Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Expose’ Category

Tehelka on Gujarat riots: Neerja Chowdhury – Sting, Expose, Revelations

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

தெஹல்கா புலனாய்வுக்கு அப்பால்…!

நீரஜா சௌத்ரி

குஜராத்தில் 2002-ல் நடந்த கலவரங்கள் குறித்து ஏற்கெனவே இருந்துவந்த சந்தேகங்களை தெஹல்காவின் ரகசியப் புலனாய்வு நடவடிக்கை நிரூபித்திருப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கு அப்பாலும் பல விவாதங்களை எழுப்பியிருக்கிறது.

கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து தன்னெழுச்சியாக நடைபெற்றதே அந்தக் கலவரம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறிவந்ததை அது பொய்யாக்கியிருக்கிறது. பஜ்ரங்க தளம், விசுவ ஹிந்து பரிஷத், பாஜக ஆகியவற்றின் உறுப்பினர்கள் திட்டமிட்டு அரங்கேற்றியதே அப் படுகொலைகள் என்பதை அந்த ரகசியப் புலனாய்வு டேப்புகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.

அதில் மிக முக்கியமானது என்னவென்றால், அந்தக் குற்றச்செயல்களைச் செய்தவர்களுக்கு முதல்வர் நரேந்திர மோடியின் ஊக்குவிப்பும் ஆதரவும் இருந்தது என்பதை அம்பலப்படுத்தி இருப்பதுதான். அக் குற்றங்களைச் செய்தவர்களே அவற்றை ஒப்புக்கொண்டு இருப்பது இதுதான் முதல் முறை.

தன்னை ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஹிந்துத்துவ ஆதரவாளர் என்று கூறிக்கொண்டு சென்ற, அன்னியரான தெஹல்கா நிருபரிடம் இத்தனை பேர் தாம் அக் குற்றங்களில் சம்பந்தப்பட்டு இருப்பதைக் கூறியிருப்பதிலிருந்தே, அவர்களை யாரும் தொட முடியாது என்ற தைரியம் அவர்களுக்கு இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒருவர் தமது இயக்கத்தின் எவ்வளவு தீவிர ஆதரவாளராக இருந்தபோதிலும், எந்த அரசியல்வாதியும் அரசியல் கட்சி ஊழியர்களும் தமது குற்றங்களைப் பற்றி அவ்வளவு சாதாரணமாக அவரிடம் கூறிவிட மாட்டார்கள். ஆனால், தெஹல்கா நிருபரிடம் தமது செயல்களைப் பற்றிப் பெருமையாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள். “முஸ்லிம் வெறுப்பு’ என்னும் செயல்திட்டத்தின் மூலமாகத்தான் குஜராத்தில் அரசியல் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள் என்று தெஹல்கா நிருபர் கூறியிருப்பதை நிரூபிப்பதாக அது இருக்கிறது.

மோடிக்கு “விசா’ அனுமதி வழங்குவதற்கு அமெரிக்கா மறுத்த பிறகும், மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்த பிறகும்தான் தனது பாதையை அவர் மாற்றிக்கொண்டிருக்கிறார். அதற்குப் பிறகு, “வளர்ச்சி’யில் அக்கறை கொண்டவராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மோடி. ஆனால், கடந்த காலச் செயல்கள் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கின்றன. அதனால் ஏற்பட்ட விரக்தி வெளிப்பாடுதான், கரண் தாப்பருக்கு அளித்துக்கொண்டு இருந்த பேட்டியிலிருந்து அவர் பாதியில் வெளியேறிய செயல்.

மோடியின் சொந்தக் கட்சியோ அவரைக் கண்டிக்க விரும்பவுமில்லை; கட்சியால் கண்டிக்க முடியவுமில்லை. 2002-ல் குஜராத்தில் நடந்த சம்பவங்களால் வேதனைக்கு உள்ளான அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், “ராஜ தர்ம’த்தைக் கடைப்பிடிக்காததற்காக மோடியை லேசாகக் கடிந்துகொண்டார். ஆனால் கோவாவில் அவர் இருந்தபோது, கட்சியிலிருந்து அவருக்கு வந்த கடுமையான நெருக்குதல்கள் காரணமாக, தனது நிலையை அவசரமாக மாற்றிக்கொண்டுவிட்டார் அவர்.

குஜராத் கலவரங்களுக்குப் பிறகுதான் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மோடி என்று கூறி, தெஹல்கா ரகசியப் புலனாய்வை மறுக்கின்றனர் பாஜக தலைவர்கள். அப்படிப் பார்த்தால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள “கறைபடிந்த’ அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கேட்டிருக்கவே கூடாது. எத்தனையோ குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி.யான சகாபுதீனைப் போன்ற ஒருவர், தேர்தலில் வெற்றிபெற்றுவிட்ட ஒரே காரணத்தால் புனிதராக ஆகிவிடுவாரா? கடந்த காலக் குற்றமோ, நிகழ்காலக் குற்றமோ எதுவாக இருந்தாலும், தேர்தல் வெற்றியானது அதிலிருந்து ஒருவருக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது.

காங்கிரஸ் கட்சிக்கும் தெஹல்காவுக்கும் இடையே ரகசிய கூட்டு இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறது பாஜக. இவ்வாறு விட்டேத்தியாகக் கூறியிருப்பதிலிருந்தே மோடி மீது எவ்வித நடவடிக்கை எடுக்கும் திட்டமும் அக் கட்சிக்கு இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறது காங்கிரஸ். மோடிக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அவரது அனுமதி தேவை; தெஹல்கா ரகசியப் புலனாய்வின் அம்பலங்கள் குறித்து சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டுமென்றாலும் மோடியின் ஒப்புதல் தேவை.

உண்மை என்னவென்றால், குஜராத்தில் இந்துக்களையும் முஸ்லிம்களையும் மத அடிப்படையில் இருகூறாக அணிதிரளச் செய்துவிடக்கூடிய எதையும் செய்துவிடக் கூடாது என்ற கவலையில் தத்தளிக்கிறது காங்கிரஸ். ஏனென்றால், அது மீண்டும் மோடிக்குச் சாதகமாகப் போய்விடும்.

மத்தியில் 2004-ல் இருந்து ஆட்சியில் இருக்கிறது காங்கிரஸ். ஆனால், 2002 கலவரத்தின்போது, அக் கட்சியின் முன்னாள் எம்.பி.யான ஈசான் ஜாப்ரி உயிருடன் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிகூட உருப்படியான எந்த நடவடிக்கையையும் அது எடுக்கவில்லை. “வளர்ச்சி’ என்னும் கோஷத்தை மோடி சுவீகரித்துக்கொள்ள விட்டுவிட்டது காங்கிரஸ். பயங்கரவாத அச்சுறுத்தலால் குஜராத்தி இந்து மத்தியதர மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அச்சத்தைப் பயன்படுத்தி, கடந்த 4 ஆண்டுகளில், தமது தீவிர இந்துத்துவா அடித்தளத்தை விரிவுபடுத்தியதுடன், இன்றைய உலகமயமாக்கச் சூழலில் முன்னேற வேண்டும், வெற்றிபெற வேண்டும் என்னும் அவர்களது ஆசைகளை நிறைவேற்றும் வகையில், “வளமை மிக்க குஜராத்’ என்ற கோஷத்தைக் கையில் எடுத்துக்கொண்டுவிட்டார் மோடி. வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் இந்தப் பிரிவினர்தான் அவருக்கு இருக்கும் ஆதரவின் அடிப்படையாகும்.

மோடியை எதிர்கொள்ள சரியான திட்டமும் உறுதியும் இல்லாமல் திணறிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர், முஸ்லிம்கள் ஆகியவை ஓரணியில் திரட்டும் ஒரு திட்டத்தை ஏற்கெனவே காங்கிரஸ் வகுத்தது. அதோடு, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரையும் அணிதிரட்டியிருந்தால், மோடிக்குச் சிறந்த மாற்று சக்தியாக அது உருவாகி இருக்கக்கூடும்.

குஜராத் தேர்தல் களத்தில் மாயாவதி போன்றோரும் நுழைந்துவிட்டதால், காங்கிரஸ் இன்னும் தாமதித்துக்கொண்டு இருக்க முடியாது.

தெஹல்கா அம்பலப்படுத்தி இருக்கும் விஷயங்கள், இந்தியாவின் மற்ற பகுதியில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்திலிருந்து குஜராத்தில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் வேறாகவும் இருக்கக்கூடும்.

குஜராத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸýக்கு மிக முக்கியம். இடதுசாரிகளின் ஆதரவை உதறிவிட்டு மக்களவைக்கு இடைத்தேர்தலைச் சந்திக்கலாமா என்பது குறித்து குஜராத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் முடிவுசெய்யக்கூடும்.

அதிகாரத்தைக் கைப்பற்ற மோடி கையாண்டதைப்போல, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தவரை திட்டமிட்டுக் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு, தண்டனையிலிருந்தும் தப்பித்துக்கொள்ளும் வழியை மற்ற மாநில முதல்வர்களும் கையாளத் தொடங்கினால், அதை எப்படி தடுப்பது? மொத்த மக்களில் 50 சதவிகிதத்தினர்தான் வாக்களிக்க வருகின்றனர். அதில் 35%-லிருந்து 40% வாக்குகள் கிடைத்தாலே வெற்றிபெற்றுவிட முடிகிறது. ஏதாவது ஓர் உணர்ச்சிகரமான பிரச்னையை முன்வைத்து, மொத்த வாக்காளர்களில் 20 சதவிகிதத்துக்குக் குறைவானவர்களைக் கவர்ந்துவிட்டாலே வெற்றிபெற்றுவிட முடியும் என்ற நிலை.

