கசக்குது சர்க்கரைத் தீவு
பூவுக்குள் பூகம்பம் என்பதைப் போல குட்டித் தீவு நாடான பிஜியில் 4 வது முறையாக ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
1987-ல் இரண்டு முறையும் 2000ம் ஆண்டிலும் நடைபெற்ற ராணுவப்புரட்சிகளால் நேர்ந்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இன்னும் முழுமையாக மீளமுடியாத சூழ்நிலையில், இன்னொரு ராணுவக் கலகம்.
பிரிட்டிஷாரின் ஆளுகையில் இருந்த பிஜி தீவுக்கு 1870-களில் இந்தியத் தொழிலாளர்கள் கரும்பு விவசாயத்துக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் கணிசமானவர்கள் தமிழர்கள். இந்தத் தீவில் இந்திய வம்சாவளியினர் 40 சதவீதம் பேர் உள்ளனர். ஆட்சிமொழிகளில் ஒன்று இந்துஸ்தானி (இந்தி). தீபாவளி, ராமநவமி, ஹோலி ஆகிய பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை உண்டு.
இந்திய வம்சாவளியினரே (இந்தோ-பிஜியன்) அதிகார மட்டங்களில் பரவலாக இருந்ததை மண்ணின் மைந்தர்களால் சகிக்க முடியவில்லை. 1987-ல் ராணுவப் புரட்சி நடந்தது. இந்திய வம்சாவளியினரில் ஒரு பகுதியினர் அச்சத்தில் வெளியேறினர்.
2000ம் ஆண்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் மகேந்திர செüத்ரியை நீக்கிய ஜார்ஜ் ஸ்பைட்-டை நீக்கிவிட்டு, லைசீனியா கராúஸ-வை பிரதமராக அமர்த்தியவர் தளபதி பிராங்க் பைனிமாரமா. இப்போது அவரே லைசீனியாவைத் தூக்கி எறிந்துவிட்டார். புரட்சிக்கான காரணங்கள் மிக அற்பமானவை.
அமெரிக்கா தனது உதவிகளை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. காமன்வெல்த் நாடுகள் சபையிலிருந்து பிஜி நீக்கப்பட்டுவிடும். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, அந்தத் தீவில் மிகவும் பாதிக்கப்படுவோர் அங்கு வாழும் மக்கள்தான்.
பிஜியின் மக்கள் தொகை 10 லட்சம். இதில் 2.5 லட்சம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்பவர்கள். இங்குள்ள உழைப்பாளர்களில் 10 சதவீதம்பேர் கரும்பு விவசாயத்திலும் (ஆண்டு உற்பத்தி 30 லட்சம் டன்) 10 சதவீதம் பேர் சுற்றுலா சார்ந்த தொழில்களிலும் பிழைப்பு நடத்துகின்றனர்.
உலகச் சந்தையில் சர்க்கரையின் விலைவீழ்ச்சி காரணமாக தற்போது பிஜியின் கரும்பு உற்பத்திக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா மூலமான வருவாயை முழுமையாக எதிர்நோக்க வேண்டிய நேரத்தில்தான் இந்த ராணுவப் புரட்சி நடந்துள்ளது. ராணுவப் புரட்சி நடந்த சில மணி நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் பலரும் தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்துவிட்டனர். ஆண்டுக்கு 5.5 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளை இழுக்கிறது பிஜியின் இயற்கை அழகு. ஒரு பயணி சராசரியாக 8 நாள்கள் தங்குகிறார். நாளொன்றுக்கு 180 டாலர் செலவிடுகிறார். நாட்டின் நான்கில் ஒருபகுதி வருவாய் சுற்றுலா மூலம்தான்.
2000ம் ஆண்டு ராணுவப் புரட்சி காரணமாக, சுற்றுலா சார்ந்த தொழில் முதலீடுகள் வருவது நின்றுபோயின. கடந்த 7 ஆண்டுகளாக அமைதியான அரசியல் சூழல் நிலவியதால் மீண்டும் பல நிறுவனங்கள் சுற்றுலா சார்ந்த தொழில்களில் முதலீடுகளைக் கொண்டுவந்து கொட்டுவதற்கான திட்டங்களை கையில் எடுக்கும் வேளையில், மீண்டும் ராணுவப் புரட்சி!
“தற்போதைய புரட்சியில் யாரும் ரத்தம் சிந்தவில்லை. இனியும் அதே நிலை நீடித்தால் சுற்றுலாப் பயணிகள், முதலீட்டாளர்கள் அச்சம் குறையும்’ என்று பிஜியின் சுற்றுலாத் தொழிலில் இருப்பவர்கள் நம்புகின்றனர்.
கரும்பு உற்பத்திக்கு ஐரோப்பிய நாடுகள் மானியம் தருகின்றன. புரட்சி நீடித்தால் அதை இழக்க நேரிடலாம். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தால் அதன் பாதிப்பு இந்த சாதாரண மக்களைத்தான் பாதிக்கும்.