நீலக் கலரு ஜிங்கிச்சா.. பச்சைக் கலரு ஜிங்கிச்சா!
தேவி கிருஷ்ணா
புடவைக்கு ஆசைப்படாத பெண்ணும் உண்டா? வாங்குகிறார்களோ, இல்லையோ புடவைகளைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்ப்பதற்காகவாவது புடவைக் கடைகளுக்கு விசிட் அடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் கம்மி. புடவை மீது பெண்களுக்கு இருக்கும் ஆசைக்கு சற்றேறத்தாழ மூவாயிரம் ஆண்டு சரித்திரம் இருக்கிறது என்கிறார் “நூலோர்’. புடவையின் சரித்திரத்தைப் பார்ப்போமா?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வரலாற்றில் சேலை இடம் பெற்றிருந்தது. சங்க காலத்துக்கு முன்பு தாழையையும் பூவையையும் சேர்த்து உருவாக்கப்பட்ட தாழை ஆடைகளை பெண்கள் அணிந்து வந்தார்கள். உடைகளை கொடிகளாலும் நொச்சி இலைகளாலும் ஆக்கிக் கொண்டார்கள். விழாக் காலங்களில் நெய்தல் மலர்களால் தாழையுடை செய்தார்கள். இடுப்பிலும் மார்பிலும் மகளிர் தாழையுடை அணிந்தார்கள் என சங்ககால வாழ்வியல் கூறுகிறது. காலம் செல்ல பருத்தி உடையும் பட்டு உடையும் அணிந்தார்கள்.
பருத்தி உடை முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்றும் இங்கிருந்து மேல் நாடுகளுக்குப் பரவியது என்றும் வயர்சாண் மார்சல் கூறுகிறார். பால் ஆவி போன்ற மெல்லிய துணிகளும் பாம்பு தோல் போன்ற அழகான துணிகளும் காகிதம் மெல்லிய துணிகளும் சாக்கு போன்ற முரட்டுத் துணிகளும் நெய்யப்பட்டன. இங்கிருந்து மாதூரம் எனப் பெயர் பெற்ற புடவைகள் காசி, பாடலிபுரம் முதலிய இடங்களுக்கு அனுப்பப்பட்டது என்று 3-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அர்த்த சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ரோம் முதலிய நாடுகளுக்கும் துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
அன்று நெசவு செய்பவர்கள் காருகர் என்று அழைக்கப்பட்டனர். வடகம், பாடகம், கோங்கலம், சித்திர கம்பி, பேடகம் எனப் பல பெயர்களில் ஆடைகளை சூடி மகிழ்ந்தனர். நீலம், சிவப்பு, மஞ்சள், கருப்பு முதலிய நிறங்களில் ஆடைகள் நெய்யப்பட்டன. அவற்றில் நுண்ணிய வேலைப் பாடுகள் இருந்தன. பருத்தியும் பட்டும் கொண்ட துணிகள் துகில் எனப்பட்டன.
நீளமாக நெய்யப்பட்ட துணிகள் பிறகு வெட்டப்பட்டு வேட்டிகளாகவும் துண்டுகளாகவும் பயன்படுத்தினர். இதனால் இவை அறுவை என்றழைக்கப்பட்டது. பருத்திப் புடவைகளுக்கு கலிங்கம் எனப் பெயர். பட்டு ஆடைகள் நூலாக் கலிங்கம் எனப்பட்டது.
நெய்வதில் தேர்ந்த தமிழன் அதற்கு சாயம் தீட்டுவதிலும் சிறந்து விளங்கினான். மலர்கள், செடி- கொடிகள், இலைகள் ஆகியவற்றின் சாறுகளில் வண்ணமேற்றினான். அவுரி செடியிலிருந்து ஏற்கப்பட்ட சாயம் ஐரோப்பியர்களின் மனதைக் கவர்ந்தது. இதில் இருந்து கிடைத்த நீல நிறச் சாயத்தை இண்டிகோ என்று அழைத்தனர்.
கடுக்காய், கொன்றைப் பூ போன்றவையும் சாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.
நாகரிகம் வளர வளர துணிகளின் ரகங்களும் வண்ணங்களும் மேலும் சிறப்படைந்தன. 18-19 ஆம் நூற்றாண்டுக்குச் செல்வோம். புடவைகள் முப்பாக சிறப்படைந்தன. அதாவது உடல், பார்டர், முந்தி என மூன்று பகுதிகள் உள்ள புடவைகள். ஆட்டுமுழி, புளியங் கொட்டை, சொக்கட்டான், வைரஊசி, பாய் பின்னல் மற்றும் மயில் கழுத்து, கிருஷ்ண மேகவர்ணம் போன்ற இரட்டைக் கலப்பு நிறங்களும் மோஸ்தராக இருந்தது.
முன் காலத்தில் காஞ்சிப்பட்டு சேலைகள் கனமாக இருக்கும். ஒரு புடவை 2 சேர், 3 சேர் (பழைய அளவுகள்) எடை இருக்கும். ஜரிகையையும் வேலைப் பாட்டையும் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் இப்போது பெண்கள் வெயிட் இல்லாத புடவைகளையே விரும்புகிறார்கள். டெஸ்ட்டட் ஜரிகைப் புடவைகள் என்பவை தாமிரத்தில் தங்க முலாம் பூசுவார்கள். இவை எடை குறைவாக இருக்கும்.