விசாரணையில் இருக்கும் பல்வேறு வழக்குகளில் சாட்சி கூறவிருக்கும் 200 பேரின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. அது மட்டுமல்ல; இந்திய அரசின் அதிகாரம், அரசியல் சட்டத்தின் புனிதத்தன்மை, கடமைப் பொறுப்பு, குடிமக்களைக் காப்பதில் சட்டத்தின் பங்கு… என, ஜனநாயகம் அர்த்தமுள்ளதாக இருப்பதற்கு அவசியமான அனைத்துமே கேள்விக்குறியாகி இருக்கிறது.

தெஹல்கா புலனாய்வு ஒளிப்பதிவுகளைப் பார்த்தவர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் நடைபெற்ற புனிதப் போர்கள் நினைவுக்கு வந்திருக்கும். ஆனால், இது 2002-ல் இந்தியாவில் நடந்திருக்கிறது. எனினும், அச் செயல்களில் ஈடுபட்டோர் அதைப் பெருமையாகப் பேசிக்கொண்டு, தண்டனை அனுபவிக்காமல் இன்னும் பகிரங்கமாக நடமாடிக்கொண்டிருக்கின்றனர். தெஹல்கா புலனாய்வு அம்பலப்படுத்தி இருக்கும் விஷயங்கள் குறித்து, குறைந்தபட்சம் விரிவான விசாரணையாவது நடத்தப்பட வேண்டும்.

—————————————————————————————————————–

மோடி வெற்றியின் எதிரொலிகள்

நீரஜா சௌத்ரி

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், யாராலும் தோற்கடிக்க முடியாதவராக உருவெடுத்துவிட்டார் நரேந்திர மோடி.

பாரதிய ஜனதா கட்சியில் அவர் மீது அதிருப்தி நிலவியபோதிலும், ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆகியவற்றில் ஒரு பகுதியினர் அவருக்கு எதிராகப் பணியாற்றியபோதிலும், குஜராத்தின் சாதுக்களில் ஒரு பிரிவினர் அவரை எதிர்த்தபோதிலும் அவை அனைத்தையும் சமாளித்து, அதோடு அதிகாரத்திலிருக்கும் கட்சிக்கு எதிராக நிலவக்கூடிய இயல்பான அதிருப்தியையும் முறியடித்து மகத்தான வெற்றிபெற்றிருக்கிறார் நரேந்திர மோடி.

2002-ல் இருந்த ஆதரவை ஏறக்குறைய தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் அவர். கட்சியின் செல்வாக்கையும் கடந்து மாபெரும் தலைவராகிவிட்டார் மோடி. கடந்த 12 ஆண்டுகளில் அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் பாஜகவுக்குக் கிடைத்துவந்த 45 சதவீத மக்களின் ஆதரவை மோடி என்ற தலைவருக்கான வாக்குகளாக மாற்றிவிட்டார் அவர்.

1971-ல் காங்கிரஸ் கட்சியின் சிண்டிகேட் பிரிவுத் தலைவர்களைப் புறந்தள்ளி, துர்க்கையாக உருவான இந்திரா காந்தியை நினைவூட்டுகிறது 2007-ம் ஆண்டின் குஜராத். 2000-மாவது ஆண்டு பிகார் தேர்தலில் அனைத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி, லாலு பிரசாத் பெற்ற வெற்றியையும் ஒத்திருக்கிறது மோடியின் வெற்றி.

மோடியேகூட இந்த வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டோரோ என்று தோன்றுகிறது. தில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டபோது அவரது நடவடிக்கைகள் அவ்வளவு உற்சாகமாகக் காணப்படவில்லை என்று அவரைச் சந்தித்தவர்கள் கூறினர். “”எனது கட்சி எனக்கு எதிராகப் போரிட்டபோதிலும் என்னால் முடிந்த அளவுக்கு உழைத்திருக்கிறேன்” என்று, தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு 3 நாள்களுக்குமுன் மத்திய அமைச்சர் ஒருவரிடம் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.

குஜராத் தேர்தல் முடிவுகளின் விளைவுகள் காந்திநகர், வடோதரா, ராஜ்கோட், மேஹ்சானாவையும் கடந்து எதிரொலிக்கும் என்பது தேர்தல் பிரசாரம் தொடங்கிய நாளில் இருந்தே மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுவந்தது. இந்தத் தேர்தலானது இரு பிரதான கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், மோடி மற்றும் எல்.கே. அத்வானி ஆகிய தனிப்பட்ட இரு தலைவர்களுக்கும் முக்கியமானதாக அமைந்துவிட்டது.

மக்களவைக்கு இடைத்தேர்தலைச் சந்திக்கலாமா என்னும் காங்கிரஸ் கட்சியின் யோசனையைக் கிடப்பில் போடச் செய்துவிட்டது, குஜராத்தில் அக் கட்சிக்குக் கிடைத்த தோல்வி.

மனந்தளர்ந்து போயிருந்த பாஜக தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கக்கூடியதாக குஜராத் வெற்றி அமைந்திருக்கும் நேரத்தில், தில்லியில் தனது ஆட்சியைப் பாதியில் முடிவுக்குக் கொண்டுவரும் அறிவீனத்தில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஈடுபடாது. காங்கிரஸýக்கு மற்றொரு அபாய எச்சரிக்கை மாயாவதியிடமிருந்து வந்துகொண்டிருக்கிறது. குஜராத்தில் அதை காங்கிரஸ் சந்திக்க வேண்டியிருந்தது. விரைவிலேயே கர்நாடகத்திலும் தில்லியிலும் தேர்தல் வரவிருக்கிறது. அங்கும் காங்கிரஸýக்குத் தொல்லையாகவே அவர் இருக்கப் போகிறார்.

குஜராத் தேர்தல் முடிவின் எதிரொலி பக்கத்து மாநிலமான மகாராஷ்டிரத்திலும் கொஞ்சம் கேட்கக்கூடும். அங்கு கட்சி அணிகளிடையே கட்டுக்கோப்புக் குலைந்திருந்தபோதிலும், பாஜகவும் சிவசேனையும் ஒன்றுபட்டு உழைக்கும்பட்சத்தில் குஜராத் வெற்றியானது அவற்றுக்குப் பெருமளவில் கைகொடுக்கக்கூடும்.

நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார் என்ற தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வந்துகொண்டிருந்த அதே நேரத்தில் மும்பையில் சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேவைச் சந்திக்கத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார். இதற்குப் பல வகையான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

மறுபுறம், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டின் கதியும் மிகவும் சந்தேகத்துக்கு இடமாகிவிட்டது. 2008-ல் தேர்தல் வரக்கூடும் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று இடதுசாரிகள் ஏற்கெனவே அறிவித்துவிட்டனர். காங்கிரஸ் கட்சியும் அணுசக்தி உடன்பாட்டுக்காக ஆட்சியைத் தியாகம் செய்யும் அளவுக்குச் செல்வதற்கு வாய்ப்பில்லை. எனவே, எந்தவிதமான உருப்படியான முடிவுக்கும் வராமல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காங்கிரஸýம் இடதுசாரிகளும் பேசிக்கொண்டே காலம் கடத்துவர் என எதிர்பார்க்கலாம்.

அமெரிக்காவில் ஆட்சியைப் பிடித்தால், தாங்களும் இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை ஆதரிப்போம் என்று ஜனநாயகக் கட்சியும் அறிவித்திருக்கிறது. எனவே, ஜார்ஜ் புஷ்-மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்திலேயே அந்த உடன்பாடு செயலுக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

குஜராத்தில் பாஜக பெற்ற வெற்றியானது, அண்மைக் காலமாக உரசல் போக்கில் இருந்த இடதுசாரிகளையும் காங்கிரûஸயும் கைகோத்துக்கொள்ளச் செய்துவிடக்கூடும். பலம் மிக்க காங்கிரûஸவிட பலவீனமான காங்கிரஸýடன் அரசியல் உறவு வைத்துக்கொள்ளவே இடதுசாரிகள் விரும்பக்கூடும். ஆனால், இப்போது பாஜக புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகிவரும் சூழலில், காங்கிரûஸ மேலும் பலவீனப்படுத்த இடதுசாரிகள் விரும்ப மாட்டார்கள். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி என அழைக்கப்படும் 3-வது அணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளிக்கும் ஆதரவிலும் குஜராத் தேர்தல் முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

ஹிந்துத்துவாவின் புதிய வெற்றிச் சின்னமாக நரேந்திர மோடி அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்திருப்பதானது, மத்தியில் அத்வானியின் தலைமைப் பதவிக்கு ஒரு சவாலாக விளங்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது. உடனடியாகவோ, 2009-ம் ஆண்டிலோ அத்தகைய நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

ஹிந்துத்துவா, பொருளாதார வளர்ச்சி, பலமும் ஆதிக்கமும் மிக்க தலைமை ஆகியவற்றைக் குழைத்து மோடி உருவாக்கி இருக்கும் புதிய அரசியல் பாதையை, பின்பற்ற வேண்டிய முன்னுதாரணமாக பாஜக வரித்துக்கொள்ளக்கூடும். எனினும் குஜராத்துக்கு வெளியே தனக்கு ஆதரவைத் திரட்டுவது மோடிக்கு சவாலாகவே இருக்கும். அடுத்த தலைமுறைத் தலைவர்களில் அருண் ஜேட்லியைத் தவிர அவரை ஆதரிப்போர் யாருமில்லை.

