ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அறிவுக் கூர்மைக்குப் பிராணாயாமம்!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
வயது 32. சுமார் பத்து ஆண்டுகளாக ஓடும்போதும் சைக்கிள் மிதிக்கும்போதும் மாடிப்படி ஏறும்போதும் மூச்சு வாங்குவதுடன் மார்புப் பகுதியில் கடுமையாக வலியும் ஏற்படுகிறது. மேலும் நடுமுதுகுப் பகுதியில் தொடர்ந்து வலி ஏற்படுகிறது. அதிகமாக வியர்க்கிறது. குதிகால் வலி, பாத வெடிப்பு உள்ளது. தகுந்த மருந்து கூறவும்.
மனித உடலில் ஐந்து வகையான வாயுக்கள் உயிர் உள்ளவரை செயலாற்றுகின்றன. அவற்றுக்கு பிராணம்- உதானம்- வியானம்- ஸமானம்- அபானம் என்று பெயர். பிராணவாயு தலையைத் தங்குமிடமாகக் கொண்டது. தொண்டையிலும் மார்பிலும் உலவுகின்றது. அறிவு, புலன்கள், இதயம், மனம், நாடிகள் இவற்றை நிலை நிறுத்தச் செய்கிறது. துப்புதல், தும்மல், ஏப்பம், உள்ளிழுக்கும் மூச்சு, வெளிவிடும் மூச்சு, உணவை உட் செலுத்துதல் ஆகியவை இதன் செயல்களாகும்.
உதான வாயு மார்பில் இருந்து கொண்டு தொண்டை மூக்கு முதல் தொப்புள் வரை உலவும். பேசுதல், செயலில் முயற்சி, புஷ்டி, வலிவு, நிறம், உடல் உட்புறக் குழாய்களை தெளிவாக வைத்திருத்தல், அறிவு, தைரியம், நினைவாற்றல், மனதிற்கு உணர்வுகளைத் தெரிவித்தல் ஆகியவை இதன் செயல்களாகும்.
இந்த இருவாயுக்களும் தங்கள் விஷயத்தில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளன என்று தாங்கள் கூறும் அறிகுறிகள் மூலம் தெரிகிறது. சரியான முறையில் பிராணாயாமம் செய்பவர்களுக்குப் பிராணவாயுவின் செயல்திறன் மேம்பட்டு அவர்களின் அறிவுக் கூர்மை, மனதை ஒருமுகப்படுத்துதல் போன்ற திடமான உள்ளத்தை அவர்கள் அடைந்திருப்பதைக் காண முடிகிறது.
பிராண- உதான வாயுக்களின் போக்குவரத்துக்குத் தடை ஏதும் ஏற்படா வண்ணம் நீங்கள் தலை மற்றும் மார்புப் பகுதியை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகும். அதற்கான சில எளிய வழிகள்-
1. காலையில் பல் துலக்கியதும் வாயை வெதுவெதுப்பான தண்ணீரால் சுத்தப்படுத்தவும், அணுதைலம் எனும் மூக்கில் விடும் மூலிகை எண்ணெய்யை இரண்டு சொட்டு விட்டுக் கொள்ளவும். அதன்பிறகு வாயினுள் வரும் இந்த எண்ணெயைத் துப்பிவிடவும். வெதுவெதுப்பான நல்லெண்ணெய் இரண்டு காதுகளிலும் விட்டுக் கொண்டு பஞ்சால் காதை அடைத்து வைக்கவும். பிறகு காதினுள் உள்ள அழுக்கைத் துடைத்து விடவும். மூளைப் பகுதியை இணைக்கும் இந்த இரு துவாரங்களைச் சுத்தப்படுத்துவதன் விளைவாக பிராண வாயுவின் சஞ்சாரம் தங்கு தடையின்றி நடைபெறும்.
2. யோகாசனப் பயிற்சிகளை தகுந்த ஒரு குருவின் கீழ் கற்றுணர்ந்து, பிராணாயாமத்தை ஆசனப் பயிற்சிகளுக்குப் பிறகு செய்யவும். நுரையீரல் பகுதி வலுப்பட பிராணாயாமம் உதவுவதால் மார்புப் பகுதியைச் சார்ந்த உதான வாயுவின் ஓட்டமும் சீராக இருக்கும்.
தலை மற்றும் மார்புப் பகுதிகளை இணைக்கும் நரம்புகளும் தசைப் பகுதிகளும் வலுப்படுவதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த உபாதை நீங்க வழி உள்ளது. ஒவ்வொரு பிடிச் சோற்றுடன் மருந்தைக் கலந்து உண்பது ஸ்க்ராஸம் என்ற முறையாகும். க்ராஸôந்தரம் என்பது ஒரு பிடிச்சோற்றுக்கும் மற்றொரு பிடிச் சோற்றுக்கும் நடுவில் மருந்து அருந்தும் முறை. இந்த இருமுறைகளும் பிராண வாயுவின் கோளாறினால் ஏற்பட்ட நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் நீங்கள் காலை பலகாரம் சாப்பிடுவதற்குப் பதிலாகச் சூடான சாதத்துடன் ஹங்கு வசாதி எனும் சூரணம் 1/2 ஸ்பூன் அளவில் கலந்து 1 டீ ஸ்பூன் (5மிலி) இந்து காந்தம் கிருதம் எனும் நெய் மருந்தையும் கலந்து ஒவ்வொரு பிடியாகச் சிறிய அளவில் சாப்பிடவும். ஒவ்வொரு பிடி சோற்றுக்கும் நடுவில் விதார்யாதி கிருதம் எனும் நெய் மருந்தை 5 மிலி அளவில் வைத்துக் கொண்டு சிறிது சிறிதாக நக்கிச் சாப்பிடவும்.
உதான வாயுவின் செயல்திறன் மேம்பட மாலை உணவுக்குப் பிறகு மருந்து சாப்பிட மிகவும் நல்லது. அந்த வகையில் நீங்கள் தசமூலாரிஷ்டம் 30 மிலி, தான்வந்திரம் குளிகை எனும் மாத்திரை இரண்டுடன் சாப்பிட உகந்தது.
இவ்விரு வாயுக்களின் சீற்றத்தை அதிகப்படுத்தும் வாயுப் பண்டங்களாகிய கொண்டைக் கடலை, பச்சைப் பயிறு, மொச்சக் கொட்டை, அவரைக்காய், வேர்க்கடலை, கொத்தவரங்காய், காராமணி போன்றவற்றை உணவில் அதிக அளவில் சேர்க்க வேண்டாம். குளிப்பானங்களைத் தவிர்க்கவும். தசமூலரஸôயனம் எனும் லேகியத்தை இரவில் படுக்கும் முன் நக்கிச் சாப்பிட தலை மற்றும் தசைப்பகுதிகள் நன்கு வலுப்படும். குதிகால் வலி, பாதவெடிப்பு நீங்க பிண்டதைலம் எனும் எண்ணெய்யை வெது வெதுப்பாகக் கால்களில் தடவிவிடவும்.
(பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771)