Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘fail’ Category

Why the pass percentage is better in the Higher Secondary – Plus Two exams

Posted by Snapjudge மேல் மே 15, 2007

“பாஸ் மார்க்’ நிர்ணயிப்பதில் சாதகமான புதிய விதி: பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு

கடந்த ஆண்டு வரை பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிபெற வேண்டுமெனில், குறைந்தபட்சம் செய்முறை (பிராக்டிகல்) தேர்வில் 30 சதவீத மதிப்பெண்களும், கருத்தியல் (தியரி) தேர்வுகளில் 40 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனில், குறைந்தபட்சம் செய்முறைத் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களும், கருத்தியல் தேர்வுகளில் 30 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று மாற்றம் செய்யப்பட்டது.

இதேபோல சில தேர்வுகளில் கருணை மதிப்பெண்கள் (கிரேஸ் மதிப்பெண்கள்) வழங்கவும் அரசு உத்தரவிட்டது.

இதன் பயனாக இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 81 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புற பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதமும் அதிகரித்துள்ளது.

Dinamani

———————————————————————————–

தூக்கி நிறுத்தும் முயற்சி?

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில் 81 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

தேர்வு எழுதிய 5,55,965 மாணவ, மாணவியரில் 3,29,091 பேர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது மேலும் மகிழ்ச்சி தருகிறது.

ஆனால் இந்த தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதற்குக் காரணம் மாணவர்கள் சிறப்பாகக் கற்றுத் தேர்வு எழுதியதால் அல்ல; தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் மாற்றப்பட்டதுதான் என்ற உண்மை, இந்த மகிழ்ச்சியைக் குறையுடையதாகச் செய்துவிடுகிறது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் செய்முறைக்கு 30 மதிப்பெண், கருத்தியல் தேர்வில் 40 மதிப்பெண் குறைந்தபட்சம் பெற வேண்டும் என்ற விதிமுறை இந்த ஆண்டு மாற்றப்பட்டது. மாணவர் தேர்ச்சிக்குக் குறைந்தபட்சமாகக் கருத்தியல் தேர்வில் 30 மதிப்பெண், செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண் பெற வேண்டும் என்ற புதிய விதிமுறை ஒரு வரமாக அமைந்துவிட்டது.

அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றின் சென்ற ஆண்டு தேர்ச்சி விகிதத்தையும், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த புதிய முறையால் அதிகம் பயனடைந்துள்ளவை அரசுப் பள்ளிகள்தான் என்பதைக் காண முடிகிறது. அடுத்த நிலையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் பயன்பெறுகின்றன. ஆனால் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் பெரிய மாற்றத்தைக் காண முடியவில்லை.

மாநிலத்தில் 21 ஆண்டுகளாகத் தேர்ச்சி விகிதத்தில் முதன்மை வகிக்கும் விருதுநகர் மாவட்டத்தில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 6.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், மிகவும் பின்தங்கிய கல்வி மாவட்டங்களில் ஒன்றான வேலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 47 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக (18 சதவீதம்) உயர்ந்துள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 69 சதவீதத்திலிருந்து 79 சதவீதமாக உயர்ந்துள்ளது, ஆச்சரியம் தரும் மாற்றம்!

வழக்கமாகச் செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்கள் அந்தந்தப் பள்ளி அளவிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. கருத்தியல் தேர்வு விடைத்தாள்கள் மட்டுமே வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு திருத்தப்படுகின்றன. தேர்ச்சிக்குக் குறைந்தபட்சம் 30 மதிப்பெண் பெற்றால் போதும் என்பதாலும், ஒவ்வொரு வினாத்தாளிலும் ஒரு சொல் விடை அல்லது கோடிட்ட இடங்களை நிரப்புதல் போன்ற ஒரு மதிப்பெண் விடைக்கான 30 கேள்விகள் இருப்பதாலும் தேர்ச்சி பெறுவது என்பது மிகவும் எளிதானதாக மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கல்வித் தரம் சரிந்துவருவதாகக் கருத்து நிலவும் இன்றைய வேளையில், மாணவர்கள் எதையும் படிக்காமல் கடைசி நேரத்தில் அதிகபட்சம் 100 ஒரு மதிப்பெண் கேள்விகளை மட்டும் படித்துவிட்டுத் தேர்ச்சி பெற முடியுமெனில், அது பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க உதவலாம், ஆனால் அந்த மாணவனின் தனிப்பட்ட வாழ்க்கை நலனுக்கு உதவுமா என்ற கேள்வி எழுகிறது.

கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி, தமிழகத்தில் தற்போது தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தொழிற்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. குறைந்தபட்சம் 90 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குத்தான் இத்தகைய கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இந்நிலையில், அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 90 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையை மாவட்டவாரியாகத் தமிழகக் கல்வித் துறை வெளியிடுமானால், இந்தத் தேர்ச்சி விகித உயர்வால் உண்மையான பயன் கிடைத்துள்ளதா என்பதை அலசிப் பார்க்க முடியும்.

———————————————————————————————————————————————-

தமிழகத்தில் சீரான தேர்வுத்தாள் முறை வருகிறது?

சென்னை, நவ. 4: சமச்சீர் கல்வி முறைக்கான அறிக்கை அண்மையில் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர் நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து வகை கல்வி முறைக்கும் ஒரே மாதிரியான தேர்வு முறையை அமல்படுத்துவது குறித்து அரசு யோசித்து வருகிறது.

இதன்படி முதல் கட்டமாக மாநிலக் கல்வித் திட்டம், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய அனைத்து வகை தேர்வு முறைகளிலும் ஒரே சீரான மதிப்பெண் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

தற்போது, தேர்வுத் தாள்களில் சீரான நடைமுறையைக் கொண்டு வரலாமா என்பது குறித்தும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மொழிப் பாடங்களுக்கு இரு தாள்கள், கணிதம், அறிவியல் போன்ற இதர பாடங்களுக்கு ஒரு தாள் கொண்டு வரலாமா என்பது குறித்து யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சராசரியாக 7 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர். இவர்களில் மெட்ரிகுலேஷன் தேர்வை சுமார் ஒரு லட்சம் பேரும், ஆங்கிலோ இந்தியன் தேர்வை சுமார் 5 ஆயிரம் பேர், ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,200 பேரும் எழுதுகிறார்கள்.

இவ்வாறு வெவ்வேறு வகையான பாடத் திட்டங்களுக்கு வெவ்வேறு வகையான தேர்வுத் தாள்கள், மதிப்பெண் முறை உள்ளன.

மாநிலக் கல்வித் திட்டத்தின் கீழ் வரும் மாணவர்கள் தமிழில் (அல்லது ஏதாவது மொழிப் பாடம்) இரு தாள்கள், ஆங்கிலத்தில் இரு தாள்கள், கணிதம், அறிவியல், சமூகவியல் என ஐந்து பாடங்களுக்குத் தேர்வு நடத்தப்படும்.

மாணவர்கள் மொத்தம் 7 நாள் தேர்வை எழுத வேண்டும்.

மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதுவோர் தமிழ் அல்லது ஏதாவது மொழிப் பாடம், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு இரு தாள்கள் எழுத வேண்டும்.

அது போல் அறிவியலுக்கும் இரு தாள்கள் உண்டு. அறிவியல் முதல் தாள் என்று ஒரு தாளையும், தாவரவியல் – விலங்கியல் கொண்ட அறிவியல் இரண்டாம் தாளையும் எழுதவேண்டும்.

இது தவிர, புவியியல் – பொருளாதாரம் ஒரு தேர்வுத் தாளும், வரலாறு – குடிமையியல் (சிவிக்ஸ்) கொண்ட ஒரு தேர்வுத் தாளும் எழுத வேண்டும்.

மெட்ரிக் தேர்வு எழுதும் மாணவர்கள் 10 நாள்கள் தேர்வை எழுத வேண்டும்.

ஆங்கிலோ இந்தியன் தேர்வில் தமிழ் அல்லது ஏதாவது ஒரு மொழிப் பாடத்துக்கு ஒரே ஒரு தாள்தான் உண்டு. ஆங்கிலத்துக்கு இரு தாள்கள் உள்ளன.

