Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Exploit’ Category

Convict to MLAs – State of BJP and Gujarat Police & Politics nexus

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2007

தினமலர்

காக்கி சட்டையிலிருந்து கதருக்கு மாறும் குஜராத் மாஜி போலீசார்

ஆமதாபாத் :குஜராத்தில், காக்கி சீருடையில் இருந்து அரசியலுக்கு தாவுவது சாதாரணமாக நடந்து வருகிறது. பணியில் இருந்து சஸ்பெண்ட் செய் யப்படும் போலீசார், அரசியலில் வெகு கைத் தேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

தற்போதைய நிலையில், லிம்டி தொகுதியின் காங்., எம்.எல்.ஏ., பவன் பர்வாத், ஆரம்பத்தில் ஆமதாபாத் நகரில் ஏட்டாக பணியாற்றியவர். ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட் டார். இந்த போலீஸ் வேலை யே வேண்டாம் என்று அரசியலுக்கு வந்தவர், எம்.எல். ஏ.,வாகிவிட்டார்.

இவர் மட்டுமின்றி, இவர் போல ஏராளமானோர், போலீஸ் துறையில் இருந்து அரசியலுக்கு தாவி உள்ளனர்.கடந்த 1990ம் ஆண்டுகளின் துவக்கத்தில், ஆமதாபாத் நகர் சோலா சாலையில் பா.ஜ., தொண்டர் ஒருவர் கொலை வழக்கில் சிக்கினார் பர்வாத்.

இதற்கு நேரடி சாட்சி பா.ஜ.,வின் இன்னொரு இளம் தொண்டர் அமித் ஷா. ஆனால், கோர்ட்டில் சாட்சியத்தை மாற்றி கூறியதால், பர்வாத் இன்னொரு தண்டனையில் இருந்து தப்பினார்.

இப்போது அமித் ஷாவின் நிலை என்ன தெரியுமா?

அவர் தான் மாநிலத்தின் உள் துறை இணை அமைச்சர்.ஆமதாபாத்தை சேர்ந்த இன்னொரு கான்ஸ்டபிள், ஜெதா பர்வாத்தும், சிறை உடைப்பு குற்றத்துக்காக, கைதியை தப்ப விட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட் டார். இப்போது தோடா மாவட்டம், ஷெகிரா தொகுதியின் பா.ஜ., எம்.எல்.ஏ., இவர். இப்போது, இந்த பட்டியலில் இன்னும் பலர் சேர்ந்துள்ளனர்.

சூரத் மாவட்டம் கொரியாசி தொகுதியில் பா.ஜ., டிக்கெட் கேட்டிருப்பவர் சி.ஆர்.பட்டேல். சூரத் நகரில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்தவர் இவர். இவர் மீதும் ஏராளமான ஊழல் புகார்கள் குவிந்ததால், 1991ம் ஆண்டில் அரசியலுக்கு தாவிவிட்டார். நாளிதழ் நடத்தி பிரபலமடைந்தார். வைரவிழா கூட்டுறவு வங்கியில் ரூ. 58 கோடி கடன் வாங்கி, அதை திரும்ப செலுத்தாததால், ஒன்பது மாதம் சிறை தண்டனையும் அனுபவித்த சி.ஆர்.பட்டேல், இப்போது பா.ஜ.,வில் ஒரு முக்கியப் பிரமுகர்.

இவர் முதல்வர் நரேந்திரமோடி தீவிர ஆதரவாளர். அவரை இன்னொரு சத்திரபதி சிவாஜியாக வர்ணிப்பவர். மோடிக்காக பல இயக்கங்களை நடத்தியவர். சமீபத்தில் கூட ஜென்மாஷ்டமியின் போது, மோடியை கடவுள் கிருஷ்ணர் போல சித்தரித்து இளைஞர்களுக்கு 12 ஆயிரம் டி ஷர்ட்கள் வழங்கியவர். இதனால், தனக்கு உறுதியாக, “சீட்’ கிடைக்கும் என்று சி.ஆர்.பட்டேல் நம்புகிறார்.

குட்ச் தொகுதிக்கு பா.ஜ.,வில் சீட் கேட்டு இருப்பவர் ஜயேஷ் காத்வி. இவரும் முன்னாள் கான்ஸ்டபிள் தான். சூரத்தில் வேலை பார்த்துவிட்டு, சாராய வழக்கு காரணமாக, குட்ச்சுக்கு தண்டனை இடம் மாற்றம் பெற்றவர். அரசியலுக்கு தாவிவிட்டதால், இனி போலீஸ் வேலையில் நீடிக்க அவர் விரும்பவில்லை.

ஆமதாபாத் கிரைம் பிராஞ்சில் வேலை பார்த்த பி.கே.ஜடேஜாவும் குட்ச் தொகுதி, “சீட்’டுக்கு விண்ணப்பித்திருக்கிறார். ஆனால், இவர் தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்ற அடிப்படையிலும், குஜராத் பூகம்பத்தின் போது, புதையுண்ட பகுதிகளில் பொருட்களை திருட முயன்ற பலரையும் கைது செய்து சிறையில் அடைத்தவர் இவர்.

இதேபோல, எந்த தண்டனையும் பெறாத, சூரத் நகர உதவி போலீஸ் கமிஷனர் எம்.கே.பும்படியாவும், சபர்காந்தா மாவட்டத்தில் பா.ஜ.,வில், “சீட்’ கேட்டிருக்கிறார். தனக்கு எப்படியும், “சீட்’ கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தனது போலீஸ் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டார்.

மறைந்த சிமன்பாய் பட்டேலின் நம்பிக்கைக்குரிய ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.எம்.ஷா, தனது சொந்த தொகுதியான தான்துகாவில் காங்., “சீட்’டுக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

Posted in Ahmedabad, Allegations, Arrest, Belief, BJP, Bribe, Bribery, Campaign, Congress, Convict, Correctional Forces, Corrupt, Corruption, crimes, Elections, Employment, escape, Exploit, Finance, God, Gujarat, Hinduism, Hindutva, inmates, Jail, job, Justice, kickbacks, Kutch, Law, Loans, MLA, Modi, MP, Narendhra Modi, Narendra Modi, Narenthira Modi, Narenthra Modi, nexus, Order, Police, Politics, Polls, Power, Prison, Prisoners, Religion, resign, resignation, Retired, Scams, State, Surat, Suspend, Suspension, Vote, voters | Leave a Comment »

Bill to hike pension for former MLAs, MLCs: Increase in Tamil Nadu Legislature spending

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

நமது கடன்…

ஏனைய ஆட்சிமுறைகளில் உள்ள குறைபாடுகளைக் களைவதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கமே. ஆனால், நமது இந்தியாவில் மட்டும் மக்களாட்சி என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பதுதான் நடைமுறை வழக்கமாக இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டமான மழைக்காலக் கூட்டத் தொடர் நான்கே நாள்கள் நடந்து மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு நாள்களில் பல தீர்மானங்களும், சட்டமுன் வரைவுகளும் தாக்கல் செய்யப்பட்டன என்பது உண்மைதான். ஆனால், சப்தமே இல்லாமல் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு ரூ. 3,500 ஓய்வூதியம் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டியது அவசியம். இனிமேல், சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்த, இருக்கும், இருக்கப்போகிற அனைத்து உறுப்பினர்களின் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ. 3,500 வழங்கப்படும் என்றும்

இதன் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 32.4 லட்சம் செலவாகும் என்றும் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஓய்வூதியம் பெற நமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசு ஊழியர்களா என்று கேட்காதீர்கள். அரசு ஊழியர்கள் நிரந்தரப் பணியாளர்கள். ஆனால் நமது மக்கள் பிரதிநிதிகள், தேர்தலுக்குத் தேர்தல் மக்களின் அங்கீகாரம் பெற்றாக வேண்டிய தாற்காலிகப் பிரதிநிதிகள் மட்டுமே.

இன்னொரு விஷயம். ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது தொகுதி மக்களுக்கு முறையாகச் சேவை செய்யாமல், மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தவர்களுக்கும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்கிற முறையில், மக்களின் வரிப்பணத்திலிருந்து ஓய்வூதியம் உண்டு. இனிமேல், அவரது வாரிசுகளுக்கும் ஓய்வூதியம் தரப்படும். தவறுதலாகத் தவறான நபர் ஒருவரைத் தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்குத் தரப்படும் தண்டனை இது. இதுதான் இந்திய மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவமே!

இது ஏதோ தமிழகத்தில் மட்டும்தான் நடைபெறும் விஷயம் என்று நினைத்து விடாதீர்கள். இந்திய நாடாளுமன்றத்தில் தொடங்கி, அத்தனை மாநில சட்டப்பேரவைகளிலும் நடைபெறும் ஜனநாயகக் கூத்தின் ஓர் அங்கம்தான் இந்த அநியாயம். ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் சராசரி வருமானத்தைவிட நாற்பது மடங்கு அதிக சம்பளம் பெறுகிறார் நமது நாடாளுமன்ற உறுப்பினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நமது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாள்களில் மட்டும், போக்குவரத்துச் செலவுக்காக 15 ரூபாயும், இதர செலவுகளுக்காக 30 ரூபாயும் படியாகத் தரப்பட்டது. இப்போது நிலைமை என்ன தெரியுமா?

அவரது செலவுகளுக்காக மாதம் ரூ. 20,000 தரப்படுவதுடன், அவர் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் ஒவ்வொரு நாளும் தினசரி பயணப்படியாக ரூ. 500 பெறுகிறார். இப்போது, தொகுதிப் பயணப்படி என்று மாதம் ஒன்றிற்கு ரூ. 5,000 தரப்படுகிறது. இலவச தொலைபேசி வசதி, சென்னையில் இருப்பிட வசதி, மருத்துவ வசதி என்று ஏராளமான வசதிகள் போதாதென்று ரூ. 7,000 ஓய்வூதியம் வேறு.

அமெரிக்காவில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஊதிய உயர்வு, மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, மக்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், தங்களுக்குத் தாங்களே தங்களது சம்பளத்தையும் வசதிகளையும் மக்கள் பிரதிநிதிகள் அதிகரித்துக் கொள்ளும் ஜனநாயக விரோதப் போக்கு தடுக்கப்படுகிறது. மக்களுக்குச் சேவை செய்ய எந்தவொரு அரசியல்வாதியையும் வாக்காளர்கள் விரும்பி அழைக்கவில்லை. தாங்களாகவே மக்களுக்குச் சேவை செய்ய விழைகிறோம் என்று கூறித் தேர்தலில் நிற்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தங்களுக்குத் தாங்களே தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இது எந்த ஜனநாயகத்திற்கு உட்பட்ட விஷயம்?

மக்களாட்சியில் உண்மையிலேயே மக்களுக்குத் தொண்டாற்றிய தலைவர்களையும் பிரதிநிதிகளையும் மக்கள்தான் கௌரவிக்க வேண்டும். அவர்களது தேவைகளை மக்கள் வலியச் சென்று பூர்த்தி செய்ய வேண்டும். மக்கள் மீது நம்பிக்கை இல்லாத மக்கள் பிரதிநிதிகள்தான், மக்களின் வரிப்பணத்திலிருந்து தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும், தங்களது வருங்காலத்திற்கு உத்தரவாதம் தேடிக் கொள்ளவும் விழைவார்கள் என்று நாம் சொன்னால், இவர்கள் ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள்? நமது கடன் வாக்களித்து ஓய்வதே!

————————————————————————————————————————————————-

மக்கள் பிரதிநிதிகள்…?

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, நீதிமன்ற வரம்பு தொடர்பாக தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் நல்லதொரு கருத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்பவர்களை குறிப்பாக, அவையில் ரகளையில் ஈடுபடும் உறுப்பினர்களை, மக்களே திரும்பி அழைக்கும் முறையைக் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார். பணிகளைச் சரியாகச் செய்யாவிட்டால் அவர்களுக்கு ஊதியம் வழங்கக்கூடாது என்று கருத்தையும் ஏற்கெனவே அவர் கூறியிருந்தார்.

சாட்டர்ஜியின் கருத்துக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. நாடாளுமன்றக் கூட்டத்துக்கு ஒரு நிமிடத்திற்கு ரூ. 24,500 செலவாகின்றது. நாடாளுமன்றத்தின் அரிய நேரத்தையும் மக்களின் வரிப்பணத்தையும் பாழடிக்கும் உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 1997-ல் விடுதலைப் பொன்விழா மக்களவை சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2006-ம் ஆண்டு அறிக்கையின்படி, 20 சதவிகித உறுப்பினர்களே விவாதத்தில் ஓரளவு ஆர்வம் காட்டுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டால் நட்வர்சிங் பதவி விலகிய சில நாள்களிலேயே, 11 உறுப்பினர்கள் அவையில் கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் வாங்கியதை ஆஜ்தக் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது.

1951-ல் எச்.ஜி. முடகல் இம்மாதிரி கேள்வி கேட்க தொழிலதிபர்களிடம் லஞ்சம் பெற்றார். நாடாளுமன்றக் குழு அதை உறுதி செய்த பின்னர், நேரு அவரை அவையை விட்டு நீக்கக் கோரி தீர்மானம் முன்மொழிந்தார். பிரிட்டனில் 1990-ல் பணத்திற்காக அவையில் கேள்வி எழுப்பியதில் ஊழல் ஏற்பட்டது என்று புகார் எழுந்தது.

அமெரிக்காவில் செனட் சபைத் தலைவராக இருந்த நிவேட்ஞ்ரிச் என்பவர் தவறான தகவல் அளித்து பயணப்படியைப் பெற்றார் என்பதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

மக்கள் பிரதிநிதிகள்மீது குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன. 1998-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது ஜே.எம்.எம். உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவாகியது. ஆனால் லஞ்சம் வாங்கிய எம்.பி.க்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட லஞ்ச விவகாரம்பற்றி பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லையென்று சட்டத்தில் வழிவகை உள்ளதாக நீதிபதி பரூச்சா கூறியுள்ளார்.

சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்த, உறுப்பினர்களைத் திரும்ப அழைக்கும்முறை நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. 1970-ல் ஜெயபிரகாஷ் நாராயணன், திரும்ப அழைக்கும் உரிமையை மக்களுக்கு அளிக்க வேண்டுமென்று தாம் ஏற்படுத்திய புரட்சியின் மூலம் அறைகூவல் விடுத்தார். அதுபோன்று, எம்.ஜி.ஆர். தம்முடைய இயக்கத்தைத் தொடங்கியபொழுது, திரும்பஅழைக்கும் உரிமையை வலியுறுத்தினார்.

கலிபோர்னியா மாநிலத்தில் ஆளுநர் பொறுப்பிலிருந்த கிரே டேவிஸ் திரும்ப அழைக்கப்பட்டார். 82 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜே.பி. ரேசர் என்பாரும் தன்னுடைய பதவிக் காலத்திற்கு முன்பே ஆளுநர் பதவியிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டார் என்ற முன்னுதாரணங்கள் இருக்கின்றன. சோவியத் அரசியல்சட்டம்~1936~பிரிவு 106-ல் திரும்பஅழைக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்று நீதிபதி கிருஷ்ணய்யர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவையில், உறுப்பினர்கள் பொறுப்பான விவாதங்களில் ஈடுபடாமல், கைகலப்பு, ரகளை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்தான் காண்கிறோம். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் சுமார் ரூ. 2 லட்சம் வரை பல இனங்களில் அரசு வழங்குகிறது.

மாத ஊதியம், தொகுதிப் படி, அலுவலகப் படி, உதவியாளர் ஊதியம், அவையில் பங்கேற்புப் படி, தில்லி வீடு, மின்சாரம், தொலைபேசி, விமானப் பயணம், ரயில் பாஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உறுப்பினர்களுக்குக் கிடைக்கின்றன.

கடந்த 55 ஆண்டுகளில் 90 முறை நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஊதியங்கள், படிகள், ஓய்வூதியங்களை உயர்த்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் குரல் கொடுத்து தங்கள் உரிமைகளைச் சாதித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தங்களுடைய ஊதியம், படிகளை உயர்த்துவதில் மட்டும் ஒட்டுமொத்த ஒற்றுமை எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. ராஜிவ் சுக்லா போன்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள “ஆபீஸ் ஆஃப் பிராஃபிட்’ என்று சொல்லக்கூடிய “பொறுப்பின் பயன்களை’ப் பெறும் தடைகளை நீக்கவும் முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டபொழுது உறுப்பினர்களுக்கு வாடகை, செலவுகள் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ. 45 படியாக வழங்கப்பட்டது. அக்காலத்தில் எளிமையாக காந்திய லட்சியங்களை மனதில்கொண்டு மக்கள் பிரதிநிதிகள் கடமையை ஆற்றினர்.

1955-ல் நாடாளுமன்றத்திற்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை லட்சக்கணக்கில்தான் இருந்தது. இன்றைக்கு நாடாளுமன்றத்தின் மொத்த செலவு ரூ. 300 கோடிக்கு மேலாக உள்ளது. இதுபோக உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி என்று ரூ. 2,000 கோடி வரை தனியாகவும் ஒதுக்கப்படுகின்றது.

அரசியலமைப்பு சட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆரம்பத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 2003-ல் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர் ஒரு நாள் பதவியில் இருந்தாலே ஓய்வூதியம் கிடைக்கும்படி மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரிட்டனில் ஓர் எம்.பி.க்கு ஓர் அறை உள்ள அலுவலகம் மட்டும் வழங்கப்படுகின்றது. இந்தியாவில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஊதியங்களையும் தங்களுக்குச் சேரவேண்டிய படிகளையும் தாங்களே நிர்ணயித்துக் கொள்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்களை நிர்ணயிக்க சுயாட்சி தன்மை கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று சாட்டர்ஜி கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற குழுக்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் சலுகைகளை நிர்ணயிக்கின்றன. பொதுவாழ்வுக்கு வந்தவர்கள் அர்ப்பணிப்புடன் பணிசெய்வதை விட்டுவிட்டு, எவருக்கும் கிடைக்காத சலுகைகளைப் பெறுவது தேவைதானா என்று யோசிக்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நடக்கின்ற அமளி, உறுப்பினர்களின் பொறுப்பின்மை ஆகியவற்றைப் பார்க்கின்றபொழுது, இந்திய ஜனநாயகம் எங்கே செல்கின்றது என்ற கவலை ஏற்படுகிறது. மாநில சட்டப்பேரவைகளிலும் பல தருணங்களில் இதுபோன்ற நிலையைக் காணமுடிகிறது.

நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது, தொகுதி மேம்பாட்டுத் திட்டம் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை நரசிம்மராவ் அறிவித்தபொழுது, சோம்நாத் சாட்டர்ஜி இந்தத் திட்டத்தை எதிர்த்தார். மற்ற அனைத்துக் கட்சிகளும் இத்திட்டத்தை வரவேற்றன. கணக்காயர் அறிக்கையும் இந்தத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியது.

இத்திட்டத்தை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஈ.எஸ். வெங்கட்ராமய்யா அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறினார். கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு “கோட்டா’ வழங்குவதை நீதிமன்றங்களும் கண்டித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினருக்கு ரூ. 2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்குவது நியாயமற்றதாகும்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியிலிருந்துதான் மத்திய அரசு இந்த நிதியை வழங்குகிறது என்பது பல மாநில அரசுகளுக்குத் தெரியாது. மாநில சுயாட்சிக்குக் குரல்கொடுக்கின்றவர்களும் இதைத் தட்டிக் கேட்கவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், மக்களின் திருப்திக்கேற்ற வகையில் செயல்படவில்லை எனில், திரும்பஅழைக்கும் முறை சட்டமாக்கப்பட வேண்டும். அவர்களை விசாரணைக்கு உட்படுத்துகின்ற லோக்பால் மசோதாவை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றத் தயக்கம் காட்டுவது வேடிக்கைதான்.

தகுதியற்றவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும். கட்சித்தலைவர்கள், தங்கள் குடும்ப ஆதிக்கம், தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும்வகையில், வேட்பாளர்களைத் தேர்வு செய்வது ஜனநாயகப் படுகொலைக்குச் சமம்!

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

———————————————————————————————————————————————————–

பயனுள்ளதாகட்டும் நாடாளுமன்றம்!

பி. சக்திவேல், சமூக சிந்தனையாளர்

நாடாளுமன்றத்தின் பணி சட்டம் இயற்றுவதுடன் முடிந்துவிடுவதில்லை.

மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கவும், தேசத்தின் முக்கியப் பிரச்னைகளை விவாதிப்பதற்கும், முடிவு எடுப்பதற்கும் உள்ள ஓர் அமைப்புதான் நாடாளுமன்றம்.

சமீபகாலமாக உறுப்பினர்களின் கடும் அமளியாலும், விவாதங்கள் முறையாக நடைபெறாததாலும் நாட்டு மக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, கடும் விமர்சனத்திற்கு நாடாளுமன்றம் உள்ளாகியுள்ளது.

மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளைப் பற்றி விவாதிக்காமலேயே நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர்கள் முன்னதாகவே முடிவடைவது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேள்விக்குரியதாக்கியுள்ளது.

நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கடும் அமளியால் மக்களவை மொத்தம் 41 மணி நேரம் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டது. இது மொத்த கூட்டத்தொடரில் 40 சதவிகித நேரமாகும்.

இதேபோல, மாநிலங்களவை 42 மணி நேரம், அதாவது 49 சதவிகித நேரம் முடக்கப்பட்டது. சென்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் (பிப்ரவரி-மார்ச்) மக்களவை 73 மணிநேரம் எவ்வித அலுவல்களும் நடைபெறாமல் உறுப்பினர்களின் கூச்சல், அமளி காரணமாக முடங்கியது.

இவ்வாறு அமளியால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும்.

பிரதமர் தன்னுடைய அமைச்சரவை சகாக்களை அவையில் அறிமுகம் செய்வதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை, அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள் சரியாக விவாதிக்கப்படவில்லை, பல மசோதாக்கள் எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது, கேள்வி நேரம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் அர்த்தமற்றதாகிவிட்டன. இவை அனைத்தும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது.

ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் குடியரசுத் தலைவர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறுவதில் தடைகள் உருவாகின்றன.

மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியால் அவையில் உரை நிகழ்த்த இயலவில்லை. “”மக்களவைத் தலைவர் பேசும் போதும் நீங்கள் பேசுகின்றீர்கள், அமளி துமளியில் ஈடுபடுகின்றீர்கள். இது இப்போது வியாதியாகவே பரவிவிட்டது” என்று வருத்தப்பட்டுக் கூறும் அளவுக்கு அமளி ஏற்பட்டுள்ளது. அவை நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் தடுப்பது என்ற நடைமுறையால், எதிர்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ன ஆகும் என்ற கேள்வி அனைவரின் மனதில் எழுந்துள்ளது.

நம் நாட்டில், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் முதல் பொதுத் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்பொழுது ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் அதிக நேரம் அதனுடைய அலுவல்களுக்காகவே செலவிட்டது. இதன் வாயிலாக சமூக வளர்ச்சிக்காகவும் மக்களாட்சித் தத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும் நாடாளுமன்றம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கியது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்றன. இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பெரும் பங்காற்றினர்.

ஒவ்வொரு முறை பொதுத் தேர்தல் நடத்துவதற்கும் அரசு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிடுகிறது. கடந்த 14-வது மக்களவைத் தேர்தலுக்கு அரசு செலவிட்ட தொகை சுமார் ரூ. 1,300 கோடியாகும். நாடாளுமன்றம் செயல்பட ஒரு நிமிடத்திற்கு அரசு சுமார் ரூ. 34,500 செலவு செய்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ. 21 லட்சமும், ஒரு நாள் நாடாளுமன்றம் செயல்பட சுமார் ரூ. ஒன்றரை கோடியும் செலவாகிறது. மொத்தத்தில், ஒரு கூட்டத்தொடர் நடத்துவதற்கு ரூ. 250 கோடி செலவாகிறது.

உண்மையாக, ஆரோக்கியமான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றால் மக்களுடைய வரிப்பணம் வீணாகாது. ஆனால் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோமானால் நாடாளுமன்றத்தின் பொன்னான நேரம், பணம் மற்றும் மக்களுடைய நம்பிக்கைகள் வீணாகிக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ளலாம்.

நாடாளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய மற்றொரு விஷயமாகும். கடந்த காலங்களில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 125 முறை நாடாளுமன்றத்தின் அமர்வுகள் நடைபெற்றன. ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் அமர்வுகள் 70 ஆக குறைந்துவிட்டன. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் நடைபெற்ற அமர்வுகளில் மிகவும் குறைந்த அமர்வுகளாகும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 அமர்வுகளாவது நடைபெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்புகளாகும்.

நாடாளுமன்ற அமர்வுகள் அதிக அளவில் நடைபெற்றால்தான் மசோதாக்களை முறையாக அறிமுகம் செய்து விவாதிக்க முடியும். மேலும் கேள்வி நேரங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் அரசை நெறிப்படுத்த வாய்ப்புகள் உருவாகும்.

நாடாளுமன்றத்தின் அலுவல்கள் நடைபெறவில்லை என்றாலோ அல்லது அவை முடக்கப்பட்டாலோ உறுப்பினர்களுக்கு தினசரி சலுகைகள் மற்றும் தினசரி படிகள் வழங்கப்படக்கூடாது என்று மக்களவைத் தலைவர் யோசனை தெரிவித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக இந்த யோசனையை நிராகரித்துவிட்டன.

1949 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் வி.ஐ. முனுசாமி என்பவரால் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி உறுப்பினர்களின் தினப்படியை 45-லிருந்து 40 ரூபாயாகக் குறைக்க வேண்டும். அதற்கான காரணம், “”நாட்டு மக்கள் வறுமையில் உள்ளபோது உறுப்பினர்களுக்கு அதிக சலுகைகளை அளிக்கக் கூடாது. எனவே, இதைக் கருத்தில்கொள்ளும்போது 5 ரூபாய் என்பது ஒரு மிகச்சிறிய தியாகம்தான். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒரு மிகச்சிறிய பங்களிப்புதான் இது” என்றார் முனுசாமி.

இந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். இதன்படி 5 ரூபாய் குறைக்கப்பட்டு தினப்படி 40 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு வரை இவ்வாறு வழங்கப்பட்டதை இத்தருணத்தில் நிச்சயமாக குடிமக்கள் அனைவரும் நினைவுகொள்ள வேண்டியது அவசியமாகும். இந்தச் சம்பவம் எவ்வாறு நாடாளுமன்றமும் அதன் உறுப்பினர்களும் சமூக, பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார்கள் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும்.

1954 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளில் 27 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கு ஊதியம் மற்றும் சலுகைகளை உயர்த்த வேண்டுமென்றால் குரல் வாக்கெடுப்பின் மூலமாக மிகவும் எளிதாக நிறைவேற்றப்படுகிறது.

அதேவேளையில் அரசு அலுவலர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றால் ஊதியக் குழு நியமிக்கப்பட்டு பல்வேறு விவாதங்கள் மற்றும் திருத்தங்களோடுதான் உயர்த்தப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம் சில ஆண்டுகளாவது ஆகிறது. எனவே இதையும் மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவே கூச்சல், குழப்பம் போன்றவற்றின் மூலம் அவை நடவடிக்கைகளை முடக்கி மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நமது நாட்டின் 26 சதவிகித மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பல கோடிகள் செலவு செய்து ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் முறையாகச் செயல்படாமல் முடக்கப்படுவது சரியல்ல. இதனால் விரயமாகும் வரிப்பணம் தேசிய பேரிழப்பாகும்.

ஏற்கெனவே பல்வேறு விரும்பத்தகாத நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் அதன் மதிப்பையும் கண்ணியத்தையும் இழந்து காணப்படுகிறது. இத்தகைய போக்கு கட்டாயமாக மாற வேண்டும்.

ஆரோக்கியமான விவாதம், அவை நடவடிக்கைகளில் அதிக உறுப்பினர்கள் கலந்துகொள்ளுதல், நாடாளுமன்றத்தை முறையாகச் செயல்பட அனுமதித்தல், நாட்டு மக்களுக்கு குறிப்பாக, இளைய தலைமுறைக்கு உதாரணமாகத் திகழ்வது போன்ற கண்ணியத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இதன்மூலம்தான் நாடாளுமன்ற ஜனநாயகத் தத்துவம் முழுமை அடையும். நாடாளுமன்றமும் பயனுள்ளதாகும்.

இதைச் செய்யத் தவறினால் மக்களவைத் தலைவர் கூறியதுபோல “”இந்த அமைப்பை எந்த சக்தியாலும் ஏன், ராணுவத்தாலும் கூட காப்பாற்ற முடியாது.”

Posted in 5, ADMK, Allocation, Allowances, Anbalagan, Anbazagan, Anbazhagan, Appraisal, Assembly, Attendance, Bribery, Bribes, Budget, Cell, Checks, Chennai, Citizen, City, Congress, Cops, Corruption, Council, DA, Decorative, Decorum, Democracy, Disqualify, DMK, Economy, Election, Elections, Employed, Employment, Exceptions, Expenses, Exploit, Exploitation, Finance, Freedom, Funds, Government, Governor, Govt, Hike, Impeach, Income, Independence, Issues, IT, JJ, Jobs, kickbacks, KK, Legislature, Lifelong, Limits, Lok Ayuktha, Lok Saba, Lok Sabha, Lokpal, LokSaba, LokSabha, Madras, Metro, MGR, MLA, MLC, MP, MuKa, NGO, Office, Operations, parliament, pension, people, Performance, Phones, Polls, Power, Query, Questions, Raise, Rajya Saba, Rajya Sabha, Rajyasaba, Rajyasabha, Recall, Representation, Representative, Representatives, responsibility, Retirement, Rich, Role, Ruler, Salary, Senate, service, Sincere, Sincerity, Somnath, State, Suspend, TamilNadu, Tax, Telephone, Terms, Transport, Verification, Verify, Vote, voters, Walkouts, Woes, Years | Leave a Comment »

Child and juvenile labour force in Tamil Nadu – Dinamani Op-ed

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2007

இது நியாயமா?

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும், நாளைய தலைமுறை கல்வியறிவும் ஆரோக்கியமும் உடைய சமுதாயமாக உருவாக வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமான, கிராமப்புற வளர்ச்சி பெரிய அளவில் ஏற்படாத நாடுகளில் தவிர்க்க முடியாத களங்கம் ஒன்று இருக்குமேயானால், அது கல்வி கற்க வேண்டிய வயதில் எடுபிடி வேலைகளைச் செய்யும் நிலைக்குக் குழந்தைகள் ஆளாக்கப்படுவதுதான்.

சமீபத்தில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தங்களது மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்திய குற்றத்திற்காக 28 நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து 68 வழக்குகளும் பதிவு செய்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காகவே அமைக்கப்பட்ட 32 கல்விச்சாலைகளில், மீட்கப்பட்ட 1,198 குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கப்படுவதாக அந்த மாவட்டச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதேபோல, மற்ற மாவட்டங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கும் மாவட்ட ஆட்சியாளர்கள் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக முனைப்பாகச் செயல்படுகின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இது ஏதோ தமிழகமோ, இந்தியாவோ மட்டுமே எதிர்நோக்கும் பிரச்னை என்று கருதிவிட வேண்டாம். வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் – அதாவது, பின்தங்கிய நாடுகளில் – ஐந்து முதல் பதினான்கு வயதுவரை உள்ள 25 கோடிக் குழந்தைகள், கல்வி கற்க முடியாமல் ஏதாவது வேலையில் ஈடுபட்டு வருவதாக 1998-ல் வெளியான ஐ.நா. செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. சமீபத்திய ஒரு புள்ளிவிவரப்படி உலகில், எட்டு குழந்தைகளில் ஒரு குழந்தை தனது வருங்காலத்தை வளமாக்க முடியாத, கல்வி கற்க முடியாத நிலைமை.

இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கல்வியறிவு பெற வழியில்லாமல், குடும்பத் தொழிலிலோ அல்லது வேறு ஏதாவது வேலையிலோ ஈடுபடுத்தப்படுவதாகவும், தமிழகத்தில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இன்னும் கல்விச்சாலைகளுக்குச் செல்லாமல் ஏதாவது வேலை செய்து குடும்பத்துக்கு உதவ வேண்டிய நிலையில் இருப்பதாகவும், மத்திய அரசின் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக, இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் பல சட்டங்களை இயற்றி வந்திருக்கிறோம். குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்குக் கல்வியறிவு அளிப்பதற்கு நிதிநிலை அறிக்கைகளில் தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மட்டும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்காக 228 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முனைப்பாகச் செயல்பட்டு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பும் நல்கி வருகின்றன என்பதுதான் உண்மை. பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத் திட்டமும் சரி, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு இன்று வரை செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டமும் சரி, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சிகள் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை செய்தும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஏன் கட்டுப்படுத்தவோ, முற்றிலும் அகற்றவோ முடியவில்லை? குழந்தைகள் படித்தே தீர வேண்டும் என்கிற வைராக்கியம் ஏன் பெற்றோர் மத்தியில் ஏற்படவில்லை?

இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள்.

முதலாவது காரணம், கிராமப்புற வறுமை. விவசாயம் வெற்றிகரமாக நடக்காத வரையில் கிராமப்புற வறுமையை ஒழிக்க முடியாது. வறுமை இருக்கும்போது குழந்தைகளைக் கல்விக்கூடங்களுக்கு அனுப்புவதைவிட, குடும்ப வருமானத்தை அதிகரிக்கப் பயன்படுத்துவதற்குத்தான் பெற்றோர்கள் முயல்வார்கள் என்பது இயல்பு. இந்த விஷயத்தில் நமது ஆட்சியாளர்கள்தான் நல்ல தீர்வைத் தர முடியும்.

இரண்டாவது காரணம், இந்தப் பிரச்னை பற்றிய விழிப்புணர்வும் அக்கறையும் படித்தவர்கள் மத்தியில் இல்லாதது. குழந்தைத் தொழிலாளர்களைக் குறைந்த கூலிக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்கிற மனப்போக்கிலேயே தவறு இருக்கிறது. குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்பவர்களைச் சமுதாயம் புறக்கணிக்க முற்படுமேயானால், இந்த சமூகக்கேடு பெரிய அளவில் தடுக்கப்படும். நாமே மறைமுகமாக இந்தக் கொடுமையை அங்கீகரிக்கிறோமே, இது நியாயமா?

Posted in Center, Centre, Child, Children, City, Dharmapuri, Education, Employment, Exploit, Exploitation, Females, Food, girls, Govt, Hotels, Hunger, Hungry, Illiteracy, Income, juvenile, Kids, Labor, Labour, Literacy, Metro, Needy, Policy, Poor, Read, Restaurants, Rich, Rural, She, State, Student, Suburban, Tharmapuri, Village, Wealthy, Women, Work, Worker | Leave a Comment »

Depletion of Rivers and Sand Theft – KS Radhakrishnan

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2007

தொடரும் மணல் கொள்ளை!

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

ஆற்று மணல் இயற்கையின் கொடை; நிலத்தடி நீர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மணல் அவசியமாகிறது. ஒரு செ.மீ. அளவுள்ள மணல் சேர பல ஆண்டுகள் ஆகும். ஆற்றுப்படுகைகளில் 30 அடி, 40 அடி மணல் படிந்துள்ளது என்றால் இதற்கு பல நூற்றாண்டுகள் பிடித்து இருக்கும். நீரில் கலக்கும் கழிவுகளை மணல்தான் வடிகட்டுகிறது. நீர்ப்பதத்தைச் சீரமைக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பே மணல் கொள்ளை ஆரம்பித்துவிட்டது. இயற்கையின் வரங்களான காடு, மலை, நீர் என்பவை சுயநல சக்திகளால் சூறையாடப்படுகின்றன.

ஆற்றுமணலைப் பொதுப் பணித் துறையே விற்பனை செய்கின்ற நிலையில், வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் மீது லாரிகளை ஏற்றி கொல்லும் சம்பவங்கள் நடந்துள்ளன. இது ஒரு தொடர் கதை. மணல் விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி சில நிபந்தனைகளுடன் உரிமம் வழங்க வேண்டும்:

பொதுப்பணித்துறையின் பார்வையில், அதன் நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் மணல் எடுக்க வேண்டும். மணலை வாரித்தான் எடுக்க வேண்டும். இயந்திரம் எதையும் பயன்படுத்த அனுமதி கூடாது. தரைமட்டத்திலிருந்து அரை மீட்டர் ஆழத்திற்குள்ளேதான் மணல் எடுக்க வேண்டும். நீர் மட்ட அளவுக்குக் கீழ் மணல் எடுக்கக் கூடாது. குடிநீர்க் கிணறுகள் மற்றும் பம்புகளிலிருந்து 500 மீட்டருக்குத் தொலைவில்தான் மணல் எடுக்க வேண்டும்.

ஆனால் மணல் எடுக்கும் இடங்களில் இந்த நடைமுறைகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டம் வைப்பாற்றில் இந்த நிபந்தனைகளை மீறி மணல் வியாபாரம் மும்முரமாக நடக்கிறது. ஒரு டிப்பர் லாரியில் ஏற்றப்படும் மணலின் மதிப்பு சுமார் ரூ. 1,300. எடுக்கப்படும் மணல் அருகில் உள்ள களத்தில் குவிக்கப்பட்டு பின் மணல் வியாபாரிகளின் விருப்பம்போல் லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகிறது. எத்தனை தடவை என்ற அளவே கிடையாது. மணல் கொள்ளையால், நீர் மேலாண்மையும் பாதிப்புறுகிறது. ஆற்றின் வெள்ளைமணல் நிலத்தடிநீர் வளத்தைப் பாதுகாக்கிறது.

தரமான வெள்ளை மணலுடன் நிரப்பு மணலைக் கலந்து ஒரு சிலர் விற்கின்றனர். சில இடங்களில் விவசாய நிலங்களில் உள்ள துகள் மண்ணையும் எடுத்து விற்கத் தொடங்கியுள்ளனர்.

தாதுமணல் சட்டங்கள் மீறப்படுவதைக் கண்காணிக்க எந்த அமைப்பும் கிடையாது. உண்மையில் மணல் எடுக்க ஜே.சி.பி. – பொக்லைன் போன்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை.

தாமிரபரணி ஆற்று நீர் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்திற்குப் பாசனமாகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் உள்ள சுமார் 421 கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள சுமார் 50 லட்சம் மக்களின் தாகத்தைத் தீர்க்கிறது. தண்ணீர் ஓடிய ஆறுகளில் பல மாதங்கள் மணல் மட்டுமே காட்சி தருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் ஆற்று மணலில் தோரியம் என்ற அரிய தனிமம் உள்ளது. மணல் எடுப்பதால் தோரியம் தாது அழிந்து வருகிறது.

ஆற்றுப்படுகையில் 20 அடி 30 அடி ஆழம் இயந்திரங்களால் தோண்டி மணல் எடுக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி பகுதியில் உள்ள குடிநீர்க் கிணறுகளை ஒட்டியே மணல் எடுத்ததால் அத்தனை கிணறுகளும் பாதிப்படைந்துள்ளன. இந்த அத்துமீறலுக்கு ஆட்சியாளர்கள் பொறுப்பேற்றால்தான் பிரச்னை தீரும்.

10 டயர்கள் கொண்ட பெரிய லாரிகளில் பெருமளவில் பொருநை ஆற்று மணல் ஏற்றப்பட்டு கேரளத்துக்குக் கடத்தப்படுகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளம், முல்லைப் பெரியாறு அணைக்கு அருகில் கட்டுகின்ற புதிய அணைக்கு தேனி மாவட்டத்திலிருந்து மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இத்தனைக்கும் கேரளத்தில் நீர், மணல்வளம் குறைவில்லை. ஆனால் அங்கு மணல் எடுக்கத் தடை. வளம் குறைந்த தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு மணல் கடத்தப்படுகிறது.

தமிழகத்தில் ரூ. 1,300 பெறுமானமுள்ள மணல் கொச்சியில் ரூ. 32 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு, அங்கிருந்து கப்பல் மூலம் ஏற்றுமதியாகிறதாம். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து அரிய தாதுக்கள் அடங்கிய மணல் சிறிது சிறிதாகக் கடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. கேரள ஆறுகளில் மணல் எடுத்தால் பொதுமக்களே விரட்டி அடிக்கிறார்கள். அதனால் பிளாச்சிமடவிலிருந்து பெப்சி தொழிற்சாலை விரட்டப்பட்டு, தமிழர்கள் ஏமாளிகள் எனக் கருதி கங்கைகொண்டானில் நமது தண்ணீரைக் கொள்ளை அடித்து நமக்கே விற்கின்ற துர்பாக்கிய நிலை உள்ளது. கேரளத்தில் உள்ள விழிப்புணர்வு தமிழகத்தில் இல்லை என்பதை நினைக்கும்போதே வெட்கமாக உள்ளது. மணல் கொள்ளைக்காக பல கோடி ரூபாய் கப்பம் கட்டப்படுகின்றது எனப் பரவலான குற்றச்சாட்டும் உள்ளது.