பெரிய விலை கொடுத்து வாங்கும் பட்டுச் சேலைகளை எப்படி பராமரிப்பது?…
புடவைகளை பீரோக்களில் வைக்கும் போது ஒரு மெல்லிய மல்-மல் துண்டில் சுற்றி வைத்தால் ஜரிகை கருக்காமல் புடவை புத்தம் புதிதாக இருக்கும். கொஞ்சம் சூடம் அல்லது நெப்தலின் உருண்டைகளையும் பீரோ தட்டுகளில் போட்டு வைக்க வேண்டும்.
ஒவ்வொரு தடவையும் புடவையைக் கட்டிய பிறகு அதை காத்தாட வெளியில் போட்ட பிறகு மடித்து வைக்கவும். மழைக்காலத்தில் பட்டுப் புடவைகளை இளம் வெயிலில் கால் மணி நேரம் போட்டு எடுத்து வைக்க வேண்டும். இப்படி செய்தால் புடவை 70 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும்.
பூந்திக் கொட்டையை இடித்து அதைத் தண்ணீரில் போட்டு ஊர வைத்தால் சோப்புத் தண்ணீர் மாதிரி கிடைக்கும். அதைக் கொண்டு கையினால் புடவைகளைக் கசக்கிப் பிழிந்து காய வைத்தால் பட்டின் பளபளப்பும் மென்மையும் காக்கப்படும்.
போதுமா புடவை கதை?
—————————————————————————————————————————————————————————
ஒலையில் நெய்த சேலை!
நாகரீகத்தின் வேகமான வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும்விதத்தில் புதுப்புது வகைகளிலும், விதங்களிலும் செயற்கை நூலிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய சேலை வகைகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. என்னதான் செயற்கை இழைகளின் மீதான மோகம் நம்மை ஈர்த்தாலும், இயற்கை வழியில் தாவர நாரைப் பயன்படுத்தி ஆடைகளை உருவாக்கும் முயற்சிகளும் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.
இந்த வகையில் ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனை மரத்தின் ஓலைகள் தற்போது நவநாகரீக சேலைகள் நெய்யவும் பயன்படும் என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாகச் சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
ஏற்கெனவே, சணல், வாழை நார் உள்பட பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி சேலைகளை உருவாக்கிச் சாதனை புரிந்து வரும் இச் சங்கத்தினர் தற்போது பனை ஓலையிலும் சேலை நெய்யமுடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.
விசைத்தறி, செயற்கை இழை ஆடைகள் என பல்வேறு போட்டிகளுக்கிடையே பாரம்பரிய கைத்தறி நெசவுத் துறையை நம்பி அதனை முன்னிலை படுத்தும் பல்வேறு கட்டங்களில் போராடி வருகிறார் அனகாபுத்தூர் சணல் நெசவாளர்கள் சங்கத்தின் தலைவர் சேகர். இந்தச் சோதனையான காலகட்டத்திலும் புதிய சாதனைகளை நிகழ்த்தி வரும் சேகர் “”வாழை நார் உள்ளிட்ட பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி சேலைகளை உருவாக்கி வருவதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாது கடல்கடந்தும் பல்வேறு வெளி நாடுகளிலும் இவ்வாறு தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
குறிப்பாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இத்தகைய புதிய முயற்சிகளுக்கு அந்தந்த நாட்டு அரசுகளிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.
சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இத்தகைய சேலை ரகங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது.
இந் நிலையில் கோவையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி பனை ஓலையில் சேலை நெய்ய முடியும் என நம்பினார். பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி வரும் எங்களை அந்த மாணவி அணுகினார்.
வெளிப்படையாகத் தெரியும் சில அம்சங்களால் பனை ஓலையை ஆடை ரகங்களை நெய்ய பயன்படுத்த முடியாது எனப் பலரும் நினைத்தனர். நாங்கள் பனை ஓலையை மிகமிக மெல்லிய இழைகளாகப் பிரித்தோம். பின்னர் பருத்தி நூலிழைகளுடன் பனை ஓலை இழைகளைக் குறுக்காகப் பயன்படுத்தினோம். இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.
சேலையில் டிசைகள் வரும் இடங்களில் வழக்கமான இழைகளுடன் பனை ஓலை இழைகளைப் பயன்படுத்தியது சிறப்பாக அமைந்தது. இது சேலைக்குப் புது பொலிவை அளிப்பதாக அமைந்தது. தற்போது ஒரு சேலையில் பருத்தி இழைகளுடன் சுமார் 40 சதவீத அளவுக்குப் பனை ஓலை இழைகளைப் பயன்படுத்தி வருகிறோம். பனை ஓலை இழைகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி மேலும் மெல்லிய இழைகள் எடுத்தால் சேலையில் இதன் அளவை மேலும் அதிகரிக்க முடியும். இதற்கு அரசின் தொழில்நுட்ப உதவி அவசியமாகிறது. பனை ஓலையைப் பயன்படுத்தி நெய்யப்படும் சேலைகள் செயற்கை இழை சேலை மோகத்தில் இருந்து மக்களின் கவனத்தைத் தாவர நாரின் பக்கம் இழுக்கும் என்பதில் ஐயமில்லை” என்கிறார் சேகர் நம்பிக்கையுடன்.
ஆதி மனிதன் இலையைத்தான் ஆடையாகப் பயன்படுத்தினான் இப்ப… ஓலை சேலை…!
வி. கிருஷ்ணமூர்த்தி