குஜராத்தில் அசைக்க முடியாத வெற்றியை மோடி பெற்றிருப்பதால் அவருக்கு எதிராக யாரும் இப்போதைக்குக் குரல் எழுப்ப மாட்டார்கள். தேர்தல் வெற்றிக்கு முன்பேகூட, கேசுபாய் படேல், கான்ஷிராம் ராணா போன்ற தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு கட்சித் தலைமையை நோட்டீஸ் அனுப்ப வைத்தவர் மோடி.

ஹிந்துத்துவாவின் வெற்றிச் சின்னமாக மோடி உருவெடுத்திருப்பதால், ஆர்எஸ்எஸ்ஸýம் விஎச்பியும்கூட அவருடன் சமாதானம் செய்துகொள்ள முன்வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படத் தக்க தலைவராக உருவாவதும், பாஜக கூட்டணிக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளத் தக்க தலைவராக உருவாவதும்தான் இப்போது நரேந்திர மோடிக்கு முன்னுள்ள சவால்கள். அது அவ்வளவு எளிதானதல்ல. அதனால்தான் தனது 3-வது பதவிக் காலத்தில் பலதரப்பட்டோரையும் அரவணைத்துக் கொள்ளக்கூடிய, நிதானப் போக்கு கொண்ட, அதாவது “காங்கிரஸ் முகம்’ கொண்ட தலைவராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ள அவர் முயற்சி செய்யக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தேசிய அரசியலில் குதிக்க சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பார் மோடி. 2009-ல் மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கிடைக்கும்பட்சத்தில் அதை தேசிய அரசியலில் நுழைவதற்கான வாய்ப்பாக மோடி பயன்படுத்திக்கொள்ளக்கூடும்.

எனவே, இப்போதைக்கு தமக்கு குஜராத்தில் கிடைத்திருக்கும் ஆதரவை உறுதிப்படுத்திக்கொள்ளும் முயற்சியிலும் அதன் முலம் குஜராத்திலிருந்து தனது ஆதரவாளர்கள் பலர் எம்.பி.க்களாவதை உத்தரவாதப்படுத்திக்கொள்ளும் முயற்சியிலும் அவர் ஈடுபடக்கூடும்.

2004 மக்களவைத் தேர்தலின்போது குஜராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் 92-ல் பாஜகவைவிட கூடுதல் வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருந்தது. ஆனால், 90 தொகுதிகளில்தான் காங்கிரûஸவிட கூடுதல் வாக்குகளை பாஜக பெற்றிருந்தது. ஆனால், அப்போது நரேந்திர மோடி அரசின் மீது அந்த மாநில ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினர் மத்தியில் நிலவிய அதிருப்தியைப் பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் தவறிவிட்டது. ஆனால், அத் தேர்தல் முடிவுகளின் அறிகுறிகளை உணர்ந்துகொண்ட மோடியோ, அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வெற்றிக் கனியைப் பறித்துவிட்டார்.

அண்மையில் பாஜகவால், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எல்.கே. அத்வானியைப் பொருத்தவரை, குஜராத் வெற்றியானது இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பாகும். அத் தேர்தலில் மோடி தோற்றிருந்தால், அத்வானியின் தலைமையை ஆதரிப்போரின் கரங்களைப் பலப்படுத்துவதாக அது இருந்திருக்கும்.

மோடியின் மகத்தான வெற்றியானது, அவரை அத்வானி சார்ந்திருக்க வேண்டிய நிலையை உருவாக்கக்கூடும். நடந்து முடிந்த தேர்தலில் மோடியின் விருப்பப்படிதான் கட்சி வேட்பாளர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. 2009 மக்களவைத் தேர்தலிலும் தனது விருப்பப்படியே தேர்தல் டிக்கெட் வழங்கப்படுவதை அவர் உறுதிசெய்துவிடுவார்.

பாரதிய ஜனதா கட்சிக்கும்கூட மோடியின் வெற்றியானது கசப்பும் இனிப்பும் கலந்த மாத்திரை போன்றுதான் இருக்கிறது. அடுத்த ஆண்டு சட்ட மன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ஹிந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த, சோர்வுற்றிருந்த கட்சித் தொண்டர்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது குஜராத் தேர்தல் வெற்றி.

அதே நேரத்தில், தனியொருவரின் தலைமைக்குப் பதில் கூட்டுத் தலைமையை வலியுறுத்திவரும் கட்சிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் நரேந்திர மோடியின் எழுச்சியானது, ஏற்றுக்கொண்டாக வேண்டிய புதிய பரிமாணமாக அமைந்துவிட்டது.

சுருக்கமாக கூறவேண்டுமானால் இந்திய அரசியல் வானில் ஒரு புதிய மக்கள் தலைவர் குஜராத்தில் இருந்து உருவாகி வருகிறார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.


மோடியின் வெற்றியும்- சோவின் துள்ளலும்!Viduthalai Editorial

குஜராத்தில் நரேந்திர மோடியின் தலைமையில் பா.ஜ.க., ஆட்சி அமைந்துவிட்டது. நரேந்திர மோடி தான் வெற்றிக்குக் காரணம். நரேந்திர மோடியின் நேர்மையும், நல்லாட்சியும் தான் இந்த வெற்றிக்குக் காரணம்.
சோனியா தாக்குதல், பிரதமர் பிரச்சாரம், வெளியேறிய பா.ஜ.க.,வினர், டெகல்கா விவகாரம் பத்திரிகைகள் எதிர்ப்பு, டெலிவிஷன்கள் கண்டனம், ஜாதிப் பிளவு – முயற்சி இவற்றை எல்லாம் மீறி மோடி வெற்றி பெற்றுள்ளார் என்று அட்டைப் படத்திலிருந்து தலையங்கம் வரை தீட்டி திருவாளர் சோ ராமசாமி துள்ளிக் குதிக்கிறார்.
நீரோ மன்னன் என்று இந்திய உச்சநீதிமன்றம் எந்த அர்த்தத்தில் விமர்சனம் செய்தது என்பதுபற்றி எல்லாம் அவருக்குக் கவலையில்லை. ஒரு தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதால், அவர் ஆட்சியைப் பயன்படுத்தி சிறு பான்மை மக்களை நரவேட்டையாடிய கொடுமை எல்லாம் சரியானதுதான் என்று திருவாளர் சோ. ராமசாமி சொல்ல வருகிறார் போலும்.

இதன்மூலம், சிறுபான்மை மக்களைப் படுகொலை செய்வது சரிதான் என்ற உற்சாகத்தை இந்து வெறியர் களுக்கு அவர் ஊட்ட முனைகிறார் என்று கருதலாமா?

இந்தியாவில், மதத்தின் அடிப்படையில் வாக்கு வங்கி களைப் பிரித்துவிட்டால் என்ன அக்கிரமம், கொடூரமான – காட்டுவிலங்காண்டித்தனமான முறையில் செயல்பட்டாலும், வெற்றி கிடைக்கும் – அந்த வழியை நரேந்திர மோடி பின் பற்றி வெற்றி பெற்றுவிட்டார். அந்த நிலை இந்தியா முழு வதும் புயல் வேகத்தில் பரவட்டும்; ஒவ்வொரு மாநிலத்திலும் மதக் கலவரத்தை நடத்தினால்தான் வாக்கு வங்கிகளை இரு கூறுகளாகப் பிரித்து குளிர்காயலாம் என்று திருவாளர் சோ எழுதுவதை நிதானமாகக் கவனிக்கத் தவறக்கூடாது. தொடக்க முதலே நரேந்திர மோடியின் பக்கம் நின்று அவருக்குத் தொடர்ந்து சோ பராக்குக் கூவுவது இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான்.

பா.ஜ.க.,வின் செயற் குழுவில் அவர் பெயர் இல்லை என்ற போது கடுமையாக பா.ஜ.க.,வின் தலைமையைச் சாடி தலையங்கம் தீட்டிய பார்ப்பனர் இவர் என்பதை நினைவுகூர்ந்தால், இவரும் இன்னொரு வகை யிலான நரவேட்டை நரேந்திர மோடியின் மறுபதிப்புதான் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

டெகல்கா படம் பிடித்து அதிகாரப்பூர்வமாக ஆதாரப்பூர்வ மாக வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததே – அவற்றை மோடியால் மறுக்க முடிந்ததா? மக்கள் வாக்களித்து முடிவு செய்கின்ற தீர்ப்பா இது? சொந்த கட்சி சட்டமன்ற உறுப் பினர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனரே – அவை எல்லாம் இல்லாமல் போய்விடுமா?

ஆட்சியின் சிறப்பைப்பற்றியெல்லாம் ஆகா ஓகோ என்று எழுதித் தள்ளியிருக்கிறார். கடந்த அய்ந்தாண்டுகளில் 500 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது இந்த மோடி ஆளும் குஜராத்தில்தானே?

