வேலியே பயிரை மேய்ந்தால்…
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இப்போது மீண்டும் அனைவராலும் பேசப்படக் காரணம் – போலி என்கவுன்ட்டர்.
என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சோராபுதீன் மனைவி கசூர் பீவி “எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்’ என்று குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியிருப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.
99 சதவீத என்கவுன்ட்டர்கள் போலியானவை என்பது “சூரியன் உதிக்கும் திசை கிழக்கு’ என்பதைப்போல அனைவருக்கும் தெரிந்த உண்மை. சில சம்பவங்களில் மனித உரிமை அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாலும்- போலி என்கவுன்ட்டர் என்பது நிரூபிக்கப்பட்டதில்லை. கொல்லப்பட்டவர் பலராலும் அறியப்பட்ட ரெüடி என்பதும், அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார் என்ற உண்மையும் காவல்துறைக்குச் சாதகமானவையாக அமைந்துவிடுகின்றன.
இப்போதும்கூட, போலி என்கவுன்ட்டரில் சோராபுதீன் சுட்டுக்கொல்லப்பட்டது பெரிய அளவில் பேசப்படவில்லை. அவர் மனைவி கசூர் பீவி கொலைதான் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சோராபுதீன் மீது பல குற்றவழக்குகள் உள்ளன. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் பெரும்பணக்காரர்களிடம் மிரட்டிப் பணம் பெற்றதாக இவர் மீது ஆதாரங்களுடன் வழக்குகள் உள்ளன. ஆனால், அவர் ரெüடி என்பதற்காக சுட்டுக் கொல்லப்படவில்லை. குஜராத் முதல்வரை கொலை செய்யும் திட்டம் வைத்திருந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி என்று 2005 நவம்பரில் கைது செய்யப்பட்டு, பிறகு என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.
அவருடன் பயணம் செய்துகொண்டிருந்த மனைவி கசூர் பீவியைக் காணவில்லை என்று தொடுக்கப்பட்ட வழக்கில், தற்போது அவர் கொல்லப்பட்டிருப்பதாக குஜராத் அரசு சொல்கிறது.
இந்த போலி என்கவுன்ட்டர் தொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. இந்த வழக்கில் கசூர் பீவி கொல்லப்பட்டது நிரூபிக்கப்படலாம் அல்லது முடியாமலும் போகலாம். ஆனால் சோராபுதீனை என்கவுன்ட்டரில் கொல்லக் காரணம் என்ன? எந்த உண்மையை மூடி மறைக்க இந்த என்கவுன்ட்டர் நடத்தப்பட்டது, இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது பற்றியும் தீர விசாரித்தால், பல உண்மைகள் தெரியவரும்.
கசூர் பீவி போலி என்கவுன்ட்டருக்கு சாட்சியாக இருந்ததால் அவரையும் கொலை செய்திருக்கலாம் என்ற வாதம் மேம்போக்கானது. என்கவுன்ட்டர் தொடர்பான எதிர்வழக்குகளில் யாருமே வெற்றி பெறவில்லை என்பதால், கசூர் பீவியின் சாட்சி காவல்துறைக்குப் பெரிய விஷயமே இல்லை. எந்த ரகசியங்கள் வெளியில் வரக்கூடாது என்பதற்காக என்கவுன்ட்டரில் சோராபுதீன் கொல்லப்பட்டாரோ அந்த ரகசியங்கள் கசூர் பீவிக்கும் தெரிந்திருக்கக் கூடும்.
போலி என்கவுன்ட்டர்களுக்கு காரணம், பிடிபடும் நபர் வாயைத் திறந்தால் வேறு சில “தேவையில்லாத’ உண்மைகள் வெளியே வரும்; அந்த உண்மையின் வெளிச்சத்தில் பல முக்கியப் பிரமுகர்களின் மெய்த்தோற்றம் தெரியவரும் என்பதால் நிரந்தரமாக வாயடைக்கும் வேலைதான் என்கவுன்ட்டர்.
கொல்லப்படுபவர் ஒரு சமூக விரோதியாக இருப்பதால், என்கவுன்ட்டர் ஒரு சூரசம்ஹாரம் என்பதுபோல மாறிவிடுகிறது. போலீஸ் அதிகாரி நாயகனாகி விடுகிறார். அவருக்கு விருதுகள்கூட கிடைக்கின்றன.
மும்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயா நாயக் என்பவர் 83 ரவுடிகளை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றவர். வருவாய்க்கு அதிகமான சொத்து சேர்த்ததாக பணியிடைநீக்கம் செய்யப்பட்ட இவரது வாழ்க்கை, பல திரைப்படங்களாக பல மொழிகளில் வந்துள்ளது.
காக்கிச் சட்டையில் போலீஸôகவும், அதைக் கழற்றினால் ரெüடியாகவும் மாறுவது திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். நிஜ வாழ்க்கையில் நிலை மாறக்கூடாது.