இலங்கையின் தற்காலிக வெளிநாட்டமைச்சராக ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே நியமனம்
இலங்கையின் தற்காலிக வெளிநாட்டமைச்சராக ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், பிரதான கொறடாவுமான அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ வியஜமொன்றினை மேற்கொண்டிருப்பதாலும், பிரதி வெளிநாட்டமைச்சர் ஹுசைன் பைலா மத்திய கிழக்கு நாடுகளுக்கான கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டிருப்பதாலும் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தின் பின்னணியிலேயே, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நாடு திரும்பும் வரைக்கும் பதில் வெளிநாட்டு அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனாலும் வெளிநாட்டமைச்சிலிருந்து கிடைக்கும் தகவல்களின்படி, பாகிஸ்தானுக்கான தனது விஜயத்தினை முடித்துக்கொண்டு நாளைய தினமே வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நாடு திரும்பவிருப்பதாகத் தெரியவருகிறது.
ரோஹித்த போகொல்லாகம பாகிஸ்தானிலிருந்து திரும்பும் வரையில் தன்னை தற்காலிகமாக வெளியுறவு அமைச்சராக இருக்கச்சொல்லி ஜனாதிபதி பணித்ததால் தான் இன்று இப்பொறுப்பை ஏற்றுள்ளதாக
வெளியுறவு அமைச்சரும் துணையமைச்சரும் நாட்டில் இல்லாத இந்த நேரத்தில் சில முக்கியப் பணிகளுக்கு உடனடியாக ஆட்களை நியமிக்க வேண்டிய அவசியம் இருந்ததால் தான் தற்காலிக அமைச்சராகப் பொறுப்பேற்றதாகவும் அதன் பின்னர் கனடாவுக்கான தூதரை இன்று தான் நியமித்ததாகவும் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டபோது ஜெயராஜ் ஃபெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
நாடு திரும்பிய பின்னர் போகல்லகம வெளியுறவு அமைச்சராகத் தொடருவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
![]() |
![]() |
பாகிஸ்தான் அதிபர் முஷாரஃபுடன் அமைச்சர் போகல்லகம |
இதேவேளை, பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, அங்கு ஜனாதிபதி ஜெனரல் பெர்வேஸ் முஷாரஃப், பிரதமர் மற்றும் அரச உயர்பிரதிநிதிகளையும், முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியிருக்கிறார்.
இலங்கையின் இறைமைக்கும், ஆட்புல ஒருமைபாட்டிற்கும் பாகிஸ்தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜெனரல் முஷாரஃப், இலங்கை அரசு பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் தொடந்தும் தனது ஆதரவினை வழங்கிவருமென்று உறுதியளித்திருப்பதாகவும் இலங்கை வெளிநாட்டமைச்சு தெரிவித்திருக்கிறது.
சேது சமுத்திரத் திட்டத்துக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் வரும் என்று கவலைப்படத் தேவையில்லை: இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில்குமார் கருத்து
![]() |
![]() |
இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில் குமார் |
சேது சமுத்திரம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதற்க்கு விடுதலைப் புலிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கவலைப்படுவது தேவையற்றது என்று இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில்குமார் பிபிசி தமிழோசையிடம் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
சேது சமுத்திரம் கால்வாய் திட்டம் தொடர்பாக, சமீப காலமாக, கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தாவும், கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் ஆர்.எப். கான்ட்ராக்டரும் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள். சேது கால்வாய் மூலம், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்று கவலை வெளியிடப்பட்டிருந்தது.
இது குறித்து தமிழோசையில் கருத்து வெளியிட்ட இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில் குமார், “துரதிர்ஷ்டவசமாக, சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான விவாதம் சிறிது குழப்பமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. துறைமுகம், கால்வாய், முக்கிய மின் திட்டம், அணுசக்தித் திட்டம் என எந்த ஒரு பெரிய கட்டமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், அது பாதுகாப்பு தொடர்பான சில கவலைகளை ஏற்படுத்தும். பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தக் கால்வாய்த் திட்டம், கடல்வழி தொடர்பை மேம்படுத்தும் நிலையில், அதைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று பார்க்கத் துவங்கினால், உலகில் எந்த இடத்திலும் வளர்ச்சித் திட்டங்களை ஏற்படுத்த முடியாது” என்றார்.