அய்ந்து ஆண்டுகாலம் அகதிகள் முகாம்களில் சிறு பான்மையினர் இருக்கின்றனர் என்றால், இதன் பொருள் என்ன? பாசிச ஆட்சி என்றுதானே கருதவேண்டும்.

குஜராத் மாநிலத்தில் சாலைகளும், விளக்குகளும், வசதி களும் இந்துக்கள் வாழும் தெருக்களில் மட்டும்தான்; சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை தொலைக்காட்சிகளே படம் எடுத்துக் காட்டினவே – மறுக்க முடியுமா?

படுகொலைகளையும், கொள்ளைகளையும் நியாயப் படுத்த தேர்தல் ஒன்றுதான் சரியான வழி – நீதிமன்ற முறை என்ற ஒன்று கூடாது என்று கூறப் போகிறதா இந்தக் கூட்டம்?

இதற்கு முன் தேர்தல் வெற்றி பெற்றவர்களையும், கட்சி களையும் – நரேந்திர மோடி வெற்றியின் கண்ணோட்டத்தில் சோ விமர்சித்ததுண்டா?

அடிப்படை ஆர்.எஸ்.எஸ்.காரரான ஒரு பார்ப்பனரிட மிருந்து வேறு வகையாக எதிர்பார்க்க முடியாதுதான்!

————————————————————————————————————————-
மகேசன் தீர்ப்பு
Dinamani Editorial

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சியையும், இன்னும் சிலருக்கு மகிழ்ச்சியையும், பலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. முதல்வர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக முதல்வராகிறார் என்பதும், தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் சிலரால் ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்தாலும், குஜராத் மக்களைப் பொருத்தவரை அவர்களுக்கு ஏற்புடைய தீர்ப்பு என்பதால் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.

தீர்ப்பு தவறாகிவிட்டது என்றும், மக்கள் முட்டாள்கள் என்றும் கூறுபவர்கள் மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்றுதான் கூற வேண்டும். தங்களுக்கு சாதகமான தீர்ப்பு தரப்படும்போது வரவேற்பதும், பாதகமான தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் சரியான அணுகுமுறையாகாது. குஜராத் மக்களின் நன்மதிப்பை நரேந்திர மோடி பெற்றிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதைத்தான் இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது.

ஒருவகையில் பார்த்தால், தமிழகத்தில் ஜெயலலிதாவால் செய்ய முடியாத சாதனையை, குஜராத்தில் நரேந்திர மோடி செய்து காட்டியிருக்கிறார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவிய அதிமுக, நடிகர் விஜயகாந்தின் தேமுதிக களத்தில் இறங்காமல் இருந்திருந்தால் ஒருவேளை நரேந்திர மோடி செய்து காட்டியிருக்கும் சாதனையைச் செய்திருக்குமோ என்னவோ?

2004 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, குஜராத்திலுள்ள 180 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 91 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பாஜகவைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தது. நரேந்திர மோடியின் இறங்கு முகம் தொடங்கிவிட்டது என்று அரசியல் நோக்கர்கள் கணித்தது அதனால்தான். அதே நிலை தொடர்ந்திருந்தால் நிச்சயமாகக் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கும். ஆனால், தனது செல்வாக்குச் சரிவை நரேந்திர மோடி தடுத்து நிறுத்தியது மட்டுமல்ல, மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது என்றால் அது அரசியலில் ஒரு மிகப்பெரிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தவகையில் நரேந்திர மோடி என்கிற அரசியல் ராஜதந்திரியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவருக்கு நிகரான செல்வாக்குடைய தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்பதும், நரேந்திர மோடியின் நிர்வாகத்தில் குஜராத் மாநிலம் அடைந்த வளர்ச்சியை மக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பதும், குஜராத்தியர்களின் சுயமரியாதைக்கு அடையாளமாக நரேந்திர மோடி கருதப்படுகிறார் என்பதும் பொதுவாக எல்லோராலும் சொல்லப்படும் காரணங்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தவறான அணுகுமுறையும், தேர்தல் யுக்திகளும்தான் நரேந்திர மோடியின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணங்கள் என்று சொல்ல வேண்டும்.

தீவிரவாதிகளுக்கு எதிராக நரேந்திர மோடி அரசு எடுத்த நடவடிக்கைகளை, சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் என்பதுபோல காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சித்திரித்ததை, குஜராத்திலுள்ள சிறுபான்மையினரே விரும்பவில்லை என்று தெரிகிறது. சிறுபான்மையினரில் 99 சதவீதம் பேர் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் அல்லர். மற்ற சமுதாயத்தினருடன் இணைந்து வாழ ஆசைப்படுபவர்கள். தங்களுக்குத் தீவிரவாத முலாம் பூசுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், வாக்களிக்காமல் இருந்தவர்கள் ஏராளம் என்று கூறப்படுகிறது.

அது போகட்டும். நரேந்திர மோடியின் வெற்றி தேசிய அளவில் சில நல்ல விஷயங்களுக்கு உதவப் போகிறது. முதலில், நாடாளுமன்றத் தேர்தல் இப்போதைக்கு வராது. இரண்டாவதாக, மன்மோகன் சிங் அரசு தனது அணுசக்தி ஒப்பந்தப் பிடிவாதத்தைத் தளர்த்தி, ஒப்பந்தத்தை ஒத்திப்போட்டுவிடும். மூன்றாவதாக, ஆட்சியைக் கவிழ்த்தால், பாரதிய ஜனதா மீண்டும் பதவிக்கு வந்துவிடுமோ என்கிற பயத்தில், இடதுசாரிகள் அரசை மிரட்ட மாட்டார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம். ஏதோ, ராகுல் காந்தியால் காங்கிரஸ் புத்துயிர் பெற்று மீண்டும் பழைய பலத்தைப் பெற்றுவிடும் என்கிற நப்பாசையும், நரேந்திர மோடியின் தயவால் நைத்துப் போய்விட்டது. உத்தரப் பிரதேசத்திலும் சரி, குஜராத்திலும் சரி அவருக்குக் கூடிய கூட்டம் வேடிக்கை பார்க்கத்தான் வந்ததே தவிர வாக்களிக்க அல்ல என்பது தெளிவாகி விட்டது. இனிமேல், பிரியங்காவை முன்னிறுத்தி வேடிக்கை காட்டுவார்கள் என்று நம்பலாம்.

நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பின்னால் அவரது உழைப்பும், தன்னம்பிக்கையும் தெரிகிறது. அதற்காக அவரை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். அதேநேரத்தில், இந்த வெற்றியின் போதைக்கு அவர் அடிமையாகி விடாமல் இருக்க வேண்டும். தான் ஒட்டுமொத்த குஜராத் மக்களின் முதல்வர் என்பதை மறந்துவிடாமல் ஆட்சியில் தொடர சரித்திரத்தின் பக்கங்களை அவர் அடிக்கடி புரட்டிப் பார்ப்பது நல்லது!

————————————————————————————————————————-
குல்தீப் நய்யாரின் கூற்றைக் கவனியுங்கள்

Viduthalai Editorial

பிரபல அரசியல் விமர்சகரான குல்தீப் நய்யார் எழுதி யுள்ள கட்டுரை ஒன்றில் குஜராத் தேர்தல்பற்றி நுணுக்கமாகக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

(1) வகுப்புவாதத்தை எதிர்க்கும் விஷயத்தில் காங்கிரஸ் தன்னுடைய கொள்கையை ஏன் மாற்றிக் கொண்டது என்று தெரியவில்லை.

(2) நரேந்திர மோடிக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் வகுப்புவாதம் மட்டுமே கொள்கையாக இருந்தது – இருக்கிறது.

(3) முசுலிம்களுக்கு எதிராக நபருக்கு நபர் எதிர்பிரச்சாரம் குஜராத்தில் தேர்தலுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது.

(4) இந்துத்துவா கொள்கையை வைத்து மோடியும், பா.ஜ.க.,வும் இந்துக்கள், முஸ்லிம்கள் என்று இரண்டாக அல்லது மூன்றாக நாட்டைப் பிரித்துக் கொண்டு இருக் கின்றனர்.
ஆர்.எஸ்.எஸின் ஒரு பிரிவான விஸ்வ இந்துபரிசத் கிறித்தவர்களைக் குறி வைக்கிறது. ஒரிசாவில் பி.ஜே.பி., ஆதரவு அரசின் ஒத்துழைப்போடு வி.எச்.பி., செய்து வருவது மிகவும் வெட்கக்கேடானது.

(5) வகுப்புவாதம் மோசமான நிலையில் உள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் பெருமைகளைச் சீரழித்துக் கொண்டு இருக்கிறது.

(6) வகுப்பு வாதத்தை எதிர்ப்பதை காங்கிரஸ் கைவிட்டுவிடக் கூடாது. ஏனெனில், அது வெற்றி பெற்றால், பாசிசம் உண்டாகும்.

(7) குஜராத் ஒரு மாநிலம் அல்ல; அது இந்துத்துவா என்ற கொள்கையின் அடையாளமாக ஆக்கப்பட்டுவிட்டது. முழுப் பிரச்சாரத்தையும் ஒரே ஒரு பிரச்சினையாக மாற்றிவிட்டனர். நீங்கள் ஒரு இந்து என்றால், எனக்கு வாக்களியுங்கள் என்பதுதான் அது.
அனேகமாக அரசியல் விமர்சகர் குல்தீப் நய்யார் குஜராத் தேர்தலை மட்டுமல்ல; இந்துத்துவாவைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கும் பி.ஜே.பி., அதன் சங் பரிவாரங்களின் நச்சுத் தன்மையின் சாரத்தை அப்படியே பிழிந்து கொடுத்திருக்கிறார் என்பதில் அய்யமில்லை.