மெட்ரிகுலேஷன் தேர்வைப் போல் கணிதத்துக்கும், அறிவியலுக்கும் தலா இரு தாள்கள் உண்டு. இவை தவிர புவியியல் ஒரு தாள், குடிமையியல் (சிவிக்ஸ்) ஒரு தாள் எழுத வேண்டும். இந்த மாணவர்கள் 9 நாள் தேர்வை எழுத வேண்டும்.

இத்துடன் ஓ.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவோர் கூடுதலாக சம்ஸ்கிருதம் அல்லது அரபு மொழிப் பாடத்துக்கான தேர்வை எழுத வேண்டும்.

இவை அனைத்தையும் சீராக்கி, ஆங்கிலத்துக்கு இரு தாள்கள், மொழிப் பாடத்துக்கு இரு தாள்கள், இதர பாடங்களுக்குத் தலா ஒரு தாள் என்று கொண்டு வருவது குறித்து யோசனை அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மாநிலக் கல்வித் திட்ட மாணவர்களின் தேர்வுத் தாள்கள் அனைத்துக்கும் சேர்த்து அதிகபட்சமாக மொத்தம் 500 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதர தேர்வுகளுக்கு அதிகபட்சமாக 700, 1000 என மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் சீராக்கி ஒரே மாதிரியாக 500 மதிப்பெண்ணுக்கு என்று நிர்ணயிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

Posted in +2, Analysis, Anglo-Indian, City, Colleges, Education, Evaluation, fail, Govt, HSC, Marks, Marksheet, Matriculation, Metric, Metriculation, Oriental, OSLC, pass, Percentage, Plus Two, PlusTwo, Private, Public, Rural, Sanskrit, Schools, Students, Study, Suburban, Teachers, Urdu, Urudu, Village | 1 Comment »

AIIMS student failed due to Director Venugopal’s Vindictive action

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

“எய்ம்ஸ்’ மாணவர் அமைச்சர் அன்புமணியிடம் புகார்: தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது பாரபட்சம் என புகார் கூறியதால் தேர்வில் தோல்வி

புதுதில்லி, ஜன. 15: தில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் (எய்ம்ஸ்) இறுதி ஆண்டு படித்துவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர் அஜய் குமார் சிங், இறுதித் தேர்வில் தம்மை வேண்டும் என்றே நிர்வாகத்தினர் தோல்வி அடையச் செய்துவிட்டதாக புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சரும். எய்ம்ஸ் தலைவருமான அன்புமணிக்கும், யு.ஜி.சி. தலைவர் தொராட்டுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், தாழ்த்தப்பட்ட மாணவர்களிடம் நிர்வாகத்தினர் பாரபட்சமாக நடந்துகொள்வதாக தாம் வெளிப்படையாகப் புகார் கூறியதால் தம்மை தேர்வில் தோல்வி அடையச் செய்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி ஆர்.கே.தேவ்ரால், அஜய் குமார் சிங்குக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் சிங் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் என்றும் அவர் தேர்வில் தோல்வி அடைந்து மீண்டும் தேர்வு எழுதுவதாக அது கருதப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அஜய் குமார் சிங், எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபாலுக்கும் டீன் ஆர்.சி.டேகாவுக்கும் மற்றொரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மறு தேர்வு டீன் தலைமையில் நடைபெற வேண்டும் என்றும் விடைத்தாள் பாரபட்சமற்ற குழு திருத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது நிர்வாகத்தினர் பாரபட்சமாக நடந்துகொள்வதாக பிரச்சினையை எழுப்பினார் அஜய் குமார் சிங். இதை மனதில் வைத்துக் கொண்டு அவரை வேண்டும் என்றே தேர்வில் தோல்வி அடையச் செய்துவிட்டனர்’

என்று மருத்துவ விஞ்ஞானிகள் முற்போக்கு அமைப்பைச் சேர்ந்த ஆர்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

மறுதேர்வு நடத்த நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ள போதிலும், தேர்வு அதிகாரிகள் பற்றி சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் பிரசாத் குறிப்பிட்டார்.