எந்தத் திட்டத்தையும் சாதமாகன முறையில் பார்க்க வேண்டுமே ஒழிய, எதிர்மறை கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. மக்களுக்கு ஒரு திட்டம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். கடலோரக் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை போன்றவை எல்லாம் அதற்குத்தான் இருக்கின்றன என்று கருத்துத் தெரிவித்தார் அட்மிரல் சுஷில்குமார்.
இலங்கைத் தாக்குதலில் 18 பேர் பலி
இலங்கை மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள தம்புள்ள எனுமிடத்தில் சனிக்கிழமை காலை இடம்பெற்ற பாரிய பஸ் குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் அதில் பயணம் செய்துகொண்டிருந்த 18 பொது மக்கள் பலியாகியுள்ளனர். மேலும் 50ற்கும் அதிகமானோர் படுகாயமடைந்து அண்மையிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அனுராதபுரத்துக்குப் போய்க் கொண்டிருந்த இந்த பஸ் வண்டி தம்புள்ளை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அதில் குண்டு வெடித்தது
கொல்லப்பட்டுள்ளவர்களில் 14 பேர் பெண்கள், நால்வர் ஆண்கள், மிகவும் மோசமான நிலையில் இருந்த இருவர் கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தம்புள்ள மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர். சுதர்ஷன் அரம்பேகெதர அவர்கள் காயப்பட்டவர்கள் மொத்தம் 93 பேர் கொண்டுவரப்பட்டதாகக் கூறுகிறார்.
பஸ்ஸினுள் வைக்கப்பட்ட இந்தக் குண்டு தூர இயக்கியால் வெடிக்க வைக்கப்பட்டது என்ற பொலிஸ் விசாரணையின் ஆரம்பகட்டத் தகவல்கள் கூறுகின்றன.
மத்திய மாகாணத்துக்கான உயர் போலீஸ் அதிகாரியான கிங்ஸ்லி எக்கநாயக்க அவர்கள் இந்தக் குண்டு மாத்தளையில் பஸ்சுக்குள் வைத்திருக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தம்புள்ளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகள் மீது இலங்கை இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் தங்களுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 பிப்ரவரி, 2008
கொழும்பு இரயில் நிலையத்தில் தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் 11 பேர் பலி
இலங்கையில் ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் தலைநகர் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தினுள் இடம்பெற்ற பெண் தற்கொலைக்குண்டு தாக்குதலில் குறைந்தது 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 100க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள்.
கொழும்பு நகரின் இதயப்பகுதியில், மிகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இடத்தில் இடம்பெற்றுள்ள இந்தக் குண்டுத்தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, ஞாயிறு பிற்பகல் மீரிகம பிரதேசத்திலிருந்து வந்த இரயில் வண்டியொன்று மூன்றாவது மேடையில் வந்து நின்றதும், அதிலிருந்து இறங்கிய விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் தற்கொலைக்குண்டுதாரியொருவரே இந்தச் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பினை நடத்தியிருப்பது ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் தகவல் வெளியிட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை விபத்துப்பிரிவு வைத்திய அதிகாரியொருவர், இந்தக் குண்டுத்தாக்குதலில் காயமடைந்த சுமார் 100 பொதுமக்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இவர்களில் சுமார் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இரயில் நிலையத்தில் தற்போது மேலதிக துருப்பினர் குவிக்கப்பட்டு, விசேட தேடுதல் மற்றும் விசாரணைகள் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
திங்கட்கிழமையன்று, இலங்கையின் அறுபதாவது சுதந்திரதினம் கொழும்பு காலிமுகத்திடலில் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி நாட்டின் சகல பாகங்களிலும் குறிப்பாகத் தலைநகர் கொழும்பையும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் ஞாயிறன்று இடம்பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கை வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய பயணிகள் போக்குவரத்திற்கு தடை
![]() |
![]() |
வெறிச்சோடி இருக்கும் வவுனியா இரயில் நிலையம் |
இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் பயணிகள் போக்குவரத்துக்கள் அனைத்தும் ஞாயிற்றுகிழமை முதல் முழுமையாக நிறுத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் அறிவித்திருக்கின்றன.
வவுனியாவில் இருந்து மதவாச்சி மற்றும் அனுராதபுரம் ஊடாகத் தெற்கு நோக்கிச் செல்லும் பிரதான வீதியாகிய ஏ9 வீதி பாதுகாப்பு காரணங்களுக்காக மறு அறிவித்தல்வரை மூடப்பட்டிருப்பதாக, வவுனியாவில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவை அதிகாரிகளுக்குப் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரயில் போக்குவரத்துக்கள் அனுராதரபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று காலை தம்புள்ள நகர பஸ் நிலையத்தில் இடம்பெற்ற பஸ் குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்தே இத்தகைய இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலதிக விபரங்களைக் கேட்கலாம்.