இனிமேல் அரசியல் நடத்த விரும்பும் நியாயவாதிகள், முற்போக்குக் கொள்கையாளர்கள், இடதுசாரிகள் யாராக இருந்தாலும் தங்களுக்குள் இருக்கும் வரப்புகளைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, பி.ஜே.பி., வகையறாக்களுக்கு எப்படி ஒரு பார்வை – இந்து என்ற பார்வையை மட்டும் மய்யப் படுத்தி மக்கள் மத்தியில் தூபம் போட்டு மதத் தன்மையில் ஒன் றிணைக்க விரும்புகிறார்களோ, அதேபோல, ஒரே நோக்கம், ஒரே பார்வை, ஒரே பாய்ச்சல் இந்த மதவாத – வகுப்புவாத சக்திகளை அவற்றின் ஆணி வேர் வரை சென்று நிர்மூலம் செய்வதில்தான் இருக்க வேண்டும்.

முதன்மையாக தலைமை வகிக்கும் காங்கிரசுக்கு முக்கியமாக இந்த குறிக்கோள் இருக்கவேண்டும்; அதன் அடிப்படையில் மதச் சார்பற்ற சக்திகளைச் சேதாரம் இல்லாமல், வீண் சச்சரவுகளை உண்டாக்கும் பிரச்சினை களை உற்பத்தி செய்யாமல், அணைத்துச் செல்லும் பக்குவத்தோடு பலத்தைப் பெருக்கி, ஒரே மூச்சில் மதவாதத்தை வீழ்த்தித் தள்ளிட வேண்டும்.

குஜராத்தில் இவ்வளவுப் பச்சையாக மதவாதத் தேர்தல் நடந்திருந்தும் தேர்தல் ஆணையம் எப்படி அவற்றை அனுமதித்தது என்றே தெரியவில்லை.

பா.ஜ.க., செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் அதன் பார்வை திரும்பக்கூடும்; அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். அது பகற்கனவு என்று காட்ட வேண்டியது அம்மாநிலங்களின் கடமையாகும். அடுத்து நடக்க உள்ள நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை மதச் சார்பற்ற சக்திகள் ஒரு சோதனைக் களமாகக் கருதவேண்டும்.

2009 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்த லுக்குமுன் இந்த வகையில் தீவிரமாக திட்டமிட்ட வகையில் அறிவியல் கணிப்போடு செயல்பட்டே தீரவேண்டும்.
சென்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் சில மாநிலங்களில் பா.ஜ.க., வெற்றி பெற்றதுண்டு. அதேநேரத்தில், மக்களவைத் தேர்தலில் மண்ணைக் கவ்வியது என்பதையும் மனதிற்கொண்டு, சோர்வுக்குச் சிறிதும் இடமின்றி, தன்னம்பிக்கையுடன் இடதுசாரிகளும், மதச் சார்பற்ற அணிகளும் ஒன்று சேர்ந்து உழைக்கவேண்டியது அவசியம்.

————————————————————————————————————————-

Posted in Aajtak, abuse, Advani, America, Arrest, Ayodhya, Ayodya, Ayothya, Bajrang, Bharatiya Janata Party, BJP, CBI, Censure, Chowdhry, Chowdhury, CNN, Condemn, Congress, crimes, Criminal, dead, Elections, Expose, Godhra, Gujarat, Hindu, Hinduism, Hindutva, HT, Investigation, Islam, Judges, Justice, Killed, Law, massacre, Media, MLA, Modi, MP, MSM, Muslim, Nanavati, Narendhra, Narendra, Narendra Modi, Narenthira, Neerja, Operation Kalank, Order, Party, pogrom, Police, Polls, Power, Revelations, riots, RSS, Sting, Tehelka, USA, Vajpai, Vajpayee, Vajpayi, VHP, Vidudhalai, Viduthalai, Violence, Visa, Vituthalai | Leave a Comment »

State of the Justice System in India (BMW case: NDTV exposes prosecution-defence nexus)

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

வழக்கறிஞர்களுக்கு “தண்டனையே’ கிடையாதா?

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

ஒரு சாலை விபத்து (பி.எம்.டபிள்யூ.) வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரும், எதிரியின் வழக்கறிஞரும் சேர்ந்து சாட்சியத்தைக் குலைப்பது பற்றி பேசிக்கொண்டதை என்.டி.டி.வி. சில வாரங்களுக்குமுன் அம்பலப்படுத்தியதைப் பார்த்திருப்பீர்கள்.

அந்த வழக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னால் தில்லியில் நடந்த சாலை விபத்து பற்றியது. கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் குடிபோதையில் காரை ஓட்டி, பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த சிலரைக்கொன்றது பற்றியது அந்த வழக்கு. அவர் ஓட்டிய கார் பி.எம்.டபிள்யூ. என்ற வெளிநாட்டுக் கார். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சி குல்கர்னி என்பவர். அரசுத் தரப்பு ஏதோ காரணத்துக்காக அவரை சாட்சிக் கூண்டில் ஏற்றவே இல்லை!

எதிரியின் வழக்கறிஞர் (பிரபலமான வழக்கறிஞர், காங்கிரஸ்காரரும் கூட), அரசுத் தரப்பு வழக்கறிஞர் (இவரும் பிரபலமான வழக்கறிஞர்தான். ஒரு ரூபாய் கட்டணம் மட்டுமே போதும், குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவேன் என்று தானாக முன்வந்தவர்) இருவரும், முக்கிய சாட்சியுடன் ஏதோ அன்னியோன்னியமாகப் பேசிக்கொண்டிருந்ததை என்.டி.டி.வி.யின் ரகசிய கேமரா படம் பிடித்துக் காட்டியது. அரசுத் தரப்பு வழக்கறிஞர், சாட்சியாக இருப்பவருக்கு “”புளூ லேபிள்” ஸ்காட்ச் விஸ்கியைக் காட்டி, குடிக்கிறீர்களா என்று கேலியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். எதிரியின் வழக்கறிஞரோ, அந்த சாட்சியை ரகசியமாகச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

இந்தக் காட்சிகள் பல வட்டாரங்களிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. வழக்கறிஞர்கள், பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்பதை அவை உணர்த்தின. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொலைக்காட்சியின் கலந்துரையாடலில் கலந்து கொண்ட தில்லி பார் கவுன்சில் தலைவர் மனான் அறிவித்தார். அதெல்லாம் நடக்காது, இரண்டு வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை இருக்காது, எல்லாவற்றையும் பூசி மெழுகிவிடுவார்கள் என்று அதே நிகழ்ச்சியில் நான் முடிவுரையாகத் தெரிவித்தேன். அந்த இருவரையும் சில நாள்களுக்கு மட்டும் “சஸ்பெண்ட்’ செய்து, மீண்டும் பணிக்குச் செல்ல அனுமதித்துவிட்டனர்.

அந்த வழக்கின் முழு விவரமும் என்னிடம் கிடையாது – இரு வழக்கறிஞர்களும் அவர்களுடைய பதவிக்குப் பொருந்தாத எதையும் செய்தார்களா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எதிர்காலத்தில் இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் வரக்கூடும். இப்போது நம்முடைய கவலை இந்த வழக்கு எப்படிப் போகிறது என்பதல்ல.

நம் நாட்டில் எந்தத் தொழில் செய்கிறவர் ஆனாலும் அவர் மக்களால் அலசப்படுகிறார். அரசு அதிகாரிகள், டாக்டர்கள், பொறியாளர்கள் என்று அனைத்து தரப்பாரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மக்களால் விமர்சிக்கப்படுகிறார்கள். அதே போல வழக்கறிஞர்கள் சமூகத்தை யாரும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதில்லை. வழக்கறிஞர்களின் குணாதிசயங்கள், தொழில்நடத்தும் விதம், பொதுவாக அவர்கள் நடந்துகொள்ளும் முறை ஆகியவை குறித்து ஊடகங்களும், பொதுவிஷயங்களில் அக்கறை உள்ள அமைப்புகளும் வெகு நெருக்கத்திலிருந்து ஆராய வேண்டும்; அந்த ஆய்வு முடிவை மக்கள் அறிய வெளியிட வேண்டும்.

என்னுடைய இளவயதில் மாவட்டங்களில் மாஜிஸ்திரேட்டுகளுடன் எனக்கு முதல் பரிச்சயம் ஏற்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் கிராமங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள மக்கள் வழக்கறிஞர்கள் பற்றிச் சொன்னதன்மூலம் பல விஷயங்கள் தெரிந்தன. வட இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் வீடு, நிலம் தொடர்பாக ஏதாவது ஒரு வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. ராணுவத்திலோ, நகரில் கிடைக்கும் சிறு வேலைகளிலோ கிடைத்த சொற்ப வருவாயை மக்கள் இந்த வழக்குகளுக்காகச் செலவிட்டனர். அதாவது அவை வழக்கறிஞர்களின் பைகளை நிரப்பின.

