ஊதியத்தை மிஞ்சும் ஓய்வூதியம்
புதுதில்லி, டிச. 9: அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது.
2006-07 நிதியாண்டில் 39,074 கோடி ரூபாயை ஓய்வூதியமாக வழங்கியுள்ளது மத்திய அரசு.
இதே நிதியாண்டில் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு 40,047 கோடி ரூபாய் ஊதியம் வழங்கியுள்ளது மத்திய அரசு.
இதேநிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் ஊதியத் தொகையை விட ஓய்வூதியத்தொகை பலமடங்கு அதிகரித்து விடும் என்று கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தொகை ஆண்டுக்கு 5.47 சதவீதமாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஓய்வூதியத்தொகை ஆண்டுக்கு 16.20 சதவீதமாக அதிகரித்து வருகிறது.
இந்தியர்களின் ஆயுள்காலம் அதிகரிப்பு, ஓய்வு வயதை அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் ஓய்வூதியத்துக்கான செலவு அதிகரித்து கொண்டே செல்வதாக கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2001 புள்ளி விவரப்படி மத்திய அரசு நிறுவனங்களில் 38 லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றினர். இந்த எண்ணிக்கை 1995-ல் 39 லட்சத்து 82 ஆயிரமாக மட்டுமே உயர்ந்தது.
ஆனால் 1999-2000 நிதியாண்டில் 38 லட்சத்து 3 ஆயிரமாக இருந்த ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை, 2006-07-ல் 45 லட்சத்து 5 ஆயிரமாக அதிகரித்தது.
இந்நிலையில், ஓய்வூதிய செலவைக் குறைப்பது குறித்து ஆராய 6-வது ஊதிய கமிஷன் சிறப்புக் குழுவை நியமித்துள்ளது.
இக்குழு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தனது பரிந்துரைகளை சமர்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.