இலங்கை சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள்: மக்கள் கருத்து
![]() |
![]() |
இலங்கை இராணுவத்தை சேர்ந்தவர் |
இலங்கை சுதந்திரமடைந்து 60 ஆண்டு காலமாகின்றது என்றாலும் புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்னும் எட்டப்படாமலேயே இருந்து வருகிறது. இதன் விளைவாக தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம் சிங்கள மக்களும் பாதிப்பிற்கு இலக்காகி வருகின்றனர். எனவே இந்தப் பிரச்சினைக்கான தீர்வு உடன் எட்டப்பட வேண்டும். இதன் மூலமே இந்த நாட்டில் நிரந்தர சமாதானமும் அமைதியும் உருவாக முடியும் என்று திருகோணமலைவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு மாகாணம் கல்வித்துறையில் முன்னேறி வருகின்றது. எனினும் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது உரிய கல்வித் தரத்தினை இன்னும் எட்டவில்லை என்றே கூறவேண்டும். தற்போதைய போர்ச் சூழலின் விளைவாக இந்த மாகாணத்தில் 32 பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன. மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட 50 பாடசாலைகளின் கட்டிடப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. கிழக்கு மாகாண கல்வித் தரத்தை முன்னேற்ற முயன்றுவருவதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் சுகாதாரப் பணிகளை இயன்றவரை முன்னெடுத்துச் வருவதாகவும், பின் தங்கிய கிராமங்களிலும் இத்தகைய சேவைகளை முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் திருகோணமலைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர்.ஞானகுணாளன் கூறியுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் இன்றளவும் இடம்பெயர்ந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். மனிதர்கள் தங்கள் சொந்த இடங்களில் வாழ்வதுடன் அவர்கள் விரும்பிய தொழிலையும் மேற்கொள்ளும் நிலைதான் உண்மையான சுதந்திரம். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மூதூர் பிரதேச சபை உறுப்பினர் மொஹமது ரஜீஸ் தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 04 பிப்ரவரி, 2008
அனுராதபுரம் மாவட்டத்தில் பேருந்து மீது கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதல்; 13 பேர் பலி
![]() |
![]() |
காயமடைந்தவர்களுக்கு அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது |
இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள வெலிஓயா பகுதியில் எத்தாவெட்டுணுவௌ என்னுமிடத்தில் திங்கட்கிழமை பிற்பகல் அரசு பேருந்து வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 5 இராணுவத்தினர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 17 பேர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பராக்கிரமபுரவிலிருந்து ஜானகபுர என்னுமிடத்தை நோக்கிச் சென்ற பேருந்து வண்டி மீது கொப்பேகடுவ சந்திக்கு அருகில் இந்தக் குண்டுத் தாக்குதல் நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
காயமடைந்தவர்கள் பதவியா மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நாடெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இடம்பெற்ற 3 ஆவது பெரிய குண்டுத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளே காரணம் என அரசு குற்றம்சுமத்தியுள்ளது. எனினும் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுகுறித்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
புலிகளுக்கு எதிரான போரை வென்று வருகிறோம்: வைரவிழா சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி உரை
![]() |
![]() |
முப்படை தளபதிகளுடன் இலங்கை ஜனாதிபதி |
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தமது அரசு வெற்றிபெற்று வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
தலைநகர் கொழும்பில் நாட்டின் 60 ஆவது சுதந்திரதின நிகழ்வுகளின்போது இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு மரியாதைகளை ஏற்றுக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் அறுபதாவது சுதந்திரதினம் இன்று கொழும்பு காலிமுகத் திடலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
இதன்போது இலங்கையின் முப்படைகள் மற்றும் பொலிசாரின் படைபலத்தையும், ஆயுத பலத்தையும் எடுத்துக்கூறும் நோக்கில் கண்கவர் இராணுவ அணிவகுப்புகளும் இடம்பெற்றன.
![]() |
![]() |
இராணுவ அணிவகுப்பு |
இலங்கைக்கு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இன்றுவரைக்கும் நாட்டுக்காகப் போராடி உயிர்நீர்த்த சகலரையும் நினைவு கூறும்வகையில் இரண்டு நிமிட மெளன அஞ்சலியின் பின்னர், கல்லூரி மாணவிகள் தேசிய கீதம் இசைக்க, நாட்டின் தேசியக்கொடியை ஜனாதிபதி ராஜபக்ஷ வைபரீதியாக ஏற்றிவைத்தார்.