சாதாரண வழக்குகூட ஆண்டுக்கணக்கில் நீடித்தன, அல்லது நீட்டிக்கப்பட்டன. சில வழக்குகளில் வாதி, பிரதிவாதியின் மறைவுக்குப் பிறகு கூட வழக்குகள் பைசலாகாமல் நீடித்தன. உள்ளூர் போலீஸôர், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இவற்றில் பங்கு இருந்தது. நம் ஜனநாயகத்தில் எல்லா துறைகளுக்கும், நடைமுறைகளுக்கும் உள்ள சாபக்கேடு இதற்கும் வந்து சேர்ந்தது, அதாவது பணக்காரர்களுக்குச் சாதகமாகவே நீதிமன்ற நடவடிக்கைகள் அமைந்துவிடுகின்றன.

வழக்குகளில் வாய்தா வாங்குவதிலேயே திறமைசாலியான ஒரு வழக்கறிஞர் குறித்து, வழக்கு விசாரணையின்போது நீதிபதியே சுட்டிக்காட்டினாராம்; அதையே அவர் தனக்கு அளித்த சான்றிதழாகக் கருதி பிற வழக்கு விசாரணையின்போதும் குறிப்பிட்டு வாய்தா வாங்கிவிடுவாராம். இதை அந்த தொலைக்காட்சி கலந்துரையாடலில் பேசிய தில்லி பார் கவுன்சில் தலைவர் குறிப்பிட்டார்.

நம் நாட்டு நீதிமுறை குறித்து எழுதிய புத்தகத்திலும் இதைப்பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன். வழக்கறிஞர்கள், நீதிமன்றம் ஆகியவற்றுக்குத் தரப்படும் முக்கியத்துவம் வழக்கில் சம்பந்தப்படும் ஏழைகளுக்குத் தரப்படுவதில்லை.

தில்லி தந்தூர் வழக்கில், முக்கிய எதிரிக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியபோது மக்களிடம் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. கொலை நடந்து 8 அல்லது 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஒரே சாட்சி ஒரு போலீஸ்காரர்தான். அவருக்கு சம்பளம்கூட அதிகம் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கு எவ்வளவோ பணத்தாசை காட்டியிருக்க முடியும், அல்லது தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றிவிடுவோம் என்று மிரட்டியிருக்க முடியும். எது எப்படி இருந்தாலும் நீதிக்காக நிலைகுலையாமல் நின்ற அந்த ஒரே சாட்சி காரணமாகத்தான் எதிரிக்கு தண்டனை விதிக்க முடிந்தது. இதில் கேள்வி என்னவென்றால், எப்படி ஒரு சாதாரணமான வழக்கு இத்தனை ஆண்டுகளுக்கு இழுத்துக் கொண்டே போகிறது என்பதுதான்.

அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன் நகரங்கள் மீது பயங்கரவாதிகளின் விமானத் தாக்குதல் நடந்தவுடன் அரிசோனா மாநிலத்தில் இந்திய சீக்கியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். 6 மாதங்களுக்குள் வழக்கு விசாரணை நடந்து முடிந்து தாக்கியவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது. நம் நாட்டிலும் இப்படி ஏன் விரைந்து வழக்குகளை முடிக்கக் கூடாது? கொலைவழக்காக இருந்தால் ஓராண்டுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை ஏற்கிறீர்களா இல்லையா? மூத்த அரசியல்வாதி அல்லது அதிகாரி என்றால் அவர் மீதான லஞ்ச, ஊழல் வழக்கையும் ஓராண்டுக்குள் விசாரித்துத் தண்டிக்க வேண்டும் என்பதை ஏற்பீர்களா?

வழக்கறிஞர்களை மேற்பார்வையிடவோ, கண்காணிக்கவோ யாரும் இல்லை என்ற எண்ணமே சில வேளைகளில் தோன்றுகிறது. பார் அசோசியேஷன் என்பது வழக்கறிஞர்களுடன் தோழமை உள்ள அமைப்பு. பார் கவுன்சில் என்பது வழக்கறிஞர்கள் பணி சட்டத்துடன் தொடர்புள்ளது. அது வழக்கறிஞர்களின் வேலையில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கொண்டுவர எப்போதாவது முயற்சி செய்துள்ளதா? வழக்கறிஞர்களைக் கண்காணிப்பதை நீதிமன்றங்கள் செய்ய முடியும், ஆனால் அவையும் அப்படி எதையும் செய்வதில்லை.

1960கள் வரை நீதித்துறையும் நிர்வாகத்துறையும் தனித்தனியே பிரிக்கப்படவில்லை. அப்போது மாவட்ட நிர்வாகம் வழக்குகளைக் கண்காணித்து வந்தது. எத்தனை வழக்குகள் தாக்கலாகின, எத்தனை விசாரிக்கப்பட்டன, எத்தனையில் இறுதித் தீர்ப்பு வந்தது என்று தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட்டவுடன் நிர்வாகம், கண்காணிப்பு வேலையை விட்டுவிட்டது.

டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தியாவில் நீதித்துறையின் கீழ் நிலையில் ஊழல் இருக்கிறது, இதன் மதிப்பு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி என்று தெரிவித்தது.

வழக்கறிஞர் தொழிலில் என்ன நடக்கிறது என்று அக்கறை காட்டப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது. இது வழக்கறிஞர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் நல்லது. சூரிய வெளிச்சம் எங்கு பாயவில்லையோ அங்கு பாச்சைகளும் கரப்பான்களும் பெருகி வளர்கின்றன. சூரிய ஒளி பட்டால் இவையெல்லாம் விலகி அங்கே தூய்மை நிலவும்.

(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)

——————————————————————————————–

தேவை, நீதித்துறை சீர்திருத்தம்

உ .ரா. வரதராசன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் தெரிவித்துள்ள கருத்து ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று.

“”தரக்குறைவாகவும், அவமதிக்கும் வகையிலும் நீதிபதிகளை வசைபாடுவது, சிலரது பொழுதுபோக்காக உள்ளது. இத்தகைய அறிக்கைகள் நீதிமன்றங்களை அவதூறுக்கு உள்ளாக்கி, அவற்றின் எதிர்காலத்தை மதிப்பிழக்கச் செய்ய முற்படுகின்றன; இவற்றை அனுமதிக்கவே முடியாது”, என்று கூறி, சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிமன்ற அவமதிப்பைச் செய்த நபருக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனையை அந்த நீதிபதிகள் வழங்கினர். அதே தீர்ப்பில், கண்ணியமான வார்த்தைகளில் ஒரு நீதிமன்றத்தின் கருத்தை நியாயமான முறையில் விமர்சிப்பதைப் பற்றி கேள்வி கேட்க முடியாது என்றும் தெளிவுபடச் சொல்லப்பட்டது.

இந்தத் தீர்ப்பு, நாளிதழ்களில் வெளியான அதே நாளில், உலக ஊழல் அறிக்கை – 2007 என்ற ஓர் ஆவணத்தை இணையதளத்தில் காண நேரிட்டது. சர்வதேச ஊடுநோக்கி ( பழ்ஹய்ள்ல்ஹழ்ங்ய்ஸ்ரீஹ் ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப்) என்ற அமைப்பின் அறிக்கை நீதித்துறையில் உள்ள ஊழலைப் பற்றியது.

உலகில் இன்று நிலவும் ஊழலின் பரிமாணம் மலைக்க வைப்பதாக உள்ளது. உலகம் முழுவதிலும் ஊழலில் கசிந்து விரயமாகும் நிதியைக் கணக்கிட்டால் அது ஆண்டொன்றுக்கு 30 லட்சம் கோடி டாலர்கள் என்ற வரம்பைத் தாண்டுகிறது என்று ஒரு கணிப்பு தெரிவிக்கிறது. இது ஒருவேளை மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடாக இருக்கலாம். ஆனால் உலக நாடுகள் அனைத்திலும் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, நீதி ஆகிய அனைத்துத் துறைகளையும் இந்த ஊழல் கரையான் செல்லரித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மை கசப்பானதும் கவலைக்குரியதுமாகும்.

இதில் நீதித்துறையில் ஊழல் என்பது, மற்ற அனைத்துத் துறைகளையும்விட அபாயகரமானது. மற்ற துறைகளில் நிலவும் ஊழலால் பாதிக்கப்படுகிற எவரும், அவற்றுக்கு எதிராக நீதித்துறையின் தலையீட்டையே நாடுவது இயல்பானது. ஆனால், பரிகாரம் தேடிப் போகும் நீதி தேவதையின் சன்னிதானமே ஊழல் கறை படிந்து காணுமானால், வேறு புகலிடம் ஏது?

ஒருவர் தமக்களிக்கப்படும் அதிகாரத்தைத் தனிப்பட்ட ஆதாயங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தும் எந்த நடவடிக்கையும் ஊழலேயாகும். அந்த ஆதாயங்கள் பணமாகவோ, பொருளாகவோ, வேறுவகைப்பட்டதாகவோ இருக்கலாம். நீதித்துறை ஊழல் என்பது நீதி பரிபாலன முறைமைக்கு உள்ளிட்டு செயல்படும் எவரும், அதன் பாரபட்சமற்ற செயல்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும் செல்வாக்கு செலுத்துவதன் சகல அம்சங்களையும் உள்ளடக்கியதே! இதை அளவிட்டு அறிவதற்காக 62 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளே இந்த உலக ஊழல் அறிக்கையில் விரிவாக இடம் பெற்றுள்ளன.

