தமிழகத்தில் 2 புதிய தொழிற்சாலை: ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
சென்னை, செப். 13:தமிழகத்தில் 2 புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை கையெழுத்தானது.
ஃபென்னர் இந்தியா நிறுவனம் மற்றும் கெப்பாரோ இன்ஜினீயரிங் இந்தியா (பி) நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன.
இவ்விரு நிறுவனங்களும் சிப்காட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வது, கட்டுமான வசதி மற்றும் திட்ட வசதிகள் குறித்து எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
சிப்காட் மேலாண் இயக்குநர் கோவிந்தன் மற்றும் ஃபென்னர் இந்தியா நிறுவனம் சார்பில் எல். ராம்குமார் ஆகியோரும் கெப்பாரோ என்ஜினீயரிங் சார்பில் சுனில் ஹிலாஜனி ஆகியோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
ஃபென்னர் இந்தியா நிறுவனம் டயர் பேப்பர், சிமென்ட், பால் பண்ணை, அக்ரோ ஜெனிடிக்ஸ் மற்றும் பிற பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் இந்நிறுவனத்தின் முதலீடு ரூ. 200 கோடியாகும்.
தற்போது ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் தொழில் பூங்காவில் ஆயில் சீல் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை தொடங்க முன்வந்துள்ளது. அத்துடன் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய பெல்ட் தயாரிப்புக்கான தொழிற்சாலை ஒன்றை, பின்தங்கிய பகுதியான நிலக்கோட்டையில் தொடங்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரூ. 35 கோடி முதலீட்டிலான இத்தொழிற்சாலை மூலம் நேரடியாக 150 பேருக்கும் மறைமுகமாக 150 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்நிறுவனம் ஓராண்டில் உற்பத்தியைத் தொடங்கும்.
லண்டனில் வாழும் இந்தியத் தொழிலதிபர் ஸ்வராஜ்பாலின் குழும நிறுவனம் கெப்பாரோ இன்ஜினீயரிங். இந்நிறுவனம் சென்னையை அடுத்த ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை தொடங்க உத்தேசித்துள்ளது. அத்துடன் இயந்திர வில்லைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நிலக்கோட்டையில் தொடங்கவும் இந்நிறுவனம் முன்வந்துள்ளது. ரூ. 40 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் இத்தொழிற்சாலை மூலம் 400 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 2009-ம் ஆண்டு அக்டோபரில் இத்தொழிற்சாலை உற்பத்தியைத் தொடங்கும் என அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.