பின்னர் இராணுவத்தினரின் பீரங்கி மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.
நாட்டுமக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷ, இலங்கை கொடிய பயங்கரவாதத்தை முறியடிப்பது மற்றும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவது என்ற இருபெரும் சவால்களுக்கு முகம்கொடுத்து வருகிறது என்றும், இந்தச் சவால்களை துணிவாக எதிர்கொண்டு நாட்டினை வெற்றிப் பாதையில் இட்டுச்செல்ல தானும் தனது அரசும் தயாராகவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழர் பகுதிகளில் சுதந்திர தினம்
![]() |
![]() |
வவுனியாவில் நடந்த சுதந்திர தின வைபவத்தில் மதத் தலைவர்கள் |
இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அரச செயலகங்கள், பொலிஸ் மற்றம் இராணுவ தளங்களில் தேசிய கொடியேற்றலுடன் சுதந்திர தின வைபவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுதந்திர தினத்தையொட்டி, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. வீதிச் சோதனைகளும் தீவிரமாக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
வவுனியா அரச செயலகத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சி.சண்முகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின வைபவத்தில் மதத் தலைவர்கள், அரச உயரதிகாரிகள், இராணுவ பொலிஸ் அதிகாரிகள், செயலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த அரச வைபவத்தில் மக்கள் பிரதிநிதிகளோ அல்லது சமூக முக்கியஸ்தர்களோ பொதுமக்களோ கலந்து கொள்ளாதது துரதிருஷ்டவசமானது என இங்கு உரையாற்றிய அரசாங்க அதிபர் சி.சண்முகம் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் என்று கூறுவது வீண்பழி: முதல்வர் கருணாநிதி
![]() |
![]() |
தமிழக முதல்வர் |
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக காங்கிரசார் அவ்வப்போது புகார் கூறிவரும் நிலையில், முதல்வர் கருணாநிதி, அவையெல்லாம் வீண்பழியென்றும், இப்படியெல்லாம் ஒரு பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டு தனது கட்சியினை ஆட்சியிலிருந்து அகற்ற முயன்றால் அதனைச் சந்திக்கத் தயார் என்று இப்போது கூறியிருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாடு விடுதலைப்புலிகளின் வேட்டைக்காடாகிவிட்டது என்ற ரீதியில் பேசியிருக்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் இப்பிரச்சினை குறித்து அரசு மீது அபாண்டமாக குற்றச்சாட்டுககள் வீசப்பட்டபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் மௌனமாக இருந்திருககிறார்கள், இதெல்லாம் தனக்கு மிகுந்த மனவருத்தத்தினை அளிப்பதாகவும் கருணாநிதி கூறியிருககிறார்.
கடந்த வாரம் சட்டமன்றத்தில் சட்டஅமைச்சர் துரைமுருகன் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் மீது உரிய நடவடிக்கை எடுககப்படும் என எச்சரித்திருந்தார். இருந்தும் தொடர்ந்து காங்கிரசார் இவ்வாறு குறைகூறுகின்றனர், இதற்குமேலும் இப்பிரச்சாரம் தொடர்ந்தால் பதவியிழக்கவும் தயார் என்று கருணாநிதி கூறியிருந்தார்.
காங்கிரஸ் தரப்பில் முதல்வரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கத் தயங்குகின்றனர். சிறிதுநேரம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழநாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி, முதல்வர் தெரிவிப்பது போன்று நாகர்கோவிலில் எதையும் அவர்கள் பேசவில்லையென்றும், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுககு ஆதரவாக எவரும் செயல்பட அனுமதிக்கப்படக்கூடாது என்பதுதான் தங்கள் நிலைப்பாடு என்றும் கூறினார்.
தொடர்ந்து கருணாநிதி பேசியது குறித்து கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அறுபது வருடகால சுதந்திரத்தின் பின் இலங்கை: பெட்டகம்
பிரித்தானிய காலணித்துவ ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம்பெற்று 60 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனால் தெற்காசியாவிலேயே உயர்ந்த அளவு என்று சொல்லக்கூடிய சுமார் 90 வீதமான படித்த ஜனத்தொகையையும், பல்வேறு இயற்கைவளங்களையும் தன்னகத்தே கொண்ட இலங்கை இன்னமும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்துவருகிறது.
இது குறித்துக் பல்வேறு தரப்பினரின் கருத்துகளுடன் எமது கொழும்பு செய்தியாளர் பி.கருணாகரன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.