நீதித்துறையில் ஊழல் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று, நீதித்துறையின் செயல்பாட்டில் அரசியல் தலையீடுகளால் நிகழ்வது; மற்றது, நீதித்துறையின் பல மட்டங்களில் புகுந்துவிடும் லஞ்ச லாவண்யம் காரணமாக நடைபெறுவது. நீதித்துறையை அணுகும்போது, நியாயமான பாரபட்சமற்ற தீர்ப்பைப் பெறுகிற அடிப்படை மனித உரிமையை இந்த இருவகை ஊழலும் மறுக்கிறது. எந்த ஒரு நாட்டிலும் நீதித்துறையில் ஊழல் மலிந்தால், அங்கே ஆட்சி அதிகாரத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுவது தவிர்க்க முடியாததாகி விடும். “”ஊழலா, அது எங்கள் நாட்டில் வாடிக்கையாகிப் போய்விட்ட விவகாரம்” என்று மக்கள் சகித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும்.

தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறவில்லையானால், அங்கே நீதித்துறையில் நாணல்போல் வளைந்து, ஊழலுக்கு இடமளிக்கும் நீதிபதிகள் இடம்பெறுவது இயல்பாகிவிடும்.

நீதிபதிகளுக்கான சம்பளம், ஊதிய நிலைமைகள், பாதுகாப்பற்ற சூழல், இடமாற்றல் அச்சுறுத்தல் போன்றவையும் நீதிபதிகளையும் நீதிமன்ற அலுவலர்களையும் ஊழல் நடைமுறைகளுக்கு இட்டுச் செல்லும்.

தவறிழைக்கும் நீதிபதிகளைத் தண்டனைக்கு உட்படுத்தவோ, பதவிநீக்கம் செய்யவோ உரிய ஏற்பாடுகள் இல்லையென்றாலும், நீதித்துறை ஊழலுக்கு உறைவிடமாகி விடும்; நேர்மையாகச் செயல்படும் நீதிபதிகளை ஆட்சியாளர்கள் விருப்பம்போல் பந்தாடும் சூழலும் அதே நிலைமைக்கே இட்டுச் செல்லும்.

நீதிமன்ற நடவடிக்கைகள் ஒளிவு மறைவு அற்றதாகவும், ஊழல் நடைமுறைகளைக் கண்காணிக்கிற ஏற்பாட்டுக்கு இடமில்லாமலும் அமையும் நிலை, நீதித்துறையை ஊழல் அரிப்பதற்கு வாய்ப்பாகி விடும்.

இந்த நான்கு அம்சங்களிலும், நீதித்துறையில் ஊழல் பரவாமல் தடுக்க, பல்வேறு பரிந்துரைகளை உலக ஊழல் அறிக்கை பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் நீதித்துறை ஊழல் பற்றிய ஓர் ஆய்வும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 2005ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கருத்தாய்வில் வெளிவந்த சில விவரங்களை இந்த அறிக்கை தொகுத்தளிக்கிறது.

“நீதித்துறை ஊழலின்றி செயல்படுகிறதா?’ என்ற கேள்விக்கு “இல்லை’ என்று பதிலளித்தவர்கள் 85 சதவிகிதம் பேர்! நீதித்துறை ஊழல் காரணமாகக் கைமாறும் தொகை ஆண்டுக்கு ரூ. 2,360 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீதித்துறை ஊழலுக்குப் பிரதான காரணங்களாக அமைவது, வழக்கு விசாரணையில் நேரிடும் காலதாமதம், நீதிபதிகளின் எண்ணிக்கைக் குறைவு, சிக்கலான நீதிமன்ற நடைமுறைகளேயாகும்.

2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் 33,635 வழக்குகள்; உயர் நீதிமன்றங்களில் 33,41,040 வழக்குகள்; நீதிமன்றங்களில் 2,53,06,458 வழக்குகள் நிலுவையில் இருந்தன. 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து – “”இனி புதிதாக ஒரு வழக்குகூடப் பதிவு செய்யப்படவில்லை என்றாலும்கூட, நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க இன்னும் 350 ஆண்டுகள் பிடிக்கும்” என்பதாகும்!

இந்த நிலைமையில் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துவதற்கான குறுக்கு வழியாக ஊழல் இடம்பெற்று வருகிறது.

இந்தியாவில் சராசரியாக பத்து லட்சம் நபர்களுக்கு 12 அல்லது 13 நீதிபதிகள் என்ற எண்ணிக்கையிலேயே, நீதித்துறை நியமனங்கள் உள்ளன. இதே பத்து லட்சம் நபர்களுக்கு, அமெரிக்காவில் 107 நீதிபதிகள்; கனடாவில் 75; பிரிட்டனில் 51 என்ற அளவில் உள்ளனர். இதனால் தீர்ப்புகள் தாமதமடைகின்றன. நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

“தாமதித்து வழங்கிடும் நீதி, மறுக்கப்படும் நீதி’. ஆனால், சட்டத்தை மீறுகிறவர்களுக்கும், குற்றங்களைத் தொழிலாகக் கொண்டு செயல்படுபவர்களுக்கும், வழக்குகளின் தாமதம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விடுகிறது! நீதிபதிகளுக்கான “நீதித்துறை நன்னடத்தைக் கோட்பாடுகள்’ சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டது இந்தியாவில்தான்! 2002ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் உருவான இந்தக் கோட்பாடுகள்தான், பின்னர் 2006ஆம் ஆண்டில் ஐ.நா. சபை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், இந்தக் கோட்பாடுகள் நீதிபதிகளின் சுயவிருப்பத்திற்கிணங்கப் பின்பற்றப்பட வேண்டியவை மட்டுமே.

இதுமட்டுமல்ல, நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான குழு அறிக்கைக்கும், நீண்ட நெடிய விவாதங்களுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு அறிகுறியே தென்படவில்லை!

நீதிமன்ற அவமதிப்பு அனுமதிக்கப்பட முடியாததுதான்; ஆனால், நீதித்துறையின் மதிப்பை உயர்த்துவது எப்படி, எப்போது?

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ)

————————————————————————————————–

நீதிதேவன் மயக்கம்
Dinamani – Op-ed (September 05 2007)

“”மக்களுக்கு நீதித்துறையின் மீது அதிருப்தி அதிகரித்து வருகிறது என்பது மட்டுமல்ல, தீர்வு காணப்படாமல் தேங்கிக் கிடக்கும் வழக்குகளால் நீதித்துறை மீதான நம்பிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மக்களுக்கு நீதிபதிகள் மீதும் நீதித்துறையின் மீதும் மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டுமானால், வழக்குகள் அதிக காலதாமதம் இன்றி விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்”~இப்படி சொல்லியிருப்பது அரசியல்வாதியோ, சமூக ஆர்வலரோ, பத்திரிகையாளரோ அல்ல; நீதிபதிகள்.

வித்தியாசமான, அதேசமயம் மக்களின் மனஓட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு வழங்குவதில் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு நிகர் அவர்தான். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தீர்ப்பு வழங்குபவர் என்கிற பெயர் அவருக்கு எப்போதுமே உண்டு. 1957ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து மேல் முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் மாத்தூரின் முன் விவாதத்துக்கு வந்தபோதுதான் மேற்கண்ட கருத்தை அவர்கள் தெரிவித்தனர்.

அரை நூற்றாண்டு காலம் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தேங்கிக் கிடப்பது என்பது, நமக்கே எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தும்போது, சம்பந்தப்பட்டவர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

நாட்டிலுள்ள 21 உயர் நீதிமன்றங்களில் சுமார் 30 லட்சம் வழக்குகள் தீர்ப்பளிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இரண்டரைக் கோடிக்கும் அதிகமான வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. மிக அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்தான் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உச்ச நீதிமன்றத்திலும் சரி, நிலைமையில் பெரிய அளவில் மாற்றமில்லை. சுமார் 39,780 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக 2006-ம் ஆண்டு புள்ளிவிவரம் கூறுகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 4,06,958. கடந்த ஆண்டு கடைசியில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் இது. தமிழக விசாரணை நீதிமன்றங்களில் சுமார் மூன்றரை லட்சம் கிரிமினல் வழக்குகள் 31 மார்ச், 2007 நிலவரப்படி விசாரணையில் இருப்பதாகவும், இவற்றில் 26,800 வழக்குகள் சிறு குற்றங்கள் தொடர்பானவை என்றும் தெரிகிறது.

வழக்குகள் தேங்கிக் கிடப்பதால் இரண்டு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குற்றவாளிகள் பலர் தங்களுக்குப் பாதகமான தீர்ப்பு வராமல் வழக்கைத் தள்ளிப்போட்டுத் தப்பிக்க முயல்வது சகஜமாகிவிட்டது. சில வழக்குகளில் குற்றவாளிகள் மரணம்வரை தீர்ப்பு வழங்கப்படாமல் தப்பித்த சரித்திரங்கள் ஏராளம். இதனால், நீதியின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் அவநம்பிக்கை ஏற்படுகிறது.

அதேபோல, நிரபராதிகள் விடுவிக்கப்படாமல், அடிக்கடி நீதிமன்றங்களால் அலைக்கழிக்கப்படும்போது அது தர்மத்துக்கும் நியாயத்துக்கும் எதிரான செயல்பாடு என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. செய்யாத தவறுக்குத் தண்டனை பெறும் அவலநிலைக்கு நிகரானதுதான் இதுபோன்ற அலைக்கழிப்பு. நிரபராதி, தீர்ப்பு வழங்கப்படாமல் குற்றவாளி என்கிற களங்கத்துடன் காலவரையறையின்றித் தொடர்வது என்பது நீதிதேவனுக்கே அவமானம்.