அரியநாயகிபுரம் அருகே தாமிரபரணியில் குளிக்கச் சென்ற 3 பேர் புதை குழியில் சிக்கி மாண்டனர். மணல் எடுத்த பள்ளத்தில் ஆழம் தெரியாமல் போனதால் மூன்று உயிர்கள் பறிபோயின. இதைக் கண்டித்து, மணல் எடுப்பதைத் தடுக்கப் பொதுமக்கள் போராடியபோது அப்பாவிகள் 16 பேரின் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் மணல் அள்ளியதால், வலிமை மிகுந்த பாலம் இடிந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். அந்தப் பாலம் இடிந்துவிழக் காரணமாக இருந்த மணல் கொள்ளையர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு கரூர், முசிறி, தேனி, தஞ்சை, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், காஞ்சி மற்றும் வைகை, அமராவதி கரைகள் போன்ற இடங்களிலும் மணல் கொள்ளை நடக்கிறது. ஆனால், மாட்டு வண்டியில் மணலை சொந்தத் தேவைக்கு ஏழை விவசாயிகள் எடுத்துச் சென்றால் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், அரசின் நிபந்தனைகளையும் சட்டங்களையும் மீறி மணல் எடுக்கும் “பிரமுகர்கள்’ மற்றும் அதற்குத் துணைபோகும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை எளியோரின் தேவை அறிந்து அவர்களுடைய கட்டுமானப் பணிகளுக்கு மணல் உரிய விலையில், எளிதில் கிடைக்க நடவடிக்கை அவசியம். குடிநீர்க் கிணறுகளிலிருந்து குறைந்தபட்சம் 500 மீட்டருக்கு அப்பால் மணல் எடுக்க வேண்டும் என்ற விதியைக் கடுமையாக்க வேண்டும். மணல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்து கடுமையான சட்டங்களும், இதய சுத்தியான விழிப்புணர்வும் அவசியம். அண்டை மாநிலங்களுக்கு மணல் எடுத்துப் போவோர் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும். சமூக விரோதிகளின் ஆதிக்கத்திலிருந்து மணல் தொழிலை மீட்க வேண்டும்.

இயற்கை நமக்களித்த நதிச் செல்வங்களைக் காப்பது நமது கடமை. தொடரும் கொள்ளையால் மணல் வளம் குன்றாமல் தடுப்பது காலத்தின் கட்டாயம்.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

Posted in ADMK, Ariyanayagipuram, Ariyanayakipuram, Bribes, Cauvery, Cochin, Corruption, Dasani, DMK, Drink, Drinking, Environment, Exploit, Ganga, Ganges, Karunanidhi, Kaveri, kickbacks, Kosasthalai, Lorry, Mineral, Minerals, Mountain, Nature, Party, Pepsi, pilferage, Politics, Pollution, PWD, Quilon, River, Sand, Source, Stalin, Tamirabarani, Tamirabharani, Thamirabarani, Thamirabharani, Theft, Thiruvalloor, Thiruvallur, Thiruvaloor, Thorium, Truck, Vaigai, Vaikai, Water | Leave a Comment »

Dinamani op-ed: TJS George – East India Company still rocks on as World Bank

Posted by Snapjudge மேல் ஜூலை 22, 2007

கிழக்கிந்திய கம்பெனி சாகவில்லை, உயிரோடு இருக்கிறது!

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

எவ்வளவு சுலபமாக நாடுகள் தங்களுடைய வரலாற்றை சலவைக்குப் போட்டுவிடுகின்றன! இரண்டாவது உலகப் போரில் ஜப்பானிய ராணுவம் செய்த அக்கிரமங்கள் என்ன என்று அந்நாட்டின் புதிய தலைமுறைக்குத் தெரியவே தெரியாது. வியத்நாமில் அமெரிக்கா செய்த அக்கிரமங்கள் அந்நாட்டு பள்ளிக்கூட குழந்தைகளுக்குத் தெரியாது.

ஆரியர்கள் திருநைனார்குறிச்சியிலிருந்தும், திராவிடர்கள் குலு பள்ளத்தாக்கிலிருந்தும் வந்தார்கள் என்று நம் நாட்டின் சில பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகின்றனர்!

உண்மை எது என்பது, (வரலாற்று) குப்பையைப் பெருக்க வந்தவர்களின் கண்களில்தான் இருக்கிறது.

பிரிட்டிஷ்காரர்கள்தான் தங்களுடைய ரயில்வே மூலமும் தடையற்ற வர்த்தக நடைமுறைகள் மூலமும் இந்தியாவுக்கு வாழ்வையும் வளத்தையும் கொண்டுவந்து சேர்த்தார்கள் என்று இந்தியாவில் படித்த பெரும்பாலானவர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மை என்னவோ தலைகீழாக இருக்கிறது. இந்தியாவின் செல்வமும் இயற்கை வளங்களும்தான் பிரிட்டனுக்குப் புது வாழ்வைத் தந்தன.

இந்தியாவின் வளமான பகுதிகள் பல, பிரிட்டிஷாரின் நன்மைக்காக இங்கே அடியோடு அழிக்கப்பட்டன. பிரிட்டனின் “மான்செஸ்டர் டி-73′ ரக பருத்தியை வாழ்விப்பதற்காக டாக்கா மஸ்லின் பூண்டோடு அழிக்கப்பட்டது. அந்தத் துணியை நெய்த திறமைவாய்ந்த நெசவாளர்களின் கட்டைவிரலை வெட்டி வீசினர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனித் துரைமார்கள்!

ஏகாதிபத்திய காலத்தில் நிலவிவந்த உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டுவரும் வேலையை, ஆய்வு நூல்கள் மூலம் அவ்வப்போது மேற்கொள்கின்றனர் மேற்கத்திய நாடுகளின் அறிஞர்கள்.

இப்போதுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் (எம்.என்.சி.) முன்னோடியாகத் திகழ்ந்த கிழக்கிந்திய கம்பெனி எப்படி ரத்த வெறி பிடித்து அலைந்தது என்பதை நிக் ராபின்ஸ் என்பவர் தன்னுடைய ‘The Corporation that Changed the World: How the East India Company Shaped the Modern Multinational’ என்ற நூலில் அற்புதமாக விளக்கியிருக்கிறார்.

அச்சத்தில் உறைந்தே போகும் அளவுக்குச் சில உண்மைகளை அவர் அந் நூலில் தெரிவித்துள்ளார். ராபர்ட் கிளைவ், கிழக்கிந்திய கம்பெனியின் வியாபாரத்துக்குள் “ஒரு உள் வியாபாரம்’ செய்து பெரும் தொகையை அள்ளியிருக்கிறார். கம்பெனியின் தலைவரும் அவரே என்பதால் மோசடி செய்வது அவருக்குக் கடினமான வேலையாக இருக்கவில்லை.

பிரிட்டனிலோ, கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திடமிருந்தும் அரசிடமிருந்தும் அவ்வப்போது சலுகைகளைத் தொடர்ந்து பெற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து லஞ்சம் கொடுத்துக் கொண்டே இருந்துள்ளனர்.

“மேலை நாடுகளின் நாகரிகத்தின் பின்னால் இருப்பது, ஈரானிய எண்ணெய் வயல்களில் அடித்த கொள்ளையில் கிடைத்த லாபம்தான்’ என்று ஈரானிய அதிபர் அகமதி நிஜாத் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் அவனை, “மரை கழன்றவன்’ என்றும் “மேலைநாடுகளுக்கு எதிரானவன்’ என்றும் முத்திரை குத்தும் அளவுக்கு எல்லோருடைய மூளையும் அற்புதமாகச் சலவை செய்யப்பட்டிருக்கிறது.

அகமதி நிஜாத் என்ன சொன்னாரோ அது உண்மைதான்! 1950-களின் ஆரம்பத்தில் ஈரானில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்த மூசாதேக் என்பவர் ஈரானின் மன்னரான ஷாவை நாட்டைவிட்டே ஓடவைத்தார். பிறகு ஈரானின் எண்ணெய் வயல்களை தேச உடைமையாக்கினார். எண்ணெய் வயல்களைச் சொந்தமாக வைத்திருந்த பெரும் பணக்காரர்களும், மேற்கத்திய நாடுகளின் அரசுகளும் சில மாதங்களுக்கெல்லாம் இணைந்து செயல்பட்டு மன்னர் ஷாவை மீண்டும் ஈரானுக்கு அழைத்துவந்து முடிசூட்டின. மூசாதேக் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

இது தனிப்பட்ட ஒரு சம்பவம் அல்ல. சூயஸ் கால்வாயை கமால் அப்துல் நாசர் தேச உடைமையாக்கியபோது, எகிப்துடன் யுத்தத்துக்குச் சென்று மூக்குடைபட்டு திரும்பியது பிரிட்டன்.

பனாமா கால்வாய் யாருக்குச் சொந்தம் என்ற நீண்ட கால பிரச்னை முற்றி, 1980-களின் பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு எதிரான கலவரமாக உருவெடுத்தது. அப்போது அமெரிக்கா பனாமா மீது படையெடுத்து, அதன் அதிபர் மேனுவல் நோரிகாவை போதைப் பொருள் கடத்தல் சட்டப்படி கைது செய்தது.

ஏகாதிபத்தியத்திடம் காலனிகளாக இருந்த நாடுகள் விடுதலை பெற்ற பிறகும் காலனியாதிக்கம் முடியவில்லை; 19-வது நூற்றாண்டில் பிரிட்டன் செய்த வேலையை இப்போது அமெரிக்கா எடுத்துக் கொண்டுவிட்டது. வியாபாரத்தில் உள்ளடி வேலை செய்யும் “உள்-வர்த்தகம்’ என்ற அயோக்கியத்தனத்தை அது கையாள்கிறது. என்ரான், வேர்ல்ட் காம். போன்ற பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் அடையாளம் இல்லாமல் மறைந்த கதையைப் பார்த்தாலே இந்த பித்தலாட்டம் புரியும்.

அரசியல்ரீதியான ஊழல் என்பதை, வாஷிங்டனில் “ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தரகுக் கூட்டம்’ என்று நிலைநிறுத்திவிட்டது அமெரிக்கா. அத்தோடுகூட, அது தனது ராணுவ பலத்தையும் மிதமிஞ்சிப் பயன்படுத்துகிறது.

இராக்கில், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் காலடி எடுத்து வைத்தது அங்குள்ள எண்ணெய் வளத்துக்காகத்தான் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா?

இப்போது “கிழக்கிந்திய கம்பெனி’ உலகம் முழுக்க பரவியிருக்கிறது. ராபர்ட் கிளைவும் வாரன் ஹேஸ்டிங்ஸýம் இன்னமும் உலா வருகின்றனர். அவர்களின் பெயர்தான் “உலக வங்கி’, “உலகமயமாக்கல்’ என்று மாற்றி வழங்கப்படுகிறது!

————————————————————————————————————–
யாருக்காக மானியங்கள்?

விவசாயத்துக்கான மானியங்கள் தொடரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்திருக்கிறார். அதே சமயம், உரங்களுக்குத் தரப்படும் மானியத்தை புதிய முறையில் எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்து அடுத்த ஆண்டு முதல் அமலுக்குக் கொண்டுவரலாம், இந்த ஆண்டு பழைய முறையிலேயே மானிய உதவியை அளிக்கலாம் என்றும் உயர்நிலைக் குழு கூட்டத்தில் பிரதமர் முடிவெடுத்திருக்கிறார்.

விவசாயத்துக்கு மானியம் என்பது அவசியம். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளுக்கே இதில் இருவித கருத்துகள் இல்லை. அதே சமயம், உர மானியம் என்பது யாருக்குப் போகிறது, அது நீடிப்பது அவசியமா என்பதைக் கட்டாயம் தீர்மானித்தாக வேண்டும்.

கடந்த ஆண்டு உர மானிய நிலுவை ரூ.8,000 கோடி என்றும் இந்த ஆண்டு ரூ.40,000 கோடி என்றும் அரசே வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மத்திய புள்ளியியல் துறை கணக்கெடுப்பின்படி, 2000-01-ம் ஆண்டில் உர மானியமாக ரூ.13,800 கோடி, மின்சார மானியமாக ரூ.6,449 கோடி, பாசன மானியமாக ரூ.13,681 கோடி, இதர மானியங்களாக ரூ.854 கோடி என்று மொத்தம் ரூ.34,784 கோடி விவசாயத்துக்காக தரப்பட்டுள்ளது.

உணவு தானிய கையிருப்பைப் பொருத்தவரை, 3 மாத கையிருப்பு, 6 மாத கையிருப்பு என்பதெல்லாம், பொது விநியோக முறைக்கு மாதந்தோறும் எடுத்துக்கொள்ளப்படும் அரிசி, கோதுமை போன்றவற்றின் அளவைப் பொருத்ததே தவிர உண்மையில் நம் நாட்டு மக்களின் தேவையைப் பொருத்தவை அல்ல.

லட்சக்கணக்கான டன்கள் கோதுமை, அரிசி கையிருப்பில் இருக்கும் அதேவேளையில் 20 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. ஒரு வேளை சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் இரவில் பட்டினியோடு படுப்பவர்கள் பற்றிய புள்ளிவிவரம் ஏதும் திரட்டப்படுவதில்லை.

“வேலைக்கு உணவு திட்டம்’ என்ற முன்னோடி திட்டம்கூட, தேர்வு செய்யப்பட்ட மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில்தான் முனைப்பாக அமல்படுத்தப்படுகிறது. அதுவும் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் உதவியோடு மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

உர மானியம் தொடர்பாக அடிக்கடி பேசப்படும், அதே வேகத்தில் மறக்கப்படும் இரு விஷயங்கள் நினைவுபடுத்தப்பட வேண்டியவை. உர உற்பத்தியில் பொதுத்துறை (அரசு) நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் ஈடுபடுகின்றன. உர உற்பத்திக்கு அரசு நிறுவனங்கள் எவ்வளவு (விரயமாக) செலவு செய்தாலும், எந்த அளவு உற்பத்தி செய்தாலும் அவற்றை அரசு வாங்கிக் கொண்டு மானியத்தையும் கையோடு வழங்கிவிடுவதால், அரசின் மானியம் விரயமாகிறது என்பது முதல் குற்றச்சாட்டு. நவீனத் தொழில்நுட்பத்தில், செலவைக் குறைத்து தயாரிப்பது அவசியம் என்ற நிர்பந்தம் இல்லாமல் பழைய முறையிலேயே தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்பது இக்குற்றச்சாட்டின் சாரம்.

அடுத்தது, ரசாயன உரங்களால் நிலம் தன்னுடைய இயற்கையான சத்தை இழப்பதுடன், சாகுபடியாகும் உணவு தானியங்களும் உண்பவர்களுக்குத் தீங்கை விளைவிப்பனவாக இருக்கின்றன என்பதாகும். எனவே இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும். மக்கிய எருவையும், மண்புழுக்களையும் நிலங்களில் இட்டு மண்ணை வளப்படுத்த வேண்டும் என்ற கூக்குரல் எங்கும் கேட்க ஆரம்பித்துவிட்டது. இயற்கை வேளாண்மை என்ற கருத்தை வலியுறுத்துகிறவர்கள் இதையும் வலியுறுத்துகின்றனர்.

விவசாய விலை நிர்ணயக் குழு என்ற உயர் அமைப்பில், சாகுபடியாளர்களின் நேரடிப் பிரதிநிதிகளை அதிக அளவில் சேர்த்து, அவர்களைக் கொண்டே பிராந்தியங்களுக்கு ஏற்ற வகையில் கொள்முதல் விலைகளையும் சிறப்பு மானியங்களையும் நிர்ணயிக்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்துள்ளபடி, சந்தையில் நிலவும் விலைக்குக் குறையாமல் கொள்முதலுக்கு விலைதரப்பட வேண்டும். குறைந்தபட்ச கொள்முதல் விலை என்பது, விவசாயிகளின் அடிவயிற்றில் அடிப்பதாக இருப்பதைக் கைவிட வேண்டும். வேளாண் பொருள்களின் விலை உயர்ந்தால் பணவீக்க விகிதம் கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று “”நிபுணர்கள்” மிரட்டுவதை கேட்டுக் கொண்டு விவசாயத்தைப் படுகுழியில் தள்ளக்கூடாது.

Posted in abuse, Affairs, Agriculture, America, bank, Barrier, Biz, Business, Canal, Center, CIA, Consumer, Corn, Corporation, Current, Customer, Divide, Duty, Economy, Electric, Electricity, England, ethanol, Exploit, Exploitation, External, Farming, Farms, Fertilizer, Fertilizers, Finance, Foreign, GDP, Govt, Growth, IMF, Incentive, Incentives, Income, Industry, International, Iran, Irrigation, IT, MNC, multinational, Needy, NRI, Panama, Poor, Power, Queen, Relations, Rich, State, Subsidy, Suez, Tamil, Tariffs, Taxes, Trade, UK, Unipolar, USA, War, warlord, WB, Wealthy, World, world bank | Leave a Comment »

State of MBBS – Analysis on Medical education

Posted by Snapjudge மேல் ஜூலை 5, 2007

எம்.பி.பி.எஸ். -தேவை அவசர சிகிச்சை

ஜே. ரங்கராஜன்

கம்பவுண்டர்களை டாக்டர்களாக மக்கள் மதித்த காலம் உண்டு. ஆனால் இன்று குறைந்தபட்சம் எம்.டி. பட்டம் பெற்றிருந்தால்தான் ஒருவர் டாக்டராகவே பொதுமக்களால் மதிக்கப்படுகிறார். எம்.பி.பி.எஸ்., எம்.டி. அல்லது எம்.எஸ்., உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான டி.எம். அல்லது எம்.சிஎச். என மொத்தம் 11 ஆண்டுகள் படித்தால்தான் மருத்துவத் துறையின் சிகரத்தை ஒருவர் எட்டும் நிலை உருவாகி விட்டது.

இந் நிலையில் டாக்டர் என சொல்லிக் கொள்வதற்கான குறைந்தபட்ச எம்.பி.பி.எஸ். கல்விக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கே கடந்த 50 ஆண்டுகளாக தமிழகம் உள்பட எல்லா மாநில அரசுகளும் திணறிக் கொண்டிருக்கின்றன. மருத்துவக் கல்வியின் தரத்தை ஆய்வு செய்து மருத்துவக் கல்லூரி தொடங்க அங்கீகாரம் அளிக்கும் பணியை தில்லியில் உள்ள தன்னாட்சி அமைப்பான இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் எல்லா மருத்துவக் கல்லூரிகளையும் ஆய்வு செய்து தொடர்ந்து நடத்தும் அனுமதியையும் இந்த அமைப்பு வழங்குகிறது.

ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டுமானால், ஒரே வளாகத்தில் 25 ஏக்கர் பரப்பளவு இடம், ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேராசிரியர்கள் -கூடுதல் பேராசிரியர்கள் -உதவிப் பேராசிரியர்கள், அவர்களுக்கு குறிப்பிட்ட பரப்பளவில் அறை, 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, சி.டி. ஸ்கேன் உள்பட மருத்துவ சோதனைக் கருவி வசதிகள், சோதனைக்கூட வசதி, உரிமம் பெற்ற வசதிகளுடன் கூடிய ரத்த வங்கி, துறை வாரியான நூலகம், மத்திய நூலகம் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என மருத்துவக் கல்விக்குத் தேவையான கடுமையான விதிமுறைகளை இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயித்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை

  • 1835-ல் தொடங்கப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி,
  • அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி (1838),
  • வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (1942),
  • மதுரை அரசு மருத்துவக் கல்லூரி (1954),
  • தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி (1959),
  • கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி (1960),
  • திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி (1965),
  • செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி (1965),
  • கோவை அரசு மருத்துவக் கல்லூரி (1966)

ஆகியவை மிகவும் பழமையானவை. இந்தக் கல்லூரிகளைக் காலம் காலமாக இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்து அவ்வப்போது எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க அனுமதி அளித்து வருகின்றனர்.
போதிய ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் இல்லாமல், 1992-ல் திருச்சியில் கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரியைத் தொடங்குவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டபோதுதான் பிரச்னை தொடங்கியது. அரசியல் லாபத்துக்காக இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளை ஏமாற்றும் வேலையை அரசே செய்தது. அதாவது, இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் நிலையில் சென்னை உள்பட வேறு இடங்களிலிருந்து டாக்டர்களைத் திருச்சிக்குக் கடத்தி கணக்குக் காண்பிப்பது, அவர்கள் திருச்சியில் வசிப்பது போன்று தாற்காலிக ரேஷன் அட்டையை அவசர அவசரமாகப் போலியாகத் தயாரிப்பது, ஓய்வு பெற்றோரின் பெயரில் தாற்காலிகமாகப் பணியிடங்களை உருவாக்கி நியமன உத்தரவுகளை அச்சடித்துத் தருவது என மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெறுவதற்காக அனைத்து மோசடி வேலைகளையும் அரசு கடைப்பிடிக்கத் தொடங்கியது.

இந்த மோசடி வேலைகளை ஒருங்கிணைத்துச் செய்து ஆய்வுக்கு வரும் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளைத் திருப்திப்படுத்த சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் துணை இயக்குநர் அந்தஸ்தில் ஒரு மருத்துவ அதிகாரி நியமிக்கப்பட்டார். இந்த மோசடி வேலைக்கு உடன்படாத நியாயமான டாக்டர்களைப் பணி இடமாற்றம் செய்து அரசு பழிவாங்கியது.

1996-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் வேலூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால், மருத்துவக் கல்லூரிக்கு உரிய இடத்தைத் தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு செயல்வடிவம் பெறவில்லை. ஆனால், 2000-ம் ஆண்டில் போதிய வசதிகள் இல்லாமல் தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் அளிப்பதில் ஒவ்வொரு ஆண்டும் பிரச்னை தொடர்ந்தது.

2001-ல் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அரசியல் அறிவிப்பு செய்யப்பட்டு 2003-ல் கன்னியாகுமரியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெற சென்னையிலிருந்து பஸ்ஸில் டாக்டர்கள் கடத்தப்பட்டனர். இதே போன்று அதிமுக ஆட்சியில் தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 2005-ல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

வேலூர், தேனி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கு அனுமதி அளிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் மறுத்து விட்டது. முந்தைய காலங்களைப் போல் டாக்டர்களை இப்போது கடத்தி பொய்க் கணக்கு காண்பிக்க முடியாது. ஏனெனில் அரசின் நிர்பந்தம் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் வேலை பார்ப்பதாக பொய் சொன்ன 25 டாக்டர்களின் பெயர்ப் பட்டியலை இணையதளத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வுக்கு வரும் நிலையில் இத்தகையோர் இனி ஆசிரியர்களாகப் பணியாற்ற அது தடை விதித்துள்ளது.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் படிக்க 12,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 7,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000 மட்டுமே உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,398தான். இந் நிலையில் வேலூர்-தேனி-கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 300 எம்.பி.பி.எஸ். இடங்கள் கேள்விக்குறியாகியுள்ளன. ஆக, இந்த 300 இடங்கள் கிடைக்காமல் போனால் மிஞ்சும் எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,098தான்.

இவ்வாறு இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் தர மறுப்பதற்கான முழுமையான காரணம் சுகாதாரத் துறை செயலர் பதவி வகித்த அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரியில் “அனாடமி’, “பிசியாலஜி’, “பயோகெமிஸ்ட்ரி’, “ஃபாரன்சிக் மெடிசின்’ உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் ஒரு பேராசிரியர், இரண்டு கூடுதல் பேராசிரியர்கள், மூன்று உதவிப் பேராசிரியர்கள் இருந்தாக வேண்டும். ஆனால், தமிழகம் முழுவதுமே இந்தத் துறைகளில் மிகவும் சொற்ப எண்ணிக்கையில்தான் பேராசிரியர்கள் உள்ளனர். உதாரணமாக “அனாடமி’ துறையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 10 பேராசிரியர்கள்-கூடுதல் பேராசிரியர்களே உள்ளனர்.

அரசுப் பணியில் 20 ஆண்டுகள் டாக்டர்கள் இருந்தாலும் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் அளவுக்கே சம்பளம் கிடைக்கும். ஆனால், முதுநிலை மருத்துவப் பட்டம் பெற்ற அடுத்த நாளே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உதவிப் பேராசியராகச் சேரும் நிலையில் மாதச் சம்பளம் ரூ.45 ஆயிரம் வரை கிடைக்கிறது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வுக்கு வரும் நிலையில் போதிய பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் இல்லாத நிலை தொடர்கிறது.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, முதுநிலைப் பட்டப் படிப்புக்கு டாக்டர்களைச் சேர்க்கும் நிலையில் அரசுப் பணியில் கட்டாயம் மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும். அத்துடன் உதவிப் பேராசிரியராக நியமிக்கும்போதே பணியாற்ற விரும்பும் இடம், அதிக சம்பளம் ஆகியவற்றையும் அரசு அளிப்பது அவசியம்.

இந்த அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தினால்தான் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரத்தை அரசு மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் பெறுவதில் பிரச்னை ஏற்படாது. விழுப்புரத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தர்மபுரி, திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அரசியல் மத்தாப்பூ அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளின்படி ஏற்கெனவே செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்து முடிக்காமல் வெற்று அறிவிப்புகளால் எந்தப் பலனும் ஏற்படாது. மாறாக மாணவர்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்படும் என்பதை அரசு உணர வேண்டும்.

————————————————————————————————

அட்மிஷனுக்கு முன்பே விலைபோகும் பி.இ. சீட்டுகள்

சென்னை, ஜூலை 6: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் அட்மிஷன் நடைமுறை தொடங்கும் முன்பாகவே குறிப்பிட்ட சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். சீட்டுகள் “கொழுத்த தொகைக்கு’ விலைபோகின்றன.

பிரம்மாண்டத் தோற்றத்தால் ஈர்க்கப்பட்டு மாணவரும், பெற்றோரும் இதுபோன்ற கல்லூரிகளை நாடிச் செல்கின்றனர். இதன் காரணமாகவே குறிப்பிட்ட சில கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் கட்டாய நன்கொடைக் கட்டணத்தை உயர்த்திக்கொண்டே செல்கின்றன.

இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சலிங் ஆகியவை குறித்த வழக்கில் அரசுக்குச் சாதகமான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை காலையில் பிறப்பித்தது.

இதன்படி, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் பி.இ., பி.டெக். படிப்புகளில் 65 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்ப வேண்டும். 35 சதவீத இடங்களை கல்லூரி நிர்வாகங்கள் தாங்களே நிரப்பிக் கொள்ளலாம். சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகள் 50 சதவீதத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

இதுவரை 22 பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் உள்ள அனைத்து இடங்களையும், அண்ணா பல்கலை. மூலம் நிரப்பிக் கொள்ள அரசிடம் ஒப்படைத்துள்ளன. இதுபோல், அரசிடம் அனைத்து இடங்களையும் ஒப்படைப்பது குறித்த விருப்பத்தைத் தெரிவிக்கும்படி கடிதங்கள் அனுப்பப்பட உள்ளன என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே சில தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் பி.இ. படிப்புகளில் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.

“நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதே.. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாதா?’ என்று கேட்டதற்கு, அதன் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வரும் என்றும், “சேர்க்கப்பட்ட’ மாணவர்களுக்குப் பாதிப்பு வராது என்றும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

கல்வியை வியாபாரம் ஆக்கும் பொருட்டு சில சுயநிதி கல்லூரிகள் இது போல் செய்து வருவதை மாணவர்களும் பெற்றோர்களும் ஒருபுறம் ஆதரிக்கத்தான் செய்கின்றனர் என்பது வேதனையான உண்மை. அதனால்தான், ஒற்றைச் சாளர முறைக்குக் காத்திருக்காமல், அட்மிஷன் நடைமுறை தொடங்கு முன்பே பல கல்லூரிகளில் பணத்தைக் கொடுத்துவிடுகிறார்கள்.

பிரம்மாண்டமான கட்டத் தோற்றம், மயக்கும் பேச்சு மற்றும் மாணவர்கள் படிக்கும்போதே அக்கல்லூரிகளில் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்கள் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்கள் போன்ற “கவர்ச்சி’க்கு மாணவர்களும், பெற்றோரும் மயங்குகின்றனர்.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அதிக பணம் கொடுத்து சோர்ந்த பின்னர், அம்மாணவருக்கு ஒற்றைச் சாளர முறையில் அட்மிஷன் கிடைக்கும் போது அவர்களுக்கு அந்தப் பணத்தைக் கல்லூரி நிர்வாகம் முழுமையாகத் திருப்பித் தருவதில்லை.

தகுதியுடைய மாணவர்கள் பயன்பெறும் வகையில், சுயநிதிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு மூலம் ஒற்றைச் சாளர முறையில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதே முறையானது. இதில் அரசின் நிலையே சரியானது என்றும் பல பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.

——————————————————————————————————

“ஏழை’ எம்.பி.பி.எஸ். ரூ. 2.55 லட்சம்

சென்னை, ஜூலை 9: சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அரசு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு தலா ரூ. 3 லட்சத்தை கட்டணமாக நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏழை மாணவராக இருந்தால் இந்தக் கட்டணத்தில் 15 சதவீத சலுகையை அளிக்க வேண்டும் என்று செட்டிநாடு கல்லூரி நிர்வாகத்துக்கு ராமன் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. ஆனால், மாணவரை ஏழை என நிர்ணயிக்கப்போவது எது என்பதற்கு அரசு அறிவிப்பில் விளக்கம் இல்லை. அப்படியே “ஏழை’ என ஒரு மாணவருக்கு கல்லூரி நிர்வாகம் சலுகை அளித்தாலும்கூட, அந்த மாணவர் ரூ. 45 ஆயிரம் தள்ளுபடியைப் பெற்று ரூ. 2.55 லட்சத்தை கட்டணமாகச் செலுத்தியாக வேண்டும்.
——————————————————————————————————————————–

எகிறியது தனியார் எம்.பி.பி.எஸ். – அரசு சீட் விலை

சென்னை, ஜூலை 9: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கான கட்டணம் ரூ. 1.30 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது ஒரே ஆண்டில் எம்.பி.பி.எஸ். கட்டணம் தனியார் கல்லூரி மொத்த இடத்துக்கு ஏற்ப ரூ. 1.10 லட்சம் முதல் ரூ. 1.70 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம், கோவை உள்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000 மட்டுமே.

  • சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி,
  • கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி,
  • கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி,
  • ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரி

என நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

  1. செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களும்,
  2. பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களும்
  3. ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களும்
  4. பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரியில் 60 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன.

கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மேலே கூறப்பட்டுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 410 இடங்களில் 65 சதவீதத்தை அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது; மீதமுள்ள 35 சதவீத இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டு மூலம் நிரப்பிக் கொள்ளலாம் எனக் கூறியது.

கட்டணம் உயர்ந்தது ஏன்? தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் சேர்த்து திங்கள்கிழமை (ஜூலை 9) முதல் எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் சென்னையில் நடைபெறுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.1.30 லட்சத்தை கடந்த ஆண்டு தமிழக அரசு நிர்ணயித்தது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ரூ.4 லட்சத்தை கட்டணமாக வசூலித்தன.

இதையடுத்து இந்திய மாணவர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் மாணவர்களிடம் வாங்கிய கூடுதல் கட்டணத்தைத் திருப்பித் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, தனியார் மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். கட்டணம் குறித்து ஆய்வு செய்யுமாறு நீதிபதி ராமன் கமிட்டியை கேட்டுக் கொண்டது.

புதிய கட்டணம் என்ன?

இந் நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு எம்.பி.பி.எஸ். ஒதுக்கீட்டுக்கான இடத்துக்கான கட்டணத்தை நீதிபதி ராமன் கமிட்டி மூலம் நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அனைத்துத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரே கட்டணமாக ரூ. 1.30 லட்சம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரியின் இடங்களுக்கு ஏற்ப தனித் தனியே கீழ்க்கண்ட கட்டணங்களைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி (98 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்) – ஆண்டு கல்விக் கட்டணம் தலா ரூ. 3 லட்சம் (ஏழை மாணவர்களுக்கு 15 சதவீத சலுகை அளிக்க வேண்டும்).

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி (65 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்) – தலா ரூ. 2.25 லட்சம்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி (50 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்-இதுவரை இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை.) – தலா ரூ. 2.40 லட்சம்.

பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரியில் அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 66,000.

————————————————————————————-

தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். : வங்கிக் கடன் எவ்வளவு கிடைக்கும்?

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த மாணவர்களுக்கு இந்தியன் வங்கி கடனுதவி அளிக்கிறது.

எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் நடைபெறும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இந்தியன் வங்கியின் சேத்துப்பட்டு கிளை அதிகாரிகள் கடனுதவி ஆலோசனை மையத்தை அமைத்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000-மாக உள்ளது. சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு இந்த ஆண்டு ரூ.3 லட்சம் கட்டணமாகவும், கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ரூ.2.25 லட்சம் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் 5 ஆண்டுப் படிப்புக்கும் சேர்த்து எவ்வித உத்தரவாதமும் இன்றி ரூ.4 லட்சம் வரை 12.5 சதவீத வட்டிக்கு இந்தியன் வங்கி கடனுதவி அளிக்கும். ரூ.4 லட்சத்துக்கு மேல் ரூ.7.5 லட்சம் வரை உத்தரவாதம் இன்றி 13 சதவீத வட்டிக்கு கடன் கிடைக்கும். கடன் தொகை ரூ.7.5 லட்சத்துக்கு மேல் இருந்தால், அசையாச் சொத்துகள், டெபாசிட் பத்திரங்கள் உள்பட கடன் தொகைக்குச் சமமாக 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்; வட்டி விகிதம் 13 சதவீதம். படித்து முடித்து வேலையில் சேர்ந்த பிறகு கடன் தொகையை மாணவர் திருப்பிச் செலுத்தினால் போதும்.

———————————————————————————————————-

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் மறுப்பு

சென்னை, ஜூலை 20: உச்ச நீதிமன்ற தடை உத்தரவின் எதிரொலியாக தமிழக அரசு அனுமதிக் கடிதம் அளித்த 25 மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மறுத்து விட்டது.

இதனால் அரசு ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக் கடிதம் பெற்ற 25 மாணவர்கள், வியாழக்கிழமை நடந்த கவுன்சலிங்கில் இக் கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட 62 மாணவர்கள் என மொத்தம் 97 மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் மொத்தம் உள்ள 150 எம்.பி.பி.எஸ். இடங்களில் (150), 65 சதவீதத்தை (97 இடங்கள்) அரசின் ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டும்; செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தொடர்ந்த வழக்கில், அக் கல்லூரியில் 65 சதவீத அரசு ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்துள்ளது.

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியைப் பொருத்தவரை ராமன் குழு நிர்ணயித்த ஆண்டு கல்விக் கட்டணப் பிரச்சினையுடன் (ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.3 லட்சம்) தற்போது 97 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தடை உத்தரவும் சேர்ந்து மாணவர்களை பெரும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள படூரில் கடந்த ஆண்டு செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இக் கல்லூரியின் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 150; இதில் 65 சதவீத அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 97.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 15, 16-ம் தேதி கவுன்சலிங் நடைபெற்றபோது, இந்த 97 இடங்களில் 25 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; அவர்களுக்கு இக் கல்லூரியில் சேர அனுமதிக் கடிதமும் வழங்கப்பட்டது. அவர்களைச் சேர்த்துக் கொள்ள கல்லூரி நிர்வாகம் வியாழக்கிழமை மறுத்து விட்டது.

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் மீதம் இருந்த 62 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மீண்டும் வியாழக்கிழமை (ஜூலை 19) கவுன்சலிங் நடந்தது. இந்த இடங்களுக்கு 62 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; ஆனால் உச்ச நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக இந்த 62 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்படவில்லை.

பிஎஸ்ஜி பிரச்சினை இல்லை: “”செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மட்டுமே உச்ச நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றுள்ளது. கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் உள்ள 65 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கவுன்சலிங்கில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது; அதில் பிரச்னை இல்லை. இதேபோன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன (ஐ.ஆர்.டி.) மருத்துவக் கல்லூரியின் 39 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களிலும் மாணவர்கள் சேருவதில் பிரச்சினை இருக்காது” என்று மருத்துவக் கல்வி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டணப் பிரச்சினை:

ராமன் குழு நிர்ணயித்த ஆண்டு கல்விக் கட்டணத்தை (சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி – ரூ.3 லட்சம்; கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி – ரூ.2.25 லட்சம்) எதிர்த்து இக் கல்லூரி நிர்வாகங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையாணை பெற்றுள்ளன.

இந் நிலையில் அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். அட்மிஷன் கிடைத்த மாணவர்களிடம், ஆண்டுக் கல்வி கட்டணமாக ரூ.4,05,000 செலுத்துமாறு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி கூறியுள்ளது. இதனால், கவுன்சலிங்கின்போது ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.2.25 லட்சமாக இருக்கும் என எதிர்பார்த்து கோவை பிஎஸ்ஜி கல்லூரியைத் தேர்வு செய்த 65 மாணவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

————————————————————————————————–

கொள்ளை போகும் உயர் கல்வி
குமுதம்
சாவித்திரி கண்ணன்
18.07.07 கவர் ஸ்டோரி

‘‘நீ பெரியவனாயிட்டா டாக்டராவியா? இன்ஜினீயராவியா?’’ என்று, நம் குழந்தைகளிடம் அடிக்கடி கேட்கப்படுகிறது. ஏதோ இந்த இரண்டைத்தவிர அடையவேண்டிய உச்சம் வேறொன்றுமேயில்லை என்பது எவ்வளவு பெரிய அபத்தம். இந்த அபத்தத்தினால் உண்டான ஆபத்தாகத்தான் தமிழ்நாட்டில் தேனீர் கடைகளுக்கு இணையாக பொறியியல் கல்லூரிகள் பிறப்பெடுத்துக் கொண்டுள்ளன.

இந்தியாவிலே மட்டுமல்ல, உலகத்திலேயே, தமிழ்நாட்டைப் போல் இவ்வளவு சிறிய நிலப்பரப்பிற்குள் 251 இன்ஜினீயரிங் கல்லூரிகள் கிடையாது. ‘ஆஹா எவ்வளவு வளர்ச்சி!’ என்று சந்தோஷமடைய வழியின்றி பல சங்கடங்கள்! ஏனெனில், இதில் அரசு சார்ந்த 13 கல்லூரிகள்தான் உருப்படியாகச் செயல்படுகின்றன.

அடுத்ததாக சொல்ல வேண்டுமெனில், 238 சுயநிதிக்கல்லூரிகளில் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான கல்லூரிகளையே வேலைவாய்ப்பு தரும் கல்வி நிலையங்கள் முதல் தர வரிசையில் அங்கீகரித்துள்ளன. அதாவது வருடாவருடம் வெளியேறும் 70,000 மாணவர்களில் சுமார் 10 சதவிகிதத்தினருக்குத்தான் சரியான வேலைக்கு உத்தரவாதமுள்ளது. ஆக இப்படியான கழிசடைக் கல்வியைத்தான் பெரும்பாலான சுயநிதிக்கல்லூரிகள் தந்து கொண்டுள்ளன. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் வேண்டுமெனில், நம்ம ரயில்வேயில் ‘கலாசி’ எனப்படும் கடைநிலை ஊழியர் பணிக்கு 2000 பேரைத் தேர்ந் தெடுக்க 2004_ல் ஒரு விளம்பரம் வெளியானது. இந்த வேலைக்கு 20,000 இன்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த லட்சணத்திலான கல்வியைப் பெறுவதற்காகத்தான் நமது பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் வீட்டையோ, நிலத்தையோ, நகைகளையோ விற்று பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கல்வித்துறை வியாபாரமாகிவிட்டதே என்று சிலர் கோபப்படுகிறார்கள். இப்படிப் பேசுபவர்கள் வியாபாரம் பற்றித் தவறான புரிதல்களைக் கொண்டுள்ளனர். ஒரு பொருளுக்குரிய விலை வைத்து விற்பனை செய்து, அதன் தரம், பயன்பாடு, நியாயமான விலை இவற்றில் வாங்குபவரை திருப்தியடைய வைப்பதே வியாபாரம். இந்த வகையில் பார்த்தால், சுயநிதிக் கல்லூரிகள் நடத்துவது வியாபாரமல்ல, சுரண்டல்.

