இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இலங்கை புகார்
இலங்கைக் கடற்பரப்பினுள் இந்திய மீனவர்கள் பெரும் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அத்துமீறி மீன்பிடித்துவருவதால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் இது குறித்து தகுந்த நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும்படி இந்தியாவிடம் இலங்கை கடற்படை முறைப்பாடு செய்திருப்பதாக தெரியவருகிறது.
இலங்கையின் தலைமன்னார் கடற்பகுதியில் திங்கள் கிழமையன்று ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கடற்படையின் வாட்டர்ஜெட் ரோந்து விசைப்படகொன்று சேதமானதை அடுத்தே இந்த முறைப்பாட்டினை இலங்கைக் கடற்படைத் தலைமையகம் கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மேற்கொண்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இலங்கை கடற்படையினர் இவ்வாறானதொரு முறைப்பாட்டினைச் செய்திருப்பதனை கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உறுதிசெய்திருப்பதோடு, இது குறித்து மத்திய அரசிற்கு தெரியப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
பிரயாணத் தடையால் பொதுமக்கள் பாதிப்பு
![]() |
![]() |
சோதனைச் சாவடியில் நிற்கும் பேருந்துகள் |
இலங்கையின் வடக்கே வவுனியா மன்னார் மாவட்டங்களில் இருந்து தென்பகுதிக்குச் செல்லும் வாகனங்கள் மீதான பிரயாணத் தடை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முன்னர் அததியாவசிய தேவைகளுக்காகச் செல்லும் வண்டிகள், பயணிகள் செல்லும் பேருந்து வண்டிகள் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகத் தென்பகுதிக்குச் சென்று திரும்ப அனுமதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த மூன்று தினங்களாக மதவாச்சி சோதனைச்சாவடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக வவுனியா மன்னார் மாவட்டங்களில் இருந்து எந்த வாகனமும் மதவாச்சி ஊடாகப் பயணம் செய்ய முடியாது என பொலிசாரினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதனால் பிரயாணிகள், உயர்கல்வி, மாணவர்கள், வைத்தியர்கள் உட்பட்ட துறைசார்ந்தவர்கள், பொதுமக்கள், வர்த்தகரகள் என பலதரப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா வைத்தியசாலைக்குத் தேவையான ஒக்சிஜனைப் பெறுவதற்காக அனுராதபுரத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்ட ட்ரக் வண்டியும் பிரயாண அனுமதி மறுக்கப்பட்டு மதவாச்சி பொலிசாரினால் வவுனியாவுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவிடயம் குறித்து வவுனியா மற்றும் அனுராதபுரம் உயர் பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா வைத்தியசாலையில் கையிருப்பில் உள்ள ஒக்சிஜனின் அளவு நாளாந்தம் குறைவடைந்து செல்வதனால், அதனை அனுராதபுரத்தில் விரைவில் எடுத்து வராவிட்டால் வைத்தியசாலையின் நோயாளர்களின் உயிர்காக்கும் முக்கிய வைத்திய பணிகள் பாதிப்படையும் அபாயம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அரசுக்கு ஊடகவியளாளர் அமைப்பு கண்டம்
![]() |
![]() |
சுதந்திர செய்தியாளர்களுக்கு அரசு நெருக்கடி அளிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது |
ஊடகவியலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உலகின் மிகப் பெரிய அமைப்பு இலங்கை அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி அறிக்கையில், அந்நாட்டின் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறையை அரசு அதிகாரிகள் தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டியுள்ளது.
சுதந்திரமாக செய்திகளை சேகரிக்கும் ஊடகவியலாளர்களின் உரிமை குறித்து, இலங்கை அரசு மிகவும் ஆபத்தான அளவுக்கு அலட்சியம் காட்டுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர்களுக்கு எதிரான வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறு, விடுதலைப்புலிகள், மற்றும் பிற ஆயுதக்குழுக் களை அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 பிப்ரவரி, 2008
வவுனியாவில் முழு அடைப்பு
![]() |
![]() |
வெறிச்சோடிக் கிடக்கும் வவுனியா சாலை ஒன்று |
இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இன்று கடைகள் மூடப்பட்டு, பணிபுறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. கொழும்பு கோட்டை ரயில் நிலையம், தம்புள்ள மற்றும் தட்சணாமருதமடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களையும், இவற்றில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதையும் கண்டிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
புளொட் எனப்படும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது. இந்த மாவட்டங்களில் அரச, தனியார் துறை அலுவலகங்கள், வங்கிகள், பாடசாலைகள் என்பன இயங்கவில்லை. வாகனப் போக்குவரத்துக்களும் இடம்பெறவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை இங்கு முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானப்படையினர் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.
