தலித்துகள் கொதித்தது ஏன்?
நீரஜா சௌத்ரி
தமிழில்: சாரி.
கைர்லாஞ்சியில் 2006-ல் நடந்ததுதான் பெல்ச்சியில் 1978-ல் நடந்தது. இது மகாராஷ்டிரம், அது பிகார். இரண்டுமே தலித்துகளுக்கு எதிராக நடந்த கொடூரமான தாக்குதல்கள். ஆட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்ட இந்திரா காந்தியை மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியது பெல்ச்சி.
அப்போது பெல்ச்சி கிராமத்துக்கு நல்ல சாலை வசதிகள் இல்லை. பெல்ச்சியில் நடந்த சம்பவத்தின் தீவிரம் இந்திரா காந்தியால் நன்கு உணரப்பட்டிருந்தது. வெவ்வேறு வாகனங்கள் மூலம் அந்தக் கிராமத்துக்கு விரைந்த இந்திரா, கடைசியாக யானை மீது ஏறி அங்கு போய்ச் சேர்ந்தார். தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ஓர் உதாரணமாகவே அரசியல் அகராதியில் இடம் பிடித்தது பெல்ச்சி. 1980 ஜனவரியில் நடந்த தேர்தலில் ஜனதா அரசு ஆட்சியை இழந்தது, இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார்.
கைர்லாஞ்சியில் செப்டம்பர் 29-ம் தேதி என்ன நடந்தது என்பதை உணரவே மத்திய அரசுக்கு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த வியாழக்கிழமை தலித்துகள் 2 ரயிலைக் கொளுத்திய பிறகுதான் ஓரளவுக்குத் தெரிந்தது. முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் அந்த கிராமத்துக்குச் செல்லவே 41 நாள் ஆகிவிட்டது. மாநிலம் முழுவதும் தலித்துகளின் கோபம் வன்செயல்களாக வெடித்ததை அடுத்து, சிங்கப்பூர் சென்றிருந்த தேஷ்முக்கை உடனே நாடு திரும்புமாறு பணித்தார் சோனியா காந்தி.
கைர்லாஞ்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் தலைவர் பையா லால் போட்மாங்கேவும் அவரைச் சேர்ந்தவர்களும் கடந்த சனிக்கிழமை தில்லி வந்து பிரதமரையும், சோனியா காந்தியையும் சந்தித்து, என்ன நடந்தது என்று நேரில் விவரித்தனர். அதன் பிறகே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
தலித் சமூகத்தில் மஹர் பிரிவைச் சேர்ந்த போட்மாங்கே குடும்பத்தினர் ஓரளவுக்கு வசதியானவர்கள், படிப்பறிவு பெற்றவர்கள். அக் கிராமத்தில் “குன்பி-மராத்தா‘ என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வசிக்கின்றனர். அவர்களில் சிலர் மீது போட்மாங்கேவின் மனைவி சுரேகா (45) அதிகாரிகளிடம் புகார் கூறியிருந்தார். அதனால் அவர் மீது குன்பி-மராத்தா சமூகத்தைச் சேர்ந்த கிராமப் பெரியவர்கள் கோபமாக இருந்தனர்.
செப்டம்பர் 29-ம் தேதி இரவு போட்மாங்கே வீட்டில் இல்லாதபோது, குடிபோதையில் சிலர் அவர்கள் வீட்டுக்கு வந்தனர். சுரேகாவையும் அவருடைய மகள் பிரியங்கா (17), மகன்கள் ரோஷன் (23), சுதீர் (21) ஆகியோரையும் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்தனர். இரும்புக் கம்பிகளாலும் சைக்கிள் செயின்களாலும் அவர்களைப் அடித்தனர். இரு பெண்களையும் நிர்வாணப்படுத்தி தெருக்களில் இழுத்து வந்தனர். பிறகு அடித்துக் கொன்றுவிட்டு கிராமத்துக்கு வெளியே சடலங்களைப் போட்டுவிட்டனர். இரு பெண்களும் கற்பழிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வீடு திரும்பிக்கொண்டிருந்த போட்மாங்கே வேதனையுடனும் அச்சத்துடனும் அந்த அக்கிரமங்களை ஒரு புதரின் பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.
கிராம நிர்வாகமும், காவல்துறையும் இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மாநில அரசும் மெத்தனமாகவே இருந்தது. “”போட்மாங்கேவுக்குப் பணம் கொடுத்துச் சமாதானப்படுத்தியாகிவிட்டது, பிரச்சினை இல்லை” என்றே அரசால் கருதப்பட்டது. மாநில போலீஸ்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் ஒரு பங்கு மேலே போய், “”நடந்த சம்பவத்துக்கு மாவோயிஸ்டுகள்தான் காரணம்” என்பதைப் போல, பழியை நக்சல்கள் மீது போட்டார்.
இந்த நிலையில்தான் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதாக செய்தி வந்தது. உடனே மகாராஷ்டிரம் பற்றி எரியத் தொடங்கியது. உத்தரப் பிரதேசத்தில் நடந்த சம்பவத்துக்கு மகாராஷ்டிரத்தில் ஏன் இவ்வளவு பெரிய எதிரொலி? கைர்லாஞ்சி சம்பவம் மகாராஷ்டிர தலித்துகளின் மனத்தில் கோபக்கனலை மூட்டிவிட்டது. அது கனிந்து கொண்டிருந்தது. கான்பூர் சம்பவம் ஒரு திரியாக இருந்ததால், கோபம் வெடித்துவிட்டது. பத்திரிகைகளில்கூட ஒரு சிலதான், கைர்லாஞ்சி சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டன. மற்றவை என்ன காரணத்தாலோ அடக்கியே வாசித்தன.
தலித்துகளின் கோபம் தங்கள் மீது பாயும் என்ற கவலை காங்கிரûஸப் பற்றியிருக்கிறது; தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இப்போது அதே கவலைதான். குன்பி-மராத்தா பிரிவினர் தலித்துகளின் கோபத்தைக் கண்டு எதிர்த் தாக்குதலாக, பாஜகவின் முன்னாள் எம்.பி. தலைமையில் கண்டன ஊர்வலம் நடத்தியுள்ளனர்.
தில்லி வந்து சோனியாவையும் மன்மோகனையும் சந்தித்த கைர்லாஞ்சி குழுவில் படித்த, விவரம் தெரிந்த தலித் இளைஞர்கள் அதிகம் இருந்தனர். இந்த வழக்கு முறையாக நடக்கிறதா என்று அவர்கள் கவனிக்க ஆரம்பித்துவிட்டனர். கைர்லாஞ்சியில் நடந்த சம்பவம் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டப்படியான ஆட்சி நடைபெறும் ஜனநாயக நாடு என்று நம்மை நாமே பாராட்டிக்கொள்ள முடியாது. தலித்துகள் இந்நாட்டில் உரிய மரியாதையுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதை உறுதி செய்யாமல் சமூக நீதியை வழங்கிவிட முடியாது. தவறுகளைச் செய்தவர்கள் மட்டும் அல்ல, அதன் மீது நடவடிக்கை எடுக்காதவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து விலாஸ்ராவ் தேஷ்முக் உடனடியாக விலக வேண்டும்.
தமிழில்: சாரி.