அடிப்படை வசதிகளற்ற கட்டமைப்பு, தகுதியற்ற ஆசிரியர்கள், மோசமான கல்வித்தரம்… போன்றவற்றோடு மருத்துவம், இன்ஜினீயரிங் படிப்புகள் குறித்த மக்களிடமுள்ள மாயையையே முதலீடாகக் கொள்கின்றன, சுயநிதிக் கல்லூரிகள்.

மாயைகளை உருவாக்குவதிலும், மாயைகளில் பலனடைவதிலும் வேறெவர்களையும் விட, அரசியல்வாதிகளே அதிக அனுகூலமடைகின்—றனர். இந்த வகையில் தமிழகத்தில் 1984_ல் தொடங்கி அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் கல்விச் சுரண்டலை கைகோர்த்து நடத்திக் கொண்டிருக்கின்றன. இதில் பா.ம.க. இதுவரை பார்ட்டனராகவில்லை. ஆகவேதான், ‘‘அநியாய கல்விக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

கல்வி அமைச்சரும், முதல்வரும், ‘‘அடடா அப்படியா! எங்களுக்கொன்றும் புகார்கள் வரவில்லை. ஆதாரம் தாருங்கள். நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்கிறார்கள். எல்லோருக்கும் புரிந்த உண்மை, கல்வித்துறையை ‘பொன்’ முட்டையிடும் வாத்தாகப் புரிந்து வைத்திருக்கும் அமைச்சருக்கும், முதல்வருக்கும் புரியவில்லை… பாவம்!

‘ஆதாரம் திரட்டும் அருகதை ஆட்சி நடத்து பவர்களுக்கு இல்லையா?’ என மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அன்றைய மன்னர்கள் மாறுவேஷமிட்டுச் சென்று மக்கள் குறைகளைக் கேட்டார்களாம். இன்றைய ஆட்சியாளர்களோ நிஜத்திலேயே வேஷம் போடுகிறார்கள்.

இன்றைய நிலவரப்படி, பிரபல பொறியியல் கல்லூரிகளின் நிர்வாக கோட்டாவிற்கான அனைத்து இடங்களும் ஜனவரி, பிப்ரவரியிலேயே 8 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை விலைபேசி விற்கப்பட்டுவிட்டன.

மற்றொரு புறம் விலை போகாத கல்லூரிகளோ எஜிகேஷன் எக்ஸிபிஷன் நடத்தி, 80,000_தான். ஒரு லட்சம்தான். ஹாஸ்டல் வசதி இருக்கு. வாங்க வாங்க என்று கையைப் பிடித்திழுக்காத குறையாகக் கெஞ்சுகிறார்கள்.

நீதிபதி ராமன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணம் 32,500 முதல் 40,000 ரூபாய் வரைதான். எனில் தனியார் கல்லூரிகளில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை எப்படி தங்கள் இஷ்டம் போல் வசூலிக்க முடிகிறது? பொறியியல் கல்லூரிகளில்தான் பொறுக்க முடியாத கொடுமை என்று மருத்துவக் கல்லூரி சென்றால், அங்கோ மகாமோசம். அரசாங்கம் நிர்ணயித்த கட்டணம் 1,30,000 என்றால், இவர்கள் வசூலிக்கும் கட்டணமோ நாலரை லட்சத்திலிருந்து 40 லட்சம் வரை! இப்படி படித்துவிட்டு வருகிறவர்கள் நாளைக்கு மனிதாபிமானத்தையே விலை பேச மாட்டாங்களா?

1992_ல் கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் வந்தது. இதுவரை இதில் ஒரு கல்லூரி அதிபர்கூட கைதாகவில்லை.

இந்தச் சட்டம் ஆட்சியாளர்களின் கைகளிலுள்ள ஆயுதம் என்பது, அந்த அதிபர்களுக்கும் தெரியும். அதேசமயம் உரிய வர்களுக்கு பங்கு தரா விட்டால்தான் இது தங்கள் மீது பாயும் என்பதும் புரியும்.

‘‘அரசாங்கத்திற்கு புகார்கள் தந்ததால் கல்லூரியை விட்டே நீக்கப்பட்டவர்களையும், அர சிடமா புகார் செய்தாய் அபராதம் கட்டு என இன்னும் பாதிக்கப்பட்டவர்களின் பட்டி யலையும் தரட்டுமா என்கிறது இந்திய மாணவர்கள் சங்கம். இவ்வளவு ஏன்? தமிழகத்திலுள்ள அனைத்து கல்வியாளர்களும் கொதித்துக் குமுறுகிற வகையில் இதுவரை கறை படியாதிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தையே இந்த ஆட்சி களங்கப்படுத்திவிட்டது. ‘ஸ்பெஷல் ஸ்கீம்’ என்று பகி ரங்கமாகவே 15 லட்சத்திற்கு இன்ஜினீயரிங் சீட்டை விற்கிறார்கள். சென்ற ஆண்டு இதுபோல் 60 சீட்டுகள் அதிகார பூர்வமாக சில நிறுவனங்களுக்கு விற்றார்கள். இந்தாண்டு இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவுள்ளது. ஏழை எளிய திறமையான மாணவர்களுக்கு கருணை காட்டவென ஒதுக்கப்பட்ட முதல்வர் கோட்டா, கவர்னர் கோட்டா வெல்லாம்கூட கல்விச் சந்தையில் காசாக மாற்றப்பட்டுக் கொண்டுள்ளன.

1948_ல் தாராசந்த் கமிட்டி தொடங்கி, சமீபத்திய ராமன் கமிட்டி சுப்பிரமணியன் கமிட்டி வரை எத்தனையோ கமிட்டிகள், என்னென்னவோ ஆய்வுகள், கட்டண வரைமுறைகள், அட்மிஷன் வரைமுறைகள், எந்த நியாயத்தை நாம் எடுத்துச் சொன்னாலும் நடைமுறையில் கேட்கப்படுகிற கட்டணத்தைக் கொட்டிக் கொடுக்க மக்கள் திரளின் ஒரு பகுதி தயாராக இருக்கிறது என்பதே நிதர்சனம். அப்படி கொட்டுபவர்கள் எங்கேயோ போய்கொட்டாமல் அரசாங்க கஜானாவிலேயே கொட்டிவிட்டுப் போகட்டுமே! மதுக்கடைகளை அரசாங்கமும், கல்வி நிலையங்களை தனியாரும் நடத்துவது அவலம், அநீதி.

மழைக்கும் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர்கள்கூட ஒரு கல்லூரி துவங்கி காசுபார்க்க முடியுமெனில் அரசாங்கம் மேலும் சில கல்லூரிகளை நடத்தினால் என்ன? வசதியானவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை ஏழை எளிய நடுத்தர வர்க்க மாணவர்கள் ஏற்றம் பெற பயன்படுத்தலாமே!

—————————————————————————————————————————-
சுயநிதி கல்லூரி இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்காமல் போகும் அபாயம்: ஜெயலலிதா எச்சரிக்கை

சென்னை, ஜூலை 25: உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளத் தீர்ப்பால் தமிழகத்தில் உள்ள சுயநிதிக் கல்லூரி இடங்கள் இனி அரசு ஒதுக்கீட்டு கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

திமுக அரசின் தவறான உயர் கல்விக் கொள்கையால் இந்த ஆண்டு பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக காத்திருக்கும் மாணவர்கள் பெரிதும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த அரசு பொறுப்பேற்றவுடன், சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை தேவையில்லை என்று சட்டம் இயற்றப்பட்டது.

ஒற்றைச் சாளர முறையில்தான் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அதிமுக சார்பில் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தபோது, நீதிமன்றத்துக்குச் சென்று தடையாணை பெறாத வகையில் உரிய முறையில் இச் சட்டம் நிறைவேற்றி இருக்கிறோம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

2006-ம் ஆண்டு நிறைவேற்றிய சட்டத்தில் சில திருத்தங்களை திமுக அரசு தற்போது கொண்டுவந்தது. அதன்படி சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை ஒற்றை சாளர முறையில்தான் இருக்க வேண்டும்.

தமிழக அரசின் இச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து சுயநிதிக் கல்லூரி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இச் சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் செல்லாது என்று அறிவித்து இந்த கல்வி ஆண்டு மட்டும் இச் சட்டத்தின்படி மாணவர் சேர்க்க அனுமதி அளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து செட்டிநாடு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது இடைக்கால தீர்ப்பில் இக்கல்லூரி அரசு ஒதுக்கீட்டுக்கு இடம் ஒதுக்கத் தேவையில்லை என்றும் அனைத்து இடங்களையும் அக் கல்லூரியே நிரப்பிக்கொள்ளலாம் என்றும் தீர்ப்புக் கூறியது.

மொத்தம் உள்ள 240 சுயநிதி கல்லூரிகளில் 160 கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன் வந்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன்வந்துள்ள இக் ல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும். அதைத் தான் அக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டு தர முன்வந்துள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களைத் தர முன்வராத 80 கல்லூரிகள் மாணவர்கள் விரும்பிப் படிக்கக் கூடிய முன்னிலை கல்லூரிகளாகும்.

எந்தெந்த சுயநிதிக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன்வந்துள்ளன எந்தெந்த சுயநிதிக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களைத் தர முன்வரவில்லை என்பதை திமுக அரசு தெளிவுபடுத்தாத காரணத்தால் மாணவர்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகி உள்ளனர்.

அரசின் அலட்சிய போக்காலும் முன்னுக்கு பின் முரணாக செயல்பட்டதாலும் சுய நிதி கல்லூரிகளிடமிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைத்து வந்த இடங்கள் அனைத்தும் இனிமேல் கிடைக்காது போகக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.
—————————————————————————————————————————-
ஏழை மாணவர்களின் நலனை கெடுக்க ஜெயலலிதா சூழ்ச்சி: பொன்முடி

சென்னை, ஜூலை 25: சில சுய நிதிக் கல்லூரிகளோடு சேர்ந்துகொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலிலதா ஏழை மாணவர்களின் நலனைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.

அரசின் தவறான கொள்கையால் மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிக்கை:

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சிறுபான்மை சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு 70 சதவீதமாகவும் அரசாங்க ஒதுக்கீடு 30 சதவீதமாக இருந்தது. சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 50 சதவீத நிர்வாக ஒதுக்கீடும், அரசு ஒதுக்கீடு 50 சதவீதமாகவும் இருந்தது.

திமுக அரசு பொறுப்பேற்றதும் சிறுபான்மை சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதைப் போல சிறுபான்மை அல்லாத சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசின் ஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் ஒற்றைச் சாளர முறையில் இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பதற்கு சட்டம் கூட இயற்றப்படவில்லை.

திமுக அரசு பொறுப்பேற்றதும் அரசு ஒதுக்கீட்டை அதிகம் பெற்றதுடன் நிர்வாக ஒதுக்கீட்டையும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்ப வேண்டும் என்று சட்டம் இயற்றியது.

மேலும் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இன்னமும் ஒப்புதல் பெறப்படவில்லை. அந்தச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் இதுவரை செய்யப்படவில்லை.

2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் ஒற்றைச் சாளர முறை தேவையில்லை என்று கூறியிருப்பதாகச் சொல்லும் ஜெயலலிதா அதை நிரூபிக்கத் தயாரா?

நுழைவுத் தேர்வை ரத்து செய்து 2007-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தை ஜெயலலிதா புரிந்து கொள்ளவே இல்லை.

2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திலும் 2007-ம் ஆண்டைய சட்டத்திலும் சொல்லியிருப்பது ஒற்றைச் சாளர முறையே தவிர வேறு அல்ல.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இயற்றப்பட்ட சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் செல்லாது என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

மாணவர்களின் மீது ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் அவரது கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு கூட செய்யலாம்.

மேலும் இதுவரை உச்சநீதிமன்றம் பொறியியல் கல்லூரிகளுக்கு எவ்வித தடையாணையோ, தீர்ப்போ சொல்லாத நிலையில், சில சுய நிதிக் கல்லூரிகளோடு சேர்ந்துகொண்டு ஜெயலலிதா ஏழை மாணவர்களின் நலனைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் பொன்முடி.
—————————————————————————————————————————-

மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி: ஜெயலலிதா குற்றச்சாட்டு

சென்னை, ஜூலை 25: மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி நடந்துள்ளது, மாணவர்கள் நலன் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களுடன் கூடிய பிரகடனத்தில் தொழிற்கல்வி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் படிவத்துடன் கூடிய பிரகடனத்தில் மற்ற தொழிற்கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்ற வாசகம் நீக்கப்பட்டுவிட்டது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் தற்போது 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில விண்ணப்பித்து இடமும் பெற்றிருக்கிறார்கள்.

இதை எதிர்த்து இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றனர். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் படிவத்துடன் கூடிய பிரகடனத்தில் சில வார்த்தைகள் உள் நோக்கத்துடன் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது பொறியியல் உள்ளிட்ட வேறு தொழில் கல்வி படித்து வரும் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தது தவறு. பழைய நடைமுறைப்படியே மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இதற்கிடையில் உயர் நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று தங்களுக்குச் சாதகமான உத்தரவை பெற்றிருக்கிறார்கள். கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில் இவர்களை மருத்துவப் படிப்பில் சேர்க்க வேண்டும். இதனால் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது.

எனவே மாணவர்களின் எதிர்கால நலன் பாதிக்கப்படாத வகையில் இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஜெயலலிதா.

———————————————————————————————————————————
Monday November 26 2007

மக்களுக்காக மருத்துவம்சார் கல்வி

எஸ். மணிவாசகம்

மருத்துவத்தில் வியத்தகு சாதனை புரிந்து வரும் நம் நாட்டில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு கல்விகள் கூடுதலாக தேவைப்படுகின்றன.

மருத்துவப் பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்.), பல் மருத்துவம் (பி.டி.எஸ்.) போன்ற படிப்புகள் ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இன்றளவும் உள்ளன.

தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர அனைவராலும் முடிவதில்லை. குறிப்பாக, தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 1545 இடங்களும், தனியார் கல்லூரிகள் 5-ல் மொத்தம் 420 இடங்களும் மட்டுமே உள்ளன.

நமது அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரத்தோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவே தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருத்துவம், பல் மருத்துவப் பட்டப் படிப்புகளில் சேர இயலாத மாணவர்கள் பயனடைவதற்கு ஏற்றவகையில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகளை அதிக இடங்களில் ஏற்படுத்த வேண்டும்.

ஓராண்டு சான்றிதழ் படிப்புகள், 2 ஆண்டுகள் டிப்ளமோ படிப்புகள், 3 ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்புகள் போன்றவற்றை உருவாக்கி ஏழை மாணவர்களும் மருத்தும் சார்ந்த கல்வி பயில வழிவகுக்க வேண்டும். இதற்கு ஏதுவாக பாடத்திட்டம், கல்விக் கட்டணம் அமைய வேண்டும். குறைந்தபட்சக் கல்வித்தகுதியையும் நிர்ணயம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தற்போதும் சில மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரடியாகச் சேர்ந்து மருத்துவம்சார் படிப்புகள் பயில்வதற்கு 27 சான்றிதழ், டிப்ளமோவும், தொலைதூரக் கல்வி முறையில் பயில்வதற்கு 12 சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை போதாது. இன்னும் பல படிப்புகள் தொடங்கப்பட வேண்டும்.

மருத்துவத் துறையில், செவிலியர், மருந்தாளுநர்கள், மருத்துவ ஆய்வுக்கூடம், கண் மருத்துவம், மருந்து தயாரிப்பு, அறுவைச் சிகிச்சை அரங்க தொழில்நுட்பம், பிசியோதெரபி தாய்மை மற்றும் மகப்பேறு, குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரித்தல், நரம்பியல் புற்றுநோய், இதய நோய், எலும்பு முறிவு, ரத்த அழுத்தம், ரத்த சோகை, நீரிழிவு நோய், சருமநோய் போன்ற பற்பல துறைகளில் சான்றிதழ், டிப்ளமோ பட்டப்படிப்புகள் தொடங்க தீவிரம் காட்ட வேண்டும்.

பல் மருத்துவத்தில் கூட, முகச்சீரமைப்பு, பல் உருவாக்குதல் மற்றும் பொருத்துதல், பல் நோய்களிலிருந்து விடுபடுதல், அறுவைச் சிகிச்சை தொழில் நுட்பங்கள், பல் நோயாளிகளைப் பராமரித்தல் போன்ற துறைகளில்கூட சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தத் திட்டமிடலாம். மருத்துவம்சார் சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சிறப்பான பணியும், ஊதியமும், வாழ்க்கை வசதியும், குடியுரிமையும் வழங்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு அன்னிய மொழியை அறிந்திருத்தல் கூடுதல் தகுதியாக அமையும்.

கிராமப்புறங்களில் சுகாதாரம் பேணவும், அடிப்படை மருத்துவ ஆலோசனைகளை வழங்கவும் கிராமப்புற மருத்துவப் பணியாளர்களையும் உதவியாளர்களையும் உருவாக்க வேண்டும்.

கிராமப்புறக் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், தாய்மையடைந்தோர், குழந்தை பெற்றவர்கள், கண் நோயாளிகள், சரும நோய் உள்ளவர்கள், சர்க்கரை மற்றும் காச நோயாளிகள், வயதானோர், வறுமைக் கோட்டிற்கு கீழ்நிலையில் உள்ளவர்கள் அனைவருக்கும் தகுந்த ஆலோசனைகளை வழங்க உதவியாளர்கள் தேவை. இத்தகைய பணியாளர்களைத் தயார் செய்ய சான்றிதழ், டிப்ளமோ, பட்டப் படிப்புகள் தொடங்க வேண்டும்.

இந்தியர்களின் சராசரி ஆயுள் அதிகரித்துள்ளது. விரைவில் உலகிலேயே முதியவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையை எட்டிவிடும். இந்த முதியவர்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் நாம் உதவி செய்தல் வேண்டும்.

பிழைப்புக்காக தங்களின் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு, முதியவர்கள் அனைவரும் முதியோர் இல்லங்களை நாடுகிறார்கள். இந்த முதியவர்களுக்காக, அவர்களின் கடைசி கால வாழ்க்கை சுகமாக இருக்க, முதியோர் காப்பகம் சம்பந்தமாக மருத்துவ ரீதியில் தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களை உருவாக்க சான்றிதழ், டிப்ளமோ படிப்புகள் தொடங்கலாம். வெளிநாடுகளிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சிகிச்சை பெற பல நோயாளிகள் தமிழகத்துக்கு வருகின்றனர். இதன்மூலம் தமிழகத்துக்கு பல்வேறு வகைகளில் வருவாய் கிடைத்து வருகிறது.

செவிலியர்களின் அன்னை, கைவிளக்கேந்திய காரிகை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பெயரில் செவிலியர் மற்றும் மருத்துவம் சார் பல்கலைக்கழகத்தை தமிழகத்தில் தொடங்கி ஒரு சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தலாம். செவிலியர் படிப்பில் முதியோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாக சான்றிதழ், டிப்ளமோ படிப்புகள் தொடங்கலாம்.

அனைவருக்கும் “ஆரோக்கியமான வாழ்வு’ அமைய வேண்டுமெனில் மருத்துவம்சார் அறிவியல் படிப்புகள் அவசியம்.

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாக எட்டமுடியாத மருத்துவ வசதிகளை இனியாவது ஏற்படுத்த வழிவகுக்க வேண்டும். இந்த நூற்றாண்டிலாவது அனைவருக்கும் “ஆரோக்கியமான வாழ்வு’ என்ற இலக்கை எட்ட மருத்துவ அறிஞர்களும், கல்வி நிலையங்களும், மத்திய, மாநில அரசுகளும், மருத்துவர்களும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். இதற்கு மருத்துவம்சார் சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்புகள் உறுதுணையாக அமையும் என்பதில் ஐயமில்லை.