உடனடி நீதி கிடைக்குமேயானால், லஞ்சமும் ஊழலும்கூடப் பெரிய அளவில் குறைய வாய்ப்பிருக்கிறது. ஒரு சராசரிக் குடிமகனுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் மறுக்கப்படும்போது, அவன் நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கேட்க முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டால், காலதாமதமின்றி அதுபோன்ற வழக்குகளை நீதிமன்றங்கள் பரிசீலித்துத் தீர்ப்பளிக்குமேயானால், அதிகாரத்தில் இருப்பவர்களிடம் பயமும் பொறுப்புணர்வும் ஏற்படும்.

தாமதமாகக் கிடைக்கும் நீதி என்பது கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம் செய்கிற கதையைப் போன்றதுதான். பொதுமக்களை மட்டும் வருத்திக் கொண்டிருந்த இந்தப் பிரச்னை இப்போது நீதிபதிகளையும் சிந்திக்கவும் செயல்படவும் வைத்திருக்கிறது என்பது ஆறுதலைத் தருகிறது. நீதிதேவன், மயக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது!

——————————————————————————————————————–
நாட்டின் தேவை 5 ஆயிரம் புதிய கோர்ட் : தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தகவல்

சென்னை : “நாடு முழுவதும் ஐந்தாயிரம் புதிய கோர்ட்டுகளை துவக்கினால் தான் வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும்’ என்று இந்திய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை ஜுடிசியல் அகடமி நடத்திய, “உரிய நேரத்தில் நீதி வழங்குவதற்கான தொழில்நுட்பம் மற்றும் கருவிகள்’ குறித்த மூன்று நாள் கருத்தரங்கின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.

தலைமை நீதிபதிபேசியதாவது :

நீதிபதிகள் தங்களுக்கு முன்பாக எந்த மாதிரியான வழக்குகள் வந்துள்ளன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நடக்காமல், அது போன்றவற்றில் நீதிபதிகளே ஆர்வம் எடுத்து விரைவாக தீர்வு காண வேண்டும். மிகச் சாதாரணமான வழக்குகளை விரைவாக தீர்த்து விட வேண்டும்.

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநில நீதிபதிகள் மிகவும் மதிக்கப்படுவதோடு, தனித்தன்மையுடன் செயல்படுகின்றனர். சமுதாயத்துடன் நாம் செல்ல வேண்டும். வழக்கு தொடருபவர் நேரடியாக நம்மிடம் வருகிறார். அவர்களது பிரச்னையை நாம் அணுக வேண்டும். எவ்வளவு விரைவாக பிரச்னையை தீர்த்து வைக்கிறோமோ, அதற்கேற்ப அவர்கள் மகிழ்ச்சியடைவர். வழக்கு

மூலம் தங்களுக்கு ஏதாவது நிவாரணம் கிடைத்தால் அவர்கள் மகிழ்வர். எனவே, பிரச்னைகளை அறியும் கலையை நாம் தெரிந்திருக்க வேண்டும். இது போன்ற கருத்தரங்குகளால் நீதிபதிகள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறவும், அனுபவங்களை பற்றி பேசிக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கிறது. நமக்கு தெரியாமலேயே இதனால் நாம் பயனடைகிறோம்.

தமிழக அரசு 72 புதிய கோர்ட்டுகளை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. பல மாநில அரசுகளிடம் கோர்ட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சில முதல்வர்கள் உறுதியளிப்பர், ஆனால், விரைவில் நடைமுறைக்கு வராது.

புதிய கோர்ட்கள் :

வழக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பிரச்னையை தீர்க்க வேண்டுமானால் புதிய கோர்ட்டுகளை ஆரம்பிக்க வேண்டும். வேறு எந்த வழியிலும் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. இந்தியாவில் 14 ஆயிரத்து 600 கோர்ட்டுகள் உள்ளன. மேலும் ஐந்தாயிரம் புதிய கோர்ட்டுகளை நாடு முழுவதும் அமைத்தால் தான், வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் வழக்குகள் குவிந்து கொண்டு தான் இருக்கும். மக்கள், நீதிபதிகள் மீது தான் குற்றம் சாட்டுவர். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.
மாதத்துக்கு நுõறு வழக்குகள் நீதிபதிகள் உத்தரவாதம் : சென்னை:

“மாதத்துக்கு நுõறு வழக்குகளை முடிப்பதாக நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்’ என்று, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கூறினார்.

நீதிபதிகளுக்கான பயிற்சி கருத்தரங்கில் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பேசியதாவது: நீதிபதிகளுக்கான கற்பித்தல் பணிமனைகளை மாவட்ட வாரியாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். சிறு விவகாரங்களுக்கான நீதிபதிகள் மற்றும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சென்னையில் உள்ள விரைவு நீதிமன்ற நீதிபதிகளிடம், வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் சராசரியாக எடுக்கப்படும் கால அளவு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. எவ்வாறு இவற்றை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீதிபதிகளிடம் எந்தளவு தங்களது செயல்பாட்டை மேம்படுத்த முடியும் என்று கேட்ட போது, மாதத்துக்கு தற்போது 50 வழக்குகளை முடித்து வருவதற்கு பதிலாக நுõறு வழக்குகளை முடிப்பதாக உறுதியளித்துள்ளனர். ஐகோர்ட்டில் இரண்டு நிரந்தர, “லோக் அதாலத்’கள் அமைக்கப்படும். இதுதவிர, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்க மாதத்துக்கு இரண்டு, “லோக் அதாலத்’கள் தனியாக நடத்தப்படுகின்றன.

கோவை மற்றும் திருப்பூரில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட குறை தீர்ப்பு கூட்டத்தில், 143 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.1.54 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது; இது ஒரு சாதனை. கடந்த ஜூலை 5ம் தேதியில் இருந்து மாலைநேர கோர்ட்டுகள் செயல்படத் துவங்கிய பின், ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஒன்பதாயிரத்து 245 வழக்குகள் முடிக்கப்பட்டன.

ஐகோர்ட்டின் மத்தியஸ்தம் மற்றும் நிவாரண மையம் கடந்த ஜூன் முதல் மிக தீவிரமாக செயல்படுகிறது. இந்த மையத்தில் சென்னையில் 140 மத்தியஸ்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. “ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ்’ வழக்கை வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்து முடித்ததற்காக கடந்த ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இரண்டாயிரத்து 196 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ரூ.70 கோடி மதிப்பிலான இந்த வழக்கு தான் இந்தியாவிலேயே மத்தியஸ்தம் மூலம் தீர்க்கப்பட்ட மிகப் பெரிய வழக்கு. இவ்வாறு ஏ.பி.ஷா பேசினார்.

Posted in 5000, AA, abuse, Accident, Alcoholism, Arms, Attorney, Balakrishnan, Blood, BMW, Bribery, Bribes, Capital, case, Congress, Corruption, Courts, dead, Delhi, Driver, Driving, Drunk, DUI, escape, Expose, Free, Guilty, HC, Hit, I U Khan, industrialist, Jail, Jethmalani, Judges, Justice, Launch, Law, Lawyer, legal, MP, Nanda, Nandha, NDTV, New, Order, Party, Police, Politics, Poor, Power, Prison, Prosecution, Punishment, R K Anand, Rich, Sanjeev, Sanjeev Nanda, Sanjiv, SC, Sentence, Sunil Kulkarni, Suspension, testimony, Wealthy, Witness | 1 Comment »

Satyendra Dubey Murder Accused Recaptured in Gaya

Posted by Snapjudge மேல் ஜனவரி 5, 2007

இந்தியாவில் ஊழலை வெளிப்படுத்தியவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கொலையான பொறியாளர் சத்தியேந்திர தூபே
கொலையான பொறியாளர் சத்தியேந்திர தூபே

இந்தியாவின் வடமாநிலமான பீகாரில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு ஒரு பெரிய அளவிலான நிர்மாணப் பணியில் ஊழல் இடம்பெற்றதை வெளிபடுத்திய பொறியாளர் சத்தியேந்திர தூபே கொல்லப்பட்டது தொடர்பாக முக்கிய குற்றவாளிகளில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக அந்த மாநிலப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய அந்த நபரான உதய்குமாரை தனது சொந்த ஊரான கயாவில் மீண்டும் கைது செய்யப்பட்டதாக மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் மாநிலத் தலைநகரான பாட்னாவில் உள்ள ஒரு உள்ளூர் நீதிமன்றத்தின் போலீஸ் காவலில் இருந்த போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

அந்தப் பொறியாளர், நான்கு இளைஞர்களால் ஒரு சிறிய அளவிலான திருட்டு தொடர்பான சம்பவத்தில் கொல்லப்பட்டதாக இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை கூறுகிறது, ஆனால் இந்த மரணம் ஒரு திட்டமிட்ட ஒரு பெரிய சதியின் ஒரு பகுதி என தூபேயில் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

Posted in Bihar, BITS, CBI, Central Bureau of Investigation, Clean, contractor, Convict, Corruption, Dube, escape, Expose, Gaya, Government, IIT, India, mafia, nexus, Officer, Officials, Patna, Politics, Sathyendhra Dube, Sathyendra Dubey, Satyendra Dube, Uday Paswan | Leave a Comment »