்ற சம்பவத்தால் ஆத்திரம் அடைந்து தனியார் நிறுவன கிடங்குக்கு தீயிட்டுக் கொளுத்தும் பொதுமக்கள். (உள்படம்) நரபலியிட முயன்ற கும்பலிடம் இருந்து தப்பிய சிறுவர்கள் (இடமிருந்து) தமிழரசு, சந்திரபாபு, சிவமணி.
தருமபுரி, மார்ச் 16: தருமபுரி அருகே 4 வழிச்சாலை பாலப் பணிக்காக பள்ளிச் சிறுவர்கள் 3 பேரை தனியார் நிறுவன ஊழியர்கள் நரபலியிட முயன்றதாகக் கூறி, கொந்தளித்த மக்கள் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். தனியார் நிறுவன கிடங்குக்கும் ஒரு ஜேசிபி இயந்திரத்துக்கும் தீ வைத்தனர்.
தருமபுரி, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை 4 வழிப் பாதையாக மாற்றும் பணியை ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. பூலாப்பட்டி ஆத்துப்பாலம், பெரியாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணியிலும் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
தனியார் நிறுவனத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பூலாப்பட்டி ஆத்துப்பாலம் அருகிலும் பிற இடங்களிலும் கூடாரங்கள் அமைத்து, அந் நிறுவனம் அமைத்துள்ள கிடங்குப் பகுதியிலேயே தங்கியுள்ளனர்.
இந்நிலையில் பூலாப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயவேலின் மகன் சிவமணி (13), குமாரசாமி மகன் தமிழரசு (12), சிங்காரம் மகன் சந்திரபாபு (11) ஆகிய 3 சிறுவர்களும் வழக்கம்போல் பெரியாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வதற்காக வியாழக்கிழமை காலையில் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளனர். சாலையோரம் நடந்து சென்ற 3 சிறுவர்களையும் 5 பேர் கொண்ட கும்பல், வாயைப் பொத்தி தூக்கிச் சென்றுள்ளனர். தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கியிருந்த கிடங்கில் பிற்பகல் வரை சிறுவர்களின் கையைக் கட்டி அமர வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
பிற்பகலில் பாலம் நடைபெறும் இடத்துக்கு 3 சிறுவர்களையும் அழைத்து வந்து அங்கு பூஜைகள் செய்ததாகவும், நிலைமையை உணர்ந்த சிறுவன் சிவமணி தன்னை பிடித்திருந்த நபரின் கையை கடித்துவிட்டு தப்பி ஓடி வந்ததாகவும், அதே நேரத்தில் மற்ற சிறுவர்களும் அவர்களிடம் இருந்து தப்பி ஓடி வந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்த தகவல் கேட்டு சுற்றுப் பகுதி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதுடன் அந்த தனியார் நிறுவனக் கிடங்குக்கு தீயிட்டுக் கொளுத்தியது. அதில் கிடங்கும் ஜேசிபி இயந்திரமும் தீக்கிரையானது.
Posted in Bridge, Builder, Child, Children, completion, Construction, Constructor, Dharmapuri, Dharmapury, flyover, Human, Kid, Sacrifice, success, Tharmapuri | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006
திருமண மண்டபம் இடிப்பு: விஜயகாந்த்துக்கு ரூ.8.55 கோடி நஷ்டஈடு திங்கட்கிழமை வழங்கப்படுகிறது
சென்னை, டிச. 16-
சென்னையில் போக்குவரத்து நெரிசலை சீரமைப்பதற்காக சர்வதேச தரத்துக்கு இணையாக மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கத்திப்பாரா சந்திப்பு, பாடி, விமான நிலையம் எதிரில் தற்போது பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அந்த வரிசையில் கோயம்பேடு சந்திப்பிலும் மிக பிரமாண்டமான, நவீன அடுக்கு மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக கோயம்பேடு சந்திப்பு பகுதியில் உள்ள 165 பேரின் நிலம் மற்றும் கட்டிடங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறை கையகப்படுத்தி உள்ளது.
165 பேரின் கட்டிடங்களில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபமும் ஒன்றாகும். இந்த திருமண மண்டபத்தின் ஒரு பகுதி, சாலை விரிவாக்கத்துக்கு தேவைப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை கூறியது. இதற்கு விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்தார்.
மண்டபத்தை இடிக்காமல் மேம்பாலம் கட்டலாம் என்று கூறிய அவர், அதற்காக மாற்றுத்திட்டம் ஒன்றை வரையறுத்து, அதை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி டி.ஆர்.பாலுவுக்கு அனுப்பினார். அந்த மாற்றுத் திட்டத்தை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், அது சாத்தியப்படாது என்று கூறி நிராகரித்து விட்டனர்.
இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் வருவாய் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து கோயம்பேடு பகுதியில் நிலத்தை கையகப்படுத்தவும், அதற்குரிய நஷ்ட ஈட்டை அளிக்கும் பணியைத் தொடங்கி உள்ளனர். பாலத்துக்காக நிலத்தை இழக்கும் 165 பேருக்கும் வருவாய் துறை நோட்டீசு அனுப்பி உள்ளது.
அதில், நிலத்தை கையகப்படுத்துவதற்காக தரப்படும் நஷ்டஈடு விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அவர் மனைவி பிரேமலதா பெயரில் இருப்பதால் அவருக்கு கடந்த 8-ந்தேதி வருவாய் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்துவதற்கு நஷ்டஈடாக ரூ. 8.55 கோடி வழங்கப்படும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சீபுரத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்து ரூ. 8.55 கோடி பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு பிரேமலதாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ. 8.55 கோடி தொகை டி.டி. மூலம் வழங்கப்படும் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு பிரேமலதா தரப்பில் இருந்து ஏதேனும் பதில் வந்ததா? என்று கேட்டதற்கு, “இதுவரை எந்த தகவலும் வரவில்லை” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலம் கையகப்படுத்துவதற்காக மொத்தம் ரூ. 23 கோடி இழப்பீடு வழங்க தேசிய நெடுஞ்சாலை துறை முன் வந்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் செல்லும் சாலையில் உள்ள 20 பேரும் தங்கள் இடத்தை கொடுக்க உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் வரும் திங்கட்கிழமை இழப்பீடு தொகை வழங்கப்படும். ஒரிஜினல் நிலப்பத்திரத்தை காட்டி இவர்கள் இழப்பீடு தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு வழங்கப்பட்டதும் கோயம்பேடு சந்திப்பை சுற்றி உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணி விரைவில் தொடங்கும். அவை முழுமையாக அகற்றப்பட்டதும் பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்படும்.
Posted in acquisition, Andaala Azhagar, Congestion, Demolition, DMDK, flyover, Highways, Kathipaara, Koyambedu, Land, Maduravayal, Marriage Hall, NHD, Premalatha, RTO, Tamil, Traffic, Transportation, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006
தரம் உயர்த்த தகுதி இல்லாததால் 17 பேர் பலியான புதுப்பாக்கத்தில் ரெயில் கேட் அமைக்க இயலாது: ரெயில்வே அதிகாரி விளக்கம்
காஞ்சீபுரம் அருகே உள்ள புதுப்பாக்கம் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை ஷேர் ஆட்டோ கடந்தபோது ரெயில் மோதி 17 பேர் பலியான சம்பவம் தமிழகத்தை உலுக் கியது. சாவு வீட்டுக்கு போனவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் விபத்தில் உயிர் இழந்தனர்.
17 பேரை பலி கொண்ட புதுப்பாக்கம் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை அதிகாரி கள் பார்வை யிட்டனர். இனி வரும் காலத்தில் இதுபோன்ற துயர சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அங்கு ரெயில்வே கேட் அமைக்க வாய்ப்பு உள்ளதா என்று ஆலோசனை செய்தனர்.
ஆள் இல்லாத ரெயில் கேட் வழியாக தினசரி 6 ஆயிரம் வாகனங்களுக்கு மேலாக கடந்து சென்றால்தான் அதன் தரத்தை உயர்த்த முடியும். அந்த வழியாக வாகனங்கள் செல்லும் அளவை பொறுத்துத்தான் அங்கு ஆள் போட்டு கேட் அமைக்கவோ, தானியங்கி கேட் அமைக்க ரெயில்வே விதிமுறையில் உள்ளது.
அதன் அடிப்படையில் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டில் தினம் சுமார் 3 ஆயிரத்திற்கும் குறைவான அளவில் வாகனங்கள் கடந்து செல்கின்றன. அதனால் அங்கு ரெயில்வே கேட் அமைக்க வாய்ப்பு இல்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதுப்பாக்கம் லெவல் கிராசை தரம் உயர்த்த தகுதி இல்லை. அங்கு ஆள் போட்டு கண்காணிக்கவோ, கேட் அமைக்கவோ வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
Posted in dead, flyover, Jaffer Sharief, Kanchipuram, level crossing, mishap, Puthupakkam, Rail accident, Share Auto, Tamil Nadu, Train Accident, underpass | Leave a Comment »