வட இலங்கையில் மோதல்கள் தொடருகின்றன
![]() |
![]() |
வடக்கில் வான்வழித் தாக்குதல்கள் |
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர்கள் ஒன்று கூடும் தளம் ஒன்றின் மீது இன்று காலை 8.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகள், திருவையாறு வடக்கில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது விமானப்படையின் தாக்குதல் விமானங்கள் இன்று காலை 20 குண்டுகளை வீசியதாகவும், இதன்போது அங்கிருந்தவர்கள் பாதுகாப்பு குழிகளுக்குள் இருந்ததாகவும், குடிசையொன்று சேதமடைந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
கிளிநொச்சி புறநகர்ப்பகுதியாகிய கணேசபுரத்தில் நேற்றுப் பிற்பகல் விமானப்படையினர் நடத்திய வான்தாக்குதலில் 2 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் மேலும் இருவர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் கிளாலி, நாகர்கோவில் உட்பட்ட போர்முனைகளில் இராணுவத்தினர் இன்று காலை 5.50 மணி முதல் 6.30 மணிவரையில் விடுதலைப் புலிகள் மீது நடத்திய தாக்குதலில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
சுமார் 45 நிமிடங்கள் இந்தத் தாக்குதல் நீடித்ததாகத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள் இதில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். தங்கள் தரப்பு சேதங்கள் குறித்து அவர்கள எதுவும் தெரிவிக்கவில்லை.
மன்னார் மற்றும் மணலாறு பகுதிகளில் நேற்றும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகவும் இதில் இரு தரப்பினருக்கும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டதாகவும் இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது
ராமேஸ்வரம் மீனவர்களிடம் தமிழக அரசு விசாரணை
![]() |
![]() |
மீன்பிடி தொழிலாளர்கள் |
இலங்கை தலைமன்னார் கடற்பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமை ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இலங்கை கடற்படையின் வாட்டர்ஜெட் ரோந்து விசைப்படகு ஒன்று சேதமடைந்தது.
இந்த சம்பவம் நடந்தபோது, அங்கிருந்த பெரும் எண்ணிக்கையிலான தமிழக மீனவர்களின் படகுகள் விடுதலைப்புலிகளுக்கு உதவும் விதத்தில் நடந்து கொண்டதாக இலங்கை கடற்படை இந்திய அரசிடம் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, தமிழக அதிகாரிகள் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடம் இன்று புதன்கிழமை விசாரணை நடத்தி யிருக்கிறார்கள்.
தமிழக அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் நடத்திய இன்றைய விசாரணையின்போது, இந்திய கடற்படை அதிகாரிகளும், கடலோர காவல்படையினரும் உடனிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் நடைபெற்ற விசாரணைகள் குறித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான போஸ் தமிழோசையிடம் கூறிய தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 பிப்ரவரி, 2008
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை-அம்னெஸ்டி இண்டர்நேஷணல்
![]() |
![]() |
அம்னெஸ்டி இண்டர்நேஷணல் அமைப்பின் சின்னம் |
இலங்கையில் மோதல்கள் அதிகரிக்கும் நிலையில், ஊடகச் சுதந்திரம் பாதிக்கப்படுவதும், ஊடகவியாலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும், அதிகமாவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை குறைந்தது 10 ஊடகவியலாளர்கள் சட்ட விரோதமாக கொல்லப்பட்டுள்ளதாகவும், இருவர் காணமல் போயுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. பலர் சித்திரவதை செய்யப்பட்டதுடன், அவசரகால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அந்த அளிக்கை கூறியுள்ளது.
விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் எந்தவொரு சுதந்திர உள்ளூர் ஊடகத்தையும் செயல்பட அனுமதிப்பதில்லை என்றும் ஊடகவியலாளர்களை உன்னிப்பாக கண்காணிப்பதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை கோரியுள்ளது.
இவை குறித்த மேலதிகத் தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.