—————————————————————————————————————————-

“கிராமப்புற சேவை’யின் மறுபக்கம்

சி. கதிரவன்

இந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள்தான். ஆனால், கிராமங்களில் வசிக்கும் 72 சதவீத மக்களுக்கு நாடி பிடித்துப் பார்க்க ஆளில்லை என்கிறது ஓர் ஆய்வு.

கிராமப்புறங்களில் மருத்துவ சேவையை மேம்படுத்த வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அண்மைக்காலமாக பெரிய அளவில் இந்த விஷயம் பேசப்படுவது ஆரோக்கியமானதே. ஆனால், பேச்சு ஆக்கபூர்வமானதாக இல்லை என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

உண்மையில், கட்டாய கிராமப்புற மருத்துவ சேவையின் மறுபக்கம்தான் என்ன?

மருத்துவம் ஓர் இன்றியமையாத தேவை. மருத்துவக் கொள்கையைப் பொருத்த அளவில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கொள்கையைப் பின்பற்றி வருகிறது. பிரிட்டன் மருத்துவத் துறையைத் தன் முழுப் பொறுப்பில் வைத்திருக்கிறது. அந்நாட்டின் தேசிய சுகாதாரச் சேவை மிகச் சிறப்பானது. பொது மருத்துவத்துக்கான மொத்தச் செலவில் அந்நாட்டு அரசு 94 சதவீதத்தை தானே செலவிடுகிறது.

அமெரிக்கக் கதையோ வேறு. காப்பீட்டுத் திட்டங்கள் சார்ந்த மருத்துவ சேவை அங்கு பின்பற்றப்படுவதால் அரசுக்கும், பொது மருத்துவத்துக்கும் கிட்டத்தட்ட தொடர்பே இல்லை.

நம் நிலைதான் பரிதாபத்துக்குரியது. மொத்த ஆண்டு வருவாயில் மத்திய அரசு 1.3 சதவீதமும், மாநில அரசு 5.5 சதவீதமுமே மருத்துவத்துக்காக ஒதுக்கீடு செய்கின்றன. இவை இரண்டும் மருத்துவத்துக்காக நாம் செலவு செய்யும் மொத்தத் தொகையில் கால் பகுதியே ஆகும்.

இந்நிலையில், இந்திய மருத்துவத்துறை வேகமாக தனியார்மயமாகி வருகிறது. மக்கள்தொகைப்படி நமது நாட்டில் 40 லட்சம் மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் 14 லட்சம் மருத்துவர்களே இருக்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் காலிப் பணியிடங்கள். பெரும்பாலான அரசு மருத்துவக் கல்லூரிகள் பேராசிரியர்கள் இன்றி தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் மட்டும் வேலைவாய்ப்பகத்தில் 15 ஆயிரம் மருத்துவர்கள் பதிவு செய்து, வாய்ப்பின்மையால் தனியார் மருத்துவமனைகளில் குறைந்த ஊதியத்துக்குப் பணியாற்றி வருகின்றனர்.

பல ஆயிரம் கிராமங்களில் மக்களின் நாடி பிடித்துப் பார்க்க மருத்துவர் இல்லாத நமது நாட்டில், நகரங்களை நோக்கிய தொலை மருத்துவ மையங்களின் வருகையின் நோக்கத்தை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மருத்துவத்தை அமெரிக்கப் பாணியில் முழுவதும் தனியார்மயமாக்குவதன் தொடக்கமே “கார்ப்பரேட் கிளினிக்குகள்’ நகரங்களை நோக்கி வருவதும் நகரங்களிலிருந்து மருத்துவ மாணவர்கள் கிராமங்களுக்கு அனுப்பப்படுவதும்.

கட்டாய கிராமப்புற சேவைத் திட்டம் என்றால் என்ன? எம்.பி.பி.எஸ். படிப்பு மேலும் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டு, அந்த ஓர் ஆண்டில் 4 மாதம் ஆரம்பச் சுகாதார நிலையம், 4 மாதம் தாலுகா மருத்துவமனை, 4 மாதம் மாவட்ட மருத்துவமனைகளில் என சுழற்சி முறையில் மாணவர்கள் பணியாற்றுவதுதான்.

இதில் முதல் முரண்பாடு என்னவென்றால், ஆண்டில் 8 மாதங்கள் கிராமப்புறம் அல்லாத இடங்களில் பணியாற்ற வைக்கப்படுவதுதான். இத்திட்டம் எப்படி கிராமப்புற சேவையாகும்?

உண்மை என்னவென்றால் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்களைப் பெயரளவில் நிரப்பும் அரசின் குறுக்கு வழியே இது. உள்ளபடியே இந்திய மருத்துவக் கல்வியும் மருத்துவத் துறையும் பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் நிகழாண்டில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நான்கு முறை நடைபெற்றது. இது இதுவரை மருத்துவத்துறை வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாகும். இதில் முதலாமாண்டு மாணவர்களில் 131 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பை விட்டுவிட்டு மற்ற தொழிற்படிப்புகளுக்குச் சென்றுவிட்டனர்.

வேலூர், கன்னியாகுமரி, தேனி மருத்துவக் கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள், உள் கட்டமைப்பு இல்லாத காரணத்தால் இந்திய மருத்துவக் கழகத்தின் அனுமதியையே பெற முடியவில்லை. தமிழகத்தில் உள்ள 21 மருத்துவக் கல்லூரிகளில் ஒரு சில கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளில் இதே நிலைதான். நாட்டிலேயே மருத்துவத் துறையில் சிறப்பாக இருப்பதாகக் கூறப்படும் தமிழகத்தின் நிலையே இது என்றால் மற்ற மாநிலங்களின் நிலைமையை சொல்ல வேண்டியதில்லை.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கொண்டு வர முனையும் திட்டத்தை நாம் ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது. 2006-ல் தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் கிராமங்களில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் 800 மருத்துவர்களைப் பணி நியமனம் செய்வதற்கான தேர்வு நடைபெற்றது. அதற்கு 12,000 மருத்துவர்கள் விண்ணப்பம் செய்தனர். இதிலிருந்தே மருத்துவர்கள் கிராமங்களுக்குச் செல்லத் தயங்குகிறார்களா என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

உள்ளபடியே கிராமப்புற மருத்துவ சேவைதான் அரசின் பிரதான நோக்கம் என்றால் அதற்குச் செய்ய வேண்டிய செயல்திட்டங்கள் நிறையவே இருக்கின்றன.

எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தவுடன் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரிந்தவர்கள் மட்டுமே பட்ட மேல்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். எந்தெந்த ஆரம்பச் சுகாதார நிலையங்ளுக்கு மருத்துவர்கள் இல்லையோ அப் பணியிடங்களுக்கு நிரந்தர மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். குறிப்பாக கிராமப் பகுதிகளில் இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைய வேண்டும்.

மருத்துவப் படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். ஆரம்பச் சுகாதார மையங்களும் மக்கள்தொகைக்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும். தொடக்க நிலை சுகாதார மேம்பாட்டுக்கென கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசியல் சட்டத்தில் வாழ்வுரிமையைப்போல அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மருத்துவச் சிகிச்சை பெறுவதையும் உறுதி செய்து சட்டமியற்ற வேண்டும்.

மருத்துவ மாணவர்கள் மீது கட்டாய கிராமப்புற சேவையைத் திணிப்பது ஒன்றே இப்பிரச்னைக்குத் தீர்வு என திசை மாற்றுவதைவிடுத்து அரசு உண்மையாக, ஆக்கபூர்வமான செயலில் இறங்க வேண்டும்.

Posted in abuse, Admissions, ADMK, AIIMS, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Anna, Anniyan, Assets, BE, Bribes, BTech, Caste, Chemical, Chennai, Chettinaadu, Chettinadu, Civil, Coimbatore, Colleges, Combatore, Community, computers, Corruption, DMK, Doc, doctors, Donations, DOTE, ECE, Education, EEE, Electrical, Electronics, Engg, Engineering, Expense, Exploit, Gentleman, Healthcare, IIT, Instru, Instrumentation, Interest, kickbacks, Kovai, Kulasegaram, Kulasekaram, Kumudam, Kumudham, Loans, MBBS, MD, medical, MMC, Moogamibigai, Moogamibikai, Mookamibigai, Mookamibikai, Operation, Perundhurai, Perundurai, Perunthurai, PMK, Poor, professional, PSG, Quota, Ramadas, Ramadoss, Rates, RBI, REC, Rich, SBI, Schools, service, Shankar, Sivaji, Software, Students, Study, surgery, Technology, University, Wealthy | 2 Comments »

Cessation of RCTV in Venezuela – Hugo Chavez & Left Alliance vs Capitalism & USA

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

ஆட்டம் காணும் இடதுசாரி அஸ்திவாரம்

எம். மணிகண்டன்

வெனிசுலாவில் பழம்பெருமை வாய்ந்த “ரேடியோ கராகஸ்’ தொலைக்காட்சி (ஆர்சி டிவி) நிறுவனத்தின் ஒளிபரப்பு அண்மையில் நிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் ஹுகோ சாவேஸýக்கு எதிராக தலைநகர் கராகஸில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று வெறுமனே கூறிவிட முடியாது. ஊடகங்களைத் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கும் நாடுகள் பட்டியலில் வெனிசுலாவுக்கு எப்போதுமே 100-க்கு பின்னால்தான் இடம் கிடைக்கும். சாவேஸின் ஆட்சியில் அது இன்னும் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

எதிர்கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டு சாவேஸýக்கு எதிராக வெளிப்படையாகவே செயல்பட்டு வந்தது ஆர்சி டிவி. 2002-ஆம் ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகக் கூறப்பட்டுவந்தாலும், ஆர்சி டிவிக்கும் பெரும்பங்கு இருப்பதாக நம்பப்படுகிறது. தற்போது இந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருப்பது, சாவேஸின் பொதுவுடமை இலக்குகளை நோக்கிய வேகமான பயணத்தின் ஒரு படியே என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கெனவே எண்ணெய் நிறுவனங்களை அரசுடையமையாக்கியது, தனியார் சொத்துக்களை கையகப்படுத்தி ஏழைகளுக்கு வழங்குதற்காக திட்டங்களை அறிவித்தது என அனைத்துமே வெனிசுலாவில் செங்கொடி பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கிவிட்டது என்பதன் அறிகுறிகளே.

இதை மறைமுகமாகக் குறிக்கும் வகையிலேயே, “இந்தப் புரட்சியை யாராலும் தடுக்க முடியாது’ என கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அனைத்துப் பத்திரிகைகளில் ஒரு பக்கத்துக்கு விளம்பரம் செய்தார். “இந்தியா ஒளிர்கிறது’ என்பது போல.

சாவேஸýக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அண்டை நாடான பொலிவியாவின் ஈவோ மாரல்ஸ், ஓராண்டுக்கு முன்பே எரிவாயு திட்டங்களை அரசுடைமையாக்கி தனது இடதுசாரி பயணத்தைத் துவக்கிவிட்டார். இதனால், சாவேஸ் தனது சீர்திருத்தங்களை முடுக்கி விடவேண்டியதாகிவிட்டது.

லத்தீன் இயக்க விடுதலைக்கு வித்திட்ட சைமன் பொலிவருக்கு நிகரான சீர்திருத்தவாதியாக அறியப்படுபவர் சாவேஸ். இடதுசாரி சிந்தனை கொண்டவர் என்ற முறையில், கியூபாவின் ஆட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் நெருக்கமாக இருப்பவர். லத்தீன் அமெரிக்கா முழுவதையும் இடதுசாரிப் பாதைக்கு திருப்ப வேண்டும் என்பதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார். சிலி, பொலிவியா உள்ளிட்ட நாடுகளில் இடதுசாரி அரசுகளை அமைத்ததில் இவருக்குப் பெரும் பங்குண்டு.

பலமுறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால் சாவேஸýக்கும் வெனிசுலா மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். “சாவேஸ் சர்வாதிகாரி என்று கூறப்படுவது மேற்கத்திய நாடுகள் புனைந்த கதை; புஷ்ஷைவிட சிறந்த ஜனநாயகவாதி அவர்’ என்று கடுமையாகக் கூறுவோரும் உண்டு. புஷ்ஷுக்கு எதிராக அந்நாட்டுத் தொலைக்காட்சி நிறுவனம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டால் அவர் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரா எனக் கேட்டு, ஆர்சி டிவி தடை செய்யப்பட்ட சாவேஸின் ஆதரவாளர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

சீர்திருத்தங்களை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற சாவேஸýக்கு எதிராக நிறைய விமர்சனங்களும் உண்டு. தனக்கு ஆதரவாக அரசியல் சட்டத்தை திருத்தியது, தேர்தலில் முறைகேடு, அரசுக்கு எதிரானவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவது, பத்திரிகைகளுக்கு கட்டுப்பாடு என சாவேஸ்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.

அதேபோல், சாவேஸின் அதிரடி நடவடிக்கைகள் அனைத்துக்கும் மக்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பதாகவும் கூறிவிடமுடியாது. பணக்காரர்களிடம் இருந்து நிலத்தை பிடுங்கி ஏழைகளிடம் ஒப்படைக்கும் திட்டம், அவரது ஆதரவாளர்களிடமே எதிர்ப்பைச் சம்பாதித்தது. இது தவிர, அரசு அதிகாரிகள் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு வீடு வைத்திருப்பவர்களிடம் வீடுகளைப் பறித்துக் கொண்டு தவிக்க விட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன.

ஆர்சி டிவி தடை செய்யப்பட்டதற்கு வெனிசுலாவின் நெருங்கிய நட்பு நாடான பிரேசில் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் இயற்றி இருக்கிறது. இதற்குப் பதிலடி தரும் வகையில்,”தொழிலாளர்கள் பெயரைச் சொல்லி வோட்டு வாங்கிவிட்டு, அமெரிக்காவின் கைப்பாவையாக பிரேசில் அரசு செயல்பட்டு வருகிறது’ என்று வெனிசுலா நாடாளுமன்றம் கண்டித்திருக்கிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதுவும் வெனிசுலாவுக்கு பின்னடைவே.

எதிர்க்கட்சிக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக அரசின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, குளோபோவிஷன் மற்றும் சிஎன்என் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புக்கும் சாவேஸ் அரசு தடைவிதிக்கும் என்று கூறப்படுவதால் பிரச்னை தற்போது பூதாகரமாகியிருக்கிறது.

இதற்கிடையே, தடைசெய்யப்பட்ட ஆர்சி டிவி ஒளிபரப்பை மெக்சிகோவில் இருந்து மீண்டும் துவக்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்நிறுனத்தின் தலைவர் மார்சல் கார்னியர் மெக்சிகோவில் இருக்கும் தனது “நட்பு வட்டாரத்தை’ இதற்குப் பயன்படுத்துவார் எனத் தெரிகிறது.

தொலைக்காட்சி, செயற்கைக்கோள், இன்டர்நெட் என ஏதாவது ஒரு வகையில் வெனிசுலா மக்களை தொடர்பு கொள்வேன் என கார்னியர் சபதம் செய்திருப்பதால் சாவேஸýக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

வட கொரியா, ஈரான், சூடான், ரஷ்யா, வெனிசுலா, பெலாரஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் “சாத்தானின் கூட்டணி’ என்றே அமெரிக்க ஆதரவுப் பத்திரிகைகள் பிரசாரம் செய்து வருகின்றன. இது வெறும் வயிற்றெரிச்சல்தான் என்றாலும், இப்பட்டியலில் வெனிசுலா சேர்க்கப்பட்டிருப்பது சரிதானோ என்ற எண்ணம் உலக உலக நாடுகளுக்கு வராமலிருக்க, சாவேஸ் கவனமாகச் செயல்படுவது நல்லது. அதுதான் லத்தீன் அமெரிக்காவின் இடதுசாரி அஸ்திவாரத்தை பலப்படுத்துவதற்குச் சரியான வழி.

————————————————————————————————————————————–

இன்னொரு ஃபிடல் காஸ்ட்ரோ

எம். மணிகண்டன்

வெனிசுலாவைத் தாக்க அமெரிக்காவும் கொலம்பியாவும் சதி செய்கின்றன என அண்மையில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் வெனிசுலா அதிபர் சாவேஸ். இப்போதைக்கு அமெரிக்காவால் விலை கொடுத்து வாங்கவோ, நேரடியாகப் போரிட்டு அடக்கவோ முடியாத “அச்சுறுத்தல்’களில் வெனிசுலாவும் ஒன்று என்பதால் சாவேஸின் குற்றச்சாட்டு கவனிக்கத்தக்கது. அதற்காக லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராகப் போர் புரிய முடியுமா என்ன?

ஒருநாடு எவ்வளவு வேகமாக வளர்ச்சியடைகிறது என்பது மட்டுமல்ல, அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதை எது என்பதும் முக்கியம் என்பார் சாவேஸ். அவரைப் பொறுத்தவரையில், பொருளாதார வளர்ச்சியின் பயன் அடித்தட்டு மக்கள்வரை சென்றடைய வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி, பொதுவுடமைக் கொள்கைகளைத் தீவிரமாக அமலாக்குவதுதான். இடதுசாரிகள் என்றாலே அமெரிக்காவுக்கு எதிரானவர்கள் என்ற பொதுவான கருத்துக்கு சாவேஸýம் விதிவிலக்கல்ல.

அமெரிக்காவை எதிர்த்து 50 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டுவரும் கியூபாவை முன்மாதிரியாகக் கொண்டிருக்கும் சாவேஸ், தம்மையும் ஃபிடல் காஸ்ட்ரோ போன்றதொரு போராளியாக முன்னிறுத்திக் கொள்பவர். அமெரிக்காவின் அடிமைப்படுத்தும் கொள்கைகளுக்கு எதிராக லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் லட்சியம். இதனால் அமெரிக்காவுக்குப் போட்டியாகப் பொருளாதார, ராணுவ பலத்தைப் பெருக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளின் விடுதலை இயக்கத் தலைவரான சைமன் பொலிவரின் பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் “அமெரிக்காவுக்குப் பொலிவரிய மாற்று’ (ஆல்பா) என்ற அமைப்பின் கீழ் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளின் ஆதரவை சாவேஸ் திரட்டி வருகிறார். இந்த அமைப்புக்கு வெனிசுலாவும் கியூபாவும்தான் அடித்தளம் அமைத்தன.

பொதுவாக உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தடையிலா வர்த்தகப் பிராந்தியங்கள் போல் அல்லாமல், சமூக அக்கறையும் அடித்தட்டு மக்கள் மீது கரிசனமும் கொண்ட பொருளாதார வளர்ச்சியை எட்டும் வகையிலான வர்த்தகக் கூட்டுகளைச் செய்துகொள்ளப் போவதாக இந்த அமைப்பு கூறியிருக்கிறது.

இது நிறைவேறினால், தற்போது இடதுசாரிகள் மட்டுமே கூறிக்கொண்டிருக்கும் “அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பொருளாதார வளர்ச்சி’ என்பது உலக நாடுகளில் பலவற்றைக் கவரக் கூடும். இந்தியா போன்ற நாடுகள்கூட தங்களது அமெரிக்க அடிமைத்தனத்தை விட்டுவிடுவது குறித்து யோசிக்கும்.

ஆனால், ஆல்பா அமைப்பில் கியூபாவையும் வெனிசுலாவையும் விட்டால் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த நாடும் இல்லை என்பதுதான் பலவீனம். சாவேஸ் என்ன செய்தாலும் அதை இம்மி பிசகாமால் அப்படியே பின்பற்றும் பொலிவியாவும் இந்த அமைப்பில் இணைந்திருக்கிறது. ஈக்வடார், நிகரகுவா உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகள் இந்த அமைப்பில் சேர்ந்துவிட்ட போதிலும் உள்நாட்டில் எழுந்திருக்கும் எதிர்ப்புகளால் முடிவைப் பரிசீலித்து வருகின்றன. இதுபோக, கரீபியன் கடலில் உள்ள ஆன்டிகுவா, டொமினிகா உள்ளிட்ட குட்டி நாடுகள் மட்டுமே ஆல்பாவில் இணைந்திருக்கின்றன.

அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு கொண்டிருக்கும் கொலம்பியா, பிரேசில், அர்ஜென்டினா போன்ற வலுவான நாடுகளின் ஆதரவு சாவேஸýக்கு இன்னும் கிடைக்கவில்லை. கிடைக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

அமெரிக்க வங்கிகளில் இருக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் நிதியை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது சாவேஸின் மற்றொரு திட்டம். ஆசிய வளர்ச்சி வங்கி போல் பிராந்திய வங்கி ஒன்றை ஏற்படுத்தி அதில் இந்தப் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கலாம் என்பது அவரது எண்ணம்.

ஆனால் அமெரிக்காவுக்கு எதிராகக் கூட்டு ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று சாவேஸ் அழைப்பு விடுத்திருப்பது வலியச் சென்று போரை வரவழைப்பதற்குச் சமம். சமூக, பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவித்துவரும் பொலிவியா போன்ற பின்தங்கிய நாடுகளுக்குக் கூட்டு ராணுவத்தை ஏற்படுத்தி போர்புரியும் திட்டமெல்லாம் ஒத்துவராது. கெட்டதும்கூட. லத்தீன் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா தாக்கினால் பார்த்துக் கொள்ளலாம்; அதற்காகக் கூட்டு ராணுவம் அமைப்பது என்பது பிராந்திய அமைதியைக் குலைக்கும் வேலை என நிகரகுவாவும், ஈக்வடாரும் கருதுகின்றன.

அண்டை நாடான கொலம்பியாவுடன் சேர்ந்து வெனிசுலாவைத் தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக சாவேஸ் கூறுவதையெல்லாம் வெனிசுலா மக்களே நம்பவில்லை. அப்படியே கொலம்பியாவுடன் போர் வந்தாலும் அதை லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்று கூறுவதெல்லாம் சுயநலத்தின் உச்சகட்டம். தொடர்ந்து அதிபராக நீடிக்கும் வகையில் வெனிசுலாவில் அண்மையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் தேர்தலில் சாவேஸýக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இந்தத் தோல்விகளை மறைத்து தனது செல்வாக்கை நிலைநாட்டுவதற்குத்தான் சாவேஸ் இந்த அபத்தங்களைச் செய்துவருவதாகக்கூட பத்திரிகைகள் எழுதுகின்றன.

வெனிசுலாவில் பத்திரிகைகளுக்குச் சுதந்திரமில்லை, நாட்டின் பல பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள்கூட செய்து தரப்படவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகள் சாவேஸின் புரட்சியாளர் என்ற பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தனது பெயரை மீட்டெடுக்க வேண்டுமானால், அமெரிக்காவுக்கு எதிராகப் போரிடும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு, நாட்டுக்கும் பிராந்தியத்துக்கும் உருப்படியாக ஏதாவது செய்யலாம், கோகோ பயிரிடுவதைத் தவிர!

Posted in America, Autocracy, Belarus, Biz, Bolivia, BP, Brazil, Bush, Business, Capital, Capitalism, Caracas, Castro, Censor, Chavez, Chile, China, Citgo, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communists, Congress, Conoco, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Cuba, Darfur, Democracy, Democratic, Development, Economy, Elections, Employment, Exchange, Exploit, Exploitation, Exxon, ExxonMobil, Fidel, Finance, Foreign, France, Freedom, GDP, Govt, GWB, Hispanic, Hugo, Independence, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Inflation, investments, Iran, Jobs, Journal, Korea, Latin America, Left, markets, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Media, Minerals, Mobil, Money, MSM, Nationalization, Newspaper, oil, Phillips, Polls, RCTV, Recession, Republic, Resources, Russia, Sudan, Union, USA, Venezuela, workers, Zine | Leave a Comment »

Central African Republic: Law and Order Collapsing as Civilians Flee Violence and Killings

Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2007

மத்திய ஆப்ரிக்க குடியரசு குறித்து அம்னெஸ்டி கவலை

 

மத்திய ஆப்ரிக்க குடியரசில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீரழிந்து குலைந்துவிடும் நிலையின் விளிம்பில் உள்ளது என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கூறியுள்ளது.

அங்கு, பிரான்ஸ் நாட்டின் 700 துருப்புகளின் ஆதரவு இருந்தாலும் அரசின் அதிகாரம் தலைநகர் பாங்குயில் மட்டும்தான் செல்லுபடியாகிற நிலையில் உள்ளது.

அந்த நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் அண்டை நாடுகளான சாட், சூடான் மற்றும் காமெரூன் ஆகியவற்றுக்கு வெளியேறிச் சென்றுள்ளார்கள் என அண்மையில் அங்கிருந்து திரும்பியுள்ள ஒரு ஆய்வாளர் தெரிவிக்கிறார்.

கிளர்ச்சியாளர்கள், கொள்ளையர்கள் மற்றும் அரசுத் துருப்புக்களால் தாக்கப்பட்டதாலேயே தாம் அங்கிருந்து வெளியேறியாதாக அவர் கூறுகிறார்.

அங்கு அரச துருப்புக்களால் பொதுமக்கள் தாக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, அந்நாட்டின் அதிபரின் சார்பில் பேசவல்ல அதிகாரி புறந்தள்ளியுள்ளார். மேலும் இந்தக் குற்றச்சாட்டு கேலிக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக மத்திய ஆப்ரிக்க குடியரசில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில், அது பல பாதிப்புகளை சந்தித்துள்ளது.

2003 ஆம் ஆண்டு இராணுவத்தின் முன்னாள் தளபதி ஃபிரான்சுவா பொழியே அதிரடியாக ஆட்சியைப் பிடித்த பிறகு, அங்கு நிலைமைகள் மேலும் மோசமடைந்துள்ளன.


Posted in abuse, africa, AI, Amnesty, Amnesty International, Arms, Bangui, car, Central African Republic, CFA Francs, Chad, Children, Conflict, Criminal, defence, Defense, Democracy, ethnic, Ethnicity, Exploit, Extremism, France, Francs, French, Govt, HR, killings, Law, Military, Money, Opposition, Order, Peace, Poor, Power, Republic, Rich, Security, Sudan, Terrorism, troops, UN, Violence, War, Weapons, West Africa | 1 Comment »

May Day 2007 – International Child Worker Day

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 30, 2007

ஊரும் தெரியாது; உறவும் புரியாது!

வசீகரன்

நம் ஒவ்வொருவர்க்குள் ஓர் அதிகாரி ஒளிந்து கொண்டிருக்கிறார்.

நாடு முழுக்க வீடுகள் இருக்கின்றன. அவரவர் வசதி, வளமைக்குத் தக்கவகையில் வீடுகள் சிறிதாகவோ, பெரிதாகவோ, ஆடம்பரமாகவோ இருக்கின்றன. வீட்டைப் பராமரிப்பது மிகப்பெரிய பணிதான். எனவே இச்சுமையைக் குறைக்க பணியாள் ஒருவரோ, ஒன்றுக்கு மேற்பட்டவரோ தேவைப்படுவர். இந்த எடுபிடி வேலைக்கு ஆள் கிடைப்பது மிகவும் சிரமம். கிடைத்தாலும் நம் விருப்பப்படி நடப்பாரா என்பது தெரியாது. எதிர்த்துப் பேசலாம். அதிக சம்பளம் கேட்கலாம்!

இந்தத் தொல்லையெல்லாம் இல்லாதவாறு ஆள் வேண்டுமே? யார் கிடைப்பார்கள்.

அப்படிக் கிடைப்பவர் வறுமையில் உழல வேண்டும். வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் இருக்க வேண்டும். ஊதியத்தை மிகக் குறைவாகக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டும். அண்டை அசலில் ஆதரவாளர்கள் யாரும் இருக்கக் கூடாது. அப்போதுதான் சொன்ன பேச்சைக் கேட்பார்கள்.

அவர்கள் யார்? குழந்தைகள்!

வறுமையின் காரணமாக துரத்தப்பட்டவர்கள். விளையாடும் பருவம் அது. ஆனால் விளையாட முடியாது. ஓடியாடும் வயது அது. ஆனால் கால்கள் கட்டப்பட்டிருக்கும். சிரித்து மகிழ அவர்களுக்குச் சுதந்திரம் கிடையாது.

கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இழுத்து வரப்பட்டிருப்பார்கள். ஏன் மாநிலம் மாறி கூட கடத்தப்பட்டிருப்பார்கள்.

ஊரை ஒழுங்காகத் தெரியாது. உறவு யாரென்றும் புரியாது. பல குழந்தைகளுக்கு மொழிகூட விளங்காது.

பங்களாக்கள், நடுத்தர இல்லங்கள் என்று அமர்த்தப்பட்டு பணியில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருப்பார்கள். வியர்வையும் கண்ணீருமாய் ஈரமாக இருப்பார்கள். ஆனால் வயிறு உலர்ந்து போய் இருக்கும்.

அந்த வீட்டின் எஜமானாக நாம் இருக்கிறோம். வேலை செய்ய சேர்ந்திருப்பவள் ஒரு சிறுமி. அந்தச் சிறுமியிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம்?

அதே வயதுடைய சிறுமி நம் அடுத்த வீட்டுத் தொழிலதிபரின் குழந்தையாகவோ, நம் உறவினர் ஒருவரின் வாரிசாகவோ இருந்துவிட்டால் நம் கொஞ்சலே மிக அழகாக இருக்கும்.

வேலை செய்ய வந்த சிறுமியிடமோ நம் கேள்விகள் நேரெதிராக இருக்கும்.

“”என்ன திருதிருவென்று முழிக்கிறாய். ஒழுங்காக வேலையைப் பார்!” விரட்டுவோம்.

“”சுறுசுறுப்பே இல்லையே . சரியான சோம்பேறி” என மண்டையில் குட்டுவோம்.

போனால் போகிறதென்று அளவுச்சாப்பாடு போடுவோம். இதோடு அல்ல. இன்னும் இருக்கிறது அந்தக் குழந்தைக்குக் கொடுமை.

வீடு என்றால் நாம் ஒருவர் மட்டும்தானா? சிறுசும் பெருசுமாக உருப்படிகள் ஐந்துக்குமேல் தேறாதா? அத்தனை பேர்களுமே அந்த வேலைக்கார சிறுமிக்கு பம்பரக் கயிறுகள்தான்.

ஒருவர் மாற்றி ஒருவர் வேலை சொல்லி ஆட்டுவிப்பர். ஒரே நேரத்திலேயே கூட பலரின் கட்டளைகளை ஏற்றுச் செய்வதறியாது திகைத்து நிற்பாள் அச்சிறுமி. கைக்குழந்தை உள்ள வீடு என்றால் குழந்தை தூங்கும் நேரம் போக மீதி நேரம் தூக்கிச் சுமந்து கொண்டிருக்க வேண்டும். பள்ளிக்கூடத்திலிருந்து குழந்தைகளை அழைத்து வர வேண்டும்.

அவர்கள் விளையாடுவதற்குத் தேவையான வேலைகளைச் செய்து கொடுத்துவிட்டு, விளையாட்டை வேடிக்கை பார்க்காமல் வேலை செய்ய வேண்டும். வீட்டின் உறுப்பினர்கள் கேளிக்கை தேடி வெளியில் சென்றால் வீட்டுக்கு காவலாய் இருக்க வேண்டும்.

அதே வயதுடைய நம் குழந்தை பெரிய பள்ளியில் படிக்கிறது. விதவிதமாய் ஆடை அணிகிறது. பூப்பந்து விளையாடுகிறது. திரைப்படம், கடற்கரை, கேளிக்கைத்தலங்கள் என்று அழைத்துச் செல்கிறோம். சிரித்து மகிழ்கிறது. சிறுவேலைகூட ஏவ மாட்டோம்.

இத்தனை இன்பங்களையும் தொலைத்துவிட்டு அக்குழந்தை நம் உருட்டல், மிரட்டல்களுக்கு அடிபணிந்து மிரளுகிறது. அத்தனைக்கும் ஒரு பாராட்டாவது வழங்குகிறோமா? அப்படியே பாராட்டிவிட்டாலும் கூட அது மேலும் வேலை செய்ய வைக்கும் உத்தியாகவே இருக்கும்.

ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். அங்கும் கூட அதிகாரி தாண்டவமாடும் நிலை உண்டு.

குழந்தைகளை ஏழ்மை வாட்டுகிறது. நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பசி அரக்கனின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர். ஒருவேளை சோற்றுக்காக அவர்களை வதைக்க நாம் துணியலாமா? நாம் நல்லவர்கள்தான். இது தீமை என்பதை உணராமல் செய்து விடுகிறோம். வேண்டாம் அந்த காட்டு நிர்வாகம்! பிஞ்சுக் குழந்தைகளிடமா நம் மேலாண்மையைக் காட்டுவது!

மற்ற குழந்தைகளைப்போல் அவர்கள் கற்க, விளையாட, நடக்க, சிரிக்க, உண்ண, உறங்க உரிமை உள்ளது.

உண்மையைப் புரிந்து கொண்டவர்களாயின் இனி நாம் குழந்தைகளை வேலைக்கு வைக்க மாட்டோம். ஒருவேளை வாய்ப்புக் கிடைத்தால் அக் குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தையையாவது நம் குழந்தையைப் போலவே கருதி மேற்கண்ட உரிமைகளை அக்குழந்தையும் அனுபவிக்க வழிவகை செய்யும் பொறுப்பை ஏற்கலாமல்லவா!

(இன்று சர்வதேச குழந்தைத் தொழிலாளர் தினம்).

Posted in abuse, Child, Children, Concern, Day, Employment, Exploit, Exploitation, Home, Household, International, Kid, Labor, Labour, Poor, Rich, Society, Worker | Leave a Comment »

46 trafficked boys to go home in Ivory Coast

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2007

கடத்தப்பட்ட ஐவரி கோஸ்ட் சிறார்கள் மீட்கப்பட்டனர்

ஐவரி கோஸ்ட் சிறார்கள்
ஐவரி கோஸ்ட் சிறார்கள்

ஐரோப்பாவில் அதிக பணம் ஈட்டக் கூடிய கால்பந்து ஒப்பந்தங்களை பெற்று தருவதாகக் கூறி ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 34 சிறுவர்களை புலம் பெயந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பு தமது வீடுகளுக்கு திருப்பியனுப்பியுள்ளது .

அந்தச் சிறார்கள் ஐரோப்பாவில் ரோம், மட்ரிட் அல்லது லண்டனுக்கு அழைத்து செல்லப்படுவதாகக் கூறப்பட்டு அவர்களை, அண்டை நாடான மாலிக்கு கொண்டு சென்று, அங்கு அவர்களது விருப்பத்திற்கு விரோதமாக அவர்கள் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்ட சிறுவர்களை மீண்டும் ஒப்படைக்க, பயணச் செலவுகளுக்காக நூற்றுக் கணக்கான டாலர்களை போலி முகவர்கள் அவர்களின் பெற்றோரிடம் கேட்டதாக புலம் பெயர்ந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.

இந்தச் சம்பவம், தொழில் ரீதியல்லாத வகையில் ஆப்ரிக்க முழுவதும் செயல்படும் கால்பந்து கழகங்களுக்கு, பரிச்சயமில்லாத முகவர்களை நம்பி ஏமாறாமல் இருக்க ஒரு எச்சரிக்க்கை எனவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Posted in abuse, africa, Agents, Children, Exploit, Exploitation, FIFA, Football, Ivory Coast, Kids, Poor, Sport, traffickers, Trafficking | Leave a Comment »

Municipality power consumption – Self sufficiency, Water Distribution, Alternate Energy

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

கட்டிக் கொடுத்த சோறு

உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண நிலுவை மீதான அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்வதென தமிழக அரசு மேற்கொண்டுள்ள முடிவு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிச் சுமையை ஓரளவு குறைப்பதாக அமையும்.

ஆனால், மின் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலைமைதான் அபராதம் செலுத்தும் நிலைமைக்குக் காரணம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, இந்தப் பிரச்சினை முடிவுக்கு வருமா என்பது சந்தேகமாக இருக்கிறது. கட்டணத்தைச் செலுத்த முடியாத அதே நிலை நீடிக்குமானால், அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்தும் பயன் ஏற்படாது. கட்டிக் கொடுத்த சோறு ஓரிரு வேளைக்கு மட்டுமே உதவும்.

உள்ளாட்சி அமைப்புகள் (பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி) நிலுவை வைத்துள்ள ரூ.204 கோடியை அரசே இப்போதைக்கு செலுத்துவதும், இனிமேல் அவர்களது மின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும்தான் நிரந்தரத் தீர்வாக அமையும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் மின் செலவில் பெரும்பகுதி தெருவிளக்குகள் மற்றும் நீரேற்று நிலையங்கள் மூலமாக ஏற்படுகிறது.

தெருவிளக்குகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் கிடைப்பதில்லை. வெறும் செலவு மட்டுமே. ஒவ்வொரு மின்கம்பத்துக்கும் மின்வாரியம் நிர்ணயிக்கும் ஒட்டுமொத்த தொகையை உள்ளாட்சி அமைப்புகள் செலுத்துகின்றன.

இரண்டாவதாக, குடிநீர் விநியோகத்தில் நீரேற்று நிலைய மின்செலவைத் தவிர்க்கவே முடியாது. நீரேற்றும் மின்செலவுக்கும் குடிநீர் கட்டணம், குழாய் வரி மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் பற்றாக்குறை இடைவெளி பெரிதாக உள்ளது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் விநியோகத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலவு போக, சிறிது வருவாய் கிடைத்திருக்கலாம். இப்போது நிலைமை தலைகீழ். விரிந்துவிட்ட நகரின் அனைத்து மக்களுக்கும் தண்ணீர் கிடைக்க பல்வேறு இடங்களில் ஆழ்துளை போட்டு தண்ணீர் எடுப்பதால் மின்செலவு மேலும் கூடிவிட்டது. ஆனால் அதற்கேற்ப குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடியவில்லை. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

உள்ளாட்சிகளுக்கான மின்கட்டணத்தை ரூ.5-லிருந்து ரூ.2-ஆகக் குறைக்க வேண்டும் என்பதுகூட, சுமையை இன்னொரு தலைமேல் ஏற்றிவிடுவதாகவே அமையும்.

உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் புதிய வழிகளைக் காண்பதும் புதிதாக குடிநீர் கட்டண முறைகளை வகுத்துக்கொள்வதும்தான் தீர்வாக இருக்கும்.

குடிநீர் இணைப்புகளில் மீட்டர் இருந்தாலும் அவரவர் பயன்படுத்தும் நீரின் அளவுக்கு ஏற்ப (மின்சாரம் கணக்கிடுவதைப்போல) கணக்கிடப்படுவதில்லை. இதனால், உள்ளாட்சி அமைப்புகள் சுத்திகரித்து நீரேற்றம் செய்யும் குடிநீரில் 80 சதவீதம் துணி துவைக்கவும், குளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்தப்படும் நீரின் அளவுக்கு ஏற்ப, அடுக்குமுறையில் (ஸ்லாப் சிஸ்டம்) கட்டணமும் உயரும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டால், பயன்படுத்தப்படும் குடிநீர் அளவு தானாகக் குறையும். மின்கட்டணமும் மிச்சமாகும். உள்ளாட்சிக்கு வருவாயும் கிடைக்கும்.

சூரியஒளி அதிகமாகக் கிடைக்கும் தமிழகத்தில் தெரு மின்விளக்குகள் அனைத்தையும் சூரிய விளக்குகளாக மாற்றிவிட முடியும். நகரங்களில் முக்கிய வீதிகளில் உள்ள மின்விளக்குகளை சூரிய விளக்குகளாக மாற்றும்போது, குறிப்பிட்ட தொகையை அந்தந்தத் தெரு மக்களிடம் பங்கேற்புத் தொகையாகப் பெற்று, பராமரிப்புப் பணிகளை அந்தந்தத் தெருவின் மக்கள் குழுக்களிடமே ஒப்படைத்துவிடலாம்.

====================================================================
தமிழகத்தில் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்த ரூ. 2547 கோடியில் நீர்வள – நிலவளத் திட்டம்: பொதுப்பணித் துறை அமைச்சர்

சென்னை, ஏப். 5: நீர்ப் பாசன வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நீர்வள – நில வளத் திட்டம் ரூ. 2547 கோடியில் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் புதன்கிழமை அறிவித்தார்.

பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைக்கான கொள்கை விளக்க குறிப்பை அவையில் தாக்கல் செய்து அமைச்சர் கூறியது:

நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை நவீனப்படுத்தி கால்வாய்கள், ஏரிகள் ஆகியவற்றைப் புனரமைத்து, நீர் மேலாண்மையை மேம்படுத்துவது அவசியம். அதற்கேற்ப நீர் மற்றும் வேளாண்மையைச் சார்ந்த அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் வண்ணம் நீர்வள – நில வளத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி கடனுதவியுடன் செயல்படுத்தப்படும் இத் திட்டத்தின் மொத்த ஒதுக்கீடு ரூ. 2547 கோடி. இதனை ஆறு ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 63 உப வடிநிலங்களில் அணைகள், கால்வாய்கள், கிளைக் கால்வாய்கள் அவற்றின் கட்டுமானங்கள் ஆகியவை சீரமைத்து மேம்படுத்தப்படும்.

இத் திட்டத்தின் மூலம் 5763 ஏரிகளை புதுப்பித்து புனரமைத்து சீர்படுத்துவதற்காக ரூ. 1068 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செலவில் 75 சதவிகிதம் தமிழக அரசும் 25 சதவிகிதம் மத்திய அரசும் ஏற்கும்.

ஒருங்கிணைந்த நீர்வள – நிலவளத் திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டு 12 உப வடிநிலங்கள் தேர்தெடுக்கப்பட்டு அவற்றில் 9 உப வடிநிலங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ரூ. 399 கோடியில் 71 ஒப்பந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்த நிதியாண்டுக்கு ரூ. 160 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதர 3 உப வடிநிலங்களுக்கான விரிவான திட்ட மதிப்பீடு அந்தந்த துறைகளுடன் இணைந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 51 உப வடிநிலங்களுக்கு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன.

நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் 6.17 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசன, நீர் உபயோகிப்போர் சங்கங்கள் 2600 அமைக்கப் பெற்று பாசன மேலாண்மையில் பாசனதாரர்களே பங்கேற்க வழிவகை செய்யப்படும்.
====================================================================
காவிரிப் படுகை மாவட்டங்களில் கால்வாய்களைச் சீரமைக்க ரூ. 40 கோடி: அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஏப். 5: காவிரிப் படுகை மாவட்டங்களில் ரூ. 40 கோடியில் சிற்றாறு வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என்று சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம், கிருஷ்ணகுப்பம் கிராமத்தில் புதிய குட்டை ரூ. 16 லட்சத்தில் அமைக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் ராசசிங்கமங்கலம் கிராமத்தில் உள்ள ஆர்.எஸ். மங்கலம் ஏரி ரூ. 5.5 கோடியில் புனரமைக்கப்படும்.

நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து வருகிறது. செயற்கை முறையில் சிறிய குட்டைகளில் நீரைத் தேக்கி நீர் வளத்தை மேம்படுத்த கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5 குட்டைகள் ரூ. 93 லட்சத்துக்கும், ஈரோடு மாவட்டத்தில் 3 குட்டைகள் ரூ. 63 லட்சத்துக்கும், நாமக்கல் மாவட்டத்தில் ஒரு குட்டை ரூ. 12 லட்சத்துக்கும், வேலூர் மாவட்டத்தில் 11 குட்டைகள் ரூ. 1 கோடிக்கும் ஆக மொத்தம் 20 குட்டைகள் ரூ. 2.72 கோடிக்கு நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் இந்த நிதியாண்டில் சீரமைக்கப்படும்.

காவிரிப் படுகை மாவட்டங்களில் உள்ள சிற்றாறுகளையும் வாய்க்கால்களையும் தூர்வாருவதற்கு இந்த அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. தூர்வாரவும் கட்டுமானங்களை புதுப்பிப்பதற்காகவும் ரூ. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ. 1.75 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணாறு தொலைகல்லில் மட்ட சுவர் அமைத்து ரகுநாத காவிரி வாய்க்காலின் பாசன நிலங்களுக்கு தடையின்றி தண்ணீர் வழங்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கீழ்வளம் கிராமத்தின் அருகில் புக்கத்துறை ஓடையின் குறுக்கே ரூ. 45 லட்சத்தில் தடுப்பணை செயல்படுத்தப்படும்.

விழுப்புரம் மாவட்டம் கரடிசித்தூர் கிராமத்தில் உள்ள குமாரபாளையம் வரத்து கால்வாய்க்கு நீர் வழங்க முக்தா நதியின் குறுக்கே ரூ. 25 லட்சத்தில் தடுப்பணை அமைக்கப்படும்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம், கோமல் கிராமத்தில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே தொலைகல் 118 கி.மீ. யில் தரை மட்டச்சுவர் கட்டும் திட்டம் ரூ. 40 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.

தஞ்சாவூர் மாவட்டம் சோழகம்பட்டி வாரி குறுக்கே தடுப்பணை ரூ. 20 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம், ரெட்டியாபட்டியில் இருந்து கரிகாலி உத்தன்டாம்பாடி வரையில் உள்ள வழங்கு கால்வாய் மற்றும் உத்திராட்ச கோம்பையில் உள்ள அணைக்கட்டுகளை சீரமைக்கும் திட்டம் ரூ. 1.98 கோடியில் செயல்படுத்தப்படும்.

========================================================================
இணைந்தால் வளர்ச்சி

ஒரு பக்கம் வறட்சி, மறு பக்கம் வெள்ளம். இவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரண உதவிகள். இது, ஆண்டுதோறும் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் ஒரு நிகழ்வாகிவிட்டது. இதற்கு முடிவு கட்ட முக்கிய நதிகளை இணைக்கலாம் என்று பல ஆண்டுகளாகக் கூறப்பட்டுவரும் யோசனை இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. இத் திட்டத்தை நிறைவேற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்பதும், பல்வேறு மாநிலங்கள் சம்பந்தப்பட்டதால் அவற்றுக்கிடையே கருத்தொற்றுமை காண்பதில் உள்ள சிக்கலுமே இதன் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள முக்கிய அம்சங்களாகும்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஓடும் ஆறுகளில் உள்ள தண்ணீர்ப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு சில ஆறுகளை இணைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆறுகளில் மட்டுமன்றி ஏரி, குளங்களில் தொடர்ந்து நீரின் அளவைப் பராமரிக்கவும், பெரும்பாலான மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைப் போக்கவும் இத் திட்டம் உதவும்.

முதற்கட்டமாக கோரையாற்றில் இருந்து அக்னியாறு வரை புதிய கால்வாய், பெண்ணையாற்றை செய்யாற்றுடன் இணைப்பது, தாமிரபரணியில் வெள்ளம் ஏற்படும்போது வரும் நீரை நம்பியாறு, கருமேனியாறு வரை எடுத்துச் செல்வது ஆகியவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டங்கள் மூலம் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பலன் கிடைக்கும் என்று விளக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை நீர்வள ஆதாரத்தில் எப்போதும் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறது. இங்கு மேற்பரப்பு நீர் அனைத்தும் ஏறக்குறைய பயன்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் நிலத்தடி நீரை முற்றிலும் நம்பி இருக்க வேண்டியுள்ளது. ஆனால் அதுவும் விவசாயம் மற்றும் பொது உபயோகங்களுக்குத் தொடர்ந்து உறிஞ்சப்படுவதால் காலப்போக்கில் அதற்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆனால் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், மற்றும் ஆந்திரத்தில் கணிசமான நீர் ஆதாரங்கள் உள்ளன. எனவே பற்றாக்குறையைப் போக்க அந்த மாநிலங்களின் உபரி நீரை நம்பியிருக்க வேண்டியுள்ளது.

இதற்குத் தீர்வு காண தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை ஒரு யோசனை தெரிவித்துள்ளது. உபரி மற்றும் பற்றாக்குறை படுகையைத் தேர்வு செய்து மகாநதியிலும், கோதாவரியிலும் கிடைக்கும் உபரிநீரை கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை மற்றும் குண்டாறு படுகைகளுக்குத் திருப்பிவிடலாம் என்பதே அந்த யோசனையாகும். இதன்படி மகாநதி, கோதாவரியின் உபரி நீர் கிருஷ்ணா மற்றும் பெண்ணாற்றுக்குத் திருப்பி விடப்படும். அங்கிருந்து கல்லணைக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும். இத்தகைய இணைப்புகளை மேற்கொண்டால் அது அந்த நீர் வரும் வழியில் உள்ள மாநிலங்களில் சாகுபடிக்கும் குடிநீருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அரசின் கருத்து. இத்தகைய திட்டத்தினால் நீர்வழிச் சாலையை உருவாக்கலாம் என்று ஒரு நிபுணர் தெரிவித்துள்ள கருத்தும் பரிசீலனைக்குரியது.

இது தவிர ஏரிகளைப் பாதுகாக்கச் சட்டம் கொண்டு வரவும் அரசு உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் விளைநிலங்களும், ஏரிகளும் குடியிருப்புகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் சாகுபடி நிலங்களின் அளவு படிப்படியாகக் குறைந்து ஒரு நேரத்தில் கடும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். இதற்கு முடிவு கட்ட மேற்கண்ட திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
=====================================================================

————————————————————————————————-
தாகம் தணியும் நாள் எந்நாளோ?

உ.ரா. வரதராசன்

வெளிநாட்டுப் பயணம் ஒன்றின்போது, விமானத்தில் படிக்கக் கிடைத்த லண்டன் நாளேடு ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட விளம்பரம் ஒன்று, அதிர்ச்சி அளிக்கும் ஓர் உண்மையைப் பளிச்சென்று பறைசாற்றியது.

“லண்டன் நகரின் ஆடம்பரக் குடியிருப்புகளில் வசிப்பவர்களை விட, குடிதண்ணீருக்கு அதிக விலை கொடுப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள்?’ என்ற கேள்வியை எழுப்பிய அந்த விளம்பரம் அதற்கான பதிலையும் தந்தது: – அது – “”வளரும் நாடுகளின் வறுமைமிக்கக் குடிசைப்பகுதிகளில்தான்!” ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் – 2006-ஆம் ஆண்டின் மனித வளர்ச்சி அறிக்கை தண்ணீர்ப் பிரச்னையை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

“உணவு இல்லாமல் பட்டினி கிடக்க நேரிட்டால்கூட, 21 நாள்கள் வரை உடலில் உயிர் ஒட்டிக் கிடக்க முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் 10 நாள்களுக்கு மேல் உயிர் வாழ்வது அரிது; பிராணவாயு இல்லாமல் எட்டு நிமிடங்களுக்கு மேல் உயிர் தாங்காது’, என்பது ஒரு கருத்து. தண்ணீரும், பிராணவாயுவும் இன்றி மக்கள் உயிர் வாழ முடியாது என்பதால்தான், ஐ.நா. சபை 2002-ஆம் ஆண்டில் “தண்ணீர் – ஒரு மனித உரிமை, என்று அறிவித்தது. அந்த தண்ணீர் போதுமானதாகவும், பாதுகாப்பானதாகவும், ஏற்புடையதாகவும், எளிதில் எட்டக் கூடியதாகவும் மற்றும் வாங்கும் சக்திக்கு உட்பட்டதாகவும் – அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியது.

மக்கள்தொகைப் பெருக்கம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட 19-ஆம் நூற்றாண்டின் விஞ்ஞானி தாமஸ் மால்த்தூஸ், உணவுப் பற்றாக்குறை எதிர்காலத்தில் உலக நாடுகளை மிரட்சியில் ஆழ்த்தும் பரிமாணத்தை எட்டிவிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். “மால்தூசின் தத்துவம்’ என்றே மக்கள்தொகை பற்றிய அவரது ஆய்வு சுட்டப்படுகிறது. இதே கோணத்தில்தான் தண்ணீர் பற்றிய சர்வதேச அரங்கிலான விவாதங்களில் கருத்துகள் இடம்பெற்று வந்துள்ளன. “மக்கள்தொகை பெருகப்பெருக, தண்ணீர் தேவையும் அதிகமாகிறது; விளைவு – எதிர்காலத்தில், தண்ணீர் பற்றாக்குறை தவிர்க்க முடியாதது” என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

மனித வளர்ச்சி அறிக்கை – 2006 இந்த வாதத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறது. “ஒரு சில நாடுகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு கவலைதரும் பிரச்னையாக இருக்கலாம்; ஆனால் சர்வதேச ரீதியில், பற்றாக்குறையும், நெருக்கடியும் எழுவதாகச் சொல்ல முடியாது. வறுமையும், ஏற்றத்தாழ்வும், அரசியல் அதிகாரம் யாருடைய நலனுக்காகச் செயல்படுகிறது என்பவையே, உலக தண்ணீர் நெருக்கடியின் மையமான பிரச்னைகள்’ என்று ஆய்வின் அடிப்படையிலான ஏராளமான விவரங்களைக் கொண்டு நிலைநாட்ட முற்படுகிறது அந்த அறிக்கை.

உயிர் வாழ்வதற்கான தண்ணீர்ப் பிரச்னை மூன்று அம்சங்களை உள்ளடக்கியது. அவை ~

  1. சுத்தமான குடிநீர் வழங்குவது,
  2. கழிவு நீரை அகற்றுவது,
  3. உடற்கழிவுகளை (சிறுநீர், மலம்) வெளியேற்றுவதற்கான சுகாதாரமான ஏற்பாடு.

மனித வாழ்வின் மேம்பாட்டுக்கு இவை மூன்றும் இன்றியமையாதவை. ஆனால், உண்மையான நிலவரம் என்ன?
வளரும் நாடுகளில் 110 கோடிபேர் போதுமான தண்ணீருக்கு வழியில்லாமல் திண்டாடுபவர்கள்; 260 கோடிபேர் கழிப்பறை வசதிகள் இன்றி அவதிப்படுபவர்கள். இது வளரும் நாடுகளின் மக்கள்தொகையில் பாதிக்குமேல். இது தண்ணீர்ப் பற்றாக்குறையால் நேரிடும் கொடுமையா என்றால், இல்லை.

வீட்டு உபயோகத்திற்காக மட்டும் தேவைப்படுகிற தண்ணீரின் அளவு, உலகளாவிய நீர்வளத்தில் 5 சதவிகிதத்திற்கும் குறைவுதான். அடிப்படையான மனிதத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 20 லிட்டர் தண்ணீர் அவசியமானது. தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாத நிலைக்குக் காரணம் பற்றாக்குறை அல்ல; இன்றைய ஆட்சி அமைப்பும், அரசியல் அதிகாரத்தைச் செலுத்துவோரின் தலைகீழான முன்னுரிமைகளுமே.

உலக நாடுகள் பெரும்பாலானவற்றின் பெருவாரி மக்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகள் மறுக்கப்படுவதன் கோர விளைவுகள் சில வருமாறு:

வாந்திபேதியால் ஆண்டுக்கு 18 லட்சம் குழந்தைகள் இறக்க நேரிடுகிறது; அதாவது – நாளொன்றுக்கு 4900 சாவுகள். 1990-களில், ஆயுத மோதல்களில் இறந்தோரைவிட அசுத்தமான குடிநீர், சுகாதாரமின்மை காரணமான நோய்களில் இறந்த குழந்தைகள் எண்ணிக்கை ஆறு மடங்காக உயர்ந்தது.

தண்ணீர்ப் பிரச்னை தொடர்பான உடல்நலப் பாதிப்பு காரணமாக பள்ளிக்குச் செல்ல முடியாத பள்ளி நாள்கள் ஆண்டொன்றுக்கு 44 கோடிக்கு மேல்.

வளரும் நாடுகளின் மக்கள்தொகையில் பாதிக்குமேல் தண்ணீர் – சுகாதாரக் குறைபாடுகளால் ஏதாவதொரு வியாதியால் பீடிக்கப்பட்டு அவதியுறுவது அன்றாட நிகழ்வு. ஒவ்வொரு நாளும், தண்ணீருக்காக லட்சக்கணக்கான பெண்கள் பல மணி நேரம் செலவிட நேரிடுகிறது.

இளமையில் தண்ணீர் – சுகாதாரமின்மை காரணமாக நோய்வாய்ப்பட்டும், கல்வி வாய்ப்பை இழந்தும் பாதிப்புறுகிற லட்சக்கணக்கான குழந்தைகள், வளர்ந்த நிலையில் வறுமையைத் தழுவ நேரிடுகிறது. இவ்வாறெல்லாம் பாதிப்புற்று இழக்கப்படுகிற மனித வள ஆதாரங்கள் காரணமாக, உலக நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதார இழப்புகள் அளவிட முடியாதவை.

இந்த நிலைமைகளுக்கு மாற்றமே இல்லையா?

20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் ஒன்று கூடி 21-ஆம் நூற்றாண்டுக்கான மனித வளர்ச்சி இலக்குகளை வரையறை செய்தனர். 2015-ஆம் ஆண்டுக்குள் வறுமை, பட்டினி, குழந்தை இறப்புகள், கல்வியின்மை, பாலின சமத்துவமின்மை ஆகியவற்றை, சரிபாதியாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. “பாதுகாப்பான குடிநீரும், அடிப்படை சுகாதார வசதிகளும் தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெறாத உலக மக்களின் எண்ணிக்கையை 2015-க்குள் சரிபாதியாகக் குறைக்க வேண்டும்’ என்பது திட்டவட்டமான இலக்கு.

ஆனால், இந்த இலக்குகளை எட்ட நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு பத்தாண்டுகளுக்கும் குறைவாகவே உள்ள இன்றைய தருணத்தில், இதற்கான முயற்சிகள் காததூரத்திலேயே உள்ளன என்பதுதான் வேதனையான அம்சம்.

தாகத்தால் நா வறண்டு நிற்கும் மக்களின் தண்ணீர்த் தேவைகளை நிறைவேற்றுவதற்குக் குறுக்கே நிற்பது எது? நிதிப்பற்றாக்குறையா?

குடிதண்ணீர், சுகாதாரத் தேவைகளை மட்டுமல்ல, வளர்ச்சி இலக்குகள் அனைத்தையுமே 2015-க்குள் எட்டுவதற்குத் தேவையான நிதி ஆயிரம் கோடி டாலர்கள். (சுமார் ரூ. 40 ஆயிரம் கோடி)

“ஓ, இவ்வளவு பெரிய தொகையா? என்று மலைக்கத் தேவையில்லை. இது, உலகநாடுகள் ராணுவத்திற்காகச் செலவிடும் தொகையில், ஐந்தே நாள்களுக்கான செலவுக்கு மட்டுமே ஈடான தொகைதான்! பணக்கார நாடுகள் ஆண்டுதோறும் “மினரல் வாட்டருக்காக’ச் செலவிடும் தொகையில் சரிபாதிக்கும் குறைவே! எனவே, இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவது, அவற்றை வரையறுத்த உலக நாடுகளின் தலைவர்களின் உறுதியான நிலைப்பாடு என்ற உரைகல்லைப் பொருத்த விஷயம்தான்.

2015-ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி நிர்வாகம் இன்னோர் இலக்கையும் நிர்ணயித்திருக்கிறது. வியாழன் கிரகத்தின் பனிநிலவுகள் பற்றிய ஆராய்ச்சிக்காக விண்கலத்தை அனுப்பி, அந்த சந்திர மண்டலங்களின் பனிப்படலங்களுக்கு அடியில் உள்ள உப்புநீர் ஏரிகளை ஆய்வு செய்து, அங்கு உயிரினங்கள் வாழ்வது சாத்தியமா என்று அறிவது அதன் நோக்கம். அதற்காகச் செலவிடப்படும் ஆயிரம்கோடி டாலர்கள் – அதற்குத் தேவைப்படும் தொழில் நுணுக்கம் – இவற்றோடு ஒப்பிடுகையில், மனித வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான செலவும், முயற்சியும், அற்பசொற்பமானவையே!

உலக மக்களின் தாகம் தணியும் நாள் எந்நாளோ?..

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ)

Posted in Alternate, Analysis, Aquafina, Arms, Backgrounder, Backgrounders, Bathroom, Bills, Bio, Bottled, Budget, Cauvery, Charges, Coke, Crap, Dasani, defecate, Developed, Developing, Diarrhea, Distribution, Drinking, Electricity, energy, Environment, Excrement, Expensive, Exploit, Fights, Finance, Fine, Gold, Govt, Ground, HR, Hunger, Income, Interlink, Interlinking, Kaviri, Local Body, Loss, Municipality, Nations, oil, Op-Ed, Options, Pee, Pepsi, Plans, Pollution, Poop, Power, Private, Privatization, PWD, Restroom, Revenues, River, Sand, Schemes, Shit, Soda, Solar, solutions, Tax, Toilets, Urine, Water, Weapons, World | 4 Comments »