“எனினும் அஜய் குமார் சிங் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படும். இதற்கென தனி தேர்வு குழு அமைக்கப்படும். இது தொடர்பாக இயக்குநருக்கு பரிந்துரைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவு வெளியிடப்படும்’ என்று டீன் டேகா தெரிவித்துள்ளார்.

இதனிடையே அஜய் குமார் சிங் இதற்கு முன்பு நடந்துள்ள தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். அப்படியிருக்கையில் இறுதித் தேர்வில் 3 பாடங்களில் அவர் தோல்வி அடைந்ததாக தெரிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்.கே.பிரசாத்.

மறுதேர்வு நடந்தாலும் மீண்டும் என்னை தோல்வி அடையச் செய்துவிடுவார்கள். எனவே புதிதாக தேர்வு அதிகாரிகளை நியமித்து, புதிய பேராசிரியர்கள் விடைத்தாள்களை திருத்த அனுமதிக்க வேண்டும் என்கிறார் அஜய்குமார் சிங்.

குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், மருந்துகள் ஆகிய 3 பாடங்களில் சிங் தோல்வி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 17-ம்தேதி சிங் உள்பட வேறு 7 பேருக்கும் சேர்த்து மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்த 7 பேரில் 6 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.

Posted in AIIMS, Ajay Kumar Singh, All-India Institute of Medical Sciences, Anbumani, Anbumani Ramados, anti-reservation, Dr. P. Venugopal, Education, Exam, fail, floating reservation, Progressive Medicos and Scientist Forum, Ramadas, RC Degha, Reservation, RK Devral, RK Prasad, SC/ST, Student, UGC, Venugopal | Leave a Comment »

Pakistan pair fail drugs tests

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2006

பாகிஸ்தான் வீரர்கள் அக்தர்-முகமது ஆசிப் கிரிக்கெட் ஆட தடை: ஊக்க மருந்து சாப்பிட்டது கண்டுபிடிப்பு

கராச்சி, அக். 16-

ஊக்க சக்தி அளிக்க கூடிய சில வகை மருந்துகளை கிரிக்கெட் வீரர்கள் சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சாம் பியன் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு வீரர்களுக்கு அந்தந்த நாடுகளே இதற்கான பரிசோதனை செய்தன.

பாகிஸ்தான் வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் இந்த சோதனையை செய்தது. இதற்காக அவர்களது சிறு நீர் சேகரிக்கப்பட்டு மலேசியாவுக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் சோயிப் அக்தர், முகமது ஆசிப் ஊக்க மருந்து சாப்பிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது பற்றி ஆய்வு நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க அவசர கூட்டம் இன்று கராச்சியில் நடந்தது. இருவரும் ஊக்க மருந்து பயன்படுத்தியது பற்றி சர்வதேச கிரிக்கெட் சங்கத்துக்கு உடனடியாக தெரிவிப்பது என்று முடிவு எடுத்தனர்.

இருவரும் சாம்பியன் கோப்பையில் விளையாட இந்தியா வந்துள்ளனர். ஜெய்ப்பூரில் நாளை நடக்கும் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணியுடன் மோத உள்ளது. இதில் அவர்கள் ஆட இருந்தனர். ஊக்க மருந்து சாப்பிட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் இருவரையும் திரும்ப அழைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சங்கத்துக்கு தகவல் சென்றதும் இருவருக்கும் கிரிக்கெட் ஆட முறைப்படி தடை விதிக் கப்படும். ஆஸ்திரேலிய வீரர் வார்னே போதை மருந்து சாப்பிட்டது கண்டு பிடிக்கப்பட்டு விளையாட தடை விதிக் கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி மீது சமீபத்தில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இப்போது புதிய குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறது.

Posted in Australia, baseball, Champions Trophy, Cricket, drug, fail, ICC, Malaysia, Mohammad Asif, Pakistan, Pakistan Cricket Board, Shane Warne, Shoaib Akhtar, steroids, Tests, Younis Khan | Leave a Comment »